தற்போதைய தும்கூர் மாவட்டம் மேற்கு கங்கா வம்சம், ராஷ்டிரகூடர்கள் மற்றும் சாளுக்கியர்கள் போன்ற பல பிரபலமான வம்சங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ஆட்சியாளர்களின் கீழ் நோளம்பர்கள் நீண்ட காலமாக இப்பகுதியை ஆண்டனர். இப்பகுதி 13 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதைத் தொடர்ந்து மைசூர் உடையார்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்.
தும்கூர் நகரம் நீண்ட காலமாக முழு மாவட்டத்திற்கும் நிர்வாகத் தலைமையகமாக இருந்தது. மைசூர் உடையார்கள் காலத்தில் 1916 ஆம் ஆண்டு நகரம் நகராட்சியாக மாற்றப்பட்டது. நகராட்சி அமைக்கப்பட்ட பிறகு தும்கூரில் வசிப்பவர்களின் சுயாட்சி தொடங்கியது. 2010 ஆம் ஆண்டு தும்கூர் நகரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. 80% கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட இந்த நடுத்தர வர்க்கப் பெரும்பான்மை நகரம் தற்போது பெங்களூரின் 'செயற்கைக்கோள்' நகரமாக உள்ளது. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் வெறும் எழுபது கிலோ மீட்டர் என்பதால், பெங்களூரில் உள்ள பல சிறு வணிகர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இங்கிருந்து பெங்களூருக்கு அன்றாடம் சென்று வருகிறார்கள்.
இந்த ஊரில் ஆஞ்சநேயருக்கு பல கோவில்கள் உள்ளன. கோட்டே ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பய்யாலு ஆஞ்சநேய சுவாமி கோயில், ஷெட்டிஹள்ளி கேட் ஆஞ்சநேயர் கோயில் என்று சில பெயர்களைக் குறிப்பிடலாம். இந்த கோவில்கள் அனைத்தும் இந்த ஊரில் ஆஞ்சநேயர் பக்தர்கள் அதிகம் தரிசனத்திற்கு செல்லும் கோவில்கள் ஆகும். இந்த கோயில்கள் அனைத்தும் மிகவும் பழமையானவை மற்றும் வெவ்வேறு ஆட்சியாளர்களின் அவர்கள் ஆட்சி காலத்தில் ஆதரவைப் பெற்றன. ஏறக்குறைய அனைத்து திருக்கோயில்களும் ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவோ அல்லது புனர் உத்தாரணம் செய்யப்பட்டதாகவோ கூறப்படுகிறது.
தும்கூர் நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஹனுமதபுரா என்ற இடத்தில் ஒரு ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் துக்கூர் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. ஒரு பெரிய திறந்தவெளியில் அமைந்துள்ள மிக எளிமையான அமைப்புடன் இக்கோயில் உள்ளது. சற்று தொலைவில் தேர் திருவிழாவின் போது பயன்படுத்தப்படும் தேர் கொட்டகையை காணலாம். தாழ்வாரத்தின் உச்சியில் இருக்கும் சிறிய வளைவில் பிரதான தெய்வத்தை சித்தரிக்கும் சுதை சிற்பம் பக்தர்களை கோயிலுக்கு வரவேற்கிறது. பக்தர்கள் வாசலில் இருந்தே இறைவனை தரிசனம் செய்யலாம். சற்றே வித்யாசமான மூலவரை தரிசிக்கும் முன் இராமாயணத்தை நினைவு கூறுவோமா?
ராவணன் முதன்முதலாக போர்க்களத்திற்கு வரும் நாளில், தன் முழு வலிமையையும் கொண்டு போரிட்டான். ஒரு கட்டத்தில் அவன் லட்சுமணனை சந்தித்து சண்டையில் ஈடுபடுகிறான். ராவணன் லக்ஷ்மணனிடமிருந்து சம பலத்துடன் எதிர்ப்பட்டபோது, பிரம்மாவால் கொடுக்கப்பட்ட ஆயுதத்தை லக்ஷ்மணன் மீது பயன்படுத்துகிறான். இந்த சக்திவாய்ந்த ஆயுதத்தால் தாக்கப்பட்ட லட்சுமணன் தரையில் மயங்கி விழுந்தான். ராவணன் லக்ஷ்மணனைத் தூக்கிச் செல்ல விரும்பி, அவனைத் தரையிலிருந்து தூக்க முயல்கிறான். ஆனால் ராவணனால் லக்ஷ்மணனை நகர்த்த கூட முடியவில்லை.
லக்ஷ்மணன் சிக்கலில் இருப்பதைக் கண்ட ஹனுமார் அங்கு வந்து ராவணனை பலமான அடி கொடுக்கிறார். பலமான அந்த அடியினால் ராவணன் வாய், காது, கண்கள் வழியாக ரத்தம் வழிந்து தரையில் சாய்ந்தான். இதனிடையில் ஹனுமார் லட்சுமணனைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றார். விரைவில் ராவணன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு தனது தேரில் மீண்டும் ஏறுகிறான். இதற்கிடையில் லக்ஷ்மணன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருகிரான், அச்சமயம் ஸ்ரீராமர், ராவணன் வானரப் படையை தாக்குவதைக் கண்டார். இதைக் கண்ட ஸ்ரீராமர் ராவணனை நோக்கி விரைந்தார்.
ராவணன் மீண்டும் தனது தேரில் ஏறியதைக் கண்ட ஸ்ரீ ஹனுமார், ராமர் அவனுடன் தரையில் நின்று போராட வேண்டியிருந்ததை கண்டார். ஹனுமார் ஸ்ரீ ராமரிடம், "தேவர்களின் எதிரியுடன் போரிடுவதற்கு விஷ்ணு கருடன் மீது ஏறி போரிட்டது போல் என் மீது தாங்கள் இவ்வரக்கனைத் தண்டிக்க வேண்டும்" என்று கூறினார். ஹனுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க இராமரும் ஹனுமாரின் தோள்களில் அமர்ந்தார். மானிட குல மாணிக்கம் இராமர் அப்போது போர்க்களத்தில் ராவணன் தன் தேரில் நிற்பதைக் கண்டார். சண்டையில் கோபம் கொண்ட ராவணன் ஒரு கட்டத்தில் ராமரை சுமந்து வந்த ஹனுமாரைத் தாக்குகிறான். ஹனுமார் ராவணனால் தாக்கப்படுவதைக் கண்ட ராமர், ராவணனின் தேரை விழுத்தி தள்ளினார். சலசலப்பில் ராவணன் தேரிலிருந்து கீழே விழுந்தான், ராமர் வில் சரத்தை இழுத்தார், அம்பு ராவணனின் கிரீடத்தை பறித்துச் சென்றது. அப்பொழுது ராமர் கூறுகிறார், "இந்த நிலையில், உன்னை மரணத்தின் பிடியில் வைக்க நான் விரும்பவில்லை. மீண்டும் லங்காவுக்குச் சென்று, உன் ரதத்தில் உன் வில்லுடன் திரும்பி வந்து, உன் தேரில் நின்று, மீண்டும் ஒரு முறை என் பராக்கிரமத்தைக் காண்பாயாக!."
மேலே கூறப்பட்ட விளக்கம் வால்மீகி ராமாயணத்திலிருந்து. ஸ்ரீ ஹனுமார் ஸ்ரீ ராமரை சுமந்து செல்லும் இந்த காட்சியை சித்தரிக்கும் பல ஓவியங்களை நாம் இன்று காணலாம். ஸ்ரீ ஹனுமாரின் இந்தச் செயல் அவருக்குத் தமிழில் “திருவடி” என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. இந்த காட்சியின் படம் பொதுவானது என்றாலும், இந்த வடிவத்தில் மூலவராக வழிபட்டில் எந்த கோயிலிலும் இருப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
ஸ்ரீ ஹனுமார் ஸ்ரீ ராமருக்கு தேராக இருப்பதுப்போன்ற காட்சி, இன்றைய ஹனுமந்தபுரத்தில் திறந்த வெளியில் இருந்த ஒரு பாறையில் முன் ஒரு காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அருகில் வசித்தவர்கள் ஸ்ரீ ராமருடன் சேர்ந்து ஸ்ரீ அனுமனை வழிபடத் தொடங்கினர். இந்த இரண்டு தெய்வங்களும் ஒரே விக்ரஹத்தில் ஒன்றாக இருப்பது மிகவும் அரிதானது மற்றும் தனித்துவமானது. ‘பாயுலு’ என்றால் கன்னட மொழியில் திறந்தவெளி என்று பொருள் படும்; அதனால் இந்த க்ஷேத்திரத்தில் ஆஞ்சநேயர் பய்யாலு ஆஞ்சநேயர் என்று அறியப்படலானார். ஒரு காலக்கட்டத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் அதிகமான பக்தர்களை அவர் பக்கம் ஈர்க்கலானார். இந்த கோவிலின் வளர்ச்சிக்கு பல ஆட்சியாளர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்று இத்திருக்கோயில் மேலே விவரித்துள்ளது போல் விளங்குகிறது.
மேலே விவரிக்கப்பட்ட லங்காவில் நடந்த போர்க்களக் காட்சியில் ராவணனை எதிர்கொள்ளும் ஸ்ரீ ராமரை ஸ்ரீ ஆஞ்சநேயர் தோளில் சுமந்திருக்கிறார். ஆனால் ஹனுமதபுர மூர்த்தத்தில், ஸ்ரீ ஆஞ்சநேயரின் பாதத்திற்கு அருகில் ஒரு அரக்கன் காணப்படுகிறான். ஸ்ரீ ஹனுமார் தாங்கிய ஸ்ரீ ராமர் ராவணனைத் தாக்கும் போது, ஒரு அரக்கன் ஸ்ரீ ஹனுமாரின் பாதத்தினை நோக்கி ஊர்ந்து சென்றதாக இக்கோயில் புராணம் கூறுகிறது. அரக்கனின் எண்ணம் ஸ்ரீ ஹனுமாரின் பாதங்களை இழுத்து, அவரை சமநிலை இழக்கச் செய்து, அவரது தோளில் இருக்கும் ஸ்ரீராமரை வீழ்த்த வேண்டும் என்பதாகும். ஆனால் அரக்கன் ஸ்ரீ ஹனுமாரின் பாதங்களைப் பிடித்தபோது, அவ்விரு தெய்வங்களின் தெய்வதன்மையையும் உணர்ந்தான். அவனது எண்ணம் மாறியது, ஸ்ரீராம பக்தனாக மாறிய அவன் ஸ்ரீராம பக்தர்களிலேயே மிகப் பெரியவரான ஸ்ரீ ஹனுமாரின் பாதத்தை சரணடைந்து உறுதியாக பற்றிக் கொண்டான்.
இக்கோயில் மேற்கு நோக்கியிருப்பதால், பய்யாலு ஸ்ரீ ஆஞ்சநேயரும் மேற்கு நோக்கியே காணப்படுகிறார். மூர்த்தம் சுமார் பத்து அடி உயரம் உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களை நோக்கியபடி, வலது கையால் பக்தர்கள் அனைவருக்கும் ‘அபய’ என்று அருள்பாலிக்கிறார். அவரது இடது பாதத்திற்கு அருகில் அரக்கன் காணப்படுகிறான். ஸ்ரீ ஆஞ்சநேயரின் வலிமையான தோள்களில் ஸ்ரீராமர் நின்றபடி காட்சியளிக்கிறார்.
அனுபவம்
பகவான் ஶ்ரீஹனுமார் ஸ்ரீராமரைத் தாங்கியபடி காட்சியளிக்கிறார்,
அந்தக் காட்சியே அவரது பக்தர்களுக்கு நிர்பயத்வத்தை அளிக்கிறது. கருணையுடன் பிரகாசிக்கும் இறைவனின்
பிரகாசமான ஒளிரும் கண்களால் நேரடியாக அவர் தனது பக்தர்களுக்கு அனைத்து மங்களத்தையும் அருள்
பாலிக்கிறார்.
தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: மே 2022