கர்நாடகாவில் குடகு மலையிடையில் காவிரி ஜீவநதியாக பிறக்கிறது. உற்பத்தியாகும் இடம் தலைக்காவிரி என்று அழைக்கப்படுகிறது. சுமார் முன்னூற்று எண்பது கி.மீ. பயணித்த பின் மேட்டூர் அருகில் ஹோகனேக்கல் என்னும் இடத்தில் தமிழகத்தை அடைகிறது.
ஹோகனேக்கலில் இருந்து பவானி வரை நதி தெற்கு நோக்கி பாய்கிறது. நீலகிரி மலை தொடரில் ஊட்டிக்கு தென்மேற்க்கில் பவானி நதி உற்பத்தியாகி காவிரி நதியுடன் பவானி என்னும் இடத்தில் சங்கமமாகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி செல்லும் நதியில் நொய்யல் மற்றும் அமராவதி நதிகளும் காவிரியுடன் கலக்கின்றன. காவிரி மிகவும் அகலமாகவும் அழகுடன் பாய்வதை காண கண்கோடி வேண்டும். பின் திருச்சி அருகில் இரண்டாக பிரிந்து அகண்ட பகுதி கொள்ளிடம் என்னும் பெயருடனும் மற்றது காவிரி என்னும் பெயருடனும் நடையை தொடர்கிறது. கொள்ளிடமும், காவிரியும் கபிஸ்தலம் வரை இணையாகவே பயணிக்கின்றது. பின் கொள்ளிடம் பிரிந்து வேறு பாதையில் சிதம்பரம் அருகே கடலில் கலக்கிறது. காவிரி கும்பகோணம், திருக்கோடிக்காவல், மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
இப்படியாக காவிரி தஞ்சாவூர் டேல்டா பகுதியை வளமாக்கி தஞ்சை "தென்னகத்தின் நெற்களஞ்சியம்" என்று பெருமையை தேடி கொடுக்கிறது.
சனாதன தர்மத்தில் நதிகள் எல்லாம் பூசைக்கு உரியவனையாகும். எல்லா நதிகளும் பூஜைக்குயுரியவையாயினும் கங்கையும், கவிரியும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. நதியின் ஓட்டம் வடக்கு நோக்கி திரும்புமே ஆனால், எங்கு அப்படி வடக்கு நோக்கி பாய்கிறதோ அவ்விடத்தில் அந்நதியை பூஜிப்பது விசேடமாக கருதப்படுகிறது. அத்தலம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. புனித கங்கை வடக்கு நோக்கி பாயும் தலம் வாரணாசியாகும், அதனால் அத்தலம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. புனித காவிரி வடக்கு நோக்கி பாயும் தலம் திருக்கோடிக்காவலாகும். அதனால் இத்தலம் காவிரியின் விசேட தலமாக கருதப்படுகிறது.
திருக்கோடீஸ்வரர் திருக்கோயில் இத்தலத்தின் பெருமை. திருக்கோயில் காவிரி தனது வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில். கோயில் கொண்டுள்ள திருக்கோடீஸ்வரரை நாயன்மார்கள் அப்பர், சம்பந்தர் பாடியுள்ளனர்.
750ஆம் ஆண்டு பல்லவ மன்னன் நந்திவர்மனால் ஈஸ்வரனுக்கு கோயில் கட்டப்பட்டது. செங்கற் தளியாக இருந்ததை, உத்தம சோழனின் அன்னை செம்பியன் மகாதேவி அவர்கள் கற்றளியாக மாற்றி அமைத்தார். அவர் செய்த பெரும் தொண்டு 750ஆம் ஆண்டு முதல் அவர் கோயிலை திருத்தி அமைக்க இருந்த சமயம் வரையிலான அத்துணை கற்வெட்டுகளையும் திரும்பவும் பதித்துள்ளார். அவரால் அப்படி திரும்பவும் பதிப்பிக்கப் பட்ட கற்வெட்டுகள் பற்பல அறிய செய்தியை கொடுக்கின்றது. சரித்திர ஆவலர்களுக்கும், தொல்லியல் வல்லுனர்களும் இக்கல்வெட்டுகள் மிகவும் அறிய பொக்கிஷமாகும்.
திரி-கோடி என்றால் மூன்று கோடி என்று பொருள்படும். மந்திரங்கள் மூன்று கோடி உள்ளன, ஒவ்வொரு மந்திரத்திற்கும் தனி தேவதையுண்டு. இம்மூன்று கோடி தேவர்களும் தங்கள் மகிமையை நினைத்து சற்றே கர்வம் அடைந்தனர். இவர்கள் துர்வாச முனிவரிடம் விவாதத்தில் ஈடுப்பட்டனர் தங்களுடைய சக்தியினால் தான் எல்லாம் நடப்பதாக வாதம். வாதத்தின் ஒரு நிலையில் துர்வாசர் இத்தேவர்களை சபித்து விட்டார். சக்தியிழந்தவர்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டு பரிகாரமும் கேட்டனர். காவிரி "உத்திரவாஹினி"யாக [வடக்கு நோக்கி பாய்வது] உள்ள இடத்தில் சிவனை குறித்து தவம் இருக்கச் சொன்னார். மூன்று கோடி தேவர்களும் இத்தலத்தை கண்டுபிடித்து இங்கு தவம் எய்தினர்.
மூன்று கோடி தேவர்களும் சிவனாரை குறித்து தவம் செய்து, துர்வாசரின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றமையால் இத்தலத்து சிவனாருக்கு கோடீஸ்வரர் என்றும் இத்தலம் திரு-கோடி-கா என்று மருவி திருக்கோடிகாவல் என்று வழங்கப்படுகிறது.
மந்திரங்களின் தேவர்கள் தங்கள் பெருமை, சாபம் மற்றும் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இடமே இந்த க்ஷேத்திரம். எனவே வேத அறிஞர்கள், பண்டிதர்கள் இந்த கிராமத்தை தங்களின் வசிப்பிடமாக கொள்ள ஆசைப்பட்டதில் அதிசயம் இல்லை. வேதத்தின் புரவலர்களாக இருந்த ஆட்சியாளர்களும் இந்த இலட்ச்சியத்திற்கு கணிசமாக உதவினார்கள். தஞ்சாவூர் நாயக்கின் ஆட்சியின் போதும், குறிப்பாக அச்சுதப்ப நாயக்கர் மற்றும் ரகுநாத நாயக்கரின் ஆட்சியின் போதும் பல வேத அறிஞர்களும், இசைக்கலைஞர்களும் ஆதரவளிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஆட்சியாளர்களின் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சதரின் ஆதரவுடன் பல அறிஞர்கள் வந்து திருக்கோடிக்காவலில் குடியேறினார்கள்.
இப்படியாக திருக்கோடிக்காவல் அக்ரஹாரம் வேதவிற்பன்னர்களுக்கும், சங்கீத விற்பன்னர்களுக்கும் வசிக்கும் பெரும் தலமாக விளங்கியது. எல்லா அக்ரஹாரத்திலும் கோயில் இருப்பது போல் திருக்கோடிக்காவல் அக்ரஹாரத்திற்கும் ஒரு கோயில் இருந்தது. வேதமும், சங்கீதமும் தழைத்து இருக்கும் இடத்தில் "நவவ்யாக்ரண பண்டிதனு"ம் "கந்தர்வ்வித்யா தத்வஜ்ஞாயனு"மான ஶ்ரீஆஞ்சநேயருக்கு கோயில் இவர்கள் கட்டியது பொருத்தமே இல்லையா?
அக்ரஹாரத்திற்கு நுழையும் பொழுதே இருக்கிறது, திருகோடீஸ்வரின் கோயிலில் இருந்து அதிக தூரமில்லை. கிரமத்தின் தபால் நிலையத்தின் எதிரில் இருக்கிறது. சுற்று சுவருடன் மோற்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கோயில் நுழைவில் அழகிய வளைவும் அதில் ஶ்ரீராம பரிவாரத்துடன் கூடிய புடைப்பு சிலையும் கோயிலுக்கு அழகை கூட்டுகிறது. பின் நீண்ட ஓடு வெய்த பாதை, அதன் நடுவில் பலி பீடம், பின் முன் மண்டபம். மண்டபத்தின் முகப்பு வளைவில் ஶ்ரீஆஞ்சநேயரின் புடைப்பு சிலை. பின்பு கர்பகிரஹம். கோயிலை வலம் வர பாதையுள்ளது. கர்பகிரஹத்தின் மேல் அழகிய பெரிய விமானம், பக்த, சஞ்சீவி, வீர ஆஞ்சநேயர் சிலைகள் விமானத்தின் மூன்று புறமும் அலங்கரிக்கின்றன. கோயிலில் சுவாமியின் அபிஷேகத்திற்கு நீர் எடுக்க கிணறும், துளசி மாடமும் உள்ளது.
கோயிலில் நுழை வாயிலில் இருந்தே மூலவரை தரிசனம் செய்யலாம். முன்பு ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில்கள், ஶ்ரீசஞ்சீவிராயன் கோயில் என்று அழைக்கப்பட்டதோ அப்படி தான் இக்கோயிலும் அழைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது "ஶ்ரீ அபய ஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோயில்" என்று அழைக்கப்படுகிறது. உற்சவ மூர்த்தியும் கர்பகிரஹத்தில் உள்ளது.
திர்பங்கா என்னும் மூன்று வளைவுகளுடன் ஶ்ரீஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் வசிகரமாக காட்சி தருகிறார். அவரது தாமரை திருபாதங்களை தண்டை, கால் வடம் அலங்கரிக்கிறது. இடுப்பில் அலங்காரமான அரையணி உள்ளது. இடது திருக்கரம் இடது தொடையை ஒட்டியுள்ளது, கையில் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டை பிடித்துள்ளார். முப்புரி நூல், மூன்று மணி மாலைகள் மார்பில் காணப்படுகிறன. சற்றே உயர்ந்து காணப்படும் வலது திருகரம் அபய முத்திரையை காண்பிக்கின்றது. ஒளிரும் முகம் சற்றே சாய்ந்து ஒயிலாக காணப்படுகிறது. காதுகளில் தோளை தொடும் குண்டலம் அணிந்துள்ளார். அவரது தலை முடி அழகாக சீவிவிடப்பட்டு முடிச்சு போடப்பட்டுள்ளது. காருண்ய மயமான கண்கள் பக்தர்களை ஆசீர்வதிக்கிறது. நேரில் நிற்கும் போழுது அவரது கண்கள் கருணையை பொழிவதை பக்தர்கள் உணர முடியும்.
அனுபவம்
காருண்யமயமான அபய ஹஸ்த ஆஞ்சநேயரை நாம் வணங்கி, என்றும்
தழைக்கும் மகிழ்ச்சியையும் கூடும் அன்பையும் வாழ்வில் நாம் பெருவோமாக.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: நவம்பர் 2020