home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

தல விருக்ஷத்தில் இயற்கையாக சங்கு வடிவம்,திருக்கூடலூர், ஆடுதுறை பெருமாள் கோயில்


ஆனந்த ஆஞ்சநேயர், ஜகத்ரக்ஷக பெருமாள் கோயில், திருக்கூடலூர், தமிழ்நாடு

ஜீகேகௌசிக்


திருக்கூடலூர், ஆடுதுறை பெருமாள் கோயிலின் ராஜா கோபுரம் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் தாலுகாவில் ஆதனூரில் அமைந்துள்ள திவ்ய தேசம் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயிலில் உள்ள வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோயிலை பற்றி முன்பு விவரித்தோம். வீர சுதர்சன ஆஞ்சநேயர் கோயிலுக்கு “ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்” பக்கத்தை தயவுசெய்து பார்க்கவும்.

காவிரி நதி மற்றும் கொள்ளிடம் இடையே சில திவ்ய தேச க்ஷேத்திதங்கள் அமைந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். மேற்கூறிய பக்கங்களில் “ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்” திவ்ய தேசம் மற்றும் ஸ்ரீ ரங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒற்றுமையை நாம் பார்த்தோம். ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் வடகுரங்கங்காடுதுறை என்ற இடத்தில் காவிரி ஆற்றின் கரையில் மற்றொரு திவ்ய தேசம் உள்ளது. ஸ்ரீ ஜகத் ரக்ஷக பெருமாள்- வையம் காத்த பெருமாள் அல்லது மிகவும் பிரபலமாக ஆடுதுறை பெருமாள் என்று அழைக்கப்படும் திவ்ய தேசம்.

ஸ்ரீ ஜகத் ரக்ஷக பெருமாள்

பாதளத்தில் இருந்த ஹிரண்யக்ஷா என்ற அரக்கனைக் கொல்ல, மகா விஷ்ணு வராஹ வடிவத்தில் பூமியை பிளந்துக் கொண்டு இறங்கி, பின் பூமியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில் வெளியே வந்தார். இவ்வாறு உலகம் [சமஸ்கிருதத்தில் ஜகாத், தமிழில் வையம்] இறைவன் மற்றும் தீய சக்திகளால் [சமஸ்கிருதத்தில் ரக்ஷக, ​​தமிழில் காத்த] காப்பாற்றப்பட்டது. இந்த நிகழ்வு பெருமாளால் இந்த க்ஷேத்திரத்தில் நடத்தப்பட்டது. ஸ்ரீ திருமங்கை ஆள்வார், பன்னிரண்டாவது ஆள்வார், இந்த க்ஷேத்திரத்தின் பெருமாளைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவ்வாறு இந்த க்ஷேத்திரத்தின் பெருமாள் ஸ்ரீ ஜகத் ரக்ஷக பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

இந்த மாபெரும் செயலால் பெருமாள் அனைவருக்கும் ஹிரண்யக்ஷானிடமிருந்து விமோசனம் அளித்தார். ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் நாகர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் யக்ஷர்களுக்கும் மற்றும் அப்சரர்கள். அனைத்து கிங்கரர்களும் இதனால் ஆனந்தமடைந்து இந்த க்ஷேத்திரத்திக்கு வந்து பெருமாளை வணங்கினார். இந்த புண்ய புருஷர்கள் கூட்டமாக கூடுவத்து இறைவனை வணங்க வந்தமையால் இவ்விடம் கூடலூர் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த க்ஷேத்திரத்திற்கு “திருக்கூடலூர்” என்ற பெயர் வந்தது.

துர்வாசர் முனிவரால் சபிக்கப்பட்ட அம்பரிஷன் மன்னர் இந்த க்ஷேத்திரத்தின் பெருமாளை வணங்கி சாபத்திலிருந்து விடுபட்டார் என்று மற்றொரு புராணக்கதை உள்ளது. எனவே இறைவனின் இந்த க்ஷேத்த்திரத்து பெருமாளுக்கு "அம்பரிஷ வரதர்" என்ற பெயருமுண்டு. இந்த க்ஷேத்திரத்தில் அம்பரிஷன் முதல் கோவிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது. பின்னர் சோழ வம்சத்தின் மன்னர்களும் பிற ஆட்சியாளர்களும் அதனை புனர் அமைத்தனர்.

காவேரி நதி வெள்ளம்

ஹனுமத் வாகனம், திருக்கூடலூர், ஆடுதுறை பெருமாள் கோயில் ஒரு முறை காவேரியில் மிக பெரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டது, இதனை "காவிரி பிரளயம்" என்று அழைப்பார்கள். அச்சமயம் இந்த பகுதியில் மற்றும் அதைச் சுற்றி இருந்த பல கோயில்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அழிந்தன. அப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும், ஆதனூரைச் சேர்ந்த மற்ற திவ்ய தேசம் "ஆண்டளக்கும் ஐயன்" திருகோயிலும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆதனூர் திவ்ய தேசம் காஷ்மீர் ராஜாவால் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.

மதுரை ராணி மங்கம்மாள்

காவேரி பிரளயத்திற்கு பிறகு மதுரை ராணி மங்கம்மாளினால் இக்கோயில் திரும்பவும் எழுப்பப்பட்டது. எதிர்காலத்தில் திரும்பவும் சேதத்திலிருந்து கோயிலைப் பாதுகாக்க கோயிலின் மதில் சுவரை மிகவும் உயரமாக கட்டியிருக்கிறார் இவர்.

வெள்ளத்தின் போது கோயில் முழுவதும் சேதமடைந்துவிட்டது. வெள்ளம் வடிந்த பின்பு மூலவர், உற்சவ மூர்த்திகள் மற்றும் தாயர் விக்ரஹம் முதலியவை காவிரி கரையில் சற்று தொலைவில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களிடமிருந்தது. இதற்கிடையில், மதுரை ராணி மங்கம்மாள் ஒரு கனவு கண்டார், அதில் இறைவன் தோன்றி இந்த க்ஷேத்திரத்து கோயிலை புனர் நிர்மாணம் செய்ய சென்னார்.

அவர் தனது தளபதியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பழைய கோயில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதால், இவர் இங்கேயே முகாமிட்டு, மீனவர்களிடமிருந்து லட்சுமியின் ஊற்சவ மூர்த்தியும் மற்ற மூர்த்தங்களையும் மீட்டெடுத்து, பெருமாள் காட்டிய இடத்தில் கோவிலைக் கட்டினார்.

காவிரியின் அக்கரையில் உள்ள வழுத்தூரில் மூலவர் கோயில் கொண்டுள்ளார். சமீப காலம் வரை ராணி மங்கம்மாவால் புதுப்பிக்கப்பட்ட அம்பரிஷ ரதம் - தேர் இந்த கோவிலில் பயன்பாட்டில் இருந்தது. கோயிலில் ராணி மங்கம்மாளின் சிலை உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

திருக்குடலூர், ஆடுதுறை பெருமாள் கோயில் அருகிலுள்ள ஶ்ரீஆனந்த ஆஞ்சநேயர் கோயில் ஏராளமான பக்த ஜனங்கள் ஒன்று கூடி அனைத்து பண்டிகைகளையும் இக்கோயிலில் கொண்டாடினர். அப்படி இந்த க்ஷேத்திரத்தில் பக்தர்கள் பண்டிகையை கொண்டாடுகையில் ஒரு சமயம் ஶ்ரீஆஞ்சநேயர் பார்க்க நேர்ந்தது. பக்தர்கள் மகிழ்ச்சியிலும், பரவசத்திலும் இருப்பதை கண்ட அவருக்கும் ஆனந்தம் தொற்றிக் கொள்ள அவர் பாவசமாதி அடைந்தார். பரமானந்தத்தில் திளைத்த அவர் யோகநிலையில் இச்க்ஷேத்திரத்தில் இருப்பதால் அவரை "ஆனந்த ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படுகிறார்.

பிரதான கோயிலிலிருந்து சுமார் 500 கெஜம் தொலைவில் ஆனந்த ஆஞ்சநேயருக்கு தனி ஆலயம் உள்ளது. ஶ்ரீ ஆஞ்சநேயர் மகிழ்ச்சியான மனநிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

ஆனந்த ஆஞ்சநேயர்

மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் பிரபு. தாமரை திருப்பாதங்களில் நூபுரம் மற்றும் தண்டை அணிந்துள்ளார். வேட்டியை கச்சமாக அணிந்துள்ளார். இடுப்பில் அலங்காரமான இடையணி கச்சையின் மோல் அணிந்துள்ளார். அஞ்சலி ஹஸ்தனாக, இரு திருக்கரங்களையும் கூப்பிய வண்ணம் இருக்கிறார். அவர் கழுத்துக்கு அருகில் மூன்று வரிகள் உள்ள மணி மாலை அணிந்துள்ளார், மற்றும் நீண்ட மாலை ஒன்றும் அணிந்துள்ளார். காதுகளில் அவர் தோள்களைத் தொடும் குண்டலம் அணிந்துள்ளார். கர்ண புஸ்பம் என்னும் ஆபரணமும் இறைவனின் காதுகளில் காணப்படுகிறது. இறைவனின் வால் உயர்ந்து தலையைச் சுற்றிச் சென்று இடது தோளில் ஒரு சிறிய வளைவுடன் முடிகிறது. அவரது சிகை அழகாக பிணைக்கப்பட்டு குடுமியாக கட்டி வைத்துள்ளார். ஆனந்தத்தில் திளைத்து சிரிக்கும் அவரது திருவாய் சற்றே திறந்துள்ளது, இரு கொர பற்களுடன் மற்ற எல்லா பற்களும் தெரிகிறது. ஆனந்தத்தின் உச்சியில் இருக்கும் பிரபுவின் கண்கள் மூடி தியானத்தில் இருப்பதை காண்பிக்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஆனந்த ஆஞ்சநேயர் கோயில், திருக்கூடலூர், தமிழ்நாடு"

 

அனுபவம்
மகிழ்ச்சி ஒரு தொற்று. பகவான் ஸ்ரீ ஆனந்த ஆஞ்சநேயர் மகிழ்ச்சியைத் தெளிவாக அனுபவிக்கிறார். இந்த க்ஷேத்திரத்தில் அவரை தரிசிப்போம். நம்மை ஆனந்தம் தழுவட்டும், ஆனந்தத்தின் அமிர்தத்தில் திளைக்கலாம் வாருங்கள்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
ஆதாரம்: "108 வைணவ திவ்ய தேச வரலாறு" - வைணவச் சுடராழி ஆ. எதிராஜர், காரைகுடி.
பதிப்பு: ஆகஸ்ட் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+