அச்சமயம் ஆங்கிலேயர்கள் மெட்ராஸில் தங்கள் பிடியை வலுப்படுத்த முயன்றனர். அவர்களுக்கு பிரெஞ்சுகாரர்கள் இடமிருந்தும் மைசூர் சுல்தான் திப்புவிடம் இருந்தும் எவ்வேளையும் படையெடுப்பு வரலாம் என்ற அச்சுறுத்தல் இருந்தது. எனவே, மதராஸை கடலால் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட நான்காவது பக்கத்தை தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் சுவர்களைக் கட்டி முழு மதராஸ் நகரத்தின் பாதுகாப்பையும் பலப்படுத்த நினைத்தனர். பாதுகாப்பு சுவர் கட்டப்படுவதற்கு முன்பு, திப்பு சுல்தான் 1767லும் ஹைதர் அலி 1769லும் நகரத்தைத் தாக்கினர். ஏழு கிணறு, அரசு இல்லம் மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகியவற்றிலிருந்து தண்ணீர் விநியோகம் அப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. இந்த படையெடுப்பும் அச்சுறுத்தலும் ஆங்கிலேயர்களை உடனடியாக ஊருக்குச் சுவர் கட்டும் திட்டத்தை கையிலெடுக்க விரைந்தது.
போட்மேன் கேட், புல்லி கேட், திருவெட்டூர் கேட், எண்ணூர் கேட் என நான்கு நுழைவு வாசல்களுடன் வடக்குச் சுவரை திட்டமிட்டு, 1769 ஆம் ஆண்டு இறுதியில் வடக்குச் சுவரைக் கட்டி முடித்தனர். இன்றைய சூழ்நிலையில் இந்தச் சுவர் தற்போதைய “பேசின் பிரிட்ஜ் ரோடு, பழைய ஜெயில் ரோடு மற்றும் இப்ராஹிம் சாஹிப் தெரு” இவைகளை ஒட்டி அமைந்திருக்கும்.
மதராஸ் அப்போது ஆங்கிலேயர்களின் கீழ் இருந்தது. பணம் செலுத்தாதவர்களை சிறையில் அடைப்பதற்கு "சிவில் கடனாளிகள் சிறை" என்று பெயரிடப்பட்ட சிறை ஆட்சியாளர்களால் நிறுவப்பட்டது. சிறைக் கைதிகளின் செலவுகளைச் சமாளிக்க ஆங்கிலேயர்களால் அப்போது ஒரு விசித்திரமான நடைமுறை பின்பற்றப்பட்டது. புகார் கொடுத்தவர்களே அந்தந்த கைதியின் சிறை செலவை ஏற்க வேண்டும் என்பதாகும். அப்படி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சிறைச்சாலை, அப்போதைய மெட்ராஸுக்கு வடக்கே கட்டப்பட்ட பாதுகாப்பு சுவரை ஒட்டி இருந்தது.
இன்று மின்ட் மணிக்கூண்டு முதல் பாரதி மகளிர் கல்லூரி வரையிலான பகுதி "ஓல்ட் ஜேயில் ரோடு - பழைய சிறை சாலை" என்று அழைக்கப்படுகிறது. பாரதி மகளிர் கல்லூரியின் இன்றைய வளாகத்தில் சிவில் கடனாளிகள் சிறை இருந்தது. இந்த சிறை இன்றைய அரசினர் பொது மருத்துவமனை அருகேயும் பின்பு அங்கிருந்து புழலுக்கும் மாற்றப்பட்டது. பழைய சிறை இருந்த இடத்தில் சென்டிரல் பாலிடெக்னிக் வந்தது பின்பு அது அடையாறுக்கு மாற்றப்பட்டது. இது நாட்டின் முதல் அச்சு தொழில்நுட்ப பள்ளி ஆகும்.
இன்று பிரகாசம் சாலை என்று அழைக்கப்படும் பிராட்வே, தெற்கில் சைனா பஜார் சாலையில் இருந்து வடக்கே இப்ராஹிம் சாஹிப் தெருவுடன் (பழைய சிறை சாலை) இணைக்கும் வகையில் வடக்கு-தெற்காக இருக்கிறது. பிராட்வேயின் வடக்கு முனையில் பழைய நகரச் சுவரின் திருவெட்டூர் [திருவொற்றியூர்] நுழைவு வாயில் இருந்தது. இப்பகுதி முன்னாள் பிரிட்டிஷ் எம்.பி. மற்றும் பின்னர் கல்கத்தாவில் அட்வகேட் ஜெனரலாக இருந்த ஸ்டீபன் போபம் என்பவருக்குச் சொந்தமானது, அவர் 1778 இல் மெட்ராஸுக்கு இவர் குடிபெயர்ந்தார். இந்த சாலை முதலில் அவர் பெயரில் "போபம் பிராட்வே" என்று அழைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும் முத்தியால்பேட்டை மற்றும் பெத்தநாயக்கன்பேட்டை என ஜார்ஜ் டவுனை பிரித்தது. சாலையின் இருபுறமும் குடியமர்ந்த சமூகத்தினர் புதிய அமைப்புடன் புதிய கோவில்களையும் கட்டினார்கள்.
ஆங்கிலேயர்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் மெட்ராஸில் [அதாவது ஜார்ஜ் டவுனில்] மிகுதியாக இருந்தனர். இவர்கள் உள்ளூர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே இருதரப்பார்களுக்கும் இடை தரகர்களாக செயல்பட்டனர். ஆட்சில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த அவர்கள் துபாஷி என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது இரு மொழிகள் [து+பாஷா] தெரிந்தவர்கள். முத்தியால்பேட்டை மற்றும் பெத்தநாயக்கன்பேட்டையில் உள்ள பல பகுதிகள் இவர்களுக்கு சொந்தமானது மற்றும் இவர்கள் இதனை விரிவுபடுத்தினர். இன்றளவும் பேட்டையும் அதில் உள்ள தெருக்களும் இந்த மனிதர்களின் பெயரைத் தாங்கி நிற்கின்றன. இந்த பேட்டைகளில் பல கோவில்களை கட்டினார்கள். இப்படி கட்டிய கோயில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு கோயில் பிராட்வேயில் இருந்தது. இது தற்போது செயல்படாத பிராட்வே டாக்கீஸுக்கு எதிரே அமைந்துள்ளது. சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் புத்துயிர் பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே கோயில் அதைவிட மிகவும் பழமையானது என்று கூறலாம். கோவில் மிகவும் பழமையானதாக இருக்க வேண்டும் என்பதை புடைப்பு சிலையாக [அர்த்த-சிலையாக] பொறிக்கப்பட்டுள்ள இறைவனின் வடிவமைப்பு, மற்றும் தோரணை ஆகியவை உறுதிப்படுத்துகின்றன.
கோயிலின் பலகையில் “ஸ்ரீ ஆஞ்சநேயர், பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோவில்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வரதராஜர், பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், நடாதூர் அம்மாள் ஆகிய தெய்வங்கள் இங்கு வழிபடப்படுகின்றன. இக்கோயில் இப்போது ஸ்ரீ நடாதூர் அம்மாளின் ஆதரவாளர்கள் மற்றும் வம்சத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. "நடாதூர் அம்மாள் வரதகுரு அறக்கட்டளை" இக்கோயிலில் இணையதளத்தை பராமரித்து வருகிறது. ஸ்ரீ நடாதூர் அம்மாளின் வாழ்க்கை வரலாறு இல்லாமல் இந்த கோவிலின் புராணம் முழுமையடையாது.
தேவராஜ மகாதேசிகனின் மகனான ஸ்ரீ வரதகுரு பின்னர் நடாதூர் அம்மாள் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தையின் கீழ் ஆரம்பக் கல்விக்கு பிறகு, அவர் மேல் படிப்புக்காக அவரது தந்தையால் ஸ்ரீ விஷ்ணு சித்தாசார்யர் என்னும் எங்களாழ்வாரிடம் அனுப்பப்பட்டார். ஸ்ரீ வரதகுரு தனது முழுப் பயிற்சியையும், வேதாந்தத்தையும் தனது குரு ஸ்ரீ எங்களாழ்வாரிடம் கற்றார். அவரது குரு ஸ்ரீ எங்களாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள கொல்லகொண்டாவில் ஆச்சார்ய திருவடியை அடைந்த பிறகு அவர் உண்மையான சீடராக இவர் தனது கடமைகளை நிறைவேற்றினார். பின்பு காஞ்சிக்கு திரும்பினார், அங்கு அவர் ஸ்ரீ பாஷ்ய உபன்யாசத்தை தொடர்ந்தார். அவரது இனிமையான சொற்பொழிவும், சிறந்த சொற்பொழிவும் அப்புல்லார் என்ற ஆத்ரேய ராமானுஜர், வடக்கு திருவீதிப்பிள்ளை, கூரத்தாழ்வானின் கொள்ளுப் பேரன் சுதர்சனசூரி போன்ற பல சீடர்களைக் கவர்ந்தது.
வரதகுரு காஞ்சி ஶ்ரீவரதராஜரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு அவர் பரவச மனநிலையில் பெருமாளை வணங்கி கொண்டிருந்த போது, அர்ச்சகர் மிகவும் சூடான பாலை இறைவனுக்கு நிவேதனம் கொண்டு வந்தார். இதை கண்ட வரதகுரு நம்பெருமாளுக்கு கொதிக்கிற பாலை அமுது செய்து வைக்கக் கூடுமோவென்று மிகவும் வருந்தினார். அர்ச்சகர் கொண்டுவந்த சூடான பாலை வாங்கி, அதனை குடிக்கும் அளவுக்கு சூடாக இருக்கும் வரை ஆற்றி அமிர்தத்திற் கொப்பானதாக அன்புடன் பெருமாளுக்கு கண்டருளப்பண்ணினார். இதனை கண்ட ஶ்ரீவரதர் "தாயன்றோ தமது குழந்தைக்கு இவ்விதம் ஆற்றி ஸுகோஷ்ணமாக அருமை பாராட்டிப் பாலூட்டி அதனை வளர்ப்பது; ஆகவே நீர் என் அம்மாளோ," என்று புன்முறுவல் பூத்த திருமுககமலத்துடன் அதிவாத்ஸல்யத்தோடு அழைத்தனர். அன்றிலிருந்து வரதகுரு "நடாதூர் அம்மாள்" திருநாமத்தினை பெற்றார்.
அம்மாள் தனது ஸ்ரீ பாஷ்ய உபன்யாசத்தை தனது நூறாவது வயது வரை தொடர்ந்தார். அவருடைய சீடர்களில் ஒருவரான அப்புல்லார், தூப்புலிலுள்ள தனது சகோதரி தோடராம்பாவைப் பார்க்கச் சென்றிருந்தார். அவர் காஞ்சிக்கு திரும்பியதும் அவருடைய ஐந்து வயது மருமகன் வேங்கடநாதனும் உடன் அழைத்து சென்றார். காஞ்சியை அடைந்தவுடனேயே தன் அன்பான ஆசிரியரைக் கண்டு ஆசி பெற்றார். அம்மாள் குழந்தையை ஆசிர்வதித்து, அவர் தன் உபன்யாசத்தை தொடர நினைத்த போது, எந்த கட்டத்தில் தாம் உபன்யாசம் செய்து கொண்டிருந்தோம் என்பது மறந்து திகைத்தார். இதைக் கண்ட குழந்தை வேங்கடநாதன் பிராகிருத சொற்றொடரைப் பயன்படுத்தி விட்ட இடத்தை அடி எடுத்து கொடுத்தான். அம்மாளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை, குழந்தை ஒரு அவதாரம் என்பதை புரிந்து கொண்டார். அவர் வேதாந்த சமயத்தை நிலைநாட்டவும், தவறான வாதங்களுக்கு பயமுறுத்தலாகவும் இருக்கும் தெய்வீகக் குழந்தையை முழு மனதோடும் ஆன்மாவோடும் ஆசீர்வதித்தார். அம்மாளின் கணிப்பு சரியானது என்பதை வேங்கடநாதன் பின்னர் நிரூபித்தார். அவர் ஸ்ரீரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஆகியோரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்று பின்காலத்தில் அழைக்கப்பட்டார்.
இது மிகவும் எளிமையான நோக்கிய ஆலயமாகும். முக்கிய சந்நிதிகள் கிழக்கு நோக்கியிருப்பதால், பிரதான சாலையில் இருந்தே ஸ்ரீ வரதராஜர், பெருந்தேவி தாயார், ஆண்டாள் ஆகியோரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஸ்ரீஆஞ்சநேயரின் சன்னதி வடக்கு நோக்கியும், நடாதூர் அம்மாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயரையும் நடாதூர் அம்மாளையும் தரிசனம் செய்ய கோவில் வளாகத்திற்குள் செல்ல வேண்டும். ஸ்ரீ ஆஞ்சநேய சந்நிதியை நோக்கி ஸ்ரீ நடாதூர் அம்மாள் மடியில் ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தம் கருங்கல்லில் புடைப்பு சிலையாக காணப்படுகிறது. மூர்த்தம் சுமார் நான்கரை அடி உயரம் உடைய. ஸ்ரீ ஆஞ்சநேயர் மூர்த்தம் வடக்கு நோக்கிய நிலையில் மேற்கு நோக்கி நடப்பது போல் காணப்படுகிறது.
ஶ்ரீஆஞ்சநேயர் தனது தாமரை பாதங்களில் நூபுரத்தையும் தண்டையும் அணிந்துள்ளார். அவரது வலுவான ஆடுதசை மற்றும் உறுதியான தொடை அவரது உடல் வலிமையை பிரதிபலிக்கிறது. இறைவன் ஒரு பிரம்மச்சாரியாக இடுப்பு வஸ்திரம் [கௌபீனம்] அணிந்துள்ளார். வால் உயர்த்தப்பட்டு, அவரது தலைக்கு மேலே சென்று ஒரு வளைவுடன் முடிகிறது. அவர் இடது இடுப்பில் இருக்கும் இடது திருக்கரம் சௌகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. இடது தோள்பட்டைக்கு மேலே மலர் காணப்படுகிறது. அவரது உயர்ந்து இருக்கும் வலது திருக்கரம் ‘அபய முத்திரை’ காட்டி, பக்தர்களுக்கு அச்சமின்றி இருக்க சொல்வதாக காட்சியளிக்கிறது. அவரது இரண்டு மணிக்கட்டுகளிலும் அவர் கங்கணமும் மேல் கையில் அங்கதம் என்னும் கேயூரமும் அணிந்துள்ளார். அவரது பரந்த மார்பில் அவர் ஒரு பட்டையான மாலையும் மற்றொரு மெல்லிய மாலையும் அணிந்துள்ளார். கழுத்தை ஒட்டி ’நெக்லஸ்’ அணிந்துள்ளார். அவரது மார்பின் குறுக்கே யக்ஞோபவீதம் காணப்படுகிறது. தோள்களைத் தொடும் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளார். அவரது கேசம் நேர்த்தியாக சீவப்பட்டு, அலங்காரமான ‘கேச பந்தம்’ அணிகலம் மூலம் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறது. கனிந்த கன்னங்கள் அவரது கவர்ந்திழுக்கும் கண்களுக்கு மேலும் கவர்ச்சியை கூட்டுகிறது. இறைவனின் பிரகாசிக்கும் கண்கள் கருணையால் பரமளிக்கின்றது. அக்கருணை கடாக்ஷத்தால் அவர் பக்தர்களுக்கு அருளுகிறார்.
அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தில் கோவிலும் பிரபுவும் எளிமையாகவும்
அதே சமயம் மெச்சத்தக்கதாகவும் இருக்கிறது. அடக்கம் நிறைந்த பிரபுவின் தரிசனம், நமக்கு எளிமையான
வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், நமது தன்னடக்கத்தையும் மேம்படுத்த ஊக்குவித்து, நம் வாழ்வில்
வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது திண்ணம்.
தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: பிப்ரவரி 2022