ஹிரியா கெம்பே கவுடா (கி.பி. 1513-1569, கி.பி 1510-1570) விஜயநகரப் பேரரசின் கீழ் ஆண்ட நிலக்கிழார் ஆவார். இவர் கெம்பே கவுடா, முதலாம் கெம்பே கவுடா அல்லது பெங்களூரு கெம்பே கவுடா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவர் யெலயங்காவிலிருந்து தனது தலைநகரை தான் உருவாக்கிய பெங்களூருக்கு மாற்றினார். 1537 ஆம் ஆண்டில் ஒரு நன்னாளில், நன்கு அலங்கரிக்கப்பட்ட நான்கு ஜோடி வெள்ளை காளைகளை நான்கு திசைகளில் நிலத்தை உழுவதன் மூலம் ஒரு அற்புதமான சடங்கு நடத்தி பெங்களூர் உருவாக்கி விழா கொண்டாடினார். அதன் பிறகு, ஒன்பது பெரிய வாயில்களைக் கொண்ட, அகழியுடன் கூடிய ஒரு மண் கோட்டையைக் கட்டினார்.
அவருக்குப் பிறகு, 1585 இல் இம்மாடி கெம்பே கவுடா (இரண்டாம் கெம்பே கவுடா) ஆட்சிக்கு வந்தார். பெங்களூரின் நான்கு மூலைகளிலும் (பெங்களூர் செப்புத் தகடு 1597) நான்கு எல்லை கோபுரங்கள் அமைத்த பெருமையை இவர் பெற்றார். பெங்களூரின் எல்லையை வலியுறித்தி கட்டப்பட்ட கோபுரங்கள் இவை.
பிஜாப்பூர் சுல்தானகத்தின் கீழ் தளபதியாக இருந்த ருஸ்டோம்-இ-ஜமான் இரண்டாம் கெம்பே கவுடாவின் இராஜ்ஜியத்தைப் பிடிக்க இருந்தார். ஆனால் சிராவை செர்ந்த கெம்பா கவுடாவின் நண்பர் கஸ்தூரி ரங்க நாயக்கின் அறிவுறுத்தலின் பெயரில் கெம்பே கவுடா கோட்டையை அதன் அனைத்து செல்வங்களுடனும் எந்தப் போரும் இன்றி விட்டுகொடுத்தார். ருஸ்டோம்-இ-ஜமான் பின்னர் கோட்டையை கையகப்படுத்தினார் மற்றும் அவர் சமீபத்தில் கைப்பற்றிய பிற பிரதேசங்களுடன் அதன் நிர்வாகத்தை ஷாஜி [சிவாஜியின் தந்தை]யிடம் ஒப்படைத்தார். அவரது நிர்வாகம் பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கியது. 1687 ஆம் ஆண்டில், முகலாய ஜெனரல் காசிம் கான், ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், ஷாஜியின் மகன் முதலாம் ஏகோஜியை தோற்கடித்து, பெங்களூரை அப்போதைய மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளரான சிக்காதேவராஜா உடையாருக்கு (1673-1704) மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்றார்.
இப்போது பெங்களூர் மைசூர் இராச்சியத்தின் ஆட்சியில் இருந்ததால், சிக்காதேவ ராயா உடையார் ஆட்சியின் போது மண் கோட்டை விரிவுபடுத்தப்பட்டது. 1689 இல், கோட்டை தெற்கு திசையில் விரிவுபடுத்தப்பட்டது. அவர் கட்டிய முதல் விஷயம், ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு ஒரு கோவிலும், கோட்டை எல்லைக்குள் ஒரு அரண்மனையும் தான்.
இன்று இக்கோயில் கிருஷ்ணராஜேந்திர சாலையில் உள்ள “கோட்டை வெங்கடரமணா கோயில்” என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு சிக்காதேவ ராயாவின் மகன் இரண்டாம் காந்திரவ நரசராஜா பெரும் மானியங்களை வழங்கியிருக்கிரார். இந்த கோயிலுக்கு மைசூர் மகாராஜாகள் கொண்டிருந்த முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.
இன்று கோட்டை வெங்கடரமண கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடம் “திப்பு கோடைக்கால அரண்மனை” என்று பிரபலமாக அறியப்படுவது முதலில் மைசூர் ஆட்சியாளர்களால் அரண்மனையாக கட்டப்பட்டது. [குறிப்பு: மைக்கேல், ஜார்ஜ் (1995) [1995]. இந்தியாவின் புதிய கேம்பிரிட்ஜ் வரலாறு].
எனவே ஶ்ரீவெங்கடரமணா கோயில் மைசூர் ஆட்சியாளர்களின் கோடைகால அரண்மனையின் ஒரு பகுதியேயாகும். அரண்மனை வளாகத்திற்குள் மைசூரின் பல்வேறு ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட பல கோயில்கள் இன்று மைசூரில் காணப்படுகின்றன. விஜயநகரத்தின் பழைய ஆட்சியாளர்களின் பல அரண்மனைகள் இந்த நடைமுறையிலிருந்து இதனை மேலும் அறியலாம்.
பழைய வரைபடங்களிலிருந்து, கோட்டை முட்டை வடிவத்தில் இருப்பதைக் காணலாம். வரைபடங்களின்படி இந்த கோட்டையில் டெல்லி கேட் பெங்களூரின் பெட்டாவை பார்த்து வடக்கு நோக்கி இருக்கிறது. கோட்டை தெற்கே மைசூர் கேட்டை கொண்டிருக்கிறது. கோடைகால அரண்மனையும், ஸ்ரீ வெங்கடரமண கோயிலும் மைசூர் நுழைவாயிலை ஒட்டியுள்ளது. எல்லா சாத்தியக்கூறுகளிலும், மைசூர் அரசினர்கள் இந்த நுழைவாயிலை நுழைவுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அரசினர்களுக்கு முதல் பார்வை வெங்கடேஸ்வரர் கோயில் என்பது நல்ல சகுனமாக இருக்கும் என்பதைக் காணலாம்.
கோட்டை வெங்கடரமணா கோயில் மற்றும் கோடைகால அரண்மனையை உள்ளடக்கிய இப்பகுதியின் பழைய வரைபடத்தையும், கூகிளின் தற்போதைய வரைபடத்தையும் நெருக்கமான பார்வையிட்டால், இவை இரண்டும் சற்று ஏறகுறைய ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.
மைசூர் அரச குடும்பத்தினர் அரண்மனையில் வசித்து வந்திருந்தால், அவர்கள் தவறாமல் கோயிலுக்கு வருகை தந்திருக்க வேண்டும். கோயிலுடன் அரண்மனையை இணைக்கும் பாதை google வரைபடத்தால் காட்டப்பட்டுள்ளது. பழைய வரைபடத்தில் அந்த பகுதி “அணிவகுப்பு” என்று காட்டப்பட்டது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அரண்மனையின் கிழக்கில் உள்ள திறந்தவெளி அன்றைய தேவைகளுக்கு ஏற்ப அணிவகுப்பு மைதானமாக [ஆங்கிலேயர்கள் காலத்தில்] மாற்றப்பட்டது தெரியும். இன்றைக்கு இருக்கும் இராஜகோபுரம் மிகவும் சமீபத்திய நிர்மாணம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
அரச குடும்பத்தினர் அரண்மனையிலிருந்து கோயிலுக்கு தெற்கிலிருந்தே நுழைந்திருக்க வேண்டும். தெற்கிலிருந்து கோயிலுக்குள் நுழைந்திருந்தால், அவர்கள் வழிபடும் முதல் தெய்வம் ஸ்ரீ ஆஞ்சநேயர். விஜயநகர் பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த மைசூர் அரச குடும்பத்தினர் ஶ்ரீ ஆஞ்சநேயர் தான் எல்லா ஸ்தாபனங்களுக்கும் பாதுகாவலர்-தெய்வம் என்று நம்புவர்கள். முதலில் ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்குவது விஜயநகர் பாரம்பரியத்தைப் பின்பற்றி அனைத்து ஏனைய ஆரசர்களுக்கும் வழக்கம் என்பதனையும் நினைவில் வைப்போம்.
இது ஸ்ரீ வெங்கட்ரமணா கோயில் வளாகத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. கோடைக்கால அரண்மனையிலிருந்து இன்று கோயில் வளாகத்திற்குள் நுழைய முடியாது என்றாலும், கோடை அரண்மனையிலிருந்து ஸ்ரீ ஆஞ்சநேயாவின் சன்னிதியைக் காணலாம். இன்று கோவில் வளாகத்தையும் கோடைகால அரண்மனையையும் பிரிக்கும் சுவர் உள்ளது. பழைய நாட்களில் அரண்மனை மற்றும் கோயில் பிரிக்கப்படாததால் அரச குடும்பத்தினர் கோவிலுக்குள் நுழைந்திருக்க முடியும். இன்று பக்தர் கிழக்கு நோக்கி இருக்கும் ராஜகோபுரம் வழியாக நுழைகிறார். சமீபத்தில், 1978 ஆம் ஆண்டில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோயிலின் மூன்று முக்கிய சன்னிதிகள் தென்மேற்கில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கர்பகிரஹத்தில் ஸ்ரீ வெங்கடரமணா, வடகிழக்கில் ஸ்ரீ மகாலட்சுமி. வளாகத்தின் தென்மேற்கு மூலையில், ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. தெய்வத்தின் சிலை ஒற்றை கருப்பு கிரானைட் கல்லால் ஆனது மற்றும் "அர்த்த-ஷிலா" என்று அழைக்கப்படும் புடைப்பு சிலையின் இருபுறமும் சங்கு மற்றும் சக்ரம் காணப்படுகிறது.
ஸ்ரீ அஞ்சநேயர் தனது இடது தாமரை திருப்பாதம் முன்வைத்து வடக்கு நோக்கி நடந்து செல்வது போல் காணப்படுகிறார். இரண்டு பாதங்களிலும், அவர் தண்டை மற்றும் நூபுரம் அணிந்திருக்கிறார். இடது முழங்காலுக்கு அருகில், அவர் ஒரு அலங்கார சங்கிலி அணிந்துள்ளார். அவர் இடையில் கச்சம் அணிந்துள்ளார். அவரது கச்சத்தை இடுப்புடன் பிடித்திருக்கும் அலங்கார கச்சோலம் மேலும் அழகைச் சேர்க்கிறது. சௌகந்திகா பூவின் தண்டை பிடித்துள்ள அவரது இடது திருக்கரம் அவரது இடது இடுப்பில் இருப்பதைக் காணலாம். அம்மலர் அவரது இடது தோள்பட்டைக்கு அருகில் பூக்க தயாராகவும் வாசனை பரப்பவும் இருக்கும் நிலையில் காணப்படுகிறது. அவரது வலது திருக்கரம் அவரது வலது தோள்பட்டைக்கு மேலே உயர்ந்து அபய முத்திரையைக் காட்டுகிறது. அவரது பரந்த மர்பு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்றில் ஸ்ரீராமா, சீதா, லட்சுமணருடன் கூடிய பதக்கத்துடன் காணப்படுகிறது. நேர்த்தியாக சீவப்பட்ட அவரது சிகை அவரது வலது தோள்பட்டைக்கு மேல் ஒரு முடிச்சுடன் காணப்படுகிறது. அலங்காரமான ‘சிகா-மணி’ முடியை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவரது ஒளிரும் உயர்ந்த கன்னங்கள், சற்று நீண்டு காணப்படும் வாய் பகுதி ஆகியவை சுந்தரருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒளிரும் கண்கள் பக்தர்களின் அச்சமின்மையை உறுதிப்படுத்துகின்றன, அதே நேரத்தில் அமைதியையும் தைரியத்தையும் அளிக்கின்றன.
அனுபவம்
ஒரு நியாயமான, நீதியான ஆட்சியை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அனைத்து
தனித்திறனையும் சிக்காதேவ ராயா உடையாருக்கு வழங்கிய இறைவன் இவர், பக்தர்களின் பிரார்த்தனையின் நோக்கங்கள் நீதிக்காக
நியாயத்திற்காக இருக்கும்போது பக்தருக்கு அதற்கான எல்லா திறனையும் அள்ளி வழங்குவார் இவர் என்பது உறுதி.
தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: செப்டம்பர் 2020