home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தாலுபுலப்பள்ளி கிராமம், புதலப்பட்டு மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்


ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தாலுபுலப்பள்ளி கிராமம், புதலப்பட்டு மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

ஜீகே கௌசிக்


கோயிலின் மணிகள் மற்றும் விளக்குகள்

மங்களகரமான சந்தர்ப்பங்களில் விளக்குகள் ஒளிரும். தீபாவளி விளக்குகள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கொண்டாட்டம். வீட்டின் தினசரி வேலை ஆரம்பிக்கும் முன் காலை மற்றும் மாலை நேரங்களில், வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது சனாதன தர்மத்தில் நடைமுறையில் உள்ள பழக்கம். எந்தவொரு விழா திறக்கப்பட்டாலும் அதனை ஒரு விளக்கினை ஒளிர செய்து ஆரம்பிப்பது நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம். விளக்கு ஒளியுடன் செயல்படத் துவங்குவது நல்லது. எனவே விளக்குகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருப்பதை காணலாம்.

கோயில் மணி பழைய நாட்களில் கிராமத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோயில் மையமாக இருந்தது, கிராமத்தின் அனைத்து சமூக காரியங்களுக்கும் இது ஒரு முனையமாக இருந்தது. கிராமத்தில் கோயிலில் உள்ள தெய்வத்திற்கு உணவு படைப்பதை தாங்கள் கடமையாக எண்ணினார்கள். அதனால் கிராமத்தில் தெய்வதிற்கு உணவு படைத்து கோயில் மணி அடித்த பிறகே தங்கள் வீட்டில் உணவு உட்கொள்ளுவார்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் அருகே உள்ள கிராமங்களைச் சென்றடையக்கூடிய ஒலி உருவாக்கக்கூடிய மணி இருந்தது. இதன் மூலம் இந்த கிராமத்தில் எல்லோரும் நலமாக இருப்பதை அண்டை கிராமவாசிகள் அறிந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு கிராமக் கோயில்களில் மணியை தவிர, கோவிலில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது அவசியம் எனக் கருதப்படுகிறது. ஆலயத்தில் கருவறை மற்றும் கோயிலின் முன்பகுதியிலும் விளக்கு ஏற்றப்படுகிறது. முன்புறம் ஏற்றப்படும் விளக்கினான் கோயில் பிரகாரம் முழுவதும் வெளிச்சமாக காணப்படும். கோவிலில் சாதாரணமாக மக்கள் கூடுவதால், கோவிலில் உள்ள பொது விளக்குளில் கிராமவாசிகள் பயனுள்ளதாக இருக்கிறது.

கோயில் கர்பகிரஹ விளக்கு

பாவை விளக்கு குறிப்பாக தென்னிந்தியாவின் கோயில்களில் பழங்கால நாட்களில் கோயில்களில் கர்பகிரஹத்தில் ஒரு விளக்கும், பொது வெளியில் ஒரு விளக்கும் ஏற்றுவது உண்டு. இவ்விரு விளக்குக்கும் எண்ணெய் வழங்குவதற்கு கிராமவாசிகள் முன்வருவார்கள். நிலங்கள், கால்நடை போன்றவை இவ்விளக்குகளின் எண்ணைக்கான வருவாய் தருவதற்கு நன்கொடையாக கோயிலுக்கு அளிக்கப்படுவதாக கோயில்களில் காணப்படும் பல கல்வெட்டுகள் கூறுகின்றது.

கர்பகிரஹத்தில் உள்ள விளக்கு முக்கியக கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இவ்விளக்குகள் எளிமையாக காணப்பட்டது. பின்னர் விரிவான கலைஅழகுடன் கூடிய விளக்குகளாக மாற்றம் கண்டது. ஐந்து முகங்கள் கொண்ட தொங்கும் விளக்குகள் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஒரு பெண்ணின் கையில் விளக்குடன் இருப்பது போன்ற ’பாவை விளக்கு’ என்னும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள விளக்கு பல கோயில்களில் காணப்படுகிறது. தெற்கிந்திய கைவினைஞர்கள் இந்த விளக்குக்கு எண்ணற்ற பிரத்தியேக வடிவங்களில் அமைத்து ஆச்சரியப்பட்டனர். இப்படி பட்ட கலை நயம் கொண்ட விளக்குகள் கர்பகிரஹத்திற்கு எதிரில் இருக்கும் பலிபீடம், வாகனம் இவைகளுக்கு அருகில் வைக்கப்பட்டு இருக்கும்.

கோவிலின் பொது விளக்கு

கோவிலின் முற்றத்தில் ஒரு பொதுவாக இருக்கும் விளக்கு கிராம மக்கள் தேவைக்கு பயன்யுள்ளதாக இருக்கும். இவ்விளக்கினை மாலை வேளைகளில் ஏற்றுவார்கள், இரவு நேரத்தில் ஒளியூட்டுவதாக இருக்கும்.

முந்தைய நாட்களில் கோவிலின் முற்றம் கற்களாலோ அல்லது சிமெண்ட்டினாலோ அமைந்திருக்கவில்லை. கிராமவாசிகள் கூடுவதற்கு வசதியாக அது சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கப்படும். முற்றத்தில் மையத்தில் ஒரு மேடையில் விளக்கு வைக்கப்பட்டு ஒளிரும். ஆரம்பத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட இவ்விளக்குகள் தமிழ்நாட்டில் 'அகல்' என்று அழைக்கப்படுகிறது. பின் உலோகங்களைப் பற்றிய அறிவைப் பயன்படுத்தி பித்தளை அல்லது வெண்கலத்தில் விளக்குகளை செய்யத் தொடங்கினார்கள். இப்போது எழுப்பப்பட்ட மேடையில் விளக்குகளை வைப்பதற்கு பதிலாக, விளக்குகளுக்கு தண்டுகள் தயாரித்தனர். தண்டின் ஒரு முனையில் விளக்கும் மறுமுனை கூர்மையாகவும் தயாரிக்கப்பட்டது. இதனால் விளக்கை நிலத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு பொருத்திக் கொள்ளலாம். நிலத்தில் குத்தி விளக்கை பொருத்துவதால் இதனை ’குத்து விளக்கு’ என்று அழைக்கலானார்கள். இதனை மலையாளத்தில் ’நில விளக்கு’ என்று அழைப்பார்கள். நில என்றால் நிலம் என்பது பொருள்.

ஆட்சியாளர்களின் பகட்டினாலும் மக்கள்தொகை அதிகரிப்பாலும் இந்த உலோக குத்து விளக்கு கோவில்களில் கல் தூண்களால் மாற்றப்பட்டது. கோயில்களில் கல் தூண்கள் வடிவமைத்தல் தொடங்கியது. கோயில்களுக்கு இந்த ’விளக்கு தூண்’களை வடிவமைப்பதில் ஒவ்வொரு சிற்பியும் மற்றவரின் திறமையை மிஞ்சுவதற்கு தயாராயினார்கள். கிராம மக்களின் நலனுக்காக கோயில் பிரகாரத்தில் அமைக்கப்படும் ’விளக்கு தூண்கள்’ அவசிமாகியது அதனால் முக்கியத்துவம் பெற்றது.

தென்னிந்திய கோவில்களில் விளக்கு தூண்கள் கல்லால் ஆனதாக ஒற்றை விளக்குடன் இருந்தது. மகாராஷ்டிராவில் இந்த வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்டது, இங்கு விளக்கு தூண் நூற்றுக்கணக்கான விளக்குகளை வைத்திருக்கும்.

விஜயநகர கட்டிடக்கலை

கருட ஸதம்பம் - தஞ்சை வல்லம் சஞ்சீவிராயன் கோயில் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் விஜயநகர சாம்ராஜ்யம் அல்லது அதன் பிரதிநிதிகளின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. அந்த புகழ்பெற்ற ஆட்சியாளர்கள், சனாதன தர்மத்தின் இழந்த மதிப்பை மீண்டும் கொண்டு வருவதற்கு பங்களித்தனர். இதன் ஒரு பகுதியாக அவர்கள் தற்போதுள்ள கோயில்களை மேம்படுத்தி புதிய கோயில்களையும் கட்டியுள்ளனர். பல கோயில்களில் இந்த சீரான கட்டிடக்கலை 'விஜயநகர பாணி' என்று பிரபலமாக அறியப்படுகிறது.

கல் விளக்கு தூண்கள்

அவர்கள் அறிமுகப்படுத்திய ஒரு விஷயம் விளக்கு தூண்கள் ஆகும். இந்த கல் விளக்கு தூண்கள் சாதாரணமாக கருவறையில் இருந்து நேர் கோட்டில் அமைக்கப்படும். கோயிலின் முன் முற்றத்தில் வாகனம், பலி-பீடம் பின்னர் தீப ஸ்தம்பம் என்று அமைந்திருக்கும். குறிப்பாக இந்த தூண் வட்டமாகவோ அல்லது அறுகோண வடிவத்திலோ இருக்கும். கீழ் பகுதி சதுரமாக நான்கு பக்கம் கொண்டு பலிபீடம் முன் காணப்படுகிறது. தூணினின் பருமன் கீழிருந்து சற்றே குறைந்து கொண்டே மேலே வரை செல்லும். மேலே தூணின் முடிவில் சிறிய குழி இருக்கும். அதில் எண்ணை விட்டு தீபம் ஏற்றுவார்கள். தூணின் கீழ் பகுதியில் நான்கு பக்கங்களிலும் புடைப்பு சிற்பங்கள் படைக்கப்பட்டு இருக்கும். சாதாரணமாக கர்பகிரஹத்தை நோக்கி ஸ்ரீ கருடாழ்வார் அல்லது வைணவ சின்னமான நாமமும், நேர் எதிர் பக்கம் ஶ்ரீ ஆஞ்சநேயரும் பக்க வாட்டில் இரு பக்கங்களிலும் சங்கும், சக்ரமும் பொரிக்கப்பட்டு இருக்கும். இந்த ஏற்பாடு அனேகமாக அனைத்து வைஷ்ணவ கோயில்களின் தீப தூண்களில் காணப்படும்.

கருட ஸ்தம்பம்

தீப தூண்கள் பொதுவாக பத்து அல்லது பன்னிரண்டு அடி உயரம் இருக்கும். இதற்கு மாறாக விஷ்ணு கோவிலுக்கு வெளியே ஒரு பெரிய மற்றும் உயரமான கருட ஸ்தம்பம் என்று அழைக்கப்படும் தூண்கள் காணப்படுகிறது. இந்த ஸ்தம்பத்தின் மேல் கருடனின் சிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் விஷ்ணு கோவில் வளாகத்தில் காணப்படும் கருடா ஸ்தம்பம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்று அறியப்படுகிறது.

தென்னிந்தியாவில் இந்த விளக்கு தூண்களின் விரிவாக்கமாக, கருடன் ஸ்தம்பங்கள் அதே பாணியில் விஜயநகரக் காலத்தில் கட்டப்பட்டது. மன்னார்குடியில் உள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோவிலில் உள்ள கருட ஸ்தம்பம், விஜயநகர பாணியில் கட்டப்பட்ட சிறந்த கருட தூண்களில் ஒன்றாகும்.

தூண்களில் தெய்வங்களுக்கான பூஜை

உள்ளூர் கோயிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள், கோயிலின் தூண்களில் காணப்படும் தங்கள் இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை மற்றும் பூஜை செய்து வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அல்லது சிந்தூரம் பூசி தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி கோவில், திருவையாறு தர்மராட்சம்பிகை கோவில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவா கோவில் மற்றும் குருவாயூர் கோவில் ஆகியவற்றில் இக்காட்சியினை காணலாம். பக்தர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் ஒரு செய்கை இது.

தாலுபுலப்பள்ளி

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தாலுபுலப்பள்ளி கிராமம், தலப்பட்டு மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தின் புதலப்பட்டு மண்டலத்தில் தாலுபுலப்பள்ளி ஒரு எளிய கிராமம். சித்தூரிலிருந்து கடப்பாவுக்கு 18 வது தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் 24 கி.மீ. இக்கிராமம் அமைந்துள்ளது. இவ் எளிய கிராமத்தின் பஸ் ஸ்டாப் ஸ்ரீ ஹனுமானின் கோயிலுக்கு முன்பாக உள்ளது.

கிராமத்தின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் இந்த கிராமத்தின் சில பகுதிகளில் வளர்ந்து வரும் மாம்பழங்களால் மெதுவாக விவசாயத்திலிருந்து தோட்டக்கலைக்கு மாறுகிறது.

சுவாரஸ்யமாக "தாலுபுலப்பள்ளி" என்ற பெயருக்கு 'கதவு இல்லா கிராமம்' என்று பொருள். இதற்கு எதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். நமக்கு தெரியவில்லை. இந்த கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் இப்புதிரை தீர்க்க வேண்டும்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில்

இந்த கிராமத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கிழக்கு நோக்கி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. பத்து அடி உயரத்தில் ஒரு பெரிய தூண் ஒரு மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூணின் மேல் ஒரு விளக்கு, இதனை தீப ஸ்தம்பம் என்று அறிவிக்கிறது. இதற்கு முன்பாக ஒரு தற்காலிக கூரை கொண்ட நான்கு தூண் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இருபுறங்களிலும் ஸ்ரீ கணேசர் மற்றும் ஸ்ரீ முருகர் ஆகியோருக்கு இரண்டு சிறிய மண்டபங்கள் உள்ளன. பின் நடுவில் ஒரு நுழைவாயிலைக் கொண்டிருக்கும் கோயிலின் சுவர் காணப்படுகிறது. நீங்கள் வளாகத்தில் நுழைந்தவுடன் ஒரு மண்டபத்தைக் காணலாம். மண்டபத்தின் மேல் அலங்கரிக்கப்பட்ட வளைவு உள்ளது. இந்த அலங்கார வளைவில் ஸ்ரீ ராம பரிவர்த்தை அழகாக சித்தரித்திருக்கிறார்கள். மண்டபத்தின் நடுவில் பலிபீடம் உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயரின் வாகனம் [ஒட்டகம்] பலிபீடம் பின்னால் காணப்படுகிறது. அடுத்து ஒரு சற்றே உயரமாக கர்பகிரஹம். இந்த இடத்திலிருந்து ஶ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய முடியும். பக்தர்கள் இப்பகுதியில் இருந்து கர்பகிரஹத்தை, நன்கு அமைக்கப்பட்டிருக்கும் பாதையில் வலம் வர முடியும். சுற்று வலம் வரும் போது கர்பகிரஹத்தின் மீது இருக்கும் விமானத்தை பார்க்க முடியும். விமானத்தின் நான்கு பக்கங்களில் சஞ்சீவராய, வீர, பக்த மற்றும் யோகா வடிவங்களில் ஸ்ரீ ஆஞ்சநேயர் காணப்படுகிறார்.

தூணே கோவில்

ஶ்ரீ ஆஞ்சநேயர், தாலுபுலப்பள்ளி கிராமம், புதலப்பட்டு மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் கர்பகிரஹத்தினையும் மூலவரையும் கூர்ந்து நோக்கும் போது ஶ்ரீ ஆஞ்சநேயரின் மூர்த்தி தூணில் புடைப்பு சிலையாக இருப்பது தெரியும். கிழக்கு நோக்கி ஶ்ரீ ஆஞ்சநேயரும், தெற்கு நோக்கி சங்கும், மேற்கு நொக்கிய திருமண் சின்னமும், வடக்கு நோக்கிய சக்கரமும் இருப்பதை காணலாம். இந்த புடைப்பு சிலைகள் தூணின் அடிபகுதியாக இருப்பது புலப்படும். தூணின் உயரம் தெரியவில்லை ஆனால் கர்பகிரஹத்தின் உச்சிக்கு சென்று மறைகிறது. அதன் மேல் விமானம் கட்டப்பட்டுள்ளது.

கர்பகிரஹத்தில் உள்ள தூண் தீப ஸ்தம்பம் என்று அநுமானிக்க முடிகிறது. மேலும் கோயிலுக்கு வெளியில் நாம் பார்க்கும் தூண் ஸ்ரீ விஷ்ணுவின் ஒரு பெரிய கோவிலின் கருட ஸ்தம்பமாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இங்கு பல்லாண்டுகளுக்கு முன் பெரிய ஶ்ரீவிஷ்ணு ஆலயம் இருந்திருக்கலாம் என ஊகிக்க வாய்ப்பு இருக்கிறது. இவைகளில் ’தீப ஸ்தம்பம்’ இன்று ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலாக அமைக்கப் பட்டுள்ளது.

இந்த கிராமத்தினை 'தாலுபுலப்பள்ளி' என்று பெயரிடப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஸ்ரீ ஆஞ்சநேயர் கிராமத்தில் ரக்ஷகராக இருப்பதால் கதவுக்கு அவசியம் என்ன இருக்கிறது? கிராமத்தின் நுழைவாயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் காணப்படுவது மிகவும் பொருத்தமே.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

இந்தக் க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி மூர்த்தம் சுமார் மூன்று அடி உயரமாக புடைப்பு சிலை வடிவில் உள்ளது. இறைவன் நின்ற தோற்றத்தில் உள்ளார். இறைவனுடைய நூபுரம் மற்றும் தண்டை அணிந்துள்ள இடது தாமரை பாதம் முன்னால் இருக்கிறது. அவரது வலது தாமரைக் கால் தரையில் இருந்து சற்று உயர்ந்துள்ளது. இறைவன் கௌபீனம் அணிந்து, இடுப்பில் ஒரு சிறிய கத்தி வைத்திருக்கிறார். மேல் கையில் கேயுரம் மற்றும் மணிக்கட்டில் கங்கணமும் அணிந்துள்ள அவரது இடது கையில் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டினை பிடித்துள்ளார். மொட்டாக இருக்கும் பூ அவரது இடது தோளின் மேல் தெரிகிறது. அவரது அழகிய மார்பினை மூன்று மாலைகள் அலங்கரிக்கின்றன அவற்றில் ஒன்றில் பதக்கம் இருக்கிறது. இடது தோளிலிருந்து முப்புரி நூல் பரந்த மார்பினில் பாய்கிறது. தூக்கி இருக்கும் வலது திருகரத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளித்து ஆசீர்வதிக்கிறார். அவரது வால் அவருடைய தலைக்கு மேல் உயர்ந்திருக்கிறது. வாலின் நுனியை சிறிய மணி அலங்கரிக்கிறது. காதினை அலங்கரிக்கும் குண்டலங்கள் அவரது தோள்களை தொடுகின்றன. அவரது சிகை அழகாக இருக்கிறது. காருண்யம் கூடிய பிரகாசிக்கும் கண்கள் பக்தர்களை பார்க்கிறது. இத்தகைய ஒளிமிகு நேர்த்தியான அன்பினை பொழியும் கண்களினால் பக்தர்கள் அனைவருக்கும் 'மங்களம்' தந்து அருள்பாலிக்கிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தாலுபுலப்பள்ளி கிராமம், சித்தூர்

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் பாதுகாவலரும், காப்பாற்றுபவரும் ஆன அவர் தனது நேர் பார்வையால் ஆசிகளை பொழிகிறார். இந்த எதிர்-முகி ஆஞ்சநேயரின் தரிசனம், தைரியம் மற்றும் வெற்றியை வழங்குவதால், பக்தரின் வாழ்க்கை செழிப்புடன் இருக்கும் என்பது நிச்சயம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜனவரி 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+