home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஊன்டே மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே, மகாராஷ்டிரா


ஊன்டே மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே, மகாராஷ்டிரா

ஜீ கே கௌசிக்


அன்றைய பூனே

இன்று பூனே இந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. மனித வாசஸ்தலமும் குடியேற்றமும் எப்போதும் ஒரு நதியை ஒட்டியிருக்கும். இது மாதரி தான் பழங்காலத்திலிருந்தே முத்தா நதிக்கரையில் ஒரு குடியேற்றம் இருந்தது. முத்தா நதி மூலா நதியுடன் சங்கமிக்கின்ற இடத்தில் முத்தா நதியின் வலது கரையில் குடியேறியது தான் இன்றைய பூனேவாக உருவாகியிருக்கிறது. இந்த குடியேற்ற பகுதி தற்போது "கசாபே" என்று அழைக்கப்படுகிறது.

ஆடில் ஷாஹியின் படை தளபதி முரார் ஜக்தேவ் 1630ஆம் ஆண்டு பழமையான கசாபேவை முற்றிலுமாக அழித்துவிட்டான். சிவாஜி மகாராஜ் காலத்தில் தான் பூனேவின் இன்றைய கசாபே திரும்பவும் உருவாக்கப்பட்டது. புதிய கசாபே கணபதி கோயிலில் தொடங்கிவைக்கப்பட்டது. மற்றும் லால் மஹாலில் சிவாஜியின் தாயார் பூனேவில் வசிக்க மீண்டும் கசாபே வசிப்பிடமாக மாறியது.

பாஜிராவ் பேஷ்வா தனது நிர்வாகத்தின் தலைமையகமாக பூனேவை மாற்றி குடியேறிய பிறகு பூனேவின் உண்மையான வளர்ச்சி தொடங்கியது. புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு பேட் என்று அழைக்கப்பட்டன. பேட் என்பது அடிப்படையில் ஒரு வணிக தலம். [பெங்களூரு கூட பல பேட்கள் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை நாம் காண முடிந்தது.] புதிய பேட் அதை உருவாக்கிய நபரின் பெயரால் பெயரிடப்பட்டது அல்லது அது வாரத்தின் ஒரு நாளின் பெயரால் அழைக்கப்பட்டது.

பூனே பெயர் காரனம்

ஊன்டே மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே, மகாராஷ்டிரா வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, பூனேவில் முத்தா நதிக்கரையில் பூனேஷ்வர் சிவன் கோயில் இருந்தது. பூனேஷ்வருடன் நாராயனேஸ்வர் என்ற மற்றொரு கோயிலும் இருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூனேஷ்வர் கோயில் இடிக்கப்பட்டு இப்போது "இளைய ஷேக் சல்லா தர்கா" என்று அழைக்கப்படும் தர்காவாக மாற்றப்பட்டது, இது இன்றுவரை அதன் இடத்தில் உள்ளது. இந்த நகரத்திற்கு பூனேஷ்வரில் இருந்து பூனே என்ற பெயர் வந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறார்கள்.

ராஸ்தா பேட்

ராஸ்தா பேட் என்பது பூனேவில் ஒரு பழமையானதும் பிரசுத்தமானதுமான இடம். இது பூனே ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ளது. கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை நகரின் பிரபலமான சுகாதார மையங்களில் ஒன்றாகும். இந்த இடம் ராஸ்தா குடும்பத்தால் உருவாக்கப்பட்டது அதனால் ராஸ்தா பேட் என்று பெயரிடப்பட்டது. மராட்டிய சாம்ராஜ்யத்தில் ஒரு முக்கியமான நிலப்பிரபுத்துவ குடும்பமாக இருந்த ஒரு குடும்பத்தின் குடும்பப்பெயர் தான் ’ராஸ்தா’. அவர்களின் அசல் குடும்பப்பெயர் கோகலே. அவர்கள் ராஸ்தா என்னும் பட்டத்தை பெற்றனர், அதாவது பிஜப்பூர் முடியாட்சியில் இருந்து அவர்களின் நேர்மை மற்றும் நேர்மைக்கான நியாயத்தை காண்பிப்பவர்கள் என்பதால் மராத்தியில் "ராஸ்தா" என்ற பட்டப்பெயர் பெற்றனர். சிவபுரி பேட் என்று முதலில் அழைக்கப்பட்ட ஒரு பகுதியை ராஸ்தா குடும்பத்தின் பெயரில் ராஸ்தா பேட் என்று பெயர்சூட்டப்பட்டது. குஜராத், மால்வா மற்றும் கர்நாடக இராணுவ பிரச்சாரங்களில் பேஷ்வாவுக்கு ராஸ்தா உதவினார். வாய் மற்றும் பூனேவில் ராஸ்தாகள் பல கோயில்கள், படிதுரைகள், அரண்மனைகள் கட்டினார்கள். பூனேவில் உள்ள அவர்களது குடும்ப வீடு "ராஸ்தா வாடா". இது 1779 மற்றும் 1784க்கு இடையில் நானாசாகேப்பின் மகன் தோரலே மாதவ்ராவ் என்பவரால் கட்டப்பட்டது, பின்னர் ராஸ்தாக்கு வழங்கப்பட்டது. பூனேவின் மிகப்பெரிய வாடாக்களில் ரஸ்தா பேட்டில் அமைந்துள்ள "ராஸ்தா வாடா"வும் ஒன்றாகும்.

ராஸ்தாகளின் குதிரைப்படை

ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளை உள்ளடக்கிய படையை ராஸ்தாகள் பராமரித்து வந்தனர். அவர்களின் படையில் பல வேறுப்பட்ட தெய்வங்கள் மீது நம்பிக்கையுடையவர்கள் இருந்தனர். வழிபாட்டிற்காக அவர்கள் பல கோவில்களைக் கட்டியிருந்தார்கள். ராஸ்தா வாடா அருகே பல கோயில்கள் கட்டப்பட்டிருந்தாலும், படைகள் முகாமிட்டிருந்த இடங்களில் பட்டாளக்காரர்கள் தங்கள் இஷ்ட தெய்வதிற்கு கோயில் கட்டி அன்றாட பூஜைகள் செய்துவந்தனர். அப்படி ராஸ்தாவின் ஒட்டக படையை சேர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்தில் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு கட்டிய ஒரு கோயில் இன்று மிகவும் பிரபலமாக உள்ளது.

ஊன்டே மாருதி மந்திர்

ஊன்டே மாருதி, ராஸ்தா பேட், பூனே, மகாராஷ்டிரா சர்தார் மூட்லியர் சாலையின் மத்தியில் அமைந்துள்ளது இந்த கோயில். [கூகிள் வரைபடத்தில் இது முதலியார் சாலை]. மூட்லியர்கள் பூனேவின் பிரபலமான மக்கள் மற்றும் 1912 ஆம் ஆண்டில் கே.இ.எம். மருத்துவமனைக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கியவர் சர்தார் மூட்லியர்.

ராஸ்தா பேட்டின் வடக்கு நுழைவாயிலில் வலதுபுறம் ராஸ்தா பேட்டின் பாதுகாவலரான ஸ்ரீ மாருதியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மேலே கூறியது போல் ராஸ்தாகளின் ஒட்டகப் படையினர் தங்கியிருந்த இடம் இது என்றும் மற்றும் அவர்கள் பூஜை செய்வதற்காக தங்கள் இஷ்ட தெய்வமான ஸ்ரீ மாருதியை இங்கு நிறுவினார் என்றும் நம்பப்படுகிறது. இன்று இது ஊன்டே மாருதி ஆக மாறிவிட்டது, ஊன்ட் [उंट] மராத்தியில் ஒட்டகம் என்று பொருள்படும். காலப்போக்கில் ஸ்ரீ மாருதியின் பல பக்தர்கள் தங்களால் ஆனதை உதவிகள் பல செய்து கோயிலை வளர்த்தனர். ராஸ்தாகளின் ஒட்டகப்படையினர்கள் நிறுவிய ஸ்ரீ மாருதி இன்று ஒரு பெரிய கோவிலாக உள்ளது. இன்று இந்த கோவிலை உள்ளூர்வாசிகள் குழு நிர்வகிக்கிறது. அனைத்து பண்டிகைகளும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றது.

ஊன்டே மாருதி:

ஸ்ரீ மாருதியின் மூர்த்தி சுமார் ஒன்பது அடி உயரம் இருப்பார். ஸ்ரீ மாருதி மேற்கு நோக்கி இருக்கிறார். இறைவன் தனது வலது முழங்காலை தரையில் மண்டியிட்டு இருப்பதைக் காணலாம். மாருதியின் இடது திருப்பாதம் தரையில் உறுதியாக ஊன்றி உள்ளார். மாருதியின் ’அபான முத்திரை’ காட்டும் இடது திருகரம் இடது கால்முட்டியில் வைத்துள்ளார். அவரது வலது திருகரம் ’அபய முத்திரை’ காட்டி பக்தர்களை பயமின்றி இருக்க சொல்கிறார் - உங்களைப் பாதுகாக்க நான் இங்கே இருக்கிறேன். அவரது வால் அவரது இடது திருபதத்தின் அருகில் ஒரு சிறிய வளைவுடன் காணப்படுகிறது.

மாருதியின் கவர்ச்சியான பிரகாசமான கண்கள் அவருடைய பக்தர்களுக்கு ஆசீகளை வழங்குகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஊன்டே மாருதி மந்திர், ராஸ்தா பேத், பூனே, மகாராஷ்டிரா

 

அனுபவம்
இறைவனுக்கு முன்னால் நின்று, இறைவனின் ஒளிரும் கண்களைப் பார்த்து, பிரார்த்தனை செய்தால் பக்தரிடம் இருக்கும் நற்குணங்களை முன் கொணர்ந்து நிறுத்தி அவரை உயர் நிலை அடையச்செய்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஏப்ரல் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+