ஹைதராபாத்
இன்றைய ஹைதராபாத் முதலில் கோல்கொண்டாவை கருவாகக் கொண்டிருந்தது, கிழக்கு சாளுக்கிய வம்சத்தால் ஆளப்பட்டது, அதன்பிறகு காகத்தியர்களின் ஆட்சியும் பின்னர் பல்வேறு சுல்தான்களும் ஆட்சி செய்தனர். கோல்கொண்டாவின் ஆளுநரான சுல்தான் குலி, பஹ்மனி சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சி செய்து பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குதுப் ஷாஹி வம்சத்தை நிறுவினார். புகழ்பெற்ற சார்மினார் மற்றும் மெக்கா மஸ்ஜித் ஆகியவை இவர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவர்களிடமிருந்து அது முகலாயர்களுக்குச் சென்றது, ஆசிப் ஜா தனது சுயாதீன ஆட்சியை நிறுவி, இப்பகுதிக்கு ஹைதராபாத் டெக்கான் என்று பெயரிட்டு, ஆசிப் ஜாஹி வம்சம் என்று அழைக்கப்பட்டதைத் தொடங்கினார்.
ராம்பாக், அட்டாபூர் ஹைதராபாத்
ராம்பாக் ஹைதராபாத்தின் அட்டாபூரில் உள்ள ஒரு பகுதி. இது ஹைதராபாத்தின் மையப்பகுதியிலிருந்து அல்லது ஹைதராபாத்தின் கோல்கொண்டாவிலிருந்து வெகு தொலைவில் இல்லை. இன்று ஹைதராபாத்தின் சர்வதேச விமான நிலையத்தை அடைய ரம்பாக் வழியாக செல்ல வேண்டும். அட்டபூரில் 500-600 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பழமையான பல கோயில்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கோயில் கட்டிடக்கலைகளிலிருந்து இந்த கோயில்கள் குத்ப் ஷாஹி காலத்திற்கு முந்தையவை என்று கணிக்க முடியும். ராஜகோபுரத்தின் கட்டமைப்பு மற்றும் கட்டிடக்கலை தென்னிந்திய தொன்மை கலையை ஒத்துள்ளது.
அட்டாபூர் மற்றும் அருகிலுள்ள கோயில்கள்
அட்டாபூரிலும் அதைச் சுற்றியும் பல கோயில்கள் இருந்தாலும், அவற்றில் பழமையானவை சுயம்பு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயில். இந்த இரண்டு கோயில்களும் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. இரு பிரபுக்களும் சுயம்புவாக தோன்றியவர்கள், அடையாளத்தை நெருக்கமாகப் பார்த்தால் மட்டுமே அறிய முடியும். இந்த இரண்டு தெய்வங்களும் அநேகமாக கிழக்கு சாளுக்கிய காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழிபாட்டிலுள்ளார்கள். ஆனால் இறைவர்களுக்கான கோவில்கள் பிற்கால ஆட்சியாளர்களால் கட்டப்பட்டன. குறிப்பாக ஸ்ரீ அனந்த பத்மநாப கோயிலில் காணப்படும் கோயில் [படிகள் வைத்த] குளத்தின் கட்டிடக்கலை குதுப் ஷாஹி காலத்தைச் சேர்ந்தது என்று எளிதாகக் கூறலாம்.
கோயில் வளாகம்
இந்த கோயில் பி.வி.என்.ஆர் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து சற்று தொலைவில் ராம்பாக்-இல் அமைந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையின் 161வது தூணுக்கு எதிரே உள்ள சாலை கோயிலுக்கு செல்லும். பெரிய மர கதவுகளுடன் குதாப் ஷாஹி பாணி வளைவு கொண்ட பிரதான வாயிலை நாம் காணமுடியும்.
இடது பக்கத்தில் ஒரு காலத்தில் பெரிய தர்மசாலையாக இருந்ததில் தற்போது "கோ சாலா" உள்ளது. வலதுபுறத்தில் அர்சகர்களுக்கான வீடுகளும் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஹனுமான் கோயில் உள்ளது. பிரதான கோயிலின் நுழைவாயிலை அடைந்ததும், இரண்டு முக்கிய சந்நிதிகளுக்கு இடையில் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இடதுபுறத்தில் குன்றும் அதில் இருக்கும் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி சன்னிதியும், வலதுபுறத்தில் காலா ஹனுமான் என்ற பெயரில் அழைக்கப்படும் "தாஸ ஜனமேஜயன் ஹனுமார்" சன்னிதியும் உள்ளது. இந்த பிரதான மண்டபத்தில் இரண்டு மரங்கள் பிரதானமக உள்ளது. ஒரு மரத்தில் இந்த கோவிலின் வரலாற்றை விவரிக்கும் பலகை உள்ளது.
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயில் வளாகம்
இடதுபுறத்தில் ஸ்வேம்பு ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி அருளும் குன்று உள்ளது. கோயிலுக்கு வாசல் வழியே ஒரு சில படிகள் மேலே வந்தால் ஒரு பெரிய கல்லால் ஆன கொடிமரம் காணப்படுகிறது. இன்னும் சற்று மேலே சென்றால் அடுத்த கட்டத்தில் ஒரு திறந்த வெளி. அங்கு நாகர், ஸ்ரீ மகா லட்சுமி மற்றும் ஸ்ரீ ஹனுமார் சன்னிதிகளைக் காணலாம். மேலும் சற்று மேலே சென்றால், பெரிய கல் மண்டபம் உள்ளது அதன் வலதுசிறகில் ஸ்ரீ சீனிவாசர் சன்னிதியைக் காணலாம். மற்ற வாயில் வழியாக சென்றால் சுயம்பு ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் கருவறைக்கு வந்தடையலாம்.
சுயம்பு ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் தரிசனம் செய்யுங்கள். ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் கருவறைக்கு மேலே உள்ள விமனமும் ஸ்ரீ கலா அனுமனின் கருவறைக்கு மேலே உள்ள ராஜபுரமும் நேர் வரியில் உள்ளது. ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியின் கருவறையில் இருந்து ஜன்மேஜயன் ஹனுமான் சன்னிதியைக் காணலாம்.
திறந்தவெளியிலிருந்து, தெலுங்கில் கொனேரு எனப்படும் கல் படிகளுடன் கொண்ட கோயில் குளத்தைக் காண முடியும். இக் குளத்தில் ஏராளமான ஆமைகள் வசிப்பதைக் காணலாம், மேலும் அவைகள் சூரிய வெப்பதிற்காக தண்ணீரிலிருந்து வெளியே வருகின்ற காட்சி அழகாக உள்ளது. குளத்தின் மறுபுறம் பூஜாரியின் வசிப்பிடம் காணப்படுகிறது.
ஸ்ரீ தாஸ ஜனமேஜயன் ஹனுமார் சன்னிதி
இந்த கோயிலின் பிரதான தெய்வத்தினை தர்சித்தப் பிறகு, ஸ்ரீ தாஸ ஜனமேஜயன் ஹனுமாரின் தரிசனம் செய்ய கீழே வாருங்கள். இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமார் ஜனமேஜயனால் வணங்கப்பட்டதால், அவர் தாஸ ஜனமேஜயன் ஹனுமார் என்று அழைக்கப்படுகிறார். விக்ரஹம் கருப்பு கிரானைட்டால் ஆனதால் அவர் காலா ஹனுமான் [காலா என்றால் கருப்பு என பொருள்] என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். மீண்டும் பிரதான மண்டபத்தை அடைந்தால் ஸ்ரீ ஹனுமார் சன்னிதி நம்மை ஈர்க்கும்.
ஸ்ரீ ஹனுமார் சன்னிதிக்கான நுழைவு வழி கிரானைட் போடப்பட்ட தளங்களுடன் வலுவாக கட்டப்பட்ட மண்டபமாகும். இந்த மண்டபத்திற்கு நுழைவில் மடக்கு கதவும் மறுபுறம் மரக் கதவும் உள்ளது. கூரையின் மையத்தில் கூற்மையாக வெளி உள்ளது அதன் மத்தியில் குறுக்கே செல்லும் மரதுண்டில் மணி தொங்கவிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்த மண்டபம் ராஜா கோபுரத்தின் அடிப்பகுதி.
மண்டபத்திலிருந்து வெளியே சென்றால் ஶ்ரீ ஹனுமார் சன்னிதி. கர்பகிரஹமும் முன் மண்டபமும் கொண்டது இவரது சன்னிதி. சிறிய உள் மண்டபத்திலிருந்தே பக்தர்கள் இறைவனின் தரிசனம் பெறலாம். பூஜை செய்வதற்கு பூஜாரிக்கு உள்ள இடம் உள்ளது, பின்னர் ஸ்ரீ ஹனுமாரின் கருவறை.
ஸ்ரீ தாஸ ஜனமேஜயன் ஹனுமார்
ஸ்ரீ தாஸ ஜனமேஜயன் ஹனுமனின் விக்ராஹம் கருப்பு கிரானைட் கல்லினாலானது ஏழு முதல் எட்டு அடி உயரம் இருக்கும். நின்ற கோலத்தில் உள்ள ஶ்ரீ ஹனுமார் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியினை தரிசனம் செய்தவாறு காணப்படுகிறார். இறைவன் தெற்கு நோக்கி உள்ளார்.
நூபுரம், தண்டை அலங்கரிக்கும் பிரபுவின் தாமரை பாதங்கள் தரையில் உறுதியாக உள்ளன. இறைவன் இடுப்பை ஆபரணம் அலங்கரிக்கிறது. அவரது அகன்ற மார்பினை புனித நூல் மற்றும் இரண்டு மணி மாலைகளால் அலங்கரிக்கின்றது. அவர் தனது தாமரை திருக்கரங்களை மடித்து, உள்ளங்கைகளை இணைத்து ‘அஞ்சலி’ முத்திரையில் ஜப மாலையையும் வைத்துக் கொண்டு, ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமியை நோக்கி ஜபம் செய்கிறார். அவரது தாமரை திருகரங்களின் மணிக்கட்டில் கங்கனம், மேல் கையில் கேயூரம் அணிந்துள்ளார். இறைவன் தனது தோள்களில் புஜாவளி எனப்படும் ஆபரணத்தையும் அணிந்துள்ளார். அவர் காதில் தோடும் தொங்கட்டானும் அணிந்துள்ளார். இறைவனின் வால் தலை வரை உயர்ந்து, மேல் நோக்கிய வளைவுடன் முடிகிறது.
இறைவனின் விக்ரஹத்தின் இருபுறமும் சங்கு மற்றும் சக்ரம் உள்ளது.
அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தில் உயர்ந்து நின்று ராம நாமத்தை தியானிக்கும், ஸ்ரீ
ஜனமேஜயனால் வணங்கப்பட்ட இறைவன் தனது பக்தர்களுக்கு அனைத்து தார்மீக செழிப்பையும் அருள காத்திருக்கிறார்.
தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
மே 2020