home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம், தில்லை விளாகம்,

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்


திருச்சித்ரகூடம் எது?

சைவர்களுடைய ’பாடல் பெற்ற ஸ்தல’ங்களில் முதலிடம் பெற்றுள்ள சிதம்பரத்தை வைஷ்ணவர்களும் தங்களுடைய நூற்றியெட்டு
’திவ்யதேசங்களில் ஒன்றான ’தில்லை நகர் திருச்சித்ர கூடம்’ என்கிறார்கள். பரமேஸ்வரன் நடராஜாவாக ஏக ஆட்டம் ஆடும் அந்த க்ஷேத்ரத்திலே, அந்த ஆலயத்திலேயே மஹா மாயாவியான மஹாவிஷ்ணு கோவிந்தராஜா என்ற பெயரில் ஒரே தூக்கமாகத் தூங்கிக் கொண்டே ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறார்! இந்த ஸந்நதிதான் திருமங்கையாழ்வாரும் குலசேகரப் பெருமாளும் மங்களாசாஸனம் செய்துள்ள தில்லை சித்ரகூடம் என்கிறார்கள்.

தில்லை விளாகம் ராமர் கோயில் Thillaivilagam Kothandaramar Temple ஆனால் ஸ்வாமிநாதையருக்கோ [உ.வே.சுவாமிநாத அய்யர்] இந்த திவ்யதேசம் சிதம்பரம் இல்லை என்று அபிப்பிராயம். ’சித்ரகூடம்’ என்பது பெயரானால் அதிலுள்ள மூர்த்தி ராமசந்திர மூர்த்தியாகத்தான் இருக்கணும்? பேர் சித்ரகூடம், பெருமாள் கோவிந்தராஜா என்றால் பொருத்தகே இல்லையே’ என்று அவருக்கு யோஜனை. சேஷ சயனம் செய்யும் மஹாவிஷ்ணுவை கோவிந்தராஜா என்று கிருஷ்ணராக ஆக்குவது மட்டும் ஸரியா என்றால், ஸரிதான். ஏனென்றால் கிருஷ்ணர் பூர்ணாவதாரம் என்ற முறையிலே அவரையும் மஹா விஷ்ணுவையும் ஒருவராகவே பாவிப்பது வழக்கந்தான். திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கே “கோவிந்தா” தானே போடுகிறோம்?

ஐயரின் கவனத்தில் பதிந்த இன்னொரு விஷயம், சித்ரகூடத்தைப் பாடியுள்ள குலசேகரர் தம்முடைய பெருமாள் திருமொழியின் அந்தப் பாசுரத்தில் முழுக்க ராமாயண ஸம்பவங்களையே சொல்லிக் கொண்டு போவதாகும். ஆனபடியால் ராமரை மூலவராகக் கொண்டு ராமக்ஷேத்ரமாகிய வேறேதோ தில்லைச் சித்ரகூடத்தைத் தான் சிதம்பரமாக நினைக்கும் வழக்கம் வந்து விட்டதா என்று ஐயர் ஆராய்ந்து கொண்டிருந்தார்.

ஒரு எதிர் கேள்வி கேட்கலாம். “குலசேகரர் ராமனையே இஷ்ட மூர்த்தியாக உபாஸித்தவர். பூர்வத்தில் இவர் சேர நாட்டு அரசராகத் திருவஞ்சிக்களத்திலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ராமாயண உபந்நியாஸம் நடந்து, அதிலே ’ஜனஸ்தானத்திலிருந்த பதிநாலாயிரம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்வதற்காக ராமர் தனி மனிதராகப் புறப்பட்டார்’ என்ற இடம் வந்தவுடன் இவர் பக்திப் பரவசத்தில் கால பேதங்களை மறந்துவிட்டார். ’என் ஸ்வாமி தனித்துப் போவதா? இதோ என் ஸேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூட போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார். அவருக்கு ’அந்தா ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌஸல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்கு தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால் கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது?” என்று கேட்கலாம்.

இதிலே எனக்கு ஒரு கட்சியும் இல்லை. ஸ்வாமிநாதையர் கருத்தைச் சொல்ல மட்டும் வந்தேன். அவர் அபிப்பிராயப்படி, திருக்கண்ணபுரத்தில் பாடிய மாதிரி ஜெனரலாக – பொதுப்படையாக இல்லாமல், சித்ரகூடத்தில் பாடியபோது,

தில்லை நகர் திருச்சித்ர கூடத்தன்னுள்
திறல்விளக்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை

என்று, இது ராமனின் மூர்த்தி இருக்கும் ஸந்நிதிதான் என்று திட்டமாகக் குறிப்பிட்டே காட்டியிருக்கிறது.

தில்லை விளாகம் : ராம விக்ரஹச் சிறப்பு

இவருடைய அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தும் ஒரு விஷயம் கேள்விப்பட்டார். ’தில்லை விளாகம்’ என்று சிதம்பரத்தின் பேர் கொண்டதாக, தஞ்சாவூர் ஜில்லா திருத்துறைப் பூண்டி தாலுக்காவில் உள்ள கிராமத்தில் நூறு வருஷம் முந்தி ஸீதா-லக்ஷ்மண-ஹநுமத் ஸமேத ராமசந்திர மூர்த்தி விக்ரஹமும், சிவகாமஸுந்தரி ஸமேத ஸ்ரீமத நடராஜ விக்ரஹமும் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டார். இவரும் உடனே உண்மையைக் கண்டெடுக்க ஆராய்ச்சியால் தோண்டினார்’. முடிவாக இந்த தில்லை விளாகம் தான் திருச்சித்ரகூடம் என்ற திவ்யதேசம் என்று தீர்மானம் பண்ணினார். ’உபய வேதாந்தி’யாக இல்லாவிட்டாலும், ’உபய’த்தில் ஒன்றான் திவ்ய ப்ரபந்தப் ’பெருமாள் திருமொழி’யில் இவர் செலுத்திய ஈடுபாடு பலனளித்து விட்டது!

’தில்லை’ விளாகம் என்று இன்று ஊர் பேரே இருப்பதால் இது ஆதியில் ’தில்லைச் சித்ரகூடம்’ என்று பேர் பெற்றிருக்கக் கூடும்தான். தில்லைக்குரிய நடராஜாவும், சித்ரகூடத்துக்கு உரிய ராமரும் சேர்ந்து இருக்கும் இந்த ஊருக்குத்தானே இந்தப் பேர் ரொம்பப் பொருத்தம்?

இங்கே நடராஜ மூர்த்தி அகப்பட்டது எவ்விடத்திலென்றால், ’அம்பல ஊருணி’ என்ற குளத்தருகில். மறுபடியும் தில்லைச் சிற்றம்பல ஸம்பந்தம் வந்துவிடுகிறது! அதாவது பூர்வகாலத்தில் இது இரண்டாவது சிதம்பரமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். இப்போதும் திருவெண்காட்டை ’ஆதி’ சிதம்பரம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிதம்பர தீக்ஷிதர் மூவாயிரவரில் ஒரு பிரிவினர் வெகு காலம் முன்பு தில்லை விளாகத்திலும் பூஜகர்களாக இருந்திருக்கலாம். அதனாலேயே குலசேகரப் பெருமாள் ’அந்தணர்க ளொருமூவா யிர்வரேத்த’ என்று பாடியிருக்கலாம்!

ஜாம்பவான் ஓடை MUTHUPETTAI (JAMBAVANODAI) தில்லை விளாக்த்துக்கு உள்ள ராம ஸம்பந்தம் ரொம்ப ஸ்வாரஸ்யம்! விக்ரஹம் கிடைத்த பிறகு கட்டிய கோவிலுக்கு புஷ்கரிணியாக இப்போது ’ராம தீர்த்தம்’ எனப்படுவதற்கு ரொம்ப காலமாக ’நல்ல பிள்ளை பெற்றாள் குளம்’ என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. யார் அந்த ’நல்ல பிள்ளை பெற்றாள்’ என்றால் கௌஸல்யா தேவிதான். “கௌஸல்யா ஸுப்ரஜா’ என்ற விச்வாமித்ரர் வாக்கால் இன்றைக்கும் விச்வ முழுவதும் ஸ்துதிக்கப் படுபவன் ராமன். ’ஸுப்ரஜா’வுக்கு நேர்தமிழ்தான் ’நல்ல பிள்ளை’ இவ்வூருக்குப் பக்கத்தில் ’கழுவன் காடு’ இருக்கிறது-ஜடாயுக் கழகை நினைவுப்படுத்துவதாக. ’ஜாம்பவான் ஓடை’யும் இருக்கிறது. ஏழெட்டு மைலில் ’தம்பிக் கோட்டை’- லக்ஷ்மணன் பேரில் ஏற்பட்டது என்கிறார்கள். அப்புறம் ஆறேழு மைல் போனால் அதிராம்பட்டிணம் என்கிற அதிவீர ராமபட்டினம்.

இன்றைக்கு தெய்விகமான ரூப ஸௌந்தர்யத்துக்குப் பேர் போன விக்ரஹங்களாக ஒரு பத்துப் பதினைந்தை முதல் rankகள் கொடுத்துச் சொன்னால் அதில் தில்லை விளாகம் ராமரும் ஒருத்தராக இருப்பார். ஐந்தடி உயரத்துக்கு அந்தசந்தமாய் ஸர்வாங்க ஸுந்தரமாய் நிற்கும் ராமசந்திர மூர்த்தியை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நரம்புகள், ரேகைகள் கூடத் தெரிகிற மாதிரி அப்படியொரு நுட்பமான சிற்ப வேலைப்பாடு. ’வேலைப்பாடு’ என்று சொல்வது கூடத் தப்பு – சிற்பி கை வழியாக ஸ்ரீராமனே வந்திருக்கிறானென்று தான் சொல்லணும். இதிலேயுள்ள அநேக விசேஷங்களில் ஒன்று ’ராம சரம்’ என்கிற அம்பு மற்ற ஸ்தலங்களிலுள்ளது போல், கூர்முனைக் கோடியிலுள்ள தலைப்புற நுனியில் மொட்டையாகவோ, பிறை வடிவமாகவோ முடியாமல் ஒரு முக்கோணத்தைப் போல் முடிந்திருப்பது. இன்னொரு விசேஷம், இடதுகை மணிக்கட்டில் கௌஸல்யா தேவி-நல்ல பிள்ளை பெற்றாள்-அந்த நல்ல பிள்ளையின் வனவாஸத்தில் அதற்குத் தீங்குள் வராமலிருக்க வேண்டும் என்று கட்டிய ரக்ஷை காணப்படுவது.

ஸீதை, லக்ஷ்மணர், ஹநுமார் எல்லாமே நெஞ்சைக் கவர்கிற மூர்த்திகள். ஹநுமாரிடம் சிறப்பு அம்சம், ’திறல் விளங்கு மாருதி’ என்று ஆழ்வார் சொன்னது வீரத்தின் திறலாக இல்லாமல் பணிவின் திறலாக, பக்தியின் சக்தியாக வடித்தெடுக்கப் பட்டிருப்பதாகும். எங்கேயுமே யஜமானர் முன்பு அவர் அஸம்பாவிதமாக வீரத்தைக் காட்டிக் கொண்டு நிற்பதில்லை என்றாலும் இங்கே அடக்கத்திலும் அடக்கமாக இடது கையை உடம்பைச் சேர ஒட்டித் தொடையில் வைத்துக் கொண்டு வலது கையால் வாயைப் பொத்திக் கொண்டு நிற்கிறார்.

பரத, சத்ருக்னர்களோடு பட்டாபிஷிக்தராக அமர்ந்த திருக்கோலத்தில் இல்லாமல், இப்படி ஸீதா, லக்ஷ்மண ஸமேதராக மாத்திரம் ராமர் நின்ற திருக்கோலத்தில் விளங்குகிற ஆலயங்களை ’சித்ரகூடம்’ என்று சொல்வது வழக்கம். வனவாஸத்தில் ஸீதா லக்ஷ்மணர்களோடு மாத்திரம் ராமர் இருந்ததில் முக்யமான இரண்டு இடங்கள் சித்ரகூடமும், பஞ்சவடியம் ஆகும். ஆனால் பஞ்சவடியில் ஸீதையின் அபஹரணம் நடந்ததால் அதைச் சொல்லாமல், இப்படி. மூவராக உள்ள ஸந்நிதியைச் சித்ரகூடம் என்றே சொல்கிறார்கள். சித்ரகூடத்தில் ஆஞ்ஜநேயர் ராமரிடம் வந்து சேரவில்லைதான். ஆனால் நாம் வழிபடும்போது ஒரு தெய்வத்தோடு அதன் பிரதம கிங்கரரையும் சேர்த்துத்தான் ஆராதிக்க வேண்டும். நந்திகேச்வரர் இல்லாமல் பரமேச்வரனையும், கருடாழ்வார் இல்லாமல் மஹாவிஷ்ணுவையும், ஆஞ்ஜநேயர் இல்லாமல் ராமரையும் பூஜிப்பதற்கில்லை என்பதாலேயே இங்கே ஆஞ்ஜநேயரும் காட்சி கொடுக்கிறார்.

ஆலயங்கள் எடுத்தவர்கள்

கண்டெடுத்த இந்த ராமர் ’ஸெட்’டுக்குப் புதிதாகக் கோயில் கட்டி வைத்ததில் இன்னொரு பாட்டி ஸம்பந்தம் வருகிறது. இவன் ஒரு ஸுமங்கலிப் பாட்டி. கோபால க்ருஷ்ணையர் என்ற என்ஜினீயரின் பத்தினி. தில்லை விளாகத்தில் ராம மூர்த்திக்குக் கோயில் கட்டுவதற்கென்று அறுபதினாயிரம் ரூபாய் எடுத்து வைத்தவள்- அல்லது பதியை எடுத்து வைக்கச் சொன்னவள்- அவள் தான். நூறு வருஷம் முந்தி அறுபதினாயிரம் என்றால் அது இன்று எத்தனையோ லக்ஷம்.

எவ்வளவு தூரம் வாஸ்தவமோ, இதைப்பற்றி இன்னொன்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, அந்த அம்மாள், தர்மவதி, தாராளமாக அறுபதினாயிரம் தரணும் என்று புருஷரிடம் சொல்லி விட்டு ஸுமங்கலியாக ராமசரணாரவிந்தத்தை அடைந்து விட்டாளாம். அப்புறம் பத்திரம் எழுதும்போது அவள் பர்த்தாவுக்கு அவ்வளவு மனஸ் வராமல் ஆறாயிரம் கொடுத்தால் போதாதா என்று தோன்றியதாம். அப்படியே எழுத ஆரம்பித்தாராம். ’எண்ணால்’ ’எழுத்தால்’ என்று இரண்டு விதமாகத் தொகையைக் குறிப்பிட வேண்டுமல்லவா? முதலில் ’எண்ணால்’ 6000 என்று எழுதப் போனவர் தம்மையறியாமல் மூன்று ஸைபர்களுக்கு அப்புறம் நாலாவதாக இன்னொரு ஸைபரும் போட்டு விட்டாராம். உடனே கண்டு கொண்டார். பத்து மடங்கு ஜாஸ்தியாக பார்யாள் விரும்பிய தொகையையே போட்டு விட்டோமென்று. ஆனாலும் மனஸிலே என்னவோ ஒன்று தைத்து, ’எழுதியதை அடித்து மாற்ற வேண்டாம்; அவளுடைய பக்தியின் ஸூக்ஷ்ம சக்தியும் ராமசந்திர மூர்த்தியின் பிரபாவமுந்தான் நம்மை இப்படி எழுதப் பண்ணியிருக்கிறது’ என்று தெளிவு ஏற்பட்டு, அறுபதினாயிரம் ரூபாயே கொடுத்துக் கோயிலைக் கட்டினாராம். இதற்குச் சில வருஷங்களுக்குப் பிறகு, யாரோ குடியானவன் அம்பலவூருணி அருகில் வெட்டின போது தில்லை விளாகத்துக்கு அந்த பேர் ஏற்படக் காரணமான நடராஜாவின் திவ்யமான பெரிய மூர்த்தி அம்பாளோடு கண்டெடுக்கப்பட்டது. விஷயம் பெரி. நா. மெ. கண. குடும்பத்து நாட்டுக் கோட்டைப் புண்யவானுக்குத் தெரிந்தது. உடனே அவர் நடராஜ மூர்த்திக்கே உரியதான ’ஸபை’ என்கிற அமைப்பில் கோயில் கட்டினார்.

ராமர் ஸெட், நடராஜா ஸெட் ஆகிய இரண்டுவகை விக்ரஹங்களும் ஒரே அமைப்பில் இருப்பதைக் கொண்டும், மற்ற தடயங்கள், ஊசு-அநுமானங்களிலிருந்தும் சிதம்பரத்தில் போலவே இங்கேயும் ஈச்வரன் நடராஜா, பெருமாள் ராமர் ஆகிய இருவர் ஸந்நிகளும் பக்கத்தில் பக்கத்தில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றியதால் அவ்வாறே ஆலய நிர்மானம் செய்யப்பட்டது.

ஐயரின் ஆராய்ச்சிக்கு அப்புறம் தில்லை விளாகம் ரொம்ப பிரஸித்தி பெற்றுவிட்டது. இரண்டு மூர்த்திகளுக்குள் சிதம்பரத்தில் ஈச்வரன் – நடராஜா – முக்யஸ்தராக இருப்பதற்கு ஈடு செய்கிறாற்போல, இங்கே பெருமாள் – ராமர் – முக்யம் பெற்று அடியார்களை ஏராளமாக ஆகர்ஷிக்கிறார்.


= = ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர. = =

பி.கு. : 1. ஸ்ரீ ராம விக்ரஹம் 1862-லும், நடராஜ விக்ரஹம் 1892லும் கண்டெடுக்கப்பட்டன.
1905ல் லால்குடி கோபால க்ருஷ்ணயரால்
கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1913ல் குடமுழுக்கு நடைப்பெற்றது
2. மேலே குறிப்பிட்டுள்ள குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திரு மொழி
10ம் திரு மொழி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
751 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்
றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 10. 11
குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " தில்லை விளாகம் ராமர் கோயில். "

 

முதல் பதிப்பு ஆகஸ்ட் 2011
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020

 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+