home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

நுக்கிகரே ஹனுமார் கோயில், தார்வாட், கர்நாடகா


நுக்கிகரே ஹனுமார் கோயில், தார்வாட், கர்நாடகா

டாக்டர் கௌசல்யா


தார்வாட்

தார்வார் என்றும் அழைக்கப்படும் தார்வாட் கர்நாடகாவில் உள்ள ஒரு நகரம். இது தார்வாட் மாவட்டத்தின் தலைமையகம். தார்வாட் பெங்களூருக்கும் புனேவுக்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தார்வாட் பிராந்தியத்தின் முக்கியமான பல்கலைக்கழகம் கர்நாடக பல்கலைக்கழகமாகும், இந்நகரம் ஓய்வூதியதாரர்களிடையே பிரபலமான நகரமாக இருக்கிறது.

தார்வாட் மேற்குத் தொடர்ச்சி மலையின் விளிம்பில் அமைந்துள்ளது, இது ஒரு மலைப்பாங்கான நகரம். தார்வாட். இது ஏரிகளுக்கு பெயர் பெற்றது, ஆனால் இன்று பல ஏரிகள் இருந்ததில் ஒரு சிலவே இப்போது உள்ளது.

வரலாறு

"தார்வாட்" என்ற வார்த்தையின் அர்த்தம் நீண்ட பயணத்தில் நடுவில் ஓய்வெடுக்கும் இடம். பல நூற்றாண்டுகளாக, தார்வாட் மலைநாடு (மேற்கு மலைகள்) மற்றும் பயாலு சீமை (சமவெளி) இடையே ஒரு நுழைவாயிலாக அமைந்துள்ளது. அதனாலேயே இது பயணிகளுக்கு ஓய்வு இடமாக மாறியது. சமஸ்கிருத வார்த்தையான 'துவாரவாடா', என்பதன் அர்த்தம் "கோட்டை கதவு" அல்லது "நகரத்தின் கதவு" என்பதிலிருந்து இவ்வூரின் பெயர் உருவானது.

மற்றொரு பெயர் காரணம் என்னவென்றால், தார்வாட்டில் விஜயநகர ஆட்சியின் போது "தராவ்" (1403) என்ற பெயரில் அரசனின் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதனால் அக்காலத்திலிருந்து அவரின் பெயரில் இந்நகரம் தார்வார் என்று அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. தார்வாரை "கம்பனா ஸ்தானா" என்று குறிப்பிடும் சில கல்வெட்டுகள் இங்கு காணப்படுகிறது.

தார்வாட் அருகே காணப்படும் கல்வெட்டுகள் வைத்து பார்த்தால் இந்த இடத்தை சுமார் தொள்ளாயிரம் வருடங்கள் பழமையானது என அறியப்படுகிறது. இந்த இடத்தில் கோட்டை கட்டப்பட்டது முதல் இவ்விடத்தின் முக்கியத்வம் மேலும் அதிகரித்தது. இக்கோட்டையை மையமாக கொண்டு பல ஆட்சியாளர்கள் இவ்விடத்தை கைப்பற்ற நினைத்துள்ளார்கள். அதனால் அப்போதைய ஆட்சியாளர்களின் அதிகாரப் போராட்டத்தில் கோட்டை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்த கோட்டையின் மூலம், தார்வாட்டின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்தது, இதனால் ஔரங்கசீப், சிவாஜி, அவுரங்கசீப்பின் மகன் மூ அசாம், பேஷ்வா பாலாஜி ராவ், ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் இறுதியாக பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் உள்ளிட்டவர்களின் கவனத்தை ஈர்த்தது.

தார்வாட்டைச் சுற்றியுள்ள ஏரிகள்

முன்பு கூறியது போல் தார்வாட்டில் நாவலூர், கோப்பாகரே, யெம்மிகரே, சதங்கரே, ஹெரேகேரே, கெல்கேரி, நுக்கிகரே மற்றும் பொக்கியாபூர் போன்ற பல ஏரிகள் இருந்தன. அவற்றில் சில இப்போதும் உள்ளது. அத்தகைய ஏரியில் நுக்கிகரே ஒன்றாகும். நுக்கிகரே ஏரியின் தென் கரையில் அமைந்துள்ள ஹனுமார் கோயிலுக்கு நுக்கிகரே இன்னும் பிரபலமானது. பிரதான தார்வாட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் உள்ளது.

ஏரிகரையை ஒட்டியுள்ள அனுமார் கோயில்கள்

இந்தியாவில் நதி, ஏரி, கோயில் குளம் ஆகியவைகளை ஒட்டி ஸ்ரீ ஹனுமாருக்காக, கோயில் கட்டப்பட்டிருப்பது பொதுவான நடைமுறையாகும் குறிப்பாக தென்னிந்தியாவில் இது பழக்கத்தில் உள்ளது. ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலையங்களை பொதுவாக ஒரு பிரதேசத்தின் எல்லையை குறிக்க உபயோகிப்பார்கள். ஸ்ரீ ஹனுமாருக்காக கோவிலை ஒரு பிரதேசத்தின் எல்லையில் கட்டுவதும் ஒரு நடைமுறையாக இருந்தது, [அவர் எல்லை காவல் தெய்வமாக மதிக்கப்பட்டார்]. இவை அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு நோக்கினால், ஹனுமாருக்கான பல கோயில்களை நீர்நிலயங்களை ஒட்டி இருப்பதின் காரணம் அறிய முடியும். இதன் காரணமாகவே நாம் கிராமத்தின், நகரத்தின் அல்லது ராஜ்யத்தின் எல்லையில் ஹனுமார் கோயில்களை இன்று காண்கிறோம்.

நுக்கிகேரி ஏரி தார்வாட்

நுக்கிகரே ஹனுமார் கோயிலும் நுக்கிகரே ஏரியும், தார்வாட், கர்நாடகா நுக்கிகரே ஏரி இன்றும் வற்றாது இருக்கும் சில ஏரிகளில் ஒன்றாகும், இது தார்வாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்திலேயே மிகப்பெரிய ஏரிகளாகும். தார்வாட் - காலாகட்கி தேசிய நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் பிரதான நகரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையிலிருந்து நுக்கிகரே ஹனுமார் திருக்கோயிலுக்கு செல்ல, நெடுஞ்சாலையில் பெரிய நுழைவாயில்-வளைவு உள்ளது. ஹனுமார் கோயிலுக்கு பக்தர்களை வரவேற்கிறது அந்த நுழைவாயில். ஏரியின் மேற்குக் கரைஓரம் நடந்து சென்றால் ஏரியின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

நுக்கிகரே ஹனுமார் திருக்கோயில்

இந்த சாலை நுக்கிகரே ஹனுமான் மந்திர் வரை செல்லும். எந்த பகல் நேரமும் அதிக பக்தர்கள் கோயில் செல்வதை காணலாம். கோயில் முன் நிறுத்தப்பட்டுள்ள கார்களும், மோட்டார் சைக்கிள்களும், இந்த க்ஷேத்திர ஹனுமாருக்கு அருகிலிருந்தும் தூரத்திலிருந்தும் உள்ள இடங்களில் ஏராளமான பக்தர்கள் உள்ளனர் என்பதை அறிவிக்கிறது.

மூன்று அடுக்கு ராஜகோபுரம் தெற்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரத்தின் முன்னால் ஒரு ஆழமான தீபஸ்தம்பம் உள்ளது. ராஜகோபுரம் வழியாக நுழைந்ததும் பெரிய ’ஆங்கான்’ என்று அழைக்கப்படும் திறந்த வெளி. அதில் அரச மரமும், வேப்ப மரமும் ஒன்று சேர வளர்ந்துள்ளது. பிரதான மண்டபத்திற்குள் நுழைந்தால் இங்கிருந்து மூலவரை தரிசிக்கலாம். அண்மையில் கர்பகிரஹத்திற்கு முன்பாக அழகிய வளைவுடன் கூடிய முன் மண்டபம் உள்ளது. அதை அடுத்து கர்பகிரஹம் உள்ளது, அங்கு மூலவரும் அருகிலேயே உட்சவ மூர்த்தியும் உள்ளார்கள். உட்சவ மூர்த்தி பஞ்சலோகத்தால் ஆனது, மூலவர் சஞ்சீவிரயாவாகவும், ஒரு திருகரத்தில் கதையும், மறு திருகரத்தில் சஞ்சீவி பார்வத்தை சுமந்து செல்பவராக காணப்படுகிறார்.

தலபுராணம்

நுக்கிகரேயைச் சேர்ந்த ஸ்ரீ ஹனுமான் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்தார். கால வசத்தில் அவர் நுக்கிகரே ஏரியில் வாசம் செய்தார். ஸ்ரீ வியாசராஜாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீ பலபீமா எனவழைக்கப்படும் ஶ்ரீ ஹனுமான் நுக்கிகரே ஏரியிலிருந்து வெளியே வர முடிவு செய்கிறார். அவர் தனது பக்தரின் கனவில் தோன்றி வழிபாட்டிற்காக ஏரியிலிருந்து விக்ரகத்தை வெளியே கொண்டு வரும்படி அறிவுறுத்தினார். அதன்படி பக்தர் ஏரியில் தேடி விக்ரகத்தை வெளியே கொண்டு வந்து வழிபட ஆரம்பித்தார். ஸ்ரீ வயசராஜர் தனது ஒரு பயணத்தின் போது இந்த க்ஷேத்திரத்திற்கு வந்திருந்த போது ஸ்ரீ ஹனுமாரை புனார் பிரதிஷ்டை செய்தார். தற்போது பூஜைகள் ஸ்ரீ தேசாய் குடும்பத்தினரால் நடத்தப்படுகின்றன.

நுக்கிகரே ஸ்ரீ ஹனுமான்

Nuggikeri Sri Hanuman, Dharwad நுக்கிகேரி ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ பலபீமா க்ஷேத்ரகாரர் என்றும் அழைக்கப்படுகிறார். கடினமான கிரானைட்டால் ஆன மூர்த்தம் சுமார் ஐந்து அடி உயரம் கொண்டது, செந்தூர பூச்சுடன் காணப்படுகிறார். புடைப்பு சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். கிழக்கு நோக்கி நடப்பதைப் போல் காணப்படுகிறார்.

இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ஹனுமான் உயரமாக, பிரம்மாண்டமாக மற்றும் பார்க்க கம்பீரமாக காணப்படுகிறார். பிரபு தெற்கு நோக்கி இருக்கிறார். அவரது தாமரை திருப்பாதங்களில் தண்டை மற்றும் 'நூபூரம்' அணிந்துள்ளார். அவர் வேஷ்டியை கச்சம் வைத்து அணிந்திருக்கிறார். நல்ல திடமான தொடைகளை கச்சம் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டுள்ளது. அவர் இடுப்பில் அலங்கார கடிபாந்தனா அணிந்திருப்பதைக் காணலாம். அவர் தனது மேல் கையில் 'கேயூரம்' மற்றும் மணிக்கட்டில் கங்கணம் அணிந்துள்ளார். அவரது பரந்த மார்பில் அவர் இரட்டை வடம் மணிகள் கொண்ட மாலை அணிந்திருப்பதைக் காணலாம். ஒற்றை வரிசை மணிகள் கொண்ட மற்றொரு மாலையும் உள்ளது. பிரபு தனது கழுத்துக்கு அருகில் ஒரு அட்டிகை அணிந்துள்ளார். காதுகளில் அவர் தோள்களைத் தொடும் 'குண்டலம்' அணிந்திருக்கிறார், காதுகளின் மேல் பகுதியில் அவர் 'கர்ன புஷ்பம்' அணிந்துள்ளார். அழகாக சீவி கட்டப்பட்ட முடியை 'சீகா-மணி' என்று அழைக்கப்படும் ஆபரணத்தால் பிடித்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் கிழக்கு நோக்கிப் பார்த்தாலும், பக்தர்கள் இறைவனின் இரு கண்களின் அருளைப் பெற முடியும்.

இறைவனின் தனித்துவம் அவரது கண்கள் இரண்டும் சாலிகிராமத்தினால் ஆனது, எனவே பிரபுவின் கடாக்ஷம் அருள் மிகு சக்தி வாய்ந்தது.

இப்படிப்பட்ட அழகு மிகு இறைவனின் வால் அவன் தலைக்கு மேலே சென்று, முடிவில் வளைவுடனும் காணப்படுகிறது. அவரது வலது திருக்கரம் அபய முத்திரையில் அவரது பக்தர்கள் அனைவருக்கும் அச்சமின்மை எனும் ஆசியை வழங்குகிறது. இடது தொடையில் பதிந்துள்ள பிரபுவின் இடது திருக்கரம் சௌகந்திகா பூவைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     நுக்கிகரே ஹனுமார் கோயில், தார்வாட், கர்நாடகா

 

அனுபவம்
க்ஷேத்திரதின் இறைவன் தனது பக்தர்களை சாலிகிராம் மூலம் தனது கடாக்ஷாத்தினால் ஆசீர்வதிக்கிறார், இறைவனின் கடாக்ஷம் உங்கள் மீது விழுவதற்கு நீங்கள் எவ்வளவு பாக்கியவான் என்பதை உணர அவர் முன் நிற்கவும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூன் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+