home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஹோலே ஆஞ்சநேயர் திருக்கோயில், மத்தூர், கர்நாடகா


ஶ்ரீவியாசராஜாவும் ஶ்ரீபாதராஜாவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த ஒரே ஹனுமார்

ஶ்ரீஹோலே ஆஞ்சநேயர் திருக்கோயில், மத்தூர், கர்நாடகா

ஜி.கே.கௌசிக்


மத்தூர்

ஶ்ரீஹோலே ஆஞ்சநேயர் திருக்கோயில், மத்தூர், கர்நாடகா மைசூருக்கும் பெங்களூருக்கும் மத்தியில் இருக்கிறது மத்தூர் நகரம். நீங்கள் இரயிலில் பயணித்தீர்களானால், ’மத்தூர்’ என்னும் பெயரை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். இந்த ஊரில் தயாரிக்கப்படும் வடை அவ்வளவு பிரபலம் அதனால் ’மத்தூர் வடா’ என்று கூவி விற்பார்கள். மற்றபடி பிரபலமில்லா இந்நகரம் மிகவும் அமைதியான இடமாகும், அமைதியான இவ்வூரில் சில பழமையான கோவில்கள் உள்ளன. இந்த நகரம் சிம்ஶா ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது.

பழமை மிகு மத்தூர்

மத்தூர் மிகவும் பழமையான இடம், மகாபாரத காலத்தை ஒட்டியது. அர்ஜுனன் அக்யான வாசத்தின் போது இங்கு வந்து சென்றிருப்பதால் இந்த ஊருக்கு ’அர்ஜுனபுரி’ என்று பெயருடன் விளங்கியுள்ளது. சிம்ஶா நதியிற்கு கடம்பா நதி என்று இந்நதி கரையில் தவமிருந்த முனிவரின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஹொய்சாள [போசள] பேரரசர் ஶ்ரீவிஷ்ணுவர்தனன் (அரசாண்டது 1108–1152 CE) இவ்விடத்தை ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு இனாமாக அளித்துள்ளார். இவ்வரசர் இவ்வூரில் ஶ்ரீவரதராஜருக்கு திருக்கோயில் கட்டியுள்ளார், பெரிய ஏரியும் வெட்டியுள்ளார். இவ்வூரின் அக்ரஹாரம் ’நரசிம்ம சதுர்வேதி மங்களம்’ என்று தனது மகனின் பெயரிலில் அமைத்தார்.

இவ்வூரில் மூன்று பெரும் திருக்கோயில்கள் - ஶ்ரீ உக்ர நரசிம்மர், ஶ்ரீ வரதராஜர், ஶ்ரீ ராமர் ஆகியோரை மூலவர்களாக கொண்டு கட்டப்பட்டது. மூன்று திருக்கோயில்களும் மிகவும் அழகாகவும், கண்ணை கவர்வதாகவும் உள்ளது. மூலவர்கள் தரிசனம் - கண்ணை விட்டு அகலமாட்டார்கள். இங்கு காணப்படும் ஶ்ரீஆஞ்சநேயரின் உத்சவர் விக்ரஹம் தாஸ பாவத்தில், கையால் வாய் பொத்திய நிலையில் பழமையான சோழர்க் கால விக்ரஹத்தை ஒத்து காணப்படுகிறது.

இங்கு கிடைக்கப்பட்டுள்ள ஓலை சுவடிகள் தொல்லியல் துறையினரால் பரிசீலிக்கப்பட்டதில் இவ்வூர் மத்தூர் அர்ஜுனபுரி என்றும் கடம்பக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது காணப்பட்டுள்ளது. ஶ்ரீநரசிம்மர் திருக்கோயிலில் 1150ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டும், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டும் காணப்படுகிறது. அவைகளில் ’மருதூர்’ என்றும் ’நரசிம்ம சதுர்வேதி மங்களம்’ என்றும் பதிவாகியுள்ளது. இதை தவிர இவ்வூரின் காவல் தெய்வமாக மருதூரம்மா என்னும் கொண்டாடப் படுகிறாள். அவளுக்காக ஊர் எல்லையில் ஒரு கோயிலுள்ளது.

மைசூர் சுல்தான் காலத்தில் இங்கு வெடி மருந்து வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தது. கன்னடத்தில் மத்து என்றால் வெடி மருந்து என்பதாகும். இக்காரணத்தால் இவ்வூருக்கு மத்தூர் என்று பெயர் வந்ததாக சொல்வது உண்மைக்கு புறம்பானதாகும். மேலே கூறிய காரணங்களை பார்க்கும் பொழுது மருதூர் என்பதே மத்தூர் என்று மருவியிருப்பது விளங்கும்.

ஶ்ரீமாத்வாசாரியரும் த்வைத ஆர்வலர்களும்

ஶ்ரீஹோலே ஆஞ்சநேயர் திருக்கோயில், மத்தூர், கர்நாடகா - தல புராணம் 1238-1317 இல் வாழ்ந்த மாத்வாசாரியார் அவர்கள் த்வைத சித்தாந்தத்தை ஆதரித்தவர். இவரை ஶ்ரீஹனுமாரின் மறுபிறப்பு என்று சொல்வார்கள். இவரின் சித்தாந்தத்தில் ஶ்ரீஹரி [ஶ்ரீவிஷ்ணு] முதல் கடவுள், ஶ்ரீமுக்கிய ப்ராணா [ஶ்ரீஹனுமார்]வை தொழுவது மிகவும் முக்கியம். இவரின் சித்தாந்தத்தை பின்பற்றுவர்கள் மாத்வர் என்று அழைக்கப்படுகிறார்கள், இவர்கள் இவ்விரு தெய்வத்தை பூஜ்ஜிப்பவர்கள்.

ஶ்ரீபாதராஜா [ஶ்ரீலக்ஷ்மிநாராயண தீர்த்தர்] 1422-1480 இல் வாழ்ந்த த்வைத ஞானி, பக்தி மார்க்கத்தை [ஹரிதாஸ பரம்பரை] பரப்பிய இவர் முல்பாகலில் வாழ்ந்தவர். இவர் ஶ்ரீவியாசராஜாவின் ’வித்யா குரு’ ஆவார். இவர் ஶ்ரீகேபிநாத ஸ்வாமி இவரது உபாஸனை மூர்த்தியாகும்.

ஶ்ரீவியாசராஜா அவர்கள் ஶ்ரீமுக்கிய ப்ராணாரை [ஶ்ரீஹனுமார்] பல க்ஷேத்திரங்களில் ஸ்தாபனம் செய்தவர் என்பது மிகவும் பிரசுத்தம். குரு ஶ்ரீபாதராஜா அவர்கள் சீடர் ஶ்ரீவியாசராஜா அவர்களுடன் புனித யாத்திரை செய்யும் பொழுது இந்த க்ஷேத்திரமாகிய மருதூருக்கும் விஜயம் செய்தனர். ஶிம்ஷா நதிகரையில் அவர்கள் தங்கியிருந்த பொழுது இவ்விடத்தின் ரம்யத்தையும், பவித்ரத்தையும் கண்டு வியந்தனர். இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீமுக்கிய ப்ராணரை நதிகரையில் ஸ்தாபனம் செய்ய முடிவு செய்து ஒரு நந்நாளில் பிரதிஷ்டை செய்தார்கள்.

ஶ்ரீஆஞ்சநேயருக்கு திருக்கோயில்

ஶ்ரீஹோலே ஆஞ்சநேயர், மத்தூர், கர்நாடகா தபஸ்விகளான இவ்விருவரும் ஸ்தாபனம் செய்த ஶ்ரீமுக்கிய ப்ராணர் மிகவும் சக்தி வாய்ந்தவர், இந்த க்ஷேத்திரம் பலரையும் ஈர்ந்ததில் வியப்பில்லை. பல அரசர்களும் பல செல்வந்தர்களும் தங்களால் ஆனதை செய்து, நாளடைவில் ஶ்ரீமுக்கிய ப்ராணருக்கு திருக்கோயில் உருவாகியது. ஶ்ரீஹனுமார் ஶிம்ஷா நதியை பார்த்த வண்ணம் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். பெரிய கர்பகிரஹத்தின் முன் மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்திலிருந்தே பக்தர்கள் ஶ்ரீஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அதிக ஆடம்பரம் இல்லாத சிறிய எளிமையான திருக்கோயில் இது. அடர்த்தியான மரங்களிடையும், ஶிம்ஷா நதியை ஒட்டியும் அமைந்துள்ள இவ்வாடம்பரம் அற்ற கோயிலில் ஶ்ரீஹனுமாரின் தரிசனம் மனதில் மிக ஆழமாக பதிந்து விடும். பக்தர்கள் மனதில் சாந்தியுடன் இறைவனை பிரார்த்திக்க முடியும். இத்திருக் கோயில் நதிகரையில் அமைந்திருப்பதால், ஹோலே ஆஞ்சநேயர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. கன்னடத்தில் ஹோலே என்றால் நதி என்று பொருள் படும்.

ஹோலே ஶ்ரீஆஞ்சநேயர்

இந்த க்ஷேத்திரத்தின் பிரபு கிழக்கு நோக்கியிருக்கிறார், வடக்கு நோக்கி நடப்பது போல் காணப்படுகிறார். இரு பாதங்களையும் நூபூரமும் தண்டையும் அலங்கரிக்கிறது. பிரபுவின் தொடைகள் பலமிகு பிரபுவை பிரகடன படுத்துகிறது. மூன்று சாரி மாலை அவரது மார்பை அலங்கரிக்கிறது. அவரது தோள்பட்டையில் உத்ரீயம், முப்புரி நூல் இடது தோளில் காணப்படுகிறது. அவரது மணிகட்டில் கங்கணமும், புஜத்தில் கேயூரமும் காணப்படுகிறது. அவரது இடது திருகரத்தில் சௌகந்திகா மலர் காணப்படுகிறது, வலது திருகரத்தால் ’அபய முத்திரை’ தரித்து அவர் பக்தர்களுக்கு பயமின்மையை தருகிறார். கேசம் அழகாக சீவப்பட்டு குடுமியாக கட்டி வைத்துள்ளார். சந்திர சூரிய சின்னங்களும் காணப்படுகிறது.

இங்கு ஶ்ரீஹனுமார் ’அவதாரதிரியா’வாக காட்சிக் கொடுக்கிறார். நீண்ட வால் ஶ்ரீஹனுமாரையும், சௌகந்திகா மலர் ஶ்ரீபீமனையும், அழகிய குடுமி ஶ்ரீமாத்வாசாரியரையும் அடையாளம் காட்டுகிறது. வாலின் நுனியில் சிறிய மணியும் காணப்படுகிறது. அவை அனைத்தும் ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை என்பதை காண்பிக்கிறது. சந்திர சூரியரின் இருப்பதால் ஶ்ரீபாதராஜா பிரதிஷ்டை என்பதை காண்பிக்கிறது. இந்த இரு தவ செல்வர்களும் த்வைத சித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்பதை காட்ட ஶ்ரீஹனுமாரின் திருகரத்தின் நடுவிரலையும், ஆள்காட்டி விரலையும் நீளமாக அமைத்துள்ளனர்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஹோலே ஆஞ்சநேயர் திருக் கோயில், மத்தூர்

 

அனுபவம்
முழுப் பிரச்சனையுடனும் கனத்த மனத்துடனும் வாருங்கள், நீங்கள் வளாகத்திற்குள் நுழையும் தருணத்திலேயே இந்த க்ஷேத்திரத்தின் இனிமையான சூழல் உங்களை அமைதிப்படுத்தும். ஹோலே ஆஞ்சநேயரை தரிசனம் செய்து, காருண்யத்தை வெளிப்படுத்தும் பிரபுவின் பிரகாசமான பளபளப்பான கண்களில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். பிரபுவின் காருண்யத்துடன் எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையுடன் உங்கள் மனதில் இருந்த கவலை தளர்ந்து அகன்று போவதை நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள்.  

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: டிசம்பர் 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+