home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பிரசன்ன வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, சித்தூர் நகரம், ஆந்திரா


பிரசன்ன வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
ஈஸ்வரன் கோயில் தெரு, சித்தூர் நகரம், ஆந்திரா

ஜீகே கௌசிக்


சித்தூர்

சித்தூர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் பகுதிகளை இணைக்கும் ஒரு மூலோபாய பகுதியாக அக்காலத்தில் கருதப்பட்டது. எனவே ஆங்கிலேயர்கள் இதனை உபயோக்கிக்க இப்பகுதியை விரிவாக்கப்பட வேண்டிய முக்கியமான இடமாக கண்டனர். இது ஆரம்பத்தில் அன்றயை வடஆர்காடு மாவட்டத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​இந்த இடத்தின் முக்கியத்துவத்தைக் கண்டு, சித்தூரை தலைமையகமாக கொண்டு சித்தூர் மாவட்டம் என்ற பெயரில் ஒரு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

எந்தவொரு கல்வெட்டுகளிலும் அல்லது பிற வரலாற்று பதிவுகளிலும் தற்போதைய சித்தூர் நகரத்தைப் பற்றி சிறப்பு குறிப்பிடப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். 1804 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சித்தூர் நகரில் பாளயகாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஆங்கிலேயர்களால் விடப்பட்ட அழைப்பு ஒன்று விடுத்தது இதற்கு விதிவிலக்கு. ஆனால் சித்தூரை உள்ளடக்கிய இடங்களை ஆண்ட ஆட்சியாளர்களைப் பற்றி நிறைய தகவல்களைத் தருகிற ஏராளமான கல்வெட்டுகள் தற்போதைய மாவட்டத்தில் திருப்பதி, காளஹஸ்தி போன்ற இடங்களில் உள்ளன,

தென்னிந்தியாவை ஆண்ட அனேக ஆட்சியாளர்கள் ஆட்சியின் கீழ் இந்த பிராந்தியம் இருந்திருக்கிறது. ஆங்கிலேயருக்கு முன்பு, கடைசியாக விஜயநகர் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்திருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டின் இடை பகுதியில் விஜயநகர் இராச்சியம் சின்னாபின்னமாகியது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆளும் பிரதேசத்தைத் தன் வசம் தனி இராச்சியமாக வைத்துக்கொண்டனர். ஜமீன்தார் அல்லது பாளயகாரர் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் கீழ் வெவ்வேறு பிராந்தியங்கள் உருவெடுத்தது. இப்பிராந்தியங்களில் பத்து பாளயகாரர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர்.

சித்தூர் கோட்டை

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இப்பகுதி ஆர்காடு நவாப் ஆட்சியின் கீழ் வந்தது. மேலும் இப்பகுதி மீது படையெடுப்பவர்களுக்கு ஒரு தடையாக செயல்பட்டதால் சித்தூரை ஆர்காடு வழக்கில் கில்லா [கோட்டை] என்று அழைக்கப்பட்டது. ஆர்காடு நவாபுக்கு சித்தூரின் ’கில்லதார்’ [கோட்டை தளபதி] ஆக இருந்தவர் அப்துல் வஹாப் என்பவர். மைசூரின் நடைமுறை ஆட்சியாளரான ஹைதர் அலி தனது ஆரம்ப பயிற்சியை அப்துல் வஹாப்பின் கீழ் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1780 ஆம் ஆண்டில், சர் ஐர் கூட் தலமையில் ஆங்கிலேயர்களுக்கும் ஹைதர் அலியிற்கும் இப்பிராந்தியத்தியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கடுமையான போட்டி நிலவியது. வந்தவாசி பகுதி தங்கள் வசம் இருந்ததால், ஆங்கிலேயர்கள் திருப்பதியை நோக்கி மேலும் முன்னேறினார். ஆங்கில படையினரிடமிருந்த கடுமையை எதிர்கொள்ள முடியாமல் வேலூரில் இருந்து ஹைதர் பின்வாங்க வேண்டியிருந்தது. கூட் பின்னர் போளூர் வழியாக திருப்பதிக்கு அணிவகுத்துச் சென்று வழியில் வந்த அனைத்து சிறிய கோட்டைகளையும் அழித்தான். கூட் சித்தூருக்கு முன்னேறி, அதன் சிறிய கோட்டையை அழித்தான். சித்தூர் கோட்டை ஒரு களஞ்சியமாக இருப்பதாகக் கூறப்பட்டதால் அது முக்கியமானது என்று கருதி அதனை தரைமட்டமாக்கினான். ஆனால் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்தது என்ற எண்ணம் தவறானது என்று கைப்பற்றப்பட்ட பின்னர் கண்டறியப்பட்டது. சித்தூரில் ஒரு கோட்டை இருந்தது என்பதற்கான ஒரே ஆதாரம் இதுதான்.

சித்தூர் நகரம்

பாளயகாரர்கள் தங்கள் தங்கள் ஆட்சி நாட்களைக் கொண்டாடிய போது ஆங்கிலேயர்கள் ஆட்சி வந்தது. நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, பாளயகாரர்களுடன் ஆலோசனி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. 1804 இல் பாளயகார்களுடன் ஆங்கிலேயர்கள் நடத்திய கூட்டத்தில், அவர்கள் பாளயகார்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தனர். மிக முக்கியமான தீர்மானம், பாளயகாரர்கள் தங்கள் பிரதேசத்தை பலப்படுத்தக் கூடாது. ஏற்கனவே இருந்ததை அவர்கள் அகற்ற வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

கோட்டை இருந்த சித்தூர் ஒரு சிறிய பாளயகாரரின் ஆட்சியிற்கு உட்பட்டிருந்தது. கோட்டை எங்கிருந்தது என்று சொல்ல எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. இருப்பினும், தற்போது அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியை உள்ளூர் மக்கள் ‘கில்லா’ என்றே பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். மருத்துவமனை அமைந்துள்ள பகுதியைப் பார்த்தால், அது வட்டமான வடிவத்தில் இருப்பதைக் காணலாம், இது பொதுவாக ஒரு கோட்டையின் வடிவமாகும். மேலும் அது அமைந்துள்ள பகுதி இது ஒரு ஒற்றை அலகாக இருப்பதையும் காணலாம். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கு இருந்த கோட்டை பிரிக்கப்பட்டது அல்லது இடிக்கப்பட்டது என்று கூறலாம். இருப்பினும், கில்லா [கோட்டை] இருந்தற்கான ஒரு ஆதாரத்தை எதிர்காலத்திற்காக விட்டு வைத்திருக்கிறது.

அப்போதைய கில்லாவும் அதைச் சுற்றியுள்ள கோயில்களும்

விஜயநகர சாம்ராஜ்யம் ஆட்சி நடத்திய காலத்தில் சனாதன தர்மத்தின் உயர்ந்த கலாச்சாரத்தை புதுப்பித்தனர். அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பின்பும் அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளிலும், மக்கள் மனதிலும் சனாதன தர்மத்தைப் பற்றிய மிகப்பெரிய நீடித்த நல்எண்ணங்களை விட்டுச் சென்றனர்.

அவர்களின் தங்கள் வழக்கம் போலவே, அவர்கள் கட்டும் கோட்டையின் நுழைவாயிலில் முதலில் ஸ்ரீ ஹனுமருக்காக ஒரு கோவிலைக் கட்டுவார்கள். அப்படி கட்டப்பட்ட கோயிலின் தெய்வத்தை மக்கள் “கோட்டை ஆஞ்சநேயர்” என்று அழைப்பது வழக்கம், சித்தூர் இதற்கு விதிவிலக்கல்ல. சித்தூர் கோட்டையிலிலும் ஸ்ரீ ஹனுமாருக்கு ஒரு கோயில் இருந்தது. மற்ற தெய்வங்களுக்கும் கோட்டையைச் சுற்றி கோவில்கள் இருந்தன. நாகலம்மா, ஈஸ்வரன், முனிஸ்வரன், தர்மராஜா கோயில் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

கில்லாவைச் சுற்றியுள்ள நடவடிக்கைகள்

பிரசன்னா வீர ஆஞ்சநேயா, சித்தூர் நகரம், ஆந்திரா அக்காலத்தில் அரசின் முழு நிர்வாகப் பணிகளும் "கோட்டை"யிலிருந்து தான் நடத்தப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் இன்றும் பல அரசாங்க அலுவலகங்கள் நகரின் முந்தைய கோட்டையிலிருந்து செயல்படுகின்றன என்பது கவனிக்க வேண்டிய விசயம்.

எனவே கோட்டையும் சுற்றியுள்ள இடங்களும் என்றும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருக்கும் பகுதியாகும். ‘சந்தை பேட்டை’ என்று அழைக்கப்படும் சித்தூர் கோட்டை பகுதியும் பரபரப்பான பகுதியாகும். சித்தூர் அரசு அதிகாரத்தின் மய்யம் என்பதால், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் அரசு சம்பந்தமான வேலைகளைச் செய்ய சித்தூருக்கு வர வேண்டியிருந்தது. அப்படி வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தங்க கோட்டை அருகில் தர்மசாலைகள் இருந்தன. அப்படியே தர்மசாலைகளில் உணவும் வழங்கப்பட்டது. போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லாத முந்தைய நாட்களில், திருப்பதி செல்லும் வழியில் வரும் யாத்ரீகர்களுக்கும் சாலையோர தர்மசாலைகளில் தங்குவதற்கான வசதி வழங்கப்பட்டது. அப்படி சித்தூர் கோட்டை அருகில் "கோட்டா" குடும்பத்தால் நடத்தப்பட்ட தர்மசாலை அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது.

ராஜா கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் [காசி விஸ்வநாத சமேதா] கோயிலில் பூஜைகளை கவனித்துக்கொண்டிருந்த பண்டிதர் கில்லா அருகே தங்கியிருந்தார். இந்த குடும்பத்தினருக்கு திருப்பதியின் ஸ்ரீ பாலாஜி கோயிலில் பூஜை செய்யவும் உரிமை இருந்தது.

கோட்டை அழிந்த பின்பு கோட்டை இல்லா காலத்திலும் அப்பகுதியை கோட்டை என்றே அழைத்தனர். முன்பு கோட்டையின் உள்ளே இருந்த பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன; ஒரு சமயம் இப்பகுதி முட்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்டிருந்தது. நடைமுறையில் அந்த பகுதியில் உள்ள கோவில்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.

பூசாரியின் கனவு

இது 1841 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த நாளில் விடியும் வேலையில் நடந்தது. அப்போது வரதராஜ பெருமாள் கோயிலின் அர்ச்சகர் ஒரு விசித்திரமான கனவால் விழித்துக்கொண்டார். கனவில் தான் மிக அருகில் ஓய்வெடுக்கொண்டிருப்பதாகவும் தன்னை தேடி கண்டுபிடித்து புனர் பிரதிஷ்டை செய்ய உத்திரவு கிடைத்தது. ஆஞ்சநேய பகவான் தான் இப்பணியை மேற்கொள்ளும்படி கட்டளையிடுவதை அர்ச்சகரால் அடையாளம் காண முடிந்தது. காலையில், அர்ச்சகர் மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அதிகாலையில் கனவில் கண்ட ஆஞ்சநேயரைத் தேடும் படலத்தை மேற்கொண்டார். முட்களும் புதர்களும் வளர்ந்த கில்லா பகுதி மற்ற பக்தர்களின் உதவியுடன் முழுமையாக தேடப்பட்டது. மதியம் வாக்கில் அவர் கில்லா பகுதியில் உள்ள முனிஸ்வரன் கோவிலுக்கு அருகில் இறைவனின் விக்ரஹத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

கோட்டை ஆஞ்சநேயர்

ஶ்ரீ ஆஞ்சநேயரின் விக்ரஹம் மிகப்பெரியதாக இருந்தது, பக்தர்களின் உதவியுடன் அர்ச்சகர் கோட்டா சத்திரத்தின் அருகே விக்ரஹாத்தினைக் கொண்டுவந்தார். பின் நல்ல நாளில் கோட்டை ஹனுமாரை பூர்ணா பிரதிஷ்டை செய்தனர். கோட்டை ஆஞ்சநேயருக்கு "பிரசன்னா ஶ்ரீவீர ஆஞ்சநேயர்" என்று பெயர் மாற்றப்பட்டது. அன்றிலிருந்து தினசரி பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அர்ச்சகரின் குடும்பம் பிரசன்னா ஶ்ரீவீர ஆஞ்சநேயருக்கு பூஜை தொடர்ந்து செய்து வருகிறார். 1841 ஆம் ஆண்டில் ஶ்ரீ ஆஞ்சநேயரை ப்ரிதிஷ்டை செய்த அர்ச்சகர் தற்போதைய அர்ச்சகரின் தாத்தா ஆவார். ஶ்ரீஆஞ்சநேயருக்கு வழிபாட்டைச் செய்ய இக்குடும்பம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்

பிரசன்னா வீர ஆஞ்சநேயா, சித்தூர் நகரம், ஆந்திரா முன்னதாக ஹனுமாருக்கான கோயில் எளிமையானது. கர்பகிரகாம், ஒரு மண்டபம் மற்றும் கல் விளக்கு தூண் ஆகியவை கோவிலை அமைத்தன. சித்தூரில் இருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். சனிக்கிழமைகளில், கோயிலுக்கு மக்கள் வருகை அதிகரிக்கும். கோயிலில் சனிக்கிழமை இரவு முழுவதும் பஜனை மற்றும் கீர்த்தன் நடத்தப்படும். பஜனைகள் நடத்தப்பட்டதால், இந்த இடம் ‘கிருஷ்ணா மந்திரம்’ என்று அழைக்கப்பட்டது. இரவு வேளைகளில் பக்தர்களின் நலன் கருதி ஒரு குடும்பத்தினர் கோயிலில் கல் விளக்கு தூண் அமைத்தனர். கல் விளக்கு தூணின் உச்சியில் ஒவ்வொரு இரவும் ஒரு விளக்கு ஏற்றப்பட்டது. இந்த பணியும் செலவும் அதே குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதனால் பக்தர்களின் பங்களிப்பு அதிகரித்தது, கோயில் செயல்பாட்டில் நிரம்பி இருந்தது.

எழுபதுகளின் நடுப்பகுதியில், வயதான அர்ச்சகரால் திருமலைக்கான பயணத்தை மேற்கொள்ளவோ ​​அல்லது மலைகளுக்கு தனது பூஜை கிரமத்திற்கோ செல்ல முடியவில்லை, எனவே மற்ற பக்தர்களின் உதவியுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்காக ஒரு சன்னிதியை ஶ்ரீஹனுமான் கோயில் வளாகத்திலேயேக் கட்டினார்.

இன்று கோயில்

இன்று திருக்கோவில் பக்தர்களின் தாராள நன்கொடையினால் புனரமைக்கப்பட்டுள்ளது. கோயிலை மேம்படுத்துவதற்காக ‘கோட்டா’ குடும்பத்தினர் ‘சத்திரம்’ பகுதியை வழங்கியிருக்கிறார்கள். ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கு ஒரு பெரிய கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீ ஹனுமனுக்கான கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இன்று கூகிள் இந்த கோயிலை “ஸ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வர சுவாமி கோயில்” என்று குறிக்கிறது. ஸ்ரீ ஆஞ்சநேயரைப் போன்ற ஒரு அடக்கமான பக்தருக்கு, ஶ்ரீராமரே எப்போதும் முதல் தெய்வம். ஸ்ரீ ராமரின் பணிவான பக்தர் இந்த க்ஷேத்திரத்தில் எப்பொழுதும் போலவே ‘கோட்டை ஆஞ்சநேயராக’ அடக்கமாக இருக்கிறார். இப்போது கூட அவர் அதே இடத்தில் இருந்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார்.

சித்தூரில் இருக்கும்போது ஈஸ்வரன் / சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள இந்த பழமையான கோயிலுக்கு வருகை தரவும்.

ஸ்ரீ பிரசானா வீர ஆஞ்சநேயர்

பிரசன்னா வீர ஆஞ்சநேயா, சித்தூர் நகரம், ஆந்திரா இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர் ‘அஜானு பாஹுவாக காணப்படுகிறார். தெற்கே நோக்கி நிற்கும் ஒரு பிரம்மாண்ட உருவம், அவரது வீரம் அதில் அமைதியாக காணப்படுகிறது. அவர் ஒரு போற்றத்தக்க தெய்வம் என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது.

ஸ்ரீ ஹனுமான் நிற்கும் தோரணையில் காணப்பட்டாலும், உண்மையில் அவர் ராவணனின் மகன் அக்ஷனை தனது வலது திருக்காலின் கீழ் அழுத்தி வைத்துள்ளார். இறைவனின் தாமரை போன்ற திருப்பாதங்கள் தண்டை மற்றும் நூபூரத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இறைவன் தனது வேட்டியை கச்சம் வைத்து கட்டியுள்ளார். அதனை இடுப்பில் மூன்று சரம் மௌஞ்ஞி புல்லினால் பிடித்துள்ளார். இடுப்பு அணிகலத்தில் ஒரு சிறிய கத்தியை வைத்திருக்கிறார். அவரது இடது மேல் கையில் கேயூரமும் மற்றும் மணிக்கட்டில் கங்கணமும் அணிந்துள்ளார். அத்திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டினை பிடித்திருக்கும் அவரது கரத்தினை இடது இடுப்பில் வைத்திருக்கிறார். இன்னும் பூக்க வேண்டிய அம்மலர் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. பாஹு-வல்லயம் என்னும் ஆபரணம் அவரது திரண்ட தோள்களுக்கு அழகு சேர்க்கிறது. யக்ஞோபவீதம் அவரது அகன்ற மார்பின் குறுக்கே காணப்படுகிறது. அவர் இரண்டு மாலைகளை ஆபரணங்களாக அணிந்துள்ளார், அவற்றில் ஒன்று பதக்கத்தில் உள்ளது அவரது மார்பை அலங்கரிக்கிறது. அவரது எழுப்பிய வலது திருக்கரத்தில் ‘அபய முத்திரை’ தரித்து தனது பக்தர்களுக்கு ஆசீகள் வழங்குகிறார். பிரபுவின் முடிவில் சுருண்டுள்ள வால் அவருடைய தலைக்கு மேலே உயர்கிறது. இறைவன் தனது தோள்களைத் தொடும் குண்டலங்களை காதில் அணிந்துள்ளார். இறைவன் தனது காதுகளில் ‘கர்ண புஷ்பம்’ என்னும் அணிகலம் அணிந்திருக்கிறார். அழகாக சீவி வரப்பட்ட அவரது சிகையின் ஒரு பகுதி வலது காதின் பக்கத்தில் காணப்பட்டது.

இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் தனித்துவம் அவருக்கு மீசை உள்ளது தான். மற்றும் ஒரு யதுர்முகி அதாவது அவர் பக்தர்களை இரு கண்களாலும் நேரடியாக கடாக்ஷிக்கிறார். அவரது பிரகாசமான கண்கள் பக்தர் மீது பரிவை வர்ஷிக்கிறது. அத்தகைய பிரகாசமான காந்தக் கண்களுடைய இச்க்ஷேத்திரத்தின் இறைவன் தியானிக்கப்பட வேண்டியவர்.

எல்லா ஆபரணங்களுடனும், உறையில் ஒரு சிறிய கத்தி அவரது வலது இடுப்பை ஒரு ஆபரணமாக அலங்கரிக்கிக்கும் கத்தி, அவரது மீசை, அக்ஷனை அவரது கால்லடியில் வைத்திருப்பது இவை எல்லாம் அவரது வல்லமையை அவர் வீரர் எனக் காட்டுகிறது. நேர்த்தியாக கட்டப்பட்ட சிகை, அபய முத்திரை, சௌகந்திகா புஷ்பம் மற்றும் ஒளிரும் நேரடியாகத் தேடும் கண்கள் ஆகியவை இறைவனுக்கு ஒரு இனிமையான சாந்தமான அழகை சேர்க்கின்றது - பிரசன்ன ஸ்வரூபி.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " பிரசன்ன வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, சித்தூர் நகரம் "

 

அனுபவம்
மங்களத்தை தனது நேரடியாக பிரகாசமான கண்களின் கடாக்ஷம் மூலம் அளிக்கும் இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் ஆசீர்வாதங்களை எடுத்துக் செல்லுங்கள். உங்கள் முயற்சியில் புதிய வீரியம், வைராக்கியம் மற்றும் இனிமையான அணுகுமுறை ஆகியவற்றை இந்த க்ஷேத்திரத்தின் பிரஸ்ஸன வீரரின் ஆசீர்வாதத்தினால் கிடைத்திருப்பதை உணர்வீர்கள்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஜூலை 2020


 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+