home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், முல்பாகல், கர்நாடகா


ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், முல்பாகல், கர்நாடகா

ஜீ.கே.கௌசிக்


முல்பாகல்

ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், முல்பாகல், கர்நாடகா கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் உள்ளது முல்பாகல் என்னும் ஊர். பெங்களூருக்கும் திருப்பதிக்கும் இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ளது இவ்வூர். ஒரு கால கட்டத்தில் இந்த இடம் பல அறிஞர்களால் வேதங்கள் கற்பிக்கும் பாடசாலைகள் மிகுந்து, வேதம் கற்க மிக முக்கியமான மையமாக திகழ்ந்தது. இங்கு அமைந்திருந்த வேத பாடசாலைகள் பல மன்னர்களால் ஆதரிக்கப்பட்டது, முக்கியமாக விஜயநகர மன்னர்களால். மகாபாரத காலத்திற்கு முன்பிருந்தே இந்த க்ஷேத்திரம் பிரபலமாக இருந்திருக்கிறது.

முல்பாகல் - பெயர் காரணம்

முந்திய மைசூர் இராஜ்யத்தின் கிழக்கு எல்லையாக இருப்பதால் இதனை "முடலபீகிலூ" என்று அழைத்தனர். கன்னடத்தில் "கிழக்கு வாயில்" என்று பொருள்படும் சொல் இது. முடல்பீகலூ என்பது முலபீகிலூ ஆக மருவி பின் "முல்பாகல்" என்று இன்று அழைக்கப்படுகிறது.

இவ்விடம் பாஸ்கர க்ஷேத்திரம் என்றும், கதலிஶவனம் என்றும், அர்ஜுனபுரம் என்றும் அழைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இக்ஷுவாகு குலகுருவான வசிஷ்ட மக ரிஷி ஶ்ரீசிதா-ராம-லக்ஷ்மண விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்துள்ளார், பின் ஶ்ரீ ஶ்ரீநிவாசர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார், பின்பு போரில் தனது தேரின் கொடியில் இருந்து தனக்கு வெற்றி வாங்கி தந்த ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ஜுனனால் இங்கு விக்ரஹம் வடிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகம்

ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், முல்பாகல், கர்நாடகா ஶ்ரீஇசிதா-ராம-லக்ஷ்மணர் சன்னிதி, ஶ்ரீநிவாஸ பெருமாள் சன்னிதி, ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதி மூன்றும் பக்கத்து பக்கத்து சன்னதிகளாக அமைந்துள்ளது. ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதி இக்கோயிலினின் முக்கியமான சன்னிதியாக கருதப்படுகிறது. பல மன்னர்கள் அவரவர்கள் காலத்தில் இச்சன்னிதியை ஒட்டி சாந்நித்யம் குறையாமல் பல மாற்றங்கள், விரிவாக்கங்கள் என்று பல செய்துள்ளனர். அக்பரின் நிதி அமைச்சராக இருந்த திரு தோடர் மால் அவர்களும் இக்கோயில் வளாகத்தை விரிவாக்கம் செய்துள்ளார்.

இன்று இக்கோயில் வளாகத்தில் இதர பல சன்னிதிகளும் காணப்படுகிறது, திருக்கோயிலுக்கு மிக பெரிய குளம் கட்டப்பட்டுள்ளது. பல மன்னர்களின் பங்களிப்பு வேறுப்பட்ட காலங்களில் வந்தாலும், இன்று வளாகம் மிகவும் பெரியதாகவும் வசிகரமாகவும் இருக்கிறது.

முல்பாகல் பேரூந்து நிலையம் பெரிதாக்க விரிவானதின் காரணமாக கிழக்கு பகுதியில் இருந்த கோயில் வாயிலை மூடிவிட்டார்கள். பேரூந்து நிலயத்திலிருந்து பார்த்தால் கோயிலின் கிழக்கு வாயிலும், அதன் மேல் கட்டப்பட்டுள்ள வளைவும் அதில் இந்த க்ஷேத்திரத்தில் உள்ள மூலவர் ஶ்ரீஆஞ்சநேயரின் பிரதியாக ஒரு சுதை சிற்பத்தையும் காணலாம். அதே வளைவின் மறு பக்கம் ஶ்ரீராம பட்டாபிகேஷ காட்சி சுதை சிற்பம் இருக்கிறது, இதனை கோயில் உள்ளிருந்து தான காணமுடியும்.

இன்று மேற்கு பக்கத்திலிருந்து தான் கோயில் வளாகத்தில் நுழைய முடியும். மூன்று நிலை இராஜ கோபுரம் வழியாக நுழைவு. நுழைவதற்கு முன் இடது புறம் கோயிலின் தேர் நிருத்தம் உள்ளதை காணலாம். நுழைந்த உடன் நீண்ட பாதை. பாதையின் முடிவில் பலி பீடமும், முலாம் செய்யப்பட்ட பித்தளை தகட்டால் போர்த்தப்பட்ட துவஜஸ்தம்பமும் உள்ளது. கல்லால் ஆன தீபஸ்தம்பமும் உள்ளது. கொடி மரத்தடியில் பக்தர்கள் வணங்கிவிட்டு கோயிலுக்குள் செல்வது வழக்கம்.

துவஜஸ்தம்பத்திற்கு நேர் எதிரில் ஶ்ரீ ஆஞ்சநேயர் சன்னிதி. மிக பெரிய மண்டபத்தின் கடைசியில் சன்னிதி உள்ளது. மண்டபத்திற்கு மேல் பகுதியில் பதினொரு வளைவுகள் உள்ளன. ஶ்ரீமகா விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், மற்றும் க்ஷேத்திர ஆஞ்சநேயரின் சுதை சிற்பங்கள் இவ்வளைவுகளை அலங்கரிக்கின்றன. இருபது தூண் கொண்ட மண்டபத்தின் மறு முனையின் மத்தியில் ஶ்ரீ ஆஞ்சநேயரின் கர்ப்பக்கிருகம். பக்தர்கள் அமைதியாக க்ஷேத்திர ஶ்ரீ ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அமைதியான சூழ்நிலை, எங்கிருந்து பார்த்தாலும் கண்கொள்ளா தரிசனம் தருகிறார். அவரை வேண்டி வணங்கி ஆசிகள் பெற்று வருவோம்.

ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், முல்பாகல், கர்நாடகா மண்டபத்திலிருந்து வெளியே வந்து அடுத்துள்ள ஶ்ரீவேங்கடரமணரை [ஶ்ரீநிவாசரை]யும், பரிவாரத்துடன் இருக்கும் ஶ்ரீ இராமரையும் தரிசித்து வேண்டி வணங்கி ஆசிகள் பெற்று வருவோம்.

அடுத்ததாக ஶ்ரீவரதராஜருக்கு சன்னிதி உள்ளது அங்கு அவரை தரிசித்து வேண்டி வணங்கி ஆசிகள் பெற்று வருவோம். இப்பொழுது எல்லா சன்னிதியையும் வலம் வருவோம். சுற்று சுவரை ஒட்டி கட்டப்பட்டுள்ள பாதையில் வலம் வருவோம். அப்பொழுது வளாகத்தில் மரத்தடியில் சிறிய ஆஞ்சநேயர் விக்ரகங்களையும் சிறிது பெரிதாக இரு குளங்களையும் காணலாம்.

ஶ்ரீ ஆஞ்சநேயர்

சுமார் பன்னிரெண்டு அடி உயரமுள்ள கருங்கல்லினால் ஆன மூர்த்தம் இந்த க்ஷேத்திரத்து ஶ்ரீ ஆஞ்சநேயர்.

மேற்கு நோக்கி இருக்கும் பிரபு தெற்கு நோக்கி நடப்பது போலுள்ளார். அவரது பொற்பாதங்களில் நூபூரம், மற்றும் தண்டை அணிந்துள்ளார். அவரது இடது திருப்பாதத்தை தெற்கு திசை நோக்கி முன்னே வைத்துள்ளார். அவரது இடது கால் முட்டியில் அலங்காரமான ஆபரணம் அணிந்துள்ளார். வலிமையான தொடைகளை அவர் அணிந்திருக்கும் கச்சம் கவ்வி பிடித்துள்ளது. கச்சத்தை அழகிய அணிகலம் இடுப்பில் பிடித்துள்ளது. வலுவான இரு திருக்கரங்களின் மணிக்கட்டில் கங்கணமும், மேற்கையில் கேயூரமும் அணிந்துள்ளார். இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தை வைத்துள்ளார், வலது திருக்கரத்தால் அபய முத்திரையை காண்பித்து பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். சிரத்தின் மேல்வரை எழும்பியுள்ள பிரபுவின் வால் அழகிய சிறிய வளைவுடன் முடிகிறது. அவரது முகம் அமைதியாக உள்ளது அந்த அடக்கம் எங்கெங்கும் சாந்தத்தை பரப்புகிறது.

விழாக்கள்

ஶ்ரீஇராம நவமி, பிருங்கோத்ஸவ், ச்ரவண நவராத்திரி, ரத ஸப்தமி, ஹனுமத் ஜயந்தி, விஷ்ணு தீபோத்ஸவா என்று பல விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், முல்பாகல், கர்நாடகா

 

அனுபவம்
க்ஷேத்திரத்தின் ஶ்ரீ ஆஞ்சநேயரை தரிசித்தால் ஞானமும் சாந்தமும் பக்தர்களை சூழ்வதை உணரமுடியும். ஶ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து பகவத் கீதையை கேட்டவர் இவர், தொழுங்கள் ஞானத்தை நிச்சயம் அளிப்பார்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: டிசம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+