வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் முதல் அத்தியாயத்தில் ராமாயணத்தின் முழு நிகழ்வுகளையும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமரின் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இந்த அத்தியாயத்தில் உள்ளன. இந்த அத்தியாயத்தில் உள்ள நூறு ஸ்லோகங்கள் "சம்க்ஷேப ராமாயணம்" என்று பிரபலமாக அறியப்படுகின்றது, இப்பகுதி பல ஸ்ரீராம பக்தர்களால் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது. இது வால்மீகி முனிவர்களுக்கும் நாரதருக்கும் இடையே நடந்த உரையாடல் வடிவில் அமைந்து உள்ளது. முதல் பதினெட்டு ஸ்லோகங்கள் ஸ்ரீராமரின் நற்பண்புகளை விவரிக்கின்றது. கடைசி பத்து ஸ்லோகங்கள் பக்தர்களுக்கு ராமாயணம் பாராயணத்தினால் கிடைக்கும் பலன்களைப் பற்றி கூறுகின்றது.
தன் தந்தை தசரதன் அன்னை கைகேயிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீராமர் வனவாசம் செல்கிறார். கைகேயியின் விருப்பப்படி ஸ்ரீ ராமருக்குப் பதிலாக ஸ்ரீ பரதனை இளவரசனாக ஆக்க வேண்டும் என்பதும் வாக்குறுதி. ஸ்ரீ ராமருடன் ஸ்ரீ சீதையும் ஸ்ரீ லக்ஷ்மணனும் காட்டிற்கு செல்கிறார்கள். இவை எல்லா நிகழ்வுகளும் ஸ்ரீ பரதன் அயோத்தியாவில் இல்லாத நேரத்தில் நடந்த நிகழ்வுகள். ஶ்ரீ ராமரை காட்டுக்கு அனுப்பிய துக்கத்தால் தந்தை தசரதன் இறக்கிறார். ஸ்ரீ பரதன் அயோத்திக்குத் திரும்பியதும், ராஜ்ஜியத்தை ஏற்கத் தயாராக இல்லை, ஏனென்றால் அது ஸ்ரீராமருக்கு மட்டுமே உரியது என்று உறுதியாக நம்பினார்.
ஸ்ரீராமரை ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டு அயோத்திக்குத் திரும்பி அழைத்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் தனது மூன்று தாயார்களுடனும் மதிப்பிற்கு உரிய ரிஷிகளுடன் ஸ்ரீராமனைத் தேடி காட்டுக்குச் செல்கிறார் பரதன். சந்தித்து ஸ்ரீராமனை அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறார். ஸ்ரீ ராமர் தர்மத்தை எடுத்திக் காட்டி, பதினான்கு வருட வனவாசத்தை முடிக்காமல் தான் ராஜ்யத்தை ஏற்க முடியாது என்று ஸ்ரீ பரதரை நம்ப வைக்கிறார். ஸ்ரீ ராமனை அயோத்தியாவிற்குத் திரும்பும்படி தான் வற்புறுத்தியது தர்மத்தின் படி சாத்தியம் இல்லை என்பதை ஸ்ரீ பரதன் இறுதியாக ஏற்றுக்கொள்கிறான். ராஜ்யத்தை ஆளும் அதிகாரத்தின் அடையாளமாக ஸ்ரீ ராமர் தனது பாதுகையை ஸ்ரீ பரதனிடம் ஒப்படைக்கிறார்.
ஸ்ரீராமரை அயோத்திக்குத் திரும்ப அழைத்துச் செல்லும் விஷயத்தில் ஏமாற்றமடைந்தாலும், ஸ்ரீ ராமரின் அதிகாரமாக அவரது பாதுகையை ஸ்ரீ பரதர், நந்திகிராமத்தில் வைத்து பூஜை செய்து அயோத்தி ராஜ்யத்தை ஶ்ரீ ராமரின் பிரதிநிதியாக ஆட்சி செய்தார், ஶ்ரீ ராமர் வனவாசத்திலிருந்து திரும்புவதற்காக நந்திகிராமத்தில் காத்திருந்தார்.
இராவணனுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று, சீதையை இலங்கையில் இராவணனிடமிருந்து மீட்டார் ஸ்ரீராமர். போரில் வீழ்ந்த அனைத்து வானரங்களின் உயிர்களையும் மீட்டெடுக்க (அவரைப் பார்க்க வந்த) தேவதைகளிடம் வரம் பெற்றார். . புஷ்பக விமானத்தில் நண்பர்களுடன் அயோத்திக்குப் புறப்பட்டார். தர்மத்தின் பலத்தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் மகிழ்வித்த ஸ்ரீராமர், திரும்பும் வழியில் பரத்வாஜரின் ஆச்ரமத்திற்குச் சென்றார். தான் அயோத்திக்குத் திரும்புவதைப் பற்றி ஸ்ரீ பரதரிடம் தெரிவிக்க ஸ்ரீ அனுமனை அனுப்பினார். ஸ்ரீராமர் நீண்ட தூரத்தில் உள்ள அயோத்தியை அடைவதற்கு முன், ஸ்ரீ பரதரின் மனநிலை, மன உணர்வைக் கண்டறிந்து விரைவாகத் திரும்பும்படி ஶ்ரீ ஹனுமாரை அறிவுறுத்தினார்.
ஸ்ரீ அனுமார் அயோத்தியிலிருந்து தொலைவில் உள்ள நந்திகிராமத்தில் இருந்து ஸ்ரீ ராமரின் சார்பாக ராஜ்யத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீ பரதரைக் கண்டார். துறவு கோலம் பூண்டு மரத்தினால் வேயப்பட்ட கூறையுடன் கூடிய குடிலில் தோலினை ஆடையாக இடுப்பைச் சுற்றிக் கொண்டு, பரிதாபமாகவும், மெலிந்தும், ஜடா முடியுடன் அழுக்குப் படிந்த கைகால்களுடன் இருப்பதை கண்டார். மூத்த சகோதரர் ராமரைப் பிரிந்ததால் பாதிக்கப்பட்டு துறவறத்தில் வாழும் ஸ்ரீ பரதரை ஶ்ரீ ஹனுமார் இக்கோலத்தில் கண்டார். புலன்களை அடக்கி கிழங்கு, பழங்களை மட்டும் புசித்து, துறவறத்தில் ஈடுபட்டு, நல்லொழுக்கத்தைப் பாதுகாத்து , நல்லொழுக்கத்துடன் முனிவருக்கு நிகரான மகிமையுடன் ஶ்ரீ பரதர் காணப்பட்டார். ஶ்ரீ ராமரின் பாதுகையை முன் வைத்து, மக்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாத்து, நேர்மையான மந்திரிகள், புரோகிதர்கள் மற்றும் புத்திசாலித்தனமான படைத் தளபதிகளால் கலந்துகொள்ளும் உன்னத ஆட்சியை ஶ்ரீ ராமரின் பிரிதிநிதியாக பூமியை ஆண்டு வந்தார். அவரது எண்ணங்கள் ஶ்ரீ ராமரின் பெயரிலேயே நிலைத்திருந்தது.
ஶ்ரீ பரதரை சந்தித்த ஶ்ரீ ஹனுமார் உள்ளங்கைகளை இணைத்து வணங்கினார். பின் ஸ்ரீ ஹனுமார், ஸ்ரீராமருக்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அவருக்குத் தெரிவித்தார். மன வேதனையைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார். இன்னும் சிறிது நேரத்தில் அண்ணன் ராமர் இவரை இங்கு சந்திக்கப் போகிறார் என்பதையும் தெரிவித்தார். இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக் கொண்டு, அவரது நோக்கத்தை முறையாக நிறைவேற்றி விட்டு, இராமர் தன் வலிமைமிக்க நண்பர்களுடன் திரும்பி வருகிறார் என்பதையும் தெரிவித்தார்.
ஸ்ரீ ஹனுமாரின் வார்த்தைகளைக் கேட்டதும், கைகேயியின் மகனான ஸ்ரீ பரதர், மகிழ்ச்சியடைந்து, ஒரேயடியாக தரையில் விழுந்து, மிகுதியான மகிழ்ச்சியால் மயக்கமடைந்தார். சிறிது நேரத்தில் அவர் மயக்கத்தில் இருந்து எழுந்து சுயநினைவு திரும்பினார். புகழ்மிகு ஸ்ரீ பரதர் ஸ்ரீ ஹனுமாரை ஆரதழுவி, மகிழ்ச்சியில் வெளிபாடாக பிறந்த ஏராளமான கண்ணீர்த் துளிகளால் அவரை குளிப்பாட்டினார்.
இந்த நிகழ்வு அயோத்தியிலிருந்து பதினைந்து கிமீ தொலைவில் உள்ள சுல்தான்பூர் சாலையில் அமைந்துள்ள நந்திகிராமத்தில் நடந்தது. இது இன்று பாரத்குண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ ராமரின் பிரதிநிதியாக ஸ்ரீ ராமரின் பாதுகையை வணங்கி ஸ்ரீ பரதர் அயோத்தியை ஆண்ட இடம் இது. ஸ்ரீ அனுமார் ஸ்ரீ பரதரை சந்தித்து, ஸ்ரீ ராமர் இல்லம் வருவதைப் பற்றிய நற்செய்தியை அவருக்குத் தெரிவித்த இடம் அது. இன்று குளம் மற்றும் சில கோயில்களைக் கொண்ட எளிய கிராமமாக திகழ்கிறது இவ்விடம். அயோத்திக்கு வரும் அனைத்து ஸ்ரீராம பக்தர்களும் காட்டில் வனவாசம் இருந்தபோதும் ஸ்ரீராமர் ஆட்சி செய்த இந்த இடத்திற்கு வருவதில்லை என்பது நிதர்சனம்.
இந்த கிராமத்தில் "ஸ்ரீ பரத் தபோ ஸ்தல்" மற்றும் "ஸ்ரீ பரத் மிலன் மந்திர்" "ஸ்ரீ ராம் ஜானகி மந்திர்" போன்ற சில இடங்கள் உள்ளன, இவை அனைத்தும் மிகவும் பழமையான என்று பொருள் படும் "பிராசீன் மந்திர்" என்று கூறுகின்றனர். பரத் குண்டின் கரையில் "ஸ்ரீ பரத் ஹனுமான் மிலன் மந்திர்" என்று அழைக்கப்படும் ஒரு திருக்கோயில் உள்ளது.
கிராமத்தின் அமைதியான சூழலும், சுற்றிலும் உள்ள பசுமையும், பக்திமிக்க ஸ்ரீ பரதர் வனவாசத்திலிருந்து ஸ்ரீராமன் திரும்புவதைப் பற்றி தியானித்து, ஸ்ரீராமரின் சார்பாக ராஜ்ஜியத்தை மிகுந்த பக்தியுடனும் கடமையையுடன் பரிபாலனம் செய்த அந்த காலகட்டத்திற்கே பக்தர்களை அழைத்துச் செல்கிறது.
இக்கோயிலின் பிரதான சந்நிதியில் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன ஸ்ரீ பரதர் ஸ்ரீ அனுமாரை தழுவி உள்ளது போல் மூலவர் விக்ரஹம் அமைந்துள்ளது. இதன் அருகில் ஸ்ரீ ஹனுமாருக்கான சிறிய சந்நிதியைக் காணலாம். ஸ்ரீ ஹனுமாருக்கு மற்றொரு சன்னதியும் உள்ளது மற்றும் வளாகத்தில் ஸ்ரீ பரதருக்கு ஒரு சந்நிதி உள்ளது. "ஸ்ரீராம பாதுகைக்கு" தனி சந்நிதி. ஸ்ரீராம பரிவாரத்திற்கான தனி சந்நிதியும் வளாகத்தில் உள்ளது.
அனுபவம்
இத்தலத்திற்கும் இக்கோயிலுக்கும் சென்று வருவது பக்தரின்
பக்தி சிந்தனையையுடன் பொறுப்பாக கடமையை ஆற்றுவதின் திறனையும் மிகுதியாக்கும் என்பது
உறுதி.
தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: ஏப்ரல் 2022