home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், சி.எம்.ஆர். சந்தைக்கு அருகில், கோலார், கர்நாடகா

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், சி.எம்.ஆர். சந்தைக்கு அருகில், கோலார், கர்நாடகா

ஜீகே கௌசிக்


கோலார்

கோலார் நகரம் 'ஶத-ஸ்ரிங்கா' மலைத்தொடரின் கிழக்கே அமைந்துள்ளது. ஶத என்றால் நூறு, ஸ்ரிங்கா என்றால் உச்சம் என்று பொருள். இந்த மலைகளில் ஒன்றில் சிவபெருமானுக்கு பழமையான கோயில் ஒன்று உள்ளது, கோயில் அமைந்திருக்கும் இடத்தில் ஊற்றினால் வற்றாத குளம் உள்ளது. அதனை 'அந்தர்-கங்கா' என்று அழைக்கிறார்கள் [அதாவது ஆழத்தில் இருந்து பாயும் கங்கை]. இந்த க்ஷேத்திரத்தின் அதிபதி ஜலகண்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த க்ஷேத்திரம் ஸ்ரீ பரசுராமருடன் தொடர்புடையது.

கோலார் பெயர் காரணம்

பரசுராமரின் தந்தை ஜமதக்னியிடம் சூரபி என்ற தெய்வீக பசு இருந்தது, அவர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தார். மன்னன் கர்த்தவீர்ய அர்ஜுனா (சஹஸ்ரார்ஜுனா) தனது படையுடன் ஜமதக்னி தவம் இருக்கும் மலைக்கு விஜயம் செய்தான். ஜமதக்னி ரிஷியிடம் உள்ள அற்புதமான பசுவைப் பற்றி அறிந்ததும், ரிஷிக்கு அத்தகைய மாடு தேவையில்லை என்றும் மாட்டை ராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கோரினான். ஜமதக்னி தனது ஆசார அநுஷ்டானத்திற்கும் வைதிக சடங்குகளுக்கும் பசு தேவைப்படுவதால் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார். கோபத்தில் மன்னன் ஜமதக்னியின் தலை துண்டித்தார். இச்செய்தியை பரசுராமர் அவரது தாயார் சொல்லி கேட்டதும், பரசுராமர் கர்த்தாவிரியா அர்ஜுனனின் முழு இராணுவத்தையும் அழித்து பின் கர்த்தாவிரியா அர்ஜுனனின் தலையை தனது கோடரியால் வெட்டி விழ்த்தினார். பின்னர் பரசுராமர் முழு க்ஷத்திரிய இனத்தையும் தலை துண்டிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார், இந்த சம்பவம் இம்மலைகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. கர்த்தாவிரியார்ஜுனன் வதம் செய்யப்பட்டதை கோலாஹாலமாக் கொண்டாடப்பட்டதை ஒட்டி இவ்வூர் கோலாஹாலபுரா என்றும் பின்னர் அது கோலாராக மாறியது என்றும் கூறப்படுகிறது.

 

சி.எம்.ஆர் சந்தைக்கு அருகிலுள்ள கோலார், கர்நாடக ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயிலின் உள் பார்வை மூன்றாம் நூற்றாண்டில் 350இல் முதலாம் கொங்கனிவர்மன் மாதவா என்பவர் இந்த க்ஷேத்திரத்தை தலைநகராக கொண்டு மேற்கு கங்கா வம்சத்தை நிறுவியது முதல் இந்நகரத்தின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
கோலாரில் உள்ள கோயில்கள்

இந்த இடம் தலைநகராகத் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தும், அருகிலுள்ள இடங்களான அவானி, முல்பகல் போன்ற புனித தலங்களின் செல்வாக்கினாலும், ஆட்சியாளர்கள் கோலாரில் பல அற்புதமான கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். ஸ்ரீ கோலாரம்மா கோயில், ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் [மாற்று பெயர் அந்தர்கங்கே காசி விஸ்வநாத கோயில்] ஆகியவை அதிகமாக பக்தர்கள் விஜயம் செய்பவையாகும்.  அடுத்தடுத்த வந்த ஆட்சியாளர்கள் இந்த கோயில்களையும் பல கோயில்களையும் விரிவுபடுத்தினர். இந்த க்ஷேத்திரத்தில் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட பல கோயில்கள் உள்ளன. குறிப்பாக சொன்னால் இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஏராளமான கோவில்கள் உள்ளன.

 
ஆரம்பகால ஆஞ்சநேய கோயில்

இந்த இடம் அப்போது ஒரு நகரமாக இருக்கவில்லை. இப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது. இந்த ஆரண்யத்தில் பல ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். ஒரு புனித நாளில், பல ரிஷிகளுக்கு அந்தர்கங்கே, கோலார் மற்றும் கோண்டராஜனஹள்ளி ஆகிய மூன்று இடங்களின் தெய்வீக தன்மைப் பற்றி வாக்கு கூறப்பட்டது. கடவுளின் ஆசீயுடன், ரிஷிகள் ஒரே சமயத்தில் மூன்று மூர்த்திகளை இந்த மூன்று இடங்களில் நிறுவினார்கள். அவர்கள் தெய்வீக வழிகாட்டலின் படி அந்தர்கங்கேயில் சிவனையும், கோலார் கட்டேவில் பரசுராமரையும், கோண்டராஜனஹள்ளியில் அஞ்சநேயரையும் நிறுவினார்கள்.

 
ஆஞ்சநேயர் கோயில், சி.எம்.ஆர் சந்தை, கோலார்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி, கோலார், கர்நாடகா இந்த ரிஷிகளால் நிறுவப்பட்ட, ஆஞ்சநேய பகவான் தற்போது தேசிய நெடுஞ்சாலை எண் 75 இல் சி.எம்.ஆர் சந்தையை ஒட்டியுள்ள கோந்தராஜனஹள்ளியில் உள்ள கோவிலில் குடிகொண்டுள்ளார். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோலார் நகரம் வளர்ச்சியடைந்து விரிவாக்கத் தொடங்கியபோது, ​​இந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதி உள்ளூர் மக்களுக்கு வசிக்கும் இடமாக மாறியது. அவ்விரிவாக்க நிகழ்வுகளின் போது ஆஞ்சநேயரின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது பிரசனம் பார்த்து அச்சிலையின் பழங்காலமாக அடையாளம் காணப்பட்டது. அப்போதிருந்து வழக்கமான பூஜைகள் இறைவனுக்கு நடத்தப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில், பக்தர்களின் தாராள பங்களிப்புடன், கோயில் கட்டப்பட்டு விரிவுபடுத்தப் பட்டது. 

 

சமிபகாலத்தில், கோயில் வளாகத்தில் சிமென்ட் கொண்டு ஒரு பெரிய ஆஞ்சநேய சிலை கட்டப்பட்டுள்ளது. இச்சிலை தூரத்திலிருந்தே காணப்படுகிறது.

 
ஸ்ரீ ஆஞ்சநேயர்

மேற்கு நோக்கி இருக்கும் ஸ்ரீ அஞ்சநேயர் தனது இடது திருபாதத்தை முதலில் வைத்து தெற்கு நோக்கி நடந்து செல்வதுப் போல் இருக்கிறார். அவரது இரு தாமரை பாதங்களிலும் தண்டை மற்றும் நூபுரத்துடன் அலங்கரிக்கிறது. அவரது வலுவான தொடைகளை கண்டாலே போதும் பக்தருக்கு பலம் வரும். உறையுடன் கூடிய பெரிய வாள் அவரது இடுப்பில் அலங்கார ’பெல்ட்’ மூலம் வைக்கப்படுகிறது. அவரது வால் உயர்ந்து அவரது முதுகுக்குப் பின்னால் செல்கிறது. அவரது பரந்த மார்பின் குறுக்கே யக்யோபவீதம் காணப்படுகிறது. அவரது இடது கை அவரது இடது இடுப்புக்கு அருகில் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டினை பிடித்துள்ளார். தண்டு மேலே உயர்ந்து புஷ்பம் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. அவர் தனது வலது கையால் அபய முத்திரையின் மூலம் பக்தர்களுக்கு ஆசீகள் அருளுகிறார். அவரது இரு மணிக்கட்டினையும் கங்கணம் அலங்கரிக்கிறது, ’அங்கதம்’ இரு மேல் கைகளிலும் அலங்கரிக்கிறது. அவரது கேசம் அழகாக சீவப்பட்டு, அலங்காரமான ’கேச பந்தா’ என்னும் ஆபரணத்தால் இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. அவர் தனது நீண்ட காதுகளில் குண்டலம் மற்றும் 'கர்ண புஷ்பம்' அணிந்துள்ளார். இந்த க்ஷேத்திரத்தின் ஆஞ்சநேயாவின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் நீண்ட கண் புருவங்கள் மற்றும் பெரிய கண்கள். அவரது கண்களின் 'கடாக்ஷ'த்தை விவரிக்க வார்த்தை இல்லை. இறைவனின் கண்களைப் பார்த்தால், பக்தர் இறைவனிடம் மயங்குவார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், சி.எம்.ஆர். சந்தை, கோலார் "

 

அனுபவம்
கோலார் தங்கத்திற்கு பெயர் பெற்றது. வாருங்கள், இறைவனின் தரிசனம் செய்து வீட்டிற்கு ஒரு தங்க இதயத்தை கொண்டு செல்லுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+