home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் திருக்கோயில், மாச்சாவரம், விஜயவாடா, ஆந்திரா

ஸ்ரீ எஸ்.எஸ்.எம். ராவ், விஜயவாடா


ஆந்திரா

பண்டைய காலத்தில் தற்போதய ஆந்திராவின் பல பகுதிகள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது. அதனால் தற்போதய ஆந்திர மாநிலத்தில் அனுமார் கோயில்களுக்கு குறைவேயில்லை. அனுமாரை இங்கு மக்கள் ஹனுமந்தடு என்றும் ஆஞ்சநேயலு என்றும் கொண்டாடுகிறார்கள்.

குரு ஸ்ரீ வியாசராஜா

குரு ஸ்ரீ வியாச தீர்த்தர் ஸ்ரீ வியாசராஜாவினை இங்கு ஸ்ரீ வியாசதீர்த்துடு என்றே அழைக்கிறார்கள். விஜயநகர சாம்ராஜ்யம் சுலுவா பரம்பரையினரிடமிருந்து துலுவா பரம்பரைக்கு மாறியது. ஆட்சி கை மாறிய போதும் விஜயநகர சாம்ராஜயத்தின் இரு பரம்பரையினருக்கும் ராஜ குருவாக இருந்தவர் ஸ்ரீ வியாசதீர்த்தர் என்னும் அனுமார் பக்தர். இவர் தான் சென்ற இடமெல்லாம் ஹனுமனுக்கு கோயில் கட்டி மகிழ்ந்தார். 1509ல் புகழ்மிகு கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசனார். இவர் ஆட்சி தென் பாரதம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இவருக்கும் ஸ்ரீ வியாசதீர்த்தர் ராஜ குருவாக இருந்தார்.

வியாச தீர்த்தரும் ஆஞ்சநேயரும்

வியாச தீர்த்தர் ஒரு முறை ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் குடிக்கொண்டுள்ள திருப்பதிக்கு தன் சீடர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தார். இந்திர கில்த்திரி என்னும் இடத்தில் அவர்கள் முகாமிட்டிருந்தனர். இரவு அவர் கனவில் வானர ரூபத்தில் வந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் ஓர் இடத்தை காண்பித்து அங்கு சங்கு சக்ரத்துடன் கூடிய நிலையில் தனக்கு சிலை வடித்து ப்ரதிஷ்டைச் செய்யச் சொன்னார்.

ஸ்ரீ வியாச தீர்த்தர் கட்டிய மாச்சாவரம் ஆஞ்சநேயர்

ஸ்ரீ வியாச தீர்த்தர் அதன் படியே அனுமார் காட்டிய அடையாளங்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்தார். தற்போதய விஜயவாடா அருகில் உள்ள மாச்சாவரம் என்னும் இடம் தான் அது. அனுமாரின் ஆணையின் படி அந்த இடத்தில் அனுமாருக்காக விக்ரஹம் ப்ரதிஷ்டைச் செய்தார் ஸ்ரீ வியாசதீர்த்தர்.

கால போக்கில் பல கோயில்கள் அழிக்கப்பட்டன, பல பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையை அடைந்தது. ஸ்ரீ வியாசதீர்த்தர் கட்டிய அனுமார் கோயில்கள் இதற்கு விதிவிலக்கல்ல.

மாச்சாவரம் ஆஞ்சநேயரின் எழுச்சி

ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் திருக்கோயில், மாச்சாவரம், விஜயவாடா சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் திரு துன்னா வீராஸ்வாமி நாயுடு என்பவருக்கு இல்லூருக்கும் விஜயவாடாவிற்கும் இடையில் ரோடு போட ஒப்பந்தம் கிடைத்தது. இப்பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு ஓர் இரவு கனவில் அனுமார் தோன்றி ஸ்ரீ வியாசதீர்த்தரால் ப்ரதிஷ்டைச் செய்யப் பட்ட தனது விக்ரஹத்தின் விவரங்களைத் தெரிவித்தார்.

மறு நாள் தனது ஆட்படையுடன் திரு நாயுடு அவர்கள் கனவில் கண்ட இடத்தை கண்டுபிடிக்க புறப்பட்டார். பெரிய அரசமரத்தை கண்டதும் அவருக்கு அதுதான் அனுமார் குடிக்கொண்டுள்ள இடம் என்பது புரிந்து விட்டது. அவர் அடையாளம் காட்டிய சரியான இடத்தில் தோண்ட ஆரம்பித்தார்கள் அவர் ஆட்கள். மிக கவனமாக ஆட்கள் தோண்ட திரு நாயுடு அவர்கள் கண்கானித்து வந்தார். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செந்தூரம் பூசிய கல் கண்டு பிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது. மிக அழகான அனுமாரின் புடைப்புச்சிலை அது. திரு நாயுடு முதலில் பார்த்தது அனுமாரின் மேல்புறமாக சங்கு சக்கரம் இருக்கிறதா என்பதையே. அவைகளை கண்டவுடன் திரு நாயுடுக்கு சந்தேகங்கள் தீர்ந்தது, கண்டது ஸ்ரீ வியாசராயர் ப்ரதிஷ்டை செய்த அனுமார் சிலை தான்.

மாச்சாவரம் ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் கோயில்

அனுமார் தன் கனவில் காட்டிய சிலையை மிக கவனமாக சுத்தம் செய்தார். பூஜைக்கு ஏற்பாடு செய்து அனுமன் சிலையை கண்டெடுத்த அரசமரத்தடியிலேயே புனர்ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்தார். தினசரி பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார். அனுமாருக்கு ஒரு சிறிய குடில் அமைத்துக் கொடுத்தார். இன்றும் அவ்வரசமரம் அங்குள்ளது.

அன்று முதல் இந்த க்ஷேத்திரத்திலுள்ள அனுமார் அணுகும் அனைத்து பக்தர்களுக்கும் அவர்களது இச்சைகளை முழுமையாக்குகிறார்.

ஸ்ரீ தாச ஆஞ்சநேயர்

ஸ்ரீ தாச ஆஞ்சநேயர், மாச்சாவரம், விஜயவாடா மாச்சாவரம் க்ஷேத்திரத்திலுள்ள அனுமாரை ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். சிலை சுமார் இரண்டரை முதல் மூன்று அடி உயரமிருக்கும். புடைப்பு சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். பெயருக்கேற்ப அவர் தாசனாக உள்ளார். ஸ்ரீ ராமனின் முன் மண்டியிட்டு தாச பாவத்தில் அமர்ந்திருக்கும் அனுமாரின் இரு கைகளும் சேர்ந்து கூப்பிய வண்ணம் ஸ்ரீ ராமரை சேவிப்பது போல் உள்ளது. கூப்பிய கரங்களை கங்கணங்கள் அலங்கரிக்கின்றன. புஜங்களில் கேயூரமும், அவருடைய காதணியான குண்டலம் மிக அழகாகவும் பெரியதாகவும் எடுப்பாகவுமுள்ளது. தலைமுடி கொஞ்சம் காற்றில் பரந்தாலும், மிகுதியானவையை அழகாக முடித்து குடுமி கட்டியுள்ளார். பளிச்சென்று ப்ரகாசிக்கும் முப்பரிநூல் மார்பை அலங்கரிக்கிறது. ஸ்ரீ வியாச ப்ரதிஷ்டைக்கே உண்டான அடையாளமான நீண்டு மேல் நோக்கி இருக்கும் வாலும், வாலில் மணியும் ஸ்ரீ தாச ஆஞ்சநேயரை மேலும் அழகுறச் செய்கிறது.

திருவிழாக்கள்

இத்தலத்தின் ஸ்தல புராணம் கர்ண பரம்பரையாக வர்ணிக்கப்பட்டது. இவ்வாலயம் தற்போது ஆந்திர அரசின் நிர்வாகத்தில் உள்ளது. தனுர் மாதம் முழுவதும் மிக சிறப்பாக ஆராதனைகள் நடைப்பெறுகிறது. ஸ்ரீ ஹனுமத் ஜயந்தியும் மிக சிறப்பாக கொண்டாடப் படுகிறது. ஆந்திர தேசத்திலுள்ள பழக்கமான வெற்றிலை பாக்கு மாலை அணிவிப்பது என்பது இங்கும் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

விஜயவாடா மற்றும் அருகாமையிலிருந்து திரளாக மக்கள் வந்து ஸ்ரீ தாச ஆஞ்சநேயரை வணங்கி நலன்கள் பல பெற்று சிறப்புடன் வாழ்கின்றனர். பக்தர்கள் பலர் இவ்வனுமானின் மீது பல புகழ் மாலைகள் எழுதியுள்ளனர். பழமையான இருபத்தைந்து நாலடிகள் [தெலுங்கு மொழி] கொண்ட பாடல் மிகவும் பிரபலம்.

இவ்வாலயம் முக்கிய பஸ் நிலையத்திலிருந்து ஆறு கீ.மி. தொலைவும், விஜயவாடா இரயில் நிலையத்திலிருந்து ஐந்து கீ. மி. தொலைவு தூரத்திலும் உள்ளது.

மாசாவர வாஸா ஸதகோடி மன்மத விலாஸா
கேசரீ புத்ரா ஹனுமன்தா கீர்தீமந்தா

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் திருக்கோயில், மாச்சாவரம் "

 

அனுபவம்
ராமரின் தாசனான ஶ்ரீ ஹனுமார் இங்கு பலருக்கும் வேண்டிய நல்வரங்களை அருளியுள்ளார். அவரை தரிசித்து அவரருள் பெறுவோம் வாரீர்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஜனவரி 2012
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+