கும்பகோணம்-தஞ்சாவூர் வழித்தடத்தில் வடவாறு ஆற்றைக் கடந்தவுடன் வருவது தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருத்தட்டாங்குடி. வடவாறுக்கு வடக்கே வெண்ணாறுக்கு தெற்கே இரண்டு ஆறுகளுக்கு நடுவே இத்தலம் உள்ளது. கருந்திட்டைக்குடி என்று முதலில் அழைக்கப்பட்ட இடம் தற்போது கருத்தட்டாங்குடி என்றும் சுருக்கமாக ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படுகிறது. இது தஞ்சாவூரை விட பழமையானது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. பழங்கால நூல்களில் தஞ்சாவூரையும் திருவையாறையும் இணைக்கும் 'கொடிவனமுடையாள் பெருவழி' என்று அழைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் கரந்தை இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
சிவபெருமான் மீது சைவ மகான்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் எனப்படும். அப்படிப்பட்ட மகான்கள் பாடிய இடம் ‘பாடல் பெற்ற தலம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பாடல் பெற்ற தலம்’ என்ற தேவாரத்தில் வேறொரு தலத்தினை குறிப்பிடப்பட்டால், அத்தகைய இடம் ‘வைப்புத் தலம்’ எனப்படும். கருத்தட்டாங்குடியில் ஸ்ரீ கருணாஸ்வாமி கோயில் என்று அழைக்கப்படும் வைப்புத் தலம் ஒன்று உள்ளது. மூலவர் வசிஷ்டேஸ்வரர், கருணாசுவாமி, கருவேலாயுதசுவாமி என மூன்று பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஸ்ரீ அப்பர் சுவாமிகள் 6ஆம் திருமுறை 71ஆம் பதிகம் 3ஆம் பாடலில் இக்கோயிலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ சமர்த்த ராமதாஸின் நேரடி சீடரான பீமராஜா ஸ்வாமி என்ற ஸ்ரீ பிக்காஜி பாவா ஷஹாபுர்கர் போன்ற பிற்கால மகான்கள் கரந்தை என்னும் புனித பூமியை தங்கள் பிருந்தாவன தலமாகாத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை.
தென்னிந்தியர்கள் வடக்கில் உள்ள காசிக்கு [வாரணாசி] செல்வதும், வட இந்தியாவில் இருந்து யாத்ரீகர்கள் தெற்கில் உள்ள ராமேஸ்வரம் வருவதும் நீண்ட நாட்களாக பழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். இந்த இரண்டு யாத்ரீக மையங்களுக்கு இடையே உள்ள பல நகரங்களில் அந்த யாத்ரீகர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தருவது என்பது வழக்கம். இந்த யாத்ரீகர்களை தவிர, பல அறிஞர்கள் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கும், வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவிற்கும் பயணம் செய்தனர். அந்தக் காலக்கட்டங்களில் அப்படிப்பட்ட பயணிகள் தங்கும் ஒரு நகரமாக தஞ்சாவூர் இருந்தது.
யாத்ரீகர்கள் மற்றும் அறிஞர்களுக்கு தங்குவதற்கும் உணவு வழங்குவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட இடம் சௌல்ட்ரி அல்லது சத்திரம் என்று அழைக்கப்பட்டது. சத்திரங்கள் அடிப்படையில் வழியோர ஓய்வு இடம் மற்றும் அங்கு தங்குபவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. அத்தகைய சத்திரம் துறவிகளாலோ அல்லது அவர்களால் மதிக்கப்பட்ட தத்துவத்தைப் பிரசார படுத்துவதற்காகவும் நிறுவப்பட்டால், அது மடம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற மடங்களில் அவர்கள் விரும்பும் தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கத்தில் இருந்தது.
புனித க்ஷேத்திரங்கள் பலவற்றை கண்டு அங்கு இறைவனை துதித்து அதன் மூலம் ‘மோட்சத்தை’ அடைவதற்காக பல மகான்கள் யாத்திரை மேற்கொண்டனர். அவர்கள் பைராஹி அல்லது பைராகி என்றும் அழைக்கப்பட்டனர். இந்த வார்த்தை 'வைராக்கியத்துடன் வாழும் மக்கள்' என்று பொருள் படும் 'வைராஹி' என்ற வார்த்தையில் இருந்து உருவானது. இந்தப் புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக தென்னிந்தியாவிற்கு வந்த சிலர் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் குடியேற முடிவு செய்திருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் சொந்த ஊரிலிருந்து வரும் யாத்திரிகளுக்காக அவ்விடத்தில் சத்திரம் கட்டியுள்ளனர். பல ஆட்சியாளர்கள் இந்த மனிதநேய நடவடிக்கைகளை ஆதரித்தனர்.
தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது, மராட்டியர்கள் அவர்களை வீழ்த்தி ராஜ்யத்தைக் கைப்பற்றினர். மராட்டிய மன்னர் சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் வெங்கோஜி தஞ்சாவூரின் முதல் மன்னரானார். பின்னர் மராட்டிய ஆட்சி, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் வரை தொடர்ந்தது.
மராட்டிய மன்னர்கள் அனைவரும் இசை மற்றும் பிற நுண்கலையின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தனர். தவிர, அவர்களின் அறத்தொண்டு கொள்கை தாராளமயமானவைகளாகவும் முக்கியமாக ஏழைகளுக்கு உணவளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல் பட்டது. அனைத்து அரசர்களும் முன் ஏற்படுத்தப்பட்ட அறத்தொண்டுகளைப் பராமரிப்பதுடன் பெருக்கவும் செய்தனர். கோயில்களைப் பழுது பார்த்தனர், புதிய நீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டன, குளங்கள் தோண்டப்பட்டன, சத்திரங்கள் கட்டப்பட்டன. பல சத்திரங்களில் ஏழைகளுக்கு உணவளிக்க பட்டது, அவர்களில் பலருக்கு இந்த சத்திரங்களில் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. இசை, கலை ஆகியவற்றில் திறமைக்கான உதவித்தொகை கொடுத்து ஊக்குவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அரசின் நிதி நெருக்கடியைப் பொறுத்தவரை இவைகள் மிக பெரிய சாதனை என்று சொல்ல வேண்டும்.
மராட்டிய ஆட்சியின் போதுதான் "பக்தி இயக்கம்" உருவானது. புதிய கோயில்கள் கட்டுதல், சம்பிரதாய இசை, நடனம் மற்றும் நூதன ஓவியங்கள் வடித்தல் என்று பல கலைப் படைப்புகளுக்கு ஊக்கம் மற்றும் அரசு நிதியுதவி செய்தனர். இந்த இயக்கத்தின் மிக முக்கியமான பங்கில் ஒன்று பஜனை சம்பிரதாயத்திற்கான "தென்னிந்திய பஜனை" என்ற புதிய வடிவத்தின் தோற்றம் ஆகும்.
இரண்டாம் சர்போஜி காலத்தில் நிறுவப்பட்ட அத்தகைய மடம் ஒன்று கருத்தட்டாங்குடியில் அமைந்துள்ளது. இந்த மடம் இரண்டாம் சர்போஜி காலத்தில் நிறுவப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. மடத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரின் சந்நிதியின் வளாகத்தில் காணப்படும் மராத்தியில் உள்ள கல்வெட்டு இந்த ஆசிரியரால் முதன்முறையாக மொழிமாற்றம் செய்யப்பட்டது. கல்வெட்டின் படியெடுத்தல் பின்வருமாறு கூறுகிறது:
“ஸ்ரீமத் சத்ரபதி சரபேந்திர மஹாராஜா சாகா வருடம் 1742 (கி.பி. 1820 உடன் தொடர்புடையது) [இந்து வருடம்] விக்ரம வருடம் தை மாதம் 27 ஆம் நாள் ஸ்ரீ ராமச்சந்திரருக்கும் மாருதிக்கும் கோயில் அமைக்க தனகாதாரி பாவா மடத்தினை சமயப்பணியில் அமர்த்தினார். இந்த மானியம் யாத்ரீகர்கள் மற்றும் பைராஹிகளுக்கு என்றென்றும் பூஜை, நைவேத்தியம் மற்றும் பிரசாதம் வழங்குவதற்காக வழங்கப்படுகிறது. [இந்த நோக்கத்திற்காக] கடைகள், வீடுகள் கட்டலாம், பட்டாசுகள் தயாரிக்கலாம். இந்த [பிரசாத விநியோகம்] தனகாதாரி மற்றும் அவரது சீடர்களால் தொடரப்பட வேண்டும்."
இந்தக் கல்வெட்டைத் தவிர, இந்த மடத்திற்கு அரச குடும்பத்தினர் செய்த பங்களிப்புகளைக் குறிப்பிடும் மற்ற மராத்தி மோடி ஆவணங்களும் உள்ளன. வெண்ணாற்றங்கரை அன்ன சத்திரத்திலிருந்து மடம் பெற வேண்டிய தானியங்கள் மற்றும் நெய்யின் அளவு பற்றிய ஆவணம் ஒன்று. மற்றொரு ஆவணம் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அரச குடும்பத்தின் பங்களிப்பு பற்றி கூறுகிறது. மடத்துக்குக் கொடுக்கப்பட்ட ரொக்கம் மற்றும் கோயிலுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான ரொக்கம் பற்றிய ஆவணம் உள்ளது.
இவை அனைத்தும் காண்கையில் இராண்டாம் சர்போஜி காலத்தில் மடம் மற்றும் கோவிலானது நன்கு பராமரிக்க பட்டுள்ளது என்று கூறலாம்.
தஞ்சாவூரில் இருந்து வரும்போது இடதுபுறம் வடவாறு பாலத்தைக் கடந்ததும் கருத்தட்டாங்குடியில் இத்திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலின் முகப்பில் அதிகமாக தெரியும் கடைகளின் மேற்பகுதியை முழுவதும் நன்கு காண முடிந்தது. தற்போது மோசமான நிலையில் உள்ள ‘க்ஷீர சாகர மதனம்’ என்ற சுண்ணாம்புக் கலவையால் படைக்கப்பட்டுள்ள சிறந்த புடைப்பு கலைப் படைப்பைக் காண முடிந்தது. முகப்பின் மையத்தில் நுழைவாயில் உள்ளது, ஸ்ரீராம பட்டாபிஷேக காட்சியை சுண்ணாம்பு சாந்து புடைப்பில் [ஸ்டக்கோ உருவம்] சித்தரிக்கும் வளைவு உள்ளது.
வளைவு வழியாக நுழைந்த பிறகு, முக மண்டபம், பின்னர் முன் மண்டபம், பின்னர் அர்த்த மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் ஆகியவற்றைக் காண முடிகிறது. அனைத்து மண்டப தூண்களும் அழகாகவும் மற்றும் நேர்த்தியாகவும் உள்ளன. முன் மண்டபத்தின் மேற்பகுதியில் இருக்கும் வளைவில் சுண்ணாம்பு சாந்தில் செய்யப்பட்ட வைஷ்ணவ சின்னம் மற்றும் சங்கு, சக்கரம் உள்ளது. கருவறையில் பிரதான தெய்வமான ஸ்ரீ ராமர் மற்றும் அவரது மனைவி சீதை வலதுபுறம், லக்ஷ்மணன் இடதுபுறம் ஸ்ரீ மாருதி ஆகியோருடன் சன்னதியில் உள்ளனர். இந்த மூலவர் விக்ரஹங்கள் 'சாலிகிராம' கற்களால் செய்யப்பட்டுள்ளன. அமைதியும் கருணையும் புன்முறுவலும் மூலவரை காண கண்கள் பல்லாயிரம் வேண்டும். கர்பக்ரஹத்தை சுற்றி வருவதற்கு ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது, இதனால் பக்தர்கள் மூலவரை 'பிரதக்ஷணம்' செய்யலாம்.
வடவாறு ஒட்டிய கோயிலின் தெற்குப் பகுதியில் இந்த மடத்து மகான்களின் அதிஷ்டானம் அமைந்திருப்பதைக் காணலாம்.
முதன் முதலில் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தபோது, முதலில் என்னையே மறந்தேன், பிரம்மாண்டமான ஸ்ரீ ராம மூர்த்தி தரிசனம் மற்றும் சித்த புருஷர்களின் சமாதி மண்டபம், அமைதியான சூழல். கோயிலின் பாழடைந்த வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இந்த வழியாகச் சென்றாலும், இந்த அற்புதமான கோயிலுக்கு முன்பு நான் சென்று காணாதது குறித்து வருந்துகிறேன்.
முதலில் ஸ்ரீ மாருதிக்கு இரண்டு தனித்தனி கோயில்கள் மடத்தால் கட்டப்பட்டது. முதல் மாருதி கோயில் பிரதான கோயில் வளாகத்தின் தெற்கு முனையிலும் மற்றொன்று கோயில் வளாகத்தின் வடக்கு முனையிலும் உள்ளது. பிரதான சாலையில் இருந்து உமா மகேஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக, வடக்கு முனை மாருதி கோயில் மேற்கு நோக்கி மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் அருகிலுள்ள பக்க சாலையில் இருந்து இம்மாருதி கோயிலுக்குச் செல்ல வழி வகுக்கப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்ட கல்வெட்டு ஸ்ரீ ராமர் கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாருதியின் சந்நிதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த கோவிலுக்கு பிரதான சாலையில் இருந்தே செல்ல முடியும். இக்கோயில் சந்நிதியில் இரண்டு ஸ்ரீ மாருதி சிலைகள் உள்ளன. இரண்டாவது சிலை வேறு இடத்தில் சில இடப்பெயர்ச்சி நடந்தபோது இங்கு வந்திருக்கலாம் என்று நம்பலாம்.
தெற்கு முனை கோவிலில் உள்ள ஸ்ரீ மாருதியினைப் பற்றியே இந்த பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிரானைட் கற்களால் ஆன ஸ்ரீ மாருதியின் சிலை, 4 அடி உயரத்தில், 'அர்த்த சிலா' எனப்படும் புடைப்பு வடிவத்தில் கிழக்கு நோக்கி உள்ளது.
ஸ்ரீ மாருதி நடக்கும் பாவனையில் உள்ளார். அவரது இடது தாமரை பாதம் முன்புறமாகவும், வலது தாமரை பாதம் தரையில் உறுதியாகவும் காணப்படுகிறது. அவருடைய பாதங்கள் இரண்டையும் நூபுரம் மற்றும் தண்டை அலங்கரிக்கின்றன. கட்சம் பாணியில் அவர் அணிந்துள்ள வேட்டியை இடுப்பைச் சுற்றி மூன்று முறை இறுக்கமாக முறுக்கப்பட்ட துணியால் பிடிக்கப்படுவதை காணலாம். அவரது இடது கை, இடது இடுப்புக்கு அருகில், சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்தபடி காணப்படுகிறது. அவரது இடது தோளுக்கு மேல் மலர் காணப்படுகிறது. மணிக்கட்டில் கங்கணமும் மேல் கையில் கேயூரமும் காணப்படுகின்றது. அவர் தனது கழுத்தில் மூன்று மாலைகளை அணிந்துள்ளார். மற்றொரு மாலை அவரது மார்பை அலங்கரிக்கிறது. இறைவன் யக்ஞோபவீதம் மற்றும் உத்தரியம் அணிந்துள்ளார். ‘புஜ வளையம்’ அவர் தோள்களை அலங்கரிக்கிறது. தம் வலது திருக்கரத்தை மேலே உயர்த்தியபடி அவர் தனது பக்தர்களின் மீது ‘நிர்பயத்தும்’ [பயமின்மை என்னும் ஆசிர்வாதம்] பொழிகிறார். இறைவன் காதில் குண்டலம் அணிந்துள்ளார். அவரது கேசம் அழகாக குடுமியாக கட்டப்பட்டிருக்கும், அதனை அலங்கரிக்கப்பட்ட 'கேச-பந்தா' மூலம் பிடிக்கப்பட்டிருப்பதை காணலாம். இறைவனின் வால் அவரது தலைக்கு மேல் உயர்ந்து செல்வதை காணமுடிகிறது. கனிந்த கன்னமும், 'கோரப்பல்' இரண்டும், தான் காக்க இருக்கிறார் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு அளிக்கிறது. அவரது பளபளப்பான கண்கள் பக்தன் மீது கருணையை பொழிகிறது.
அனுபவம்
புனிதர்களின் அதிஷ்டானமும், பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின்
தரிசனமும் நிறைந்த அமைதியான சூழலில் அவரது தாசரான ஸ்ரீ மாருதியின் தரிசனம் மனதைக் கவரும். இந்த
க்ஷேத்திரத்திற்குச் சென்றால், மனதுக்கு அமைதி கிடைக்கும் என்பது உறுதி
தமிழாக்கம் : திரு. ஹரி சுந்தர் :: * எழுத்தாளர் தஞ்சாவூரில் உள்ள மோடி மொழி நிபுணர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
சரஸ்வதி மஹால் நூலகத்தில் பணிபுரிகிறார் :: பதிப்பு: ஜூலை 2022