home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

சாமுண்டி பட்டா படி நடைபாதை - ஆஞ்சநேய கோயிலிலிருந்து மைசூரு -காட்சி


ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், சாமுண்டி மலை, படிவழி, மைசூரூ

ஜீகே கௌசிக்


ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் வாசஸ்தலம் சாமுண்டி மலை

நந்தி கோயில், ஆஞ்சநேய கோயிலுக்கு அருகில் - சாமுண்டிபட்டா படி நடைபாதை ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில் கொண்டுள்ள சாமுண்டி மலை மைசூரூவிலிருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோயில் சாமுண்டி மலைகளின் உச்சியில் அமைந்துள்ளது. ‘சாமுண்டி’ அல்லது ‘துர்கா’ என்பது ‘சக்தியின்’ ஒரு வடிவம். ‘சண்டா’, ‘முண்டா’ எருமைத் தலை கொண்ட ‘மஹிஷாசுரான்’ என்னும் அரக்கர்களை வதம் செய்தவள் ஶ்ரீ சாமுண்டேஸ்வரி.

இவள் மைசூர் மகாராஜாக்களின் குலா தேவதை ஆவாள், மற்றும் மைசூரின் முதன்மை தெய்வமும் ஆவாள். பல நூற்றாண்டுகளாக, மைசூரூ மக்கள் சாமுண்டேஸ்வரி தேவியை மிகுந்த பயபக்தியுடன் பூஜை செய்து கொண்டாடி வருகிறார்கள். போலா நான்காம் சாமராஜா உடையார் [1572-1576] ஆட்சியின் போது, ​​மன்னர் சாமுண்டேஸ்வரியை தங்கள் உடையார் வம்சத்தின் குல தேவதையாக ஏற்றுக்கொண்டார்.

மலை ஏற படிக்கட்டு

ஸ்ரீ தொட்ட தேவராஜா உடையார் (1659-1673) யாத்ரீகர்கள் மலை ஏறி சென்று அவளை வழிபடுவதற்கு வசதியாக 1008 படிகள் கட்டினார். படி-நடைபாதையில், சிவபெருமானுக்கு ஒரு பழைய குகைக் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு முன்னால், ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான நந்தி சிலையை நிறுவினார். நந்தி பார்ப்பதர்க்கு மிகவும் அழகாவும் பல விதமான அலங்காரமான ஆபரணங்களுடன் கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கண்களுக்கு ஒரு விருந்து என்றே சொல்ல வேண்டும். இங்கே நந்தி பகவானை தொட்ட பசவப்பா என்று அழைக்கிறார்கள். கன்னடத்தில், "தொட்ட" என்றால் பெரியது என்று பொருள் படும்.

சாமுண்டி பட்டா மலை அடிவாரம் நடைபாதையின் ஆரம்பம் படி நடைபாதையைத் தவிர, கோயிலுக்குச் செல்ல மோட்டார் செல்லதக்க சாலையும் உள்ளது. தொட்ட பசவப்ப நந்தி சிலை சாலை வழியும், நடை வழியும் சந்திக்கும் இடத்தில் மலையின் பாதி வழியில் உள்ளது. பல பக்தர்கள் மலை ஏறி ஶ்ரீசாமுண்டீஸ்வரியை தர்சிக்க மலையடிவாரத்திலிருந்துச் செல்ல படி-நடைப்பாதையைப் பயன்படுத்துவதை நாம் காணலாம். அவர்கள் மலையில் ஏறும் போது ஒவ்வொரு படியிலும் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவுகிறார்கள்.

“ராஜேந்திர விலாஸ் அரண்மனை” என்று அழைக்கப்படும் அரச குடும்பத்தின் கோடைகால அரண்மனை இந்த சந்திப்பிலிருந்து வெகு தொலைவில் இல்லை, அருகிலேயே ஸ்ரீ ஆஞ்சநேயருக்கான கோவிலும் உள்ளது.

கோடை அரண்மனையும் ஆஞ்சநேயர் கோயிலும்

மகாராஜா மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார் 1822 ஆம் ஆண்டில் மைசூரின் உடையார்களுக்காக இந்த கோடைகால அரண்மனையை கட்டினார். 1827 ஆம் ஆண்டு சாமுண்டேஸ்வரி கோயிலின் புனரமைப்பைத் திட்டமிட்டு நிறைவேற்றினார். கோயிலுக்கு ஏழு தங்கக் கலசங்களுடன் கூடிய மிகவும் பிரம்மாண்டமான ஏழு அடுக்கு ராஜ கோபூரத்தை கட்டினார் மற்றும் தேவிக்கு நகைகள் மற்றும் விழாவிற்கு ரதங்களை வழங்கினார். தடைகளை நீக்கி எந்தவொரு பணியிலும் வெற்றியை உறுதி செய்யும் ஸ்ரீ ஆஞ்சநேயர் அவரால் சாமுண்டேஸ்வரி கோயிலில் நிறுவப்பட்டார்.

[மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத் தளத்தில் “ஶ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில், சாமுண்டி மலை, மைசூரு” என்ற கட்டுரையை தயவுசெய்து படியுங்கள்.]

மலையின் உச்சிக்கு ஏறும் போது, தொட்ட பசவப்பாவைக் கடந்து சில படிகள் மேலே எறினால் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கான ஒரு சிறிய கோயிலை காணலாம். இங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் ராஜேந்திர விலாஸ் அரண்மனையை நோக்கியவாறு இருப்பதையும் காணலாம்.

ஸ்ரீ ஆஞ்சநேயருக்கான கோயில்

ஶ்ரீஆஞ்சநேயர் கோயில் - சாமுண்டி பட்டா படி நடைபாதை, மைசூரூ அந்த நாட்களில், மகாராஜா மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார் சாமுண்டேஸ்வரி கோயிலை புதுப்பித்துக்கொண்டிருந்தபோது, ​​இந்த அரண்மனையில் தங்கியிருப்பார். இங்கிருந்து கோயிலிக்கு போகவேண்டும் என்றால் படிக்கட்டினை உபயோகப்படுத்த வேண்டும். அரண்மனையிலிருந்து வெளியே வந்து இந்த படி நடைபாதையை அடைந்தவுடன் படிகளில் மேலே ஏறுவதற்கு முன்பு தடைகள் இல்லாமலிருக்க இங்கு ஸ்ரீ ஆஞ்சநேயரை நிறுவினார். இந்த ஸ்ரீ ஆஞ்சநேயரின் தரிசனம் ராஜேந்திர விலாஸ் அரண்மனையிலிருந்து சாமுண்டி மலையடிவாரத்திற்கு செல்லும் வழியில் எப்போதும் அவருக்கு கிடைக்க இந்த ஏற்பாடு. ராஜேந்திர விலாஸ் அரண்மனையை நோக்கி ஶ்ரீஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதும், கோயில் படி-நடைபாதையின் வெளிப்புறத்தில் இருப்பதிலிருந்தும் இதை ஊகிக்க முடியும். இவ்வாறு ஆரம்பத்தில், ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஒரு சிறிய விக்ரஹமே ஒரு பிறையில் நிறுவப்பட்டது. பிந்தைய நாட்களில் பிறையை விரிவு படுத்தி காரையைக் கொண்டு கலை வேலைகளால் அலங்காரம் செய்து விரிவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ள இடத்தில் அவரை சுற்றி ஒரு சிறிய அறை கட்டப்பட்டது.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூர்த்தி சுமார் மூன்று அடி உயரம் கடினமான கிரானைட் கல்லால் ஆனது. இடது திருப்பாதத்தை முன் வைத்து நடக்கும் பாணியில் புடைப்பு சிலையாக செதுக்கப்பட்டுள்ளார். கிழக்கில் இருக்கும் ராஜேந்திர விலாஸ் அரண்மனையை பிரபு நோக்கி பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார்.

பிரபுவின் இரண்டு தாமரை திருப்பாதங்களையும் நூபுரம் மற்றும் தண்டை அலங்கரிக்கிறது. அவர் வேட்டியை கச்சமாக அணிந்துள்ளார், கச்சத்தின் மேல் இடுப்பில் துணி கட்டியுள்ளார். மற்றும் இடுப்பு துணியில் ஒரு பிச்சுவா கத்தி காணப்படுகிறது. அவரது இரு திருக்கரங்களையும் கங்கணம் அலங்கரிக்கிறது. அவரது இடது கை இடது இடுப்பில் ஊன்றியுள்ளார், அவரது வலது கை உயர்ந்து, வெற்றியைக் குறிக்கும் ‘சூடாமணி’ வைத்திருப்பதைக் காணலாம். முப்புரி நூல் பரந்த மார்பில் அணிந்துள்ளார். அவர் இரண்டு மணி மாலைகள் அணிந்துள்ளார், ஒரு மாலையில் பதக்கம் காணப்படுகிறது, இவை அவரது பரந்த மார்பை மேலும் அழகு செய்கிறது. இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே உயர்ந்து, வால் முடிவில் ஒரு சிறிய மணி காணப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் மணி மேல்நோக்கி திரும்புவதைக் காணலாம் [பொதுவாக மணி இறுதியில் வால் முடிவில் தொங்குவதைக் காணமுடியும்]. இறைவன் காதுகளில் குண்டம் அணிந்துள்ளார் மற்றும் அவரது கேசம் அழகாக சீவி முடிந்து கட்டப்பட்டுள்ளது. அவரது ஒளிரும் கண்கள் பக்தர்கள் மீது கருணை பொழிகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், சாமுண்டி மலை, படிவழி, மைசூரூ"

 

அனுபவம்
ஸ்ரீ ஜானகி மாதாவின் ‘சுடாமணி’ வைத்திருக்கும் இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களின் நியாயமான எல்லா முயற்சிகளிலும் வெற்றி உறுதி என்பதை தெரிவிக்கிறார். மூன்றாம் கிருஷ்ணராஜா உடையார் அவரை நம்பினார் மற்றும் அவரது வாழ்க்கையில் வெற்றியை அடைந்தார். இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை தியானிப்போம், நம்முடைய எல்லா நியாயமான முயற்சிகளிலும் சாதனைகள் செய்வோம்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+