home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு

ஜீகே கௌஷிக்


வல்லம்

வல்லம் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பினும் அரண் மிகுந்த ஊர் என்பதே பொருத்தமாகும் வகையில் வடஆர்க்காடு, தஞ்சை அருகில், செய்யாறு, செஞ்சி அருகில், மாமண்டூர் அருகில், சீர்காழியடுத்து, திருநெல்வேலி மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள 'வல்லம்' என்னும் ஊர்கள் யாவும் கோட்டைகள் அமைந்த ஊர்களாகவே உள்ளன.

தஞ்சையின் வல்லம்

தஞ்சைக்கு மேற்காக உள்ள வல்லம் சரளைக்கற்கள் நிரம்பி, மேட்டுபாங்கான நிலமாக உள்ள இயற்கையாகவே அரணாக அமைந்த ஊர். இன்றும் ஏரிகளும் குளங்களும் மிகுந்த இவ்வூரை 'ஏரியூர் நாட்டுக் கருவுகுல வல்லம்' என்றும் 'பாண்டிய குலாசனி வள நாடு' என்றும் சோழர் காலத்தில் அழைத்திருகின்றனர்.

தொன்மையான ஊர் வல்லம்

தஞ்சை இன்று அதிகம் போற்றப்பட்டாலும் வல்லம் பழமை மிக்க ஊர் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகளின் முடிவில் தெரியவருகிறது. அங்கு தமிழ் எழுத்தில் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளமையாலும், அது கி.மு. 170க்குரியது என்று துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளதாலும் வல்லம் மிக பழமை வாய்ந்த ஊர் என்று அறியமுடிகிறது.

சங்க காலத்தில் வல்லம்

கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தை, கடைச் சங்க காலமாக வகுத்துள்ளார்கள். அச்சங்க காலத்தில் மலர்ந்த தமிழ் நூல்களில் தஞ்சாவூர் அல்லது தஞ்சை என்ற பெயரில் எந்த குறிப்பும் கிடையாது. ஆனால் வல்லம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அகநானூறு எனும் பழந்தமிழ் நூலில் காணப்பெறும் 336 ஆம் பாடலிலும் 356 ஆம் பாடலிலும் வல்லம் பற்றிய குறிப்புள்ளது. அவைகளின் பொருள் பார்ப்பின் வல்லம் பாதுகாப்பு மிக்க நகரம் என்பது உறுதிப் படுவதுடன் நெல் விளையும் வளமான பூமி என்றும் அறிய முடிகிறது.

முத்தரையர்கள் கால வல்லம்

இதன் பின் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சோழ நாடுபல்லவப் பேரரசர்களின் ஆளுகையில் இருந்தது. அவர்களது குறுநில மன்னர்களாக முத்தரையர்கள் என்னும் கங்கர்களை நியமித்தனர்.

திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள நியமம் ஊரில் பிடாரி கோயில் தூண்களில் உள்ள கல்வெட்டுகிளின் மூலம் முத்தரையர்கள் பற்றிய பல செய்திகள் அறியமுடிகிறது. பிடாரி கோயில் இடிபாடுற்று அழிந்தது. பின்நாளில் செந்தலை கோயிலில் இந்த தூண்கள் கொண்டு மண்டபம் கட்டப்பட்டது. அக்கல்வேட்டுகிளில் பாச்சில் வேள் நம்பன் என்னும் புலவர் பாடிய பாட்டு ஒன்றிலிருந்து 'எங்கும் ஆற்றில் வருகின்ற நீரால் சூழப்பட்ட வல்லத்து அரசனாகிய மாறனுடன் செய்த போரில் வீரம் நிரம்பிய இடங்களில் ....' என்று பொருள்படுவதாலும், வல்லம் முத்தரையர்கள் ஆளுகையிலிருந்து இருக்கிறது என்பதை அறிகிறோம். கி.பி. 850ல் விஜயாலயச் சோழன் தஞ்சையையும், வல்லத்தையும் கைப்பற்றி சோழர் ஆட்சியை தொடங்கும் வரை முத்தரையர்களுடைய ஆட்சிலேயே வல்லம் நகரம் இருந்திருக்கிறது.

9 முதல் 15ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் வல்லம்

கி.பி. 850ல் தொடங்கிய இச்சோழ ஆட்சி கி.பி. 1279 வரை தொடர்ந்தது. சோழர்களுக்கு பின் பாண்டியர்களாலும், ஹொயசாளர்களாலும், பின் விசயநகர மன்னர்களின் பிரதிநிதிகளான திருமலைராயன் போன்றவர்களாலும் வல்லம் அரசாளப்பட்டது. விஜயநகர அரசுக்கு அடிபணியாத கோனேரிராயனால் அமைக்கப்பட்ட தனி அரசு கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் சில காலம் தொடர்ந்தது.

தஞ்சை நாயக்கர்கள்

பின்னர் கிருஷ்ணதேவராயர் 1535ல் செவ்வப்ப நாயக்கன் என்ற தன் உறவினனை தஞ்சைக்கு தனி அரசனாகினான். நாயக்கர்களின் ஆட்சி 1674 வரை தொடர்ந்தது. இவர்கள் ஆட்சி முழுவதும் வல்லம் நகரம் மிகச் சிறந்த முக்கியத்துவம் பெற்றது. இவர்களது முக்கியக் கோட்டை கருவூரும் மாளிகையும் அகழிச் சூழ்ந்த வல்லம் கோட்டைக்குள்ளேயே இருந்தன. பல வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள் இக்கால கட்டத்தில் வல்லத்தில் நிகழ்ந்தன.

மதுரை நாயக்கர்கள் விஜயநகர பேரரசை எதிர்த்து நடத்தியப் போர் வல்லத்தில் நடந்தது. இப்போரில் விஜயநகர படைத்தளபதியும் தஞ்சை நாயக்க மன்னன் அச்சுதப்ப நாயக்கரும் வெற்றி பெற்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்ச்சியை வல்லம் பிரகாரப்போர் என்று வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. ஒருமுறை முகமதிய படைத் தலைவனின் சூரையாடல்களுக்கு சோழநாடு உட்பட்டபோது விஜயராகவ நாயக்கர் தன்னுடைய பெரும் செல்வத்தை வல்லம் கோட்டைக்குள் வைத்துக் காப்பாற்றினார். இவரின் இறுதி காலத்தில் வல்லம் கோட்டையை, மதுரை சொக்கநாத நாயக்கன் கைப்பற்றினான். பின் அது மீட்கப்பட்டு தஞ்சை நாயக்கர்கள் அரசருக்கே உரியதாயிற்று.

தஞ்சை நாயக்கர்கள் செய்த திருப்பணிகளாலும் அவர்களது பெரும் செல்வம் காப்பாற்றப்படுவதற்கு வல்லம் கோட்டையாக திகழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போர்கள் நடந்த பூமி வல்லத்து பூமியே என்பதாலும் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் வல்லம் நகரம் தனி இடம் பெற்று நிற்கின்றது.

செவ்வப்ப நாயக்கரும், அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து வல்லத்துக் காளி கோயிலை (ஏக வீரி அம்மன்- ஏ கௌரியம்மன்) புதிப்பித்தனர். அவர்கள் செய்த திருப்பணியே இன்றளவும் நிலைத்துள்ளது. இவர்கள் காலத்தில் வல்லத்து சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் சிறப்புகள் பல பெற்றன. வல்லத்துக் கோட்டைத் தவிர மக்கள் வாழும் ஊர் பகுதியும் விரிவாக்கம் பெற்றது.

பின் மராட்டியர் ஆட்சியின் போதும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் வல்லம் தன் தனித்தன்மையை விடாமல் இருந்தது. ஷாஜி என்னும் மராட்டிய மன்னர் தன் இறுதிக் காலத்தில், துறவியாகித் தவம் மேற்கொண்டு சிவகதி அடைந்த ஊர், வல்லமாகும். ஆங்கிலேய ஆளுநர்கள் குடியிருக்கும் இடமாக வல்லம் விளங்கியுள்ளது.

வல்லத்துக் கோட்டை

Vallam Fort வல்லத்துக் கோட்டை 'வல்லத்துக் கோட்டை விழுந்தால் தஞ்சாவூர்க் கோட்டை தானே விழும்' என்று பழமொழிக்கு எற்ப இருக் கோட்டைகளும் ஒருவர் ஆட்சியிலேயே இருந்துள்ளது. சங்க காலம் தொடங்கி இன்று வரை பல வகையில் சிறப்பாக விளங்கியுள்ளது வல்லம். ஆனால் வல்லம் கோட்டையை பற்றி வரைபடங்களோ அல்லது மற்ற குறிப்போ தொல்லியல் தடயங்களாக கிடைக்காதது ஓர் குறையே. வல்லத்துக் கோட்டையை பற்றி ஆங்கிலேயர்கள் 1906ல் எழுதிய குறிப்பின் படி 780 கெஜம் [714 மீட்டர்] நீளமாகமும் 520 கெஜம் [475மீட்டர்] அகலாகமாகவும் கோட்டை முட்டை வடிவில் இருந்ததாகவும், வடகிழக்கில் சிறிய மதில் இருப்பதாகவும் மற்ற இடங்களில் மதில்கள் இல்லை என்றும், அகழி பல இடங்களில் நன்றாக இருப்பதாகவும் தெரிகிறது. கோட்டையிருந்து அழிந்த பகுதியில் தற்போது பெரியார் கல்விக்கூடமுள்ளது.

வல்லத்துக் கோயில்கள்

வல்லம் நகரில் பழமையான ஏகவீரி[ஏகௌரி]அம்மன், நரசிம்மப் பெருமாள், தேவராசப் பெருமாள்[மாதவப் பெருமாள்], வச்சிரேஸ்வரர், சோழீசர் கோயில்கள் கல்வெட்டுச் சான்றுகளுடனும் உள்ளன. சப்த கன்னியர், செல்வவிநாயகர் கோயில்களில் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை என்றாலும் பழமை வாய்ந்தது. இதை தவிர மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார், அங்காளம்மன், இராமர் ஆகிய சமீபகால கோயில்களும் உள்ளன.

வல்லத்து சஞ்சீவிராயன் கோயில்

Sri Sanjeevirayan Temple, Vallam Fort, Front view ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், முகப்புத் தோற்றம் இதுவரை எங்கும் குறிப்பிடப் படாது இருக்கும் தொன்மையான ஓர் ஆஞ்சநேயர் கோயில் வல்லம் அகிழாங்கரைத் தெருவும் ஆஸ்பத்திரி தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தற்பொழுது அருள்மிகு சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப் படும் இக்கோயில் 'கோடிஸ்வரன் அறக்கட்டளை' கீழ் தமிழக அரசு இந்து சமய அமைப்பினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலைப் பற்றிய எந்த குறிப்போ, வரலாறோ கோடிஸ்வரன் அறக்கட்டளை அலுவலகத்தில் கிடைக்கவில்லை. இந்த கோயிலைப் பற்றி, 1799ல் திரு முருக வேளார் அவர்களால் எழுதப் பட்டு அச்சில் வராத 'வல்லம் தல புராணம்' கையெழுத்து பிரதியுலும் எந்த குறிப்பும் இருப்பதாக தெரியவில்லை.

கோயிலின் இருப்பிடம்

வல்லத்துக் கோட்டை, வடக்கு-தெற்காக சுமார் 714 மீட்டர் நீளமும், கிழக்கு-மேற்க்காக சுமார் 475 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்திருக்கிறது. கோட்டையை சுற்றி சுமார் நான்கு/ஐந்து மீட்டர் அகலம் உடைய அகழி இருந்திருக்கிறது. தற்போழுது அகழியின் நிலையை விண்வெளியில் இருந்து எடுக்கப் பட்ட படம் காட்டுகிறது.

இக்கோயில் கோட்டையின் மேற்குப் புறம் உள்ள அகழியின் கரையில், கோட்டை நீளவாட்டில் நடுமத்தியில் உள்ளது. தற்போழுது அகிழாங்கரைத் தெருவும் ஆஸ்பத்திரி தெருவும் சந்திக்கும் இடத்தில் ஆஸ்பத்திரி தெருவில் இருந்து சுமார் நூறு அடி உள்ளடங்கி உள்ளது.

கோயிலின் அமைப்பு

வடக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில். வரம்பிலிருந்து சுமார் 15 அடி உள்ளடங்கி அழகிய கருங்கல்லிலான கருடஸ்தம்பம் ஐந்தடி உயர மேடை அமைத்து நிறுத்தப்பட்டுள்ளது. பார்த்த உடன் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயில் கருடஸ்தம்பத்தை நினைவு படுத்தும் நாயக்கர் கால வேலைப்பாடு. தூணின் அடிபாகம் நான்கு பக்க சதுரமாக அமைந்துள்ளது. அதில் வடக்கு நோக்கிய பகுதியில் ஆஞ்சநேயர் உருவமும், கிழக்கு நோக்கி சங்கும், தெற்கு நோக்கி [கோயிலை நோக்கி] கருடரும், மேற்கு நோக்கி சக்கரமும் உள்ளது. பின் எண்பட்டையாக தூண் சுமார் இருபது அடி உயரம் உள்ளது. அதன் மீது சிறிய மண்டபம் வேலைபட்டுடன் உள்ளது. மண்டபத்தின் நான்கு மூலையிலும் மணி உள்ளது. இந்த தூண் நாயக்கர்கால படைப்பு என்பதில் எந்த ஐயப்பாட்டுக்கும் இடமில்லாமல் உள்ளது.

கோயிலின் தென்-கிழக்கில் ஒரு கிணறு இருக்கிறது. தற்போது வரண்டு முட்செடிகளால் மூடப்பட்டுள்ளது.

Sri Sanjeevirayan Temple, Vallam Fort, Inner view ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், உள் தோற்றம் கருடஸ்தம்ப மேடையிலிருந்து சுமார் இருபது அடி தூரத்தில் வல்லத்து கல்களால் [செம்பூரான் கற்கள்?] ஆன கோயிலின் மகா மண்டபத்தின் அஸ்திவாரம் உள்ளது. பழமையில் சுமார் 25/27 அடி நீளமான மகா மண்டபமாக இருந்திருக்க வேண்டும். மகா மண்டபமாக இருந்த இவ்விடத்தில் தற்போது முதல் 15 அடிக்கு மண்டபம் இல்லை அதனால் இவ்விடம் சற்றே உயர்ந்த மேடையாக திறந்த வெளியாக காட்சியளிக்கிறது. பின் சுமார் பன்னிரண்டு அடி நீளத்திற்கு மகா மண்டபம் புதிப்பிக்க பட்டுள்ளது. இதன் இருபுற சுவர்களும் பழமையானவை என்பது வல்லத்து கற்களால் ஆனதால் ஊர்ஜிதமாகிறது. இந்த பாகத்திற்கு, சமீபத்தில் சாய்வாக மேற்கூறை ஓடு வெய்துள்ளனர். அடுத்ததாக உள்ளது சுமார் பத்தடி நீளமான முன் மண்டபம். முன் மண்டபத்தில் நுழையும் வாயிலுக்கு மேல் ஸ்ரீராமருடன் கூடிய சீதாலக்ஷ்மி சுதை சிற்பத்தில் ஸ்ரீராமரின் திருபாதங்களை தாங்கும் ஆஞ்சநேயரும், அருகில் லக்ஷ்மணரும் உள்ளார்கள். சுமார் பத்தடி அகலம் உள்ள முன் மண்டபத்தில் தற்பொழுது ஒன்றும் இல்லை. அடுத்து அர்த்த மண்டபம் சுமார் ஐந்து அடி நீளமானது, மகா மண்டபத்தை விட சற்று அகலமானது. கருங்கல்லிலான கூரை. அடுத்து கருவரை.

கருவரை

அர்த்த மண்டபத்திலிருந்து கருவரை நுழையும், நுழைவாயிலின் மேல் ஸ்ரீவிஷ்ணுவின் கிடந்தக் கோலத்தில் சுதை சிற்பம் உள்ளது. கிழக்குபுறம் தலை வைத்து மேற்குபுறம் கால்நீட்டி இடது கை இடது துடை மீதும், வலது கை அபயமுத்திரையுடனும், ஏழு தலையுடன் கூடய ஆதிசேஷனின் மீது சயனக்கும் ஸ்ரீவிஷ்ணுவின் சுதை. நுழைவாயிலின் இருபுறமும் ஜயன் விஜயன் துவாரபாலகர்கள் சுதை வடிவில் உள்ளனர். அவர்களின், பின் இருகைகளில் சங்கும் சக்கரமும், முன் இருகைகளில் ஒன்றில் கதையும் மற்றறொன்று தர்ஞனி முத்திரையும் கூடிய சுதை.

கருவரை இரண்டு பகுதிகளை கொண்டது. ஸ்ரீ சஞ்சீவிராயர் உள்ள அறை சதுரமாக உள்ளது, முன்னால் சிறிய பகுதி. விமானம் செங்கல் கட்டுமானம், நான்கு புறமும் ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தனாக அமர்ந்த நிலையில் உள்ளார். விமானம் தற்போது கலசம் இல்லாமல் உள்ளது.

ஸ்ரீ சஞ்சீவிராயர்

Sri Sanjeevirayan Temple, Vallam Fort, Inner view ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், உள் தோற்றம் ஸ்ரீ சஞ்சீவிராயர் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் மிக நேர்த்தியான கல்லிலான மூர்த்தம். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பிரபையுடன் கூடிய சிலை. நாயக்கர் கால சிலா வடிவம் என்பதிலே ஐயம் வேண்டாம் என்று சொல்லும் தீர்க்கம். வடக்கு நோக்கியிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் வலது கை அபய முத்திரையை காட்டுகிறது. கதையை பிடித்துள்ள இடது கை, இடுப்பை ஒட்டி சௌகந்தி புஷ்பத்தின் தண்டையும் பிடித்துள்ளது. இடது பாதம் முன் நோக்கி உள்ளது. வலது பாதம் சற்றே தூக்கிய நிலையில் உள்ளது. பார்க்க மேற்கு நோக்கி பயணிப்பதுப் போல் உள்ளது. அவருடைய வால் மேல் நோக்கி தலைக்கு மேல் ஓம் வடிவில் சுருண்டுள்ளது. கையை கங்கணம், கேயூரம் அலங்கரிக்கின்றன. மார்பை முப்புரி நூலும், மாலைகளும் அலங்கரிக்கின்றன. திரு பாதங்களை தண்டை, நூபூரம் அலங்கரிக்கின்றன. சுமார் ஆறு அடி உயரம் உள்ள சிலா மூர்த்தம் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலின் வெளியிலிருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிப்பார்.

அருகில் மற்றொறு ஆஞ்சநேயரின் சிறிய மூர்த்தம் இதே போன்று ஆனால் பிரபை இல்லை, சுமார் ஒன்னரை அடி உயரம் உள்ளது. அருகில் ஒன்னரை அடி உயர நாகர் சிலையும் உள்ளது.

ஸ்ரீ சஞ்சீவிராயர் மூர்த்தம்

மேலே குறிப்பிட்டுள்ள சிலா வடிவம் 'வீர ஆஞ்சநேயர்' என்று வழங்கப் படுகிறது. இப்படி பட்ட சிலாவடிவங்கள் நாயக்கர்கள் கால சிலாவடிவமாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி பெரிய கோயிலின் 221 கோயில்களில் ஒன்று ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலா மூர்த்தமும் வல்லம் மூர்த்தமும் ஒரே மாதிரி உள்ளது. ஸ்ரீரங்கம் ஆஞ்சநேயர் கோயில் 1492ல் நாயக்கமன்னர் கைங்கரியமாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றும் கோடிக்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலா மூர்த்தமும் வல்லம் மூர்த்தம் மாதிரியே உள்ளது குறிப்பிட தக்கது. நாயக்க மன்னர்களால் கைங்கரியம் செய்யப்பட்டுள்ள மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ராஜகோபுரத்திலுள்ள ஆஞ்சநேயர் சிலா மூர்த்தமும் இது போன்று உள்ளது ஆனால் சற்றே சிறியது. நாயக்கர் காலத்தில் ஆஞ்சநேய வழிபாடு மிகுந்து இருந்திருக்கிறது. விஜய நகர பேரரசின் மரபையொட்டி அவர்களின் குறுநில மன்னர்கள் ஆஞ்சநேயரை ஸ்ரீசஞ்சீவிராயர் என்றே வழங்கியிருக்கின்றனர். இவைகளை எல்லாம் வைத்து நோக்கும் பொழுது தஞ்சை வல்லத்து ஸ்ரீசஞ்சீவிராயர் மூர்த்தம் நாயக்கர்கள் காலத்து படைப்பு என்பதில் சற்றும் ஐயம்பட இடமில்லை.

வல்லம் ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில்?

தற்பொழுது ஸ்ரீசஞ்சீவிராயர் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ சஞ்சீவிராயர், நாயக்கர் கால படைப்பு என்றால், கோயிலும் அவர்கள் கால படைப்பாகவே இருக்க வேண்டும். ஆனால் இக்கோயில் ஸ்ரீ சஞ்சீவிராயருக்காக கட்டப்பட்டதா என்பதில் சற்று ஐயப்பாடுள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்காக இக்கோயில் கட்டப்பட்டிருந்தால், கருட ஸ்தம்பம் வைக்கப்பட்டிருக்குமா என்பதை முதலில் ஆராய்வோம். வைணவ மரபுப்படி கருடரை 'பெரிய திருவடி' என்றும், ஆஞ்சநேயரை 'திருவடி' என்று தான் மொழிகிறார்கள். இங்கு 'பெரிய' என்கின்ற அடைமொழி முத்தவர் எனப் பொருள் கொள்க. இருவருமே ஸ்ரீமகாவிஷ்ணுவின் அடிகளார்கள். அப்படியிருக்க ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன் கருட ஸ்தம்பம் இருப்பது மரபுக்கு ஒவ்வாத ஒன்று. கருட ஸ்தம்பம் ஸ்ரீவிஷ்ணு கோயிலுக்கு முன்னே இருப்பது மரபு என்பதாலும் இக்கோயில் ஸ்ரீஆஞ்சநேயருக்காக கட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

இரண்டாவதாக, முன் மண்டபத்தின் நுழைவாயிலில் மேல் ஸ்ரீராமருடன் கூடிய சீதாலக்ஷ்மி சுதை சிற்பத்தில் ஸ்ரீராமரின் திருபாதங்களை தாங்கும் ஆஞ்சநேயரும் அருகில் லக்ஷ்மணரும் உள்ளனர். ஆஞ்சநேயர் கோயில் முகப்பில் இப்படியுள்ளது சற்று புதுமை.

மூன்றாவதாக, கருவரையின் நுழைவாயிலின் மேல் பகுதியில் ஸ்ரீவிஷ்ணுவின் கிடக்கும் பாவத்தில் உள்ள சுதை சிற்பம். மற்றும் ஜய-விஜயர்கள் துவரபாலகர்களாக உள்ள சுதை சிற்பம். சாதாரணமாக ஆஞ்சநேயருக்கு அங்கதனும் நளன் /நீலன் துவாரபாலகர்களாக அமைக்கப்படுவர். இவை எல்லாவற்றையும் நோக்கின், ஸ்ரீஆஞ்சநேயருக்கான இக்கருவரை அமைக்கப்படவில்லை என்பதைத் தெளிவுப்படுகிறது.

அப்படி இது ஸ்ரீஆஞ்சநேயருக்காக கட்டபடவில்லையென்றால் இது ஒரு விஷ்ணு கோயிலாக கட்டப்பட்டு பின் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலாக மாறியிருக்கலாம் என்றும் நம்மால் ஊகிக்க முடிகிறது.

வல்லம் ஸ்ரீஅரங்கநாதன் கோயிலா அல்லது ஸ்ரீஇராமர் கோயிலா?

ஸ்ரீ அச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீஅரங்கநாதரின் பேரில் அளவுகடந்த பக்தியுள்ளம் கொண்டிருந்தவர். தினம் ஸ்ரீஅரங்கநாதனை தர்சனம் செய்ய வேண்டி அவர் காலத்தில் தஞ்சையில் பெரிய கோபுரம் கட்டியதாக செவிவழிச் செய்தி உண்டு. அவர் காலத்தில் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலுக்கு பல கைங்கரியங்கள் செய்துள்ளார், முக்கியமாக விமானத்திற்கு தங்க தகடு வெய்துள்ளார். தன் மகன் ரகுநாத நாயக்கனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு, அவர் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீஅரங்கநாதனின் நிழலில் ஒதுங்கியிருந்தாகவும் வரலாற்று செய்தி உள்ளது. இவைகளிலிருந்து அச்சுதப்பநாயக்கரின் ஸ்ரீஅரங்கநாதரின் பேரில் இருந்த பக்தி தெளிவாகிறது.

அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் விஜயநகரப் பேரரசை எதிர்த்து மதுரை நாயக்கர்கள் செயல்பட்டனர். அப்போது விஜயநகரப் பேரரசின் படையும் தஞ்சை நாயக்கர் படையும் இணைந்து, மதுரைப் படையை எதிர்த்துப் போரிட்டது. அதில் விஜயநகரப் பேரரசும் தஞ்சை அரசும் வெற்றி பெற்றனர். இப்படி தஞ்சை அரசுக்கான எதிர்ப்பு அத்தனையும் வல்லதின் மேற்கிலிருந்து தான் வந்திருகின்றது.

வல்லம் நகரில் செவ்வப்ப நாயக்கராலும் ஆச்சுதப்ப நாயக்கராலும் திருப்பணி செய்யப்பட்ட பழமையான நரசிம்மப் பெருமாள், தேவராசப் பெருமாள்[மாதவப் பெருமாள்], வச்சிரேஸ்வரர் கோயில்கள் கோட்டையின் உள்ளேயே இருந்தாலும், அவர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஏகவீரி [ஏகௌரி] அம்மன், சோழீசர் கோயில்கள் கோட்டைக்கு மேற்கே வெளியில் தான் இருக்கின்றது. வல்லம் ஊரும் வல்லத்துக் கோட்டைக்கு மேற்கில் வெளியில் இருக்கின்றது. அல்லாமல் வல்லத்து எதிரிகளும் மேற்கிலிருந்தே படையெடுத்துள்ளனர். ஆக மன்னர்கள் வல்லம் நகருக்கு வருவதற்கும், கோட்டைக்கு வெளியே உள்ள ஏகௌரி அம்மன் கோயில் மற்றும் சோழீயர் கோயிலுக்கு செல்லவும், எதிரிப் படையினை சந்திக்கவும் கோட்டையின் மேற்கில் வழி அவசியப்பட்டிக்கும்.

Sri Sanjeevirayan Temple, Vallam Fort, Outer view ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், இன்றைய தோற்றம் அதனால் கோட்டையின் மேற்கில் ஒரு வாயில் வைத்திருக்க வேண்டும். ஸ்ரீஅரங்கநாதனிடம் அளவற்ற பக்தி கொண்ட அச்சுதப்பநாயக்கர் வெளியே செல்லும் முன் அரங்கனை தொழுவதற்கு வசதியாக இருக்க தன் கோட்டை வாயிலில் அரங்கனுக்காக இந்த கோயிலை எழுப்பியிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி அரங்கனுக்காக எழுப்பப்பட்ட கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் ஒரு சந்நதி இருந்திருக்க வேண்டும். ஸ்ரீரங்கத்திலும் அரங்கனின் சந்நதியிலேயே ஸ்ரீஆஞ்சநேயருக்கும் தனி சந்நதி உள்ளதை நினைவுகூறுக.

அல்லது அச்சுதப்பநாயக்கரும் இரகுநாத நாயக்கரும் சேர்ந்து அரசாட்சி செய்தபோது இங்கே இராமனுக்காக கோயில் கட்டியிருக்கலாம். இரகுநாத நாயக்கர் ஸ்ரீஇராமர் மேல் தீராத காதல் கொண்டவர். இவருக்கு கிடைத்த 'இராமாயண அநாவிருத இராமகதாமிருத சேவகன்' என்கின்ற பட்டம் இதை உருதிப்படுத்துகிறது. அரங்கனுக்காகவோ, இராமனுக்காகவோ கட்டப்பட்ட இக்கோயிலில் ஆஞ்சநேயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இரகுநாத நாயக்கரால் தஞ்சை அரண்மணையின் வடக்கு வாயிலில் ஓப்பல்நாயக்கர் பங்க் இல் இராமருக்காக ஒரு கோயில் கட்டப்பட்டு அதன் நேர் எதிரில் ஆஞ்சநேயருக்கும் சன்னதி எடுக்கப்பட்டது. இராமர் சிலை களவாடப்பட்டதால், தற்போது இராமர் கோயில் அங்கு இல்லை. எதிரில் இருந்த ஆஞ்சநேயர் சன்னதி தற்போது பங்க் ஆஞ்சநேயர் கோயில் என்று பிரபலம். அதே மாதரி வல்லத்திலும் நடந்திருக்கலாம். தற்போது உள்ள கோயிலில் இருந்த ஸ்ரீ அரங்கனையோ ஸ்ரீ இராமரையோ கள்வர்கள் நகர்த்தியிருக்கலாம். அரங்கனோ இராமனோ இருந்த இடத்தில், அங்கேயே இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயரை பிற்காலத்தில் பக்தர்கள் பிரதிஷ்டை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய ஸ்ரீசஞ்சீவிராயர் கோயிலின் நிலை

இன்று, பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ சஞ்சீவிராயர் கோயில் பார்க்க பரிதாபமான நிலையில் உள்ளது. விமானத்தில் முட்செடிகள் மண்டி கிடக்கிறது. முதலில் முட்செடிகள் அகற்றப்பட வேண்டும். விமானத்தினை சீர் செய்ய வேண்டும். கருவரை பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. அர்த்த மண்டபம் முன் மண்டபம் ஆகியவைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. தற்போது சுற்று சுவர்கள் இல்லை. மிக அருமையான கருடஸ்தம்பம் மேல் உள்ள அலங்கார மண்டபம் பழுது பார்க்கபட வேண்டும். ஊர் கூடினால் இந்த அருமையான கோயிலை புதிப்பித்து பழமையான வல்லம் கோயில்களின் கீர்த்தியை உலகறியச் செய்யலாம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர் "

 

ஒன்று பட்டால் நிச்சயமாக முடியும் இது. வல்லத்திற்கு பெருமை சேர்க்க ஒர் அரிய வாய்ப்பினை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருளியிருக்கிறான். பழமையான இக்கோயிலுக்கு உழவாரபணி செய்துப் புதிப்பிப்போம்.

முதல் பதிப்பு ஜூலை 2012
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+