home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஹனுமந்தராயன் கோயில், நொய்யல் நதிக் கரை, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு


ஸ்ரீ ஹனுமந்தராயன் கோயில், நொய்யல் நதிக் கரை, பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


பேரூர் கோயம்புத்தூர்

பேரூர் கோவையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இன்றும் இது ஒரு எளிய கிராமமாகும், இங்கு புகழ்பெற்ற பட்டீஸ்வரர் சிவன் திருக்கோயில் அமைந்துள்ளது. முக்கியமாக இது ஒரு விவசாய கிராமமாகும், அங்கு கரும்பு, தேங்காய் மற்றும் வாழைப்பழம் பயிரிடப்படுகின்றன. கோயம்புத்தூரிலிருந்து பேரூருக்கு தென்னந்தோப்புகள் வழியாக பயணம் செய்தால், நாம் சொர்க்கத்தில் இருப்பது பேன்ற பிரமை ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.

இது ஒரு கிராமமாகத் தெரிந்தாலும், இந்த இடத்திற்கு தமிழில் பேரூர் என்ற பெயர் கிடைத்தது “பேர்+ஊர்” - பேரூர். ‘பேர்’ என்றால் பெரிய, பெரியது மற்றும் ‘ஊர்’ என்றால் நகரம் அல்லது குடியேற்றம் என்று பொருள். எனவே இந்த இடம் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு முறை ஒரு பெரிய நகரமாக இருந்தது என்று சொல்லாமல் செல்கிறது.

மனித குடியேற்றங்கள் நதிகளின் கரையில் செய்யப்படுவது வழக்கம், அதேபோல் தான் பேரூரில் குடியேற்றமும் துவங்கி உள்ளது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது, எனவே இந்த இடம் விவசாய பொருட்கள் நிறைந்ததாகவும், நடவடிக்கைகளில் சலசலப்பாகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை. இந்த ஆற்றின் சங்ககாலப் பெயர் காஞ்சியாறு என்பதாகும், நதி கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்னும் இடத்தில் காவேரியுடன் இணைகிறது, இன்று நதி இவ்வூரின் பெயரை கொண்டு நொய்யல் என்று அழைக்கப்படுகிறது.

கற்கால யுகத்திலிருந்து இது ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்தது என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையினர் மேற்பரப்பு சேகரிப்பு கள ஆராய்ச்சியின் போது பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு கை கோடாரி கண்டுக்கப்பட்டது.

நொய்யல், பேரூர் மற்றும் கோவை

நொய்யல் நதி கோயம்புத்தூர் நகரம் ஒரு காலத்தில் நொய்யல் நதி மற்றும் அதன் கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் நதிகளால் சூழப்பட்டிருந்தது. நொய்யல் நதி மற்றும் அதன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஏரிகள் மற்றும் கால்வாய் அமைப்பு, முதலில் சாளுக்கிய சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, இது அக்காலத்தில் ஒரு ஆற்றல்மிகு அமைப்பாக இருந்தது, இது நீர் போக்குவரத்துக்கு பயன்பட்டது, நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் நிலையான நிலத்தடி நீர் மட்டங்களை பராமரித்தது. நொய்யல் ஆற்றில் இருந்து உபரி நீர் கால்வாய்களில் வழி ஏரிகளில் செலுத்தப்பட்டு, தேவையற்ற வெள்ளத்தைத் தடுத்தது. நிலத்தடி நீரை நிலையான அளவில் பராமரிக்க ஏரிகள், குளங்கள் ஒரு முக்கிய காரணியாக இருந்தன.

கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள நொய்யலின் கரையில் உள்ள இடங்கள் ரோமானிய வணிக பாதையின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது, கிழக்கு மற்றும் மத்திய கிழக்கில் ரோம் உடனான வர்த்தகம் முதலாம் நூற்றாண்டிலேயே நடைமுறையில் இருந்துள்ளது. நொய்யலின் கரையில் கோயம்புத்தூர் அருகே வெள்ளலூரில் அதிக அளவு ரோமானிய நாணயங்கள் தோண்டப்பட்டதில் இருந்து இது தெளிவாகிறது.

பேரூர் மற்றும் அதன் கோயில்கள்

சிவபெருமானுக்கான கோயில் சங்க காலத்தைச் சேர்ந்த கரிககால சோழனால் கட்டப்பட்டது. பேரூரில் பட்டீஸ்வரரின் வழிபாடு இருந்ததையும், பட்டீஸ்வரருக்கான கோயில் இந்த மாபெரும் சோழ ராஜாவால் கட்டப்பட்டதிருந்து காணலாம்.

கி.பி 12 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை கோயம்புத்தூரின் தலைநகராக பேரூர் இருந்தது. கேரளாவை ஆட்சி செய்த தனது நண்பரான சேரமான் பெருமாள் என்ற மன்னரை சந்திக்க வந்தபோது சுந்தர் பட்டீஸ்வரரைப் புகழ்ந்து பாடியதாக இலக்கிய சான்றுகள் காட்டுகின்றன. கோயிலின் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் கி.பி 10 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையின் ஒரு பதிவாகும். கோவில்கள் ஒரு மருத்துவமனை, வங்கி, கல்வி மையம், ஒரு நீதிமன்றம் மற்றும் ஒரு இராணுவ முகாக சமயங்களில் பயண்பட்டுள்ளது. இக்கோயில் இதற்கு விதிவிலக்கல்ல.

ராயாகளும் பேரூரும்

இந்த இடம் ஆரம்பத்தில் விஜயநகர பேரரசர்களின் ஆட்சியில் இருந்தது. அவர்களுக்கு பின்னர் மதுரை நாயக்கர்கள் ஆளுகைக்கீழ் இருந்தது. இக்காலகட்டத்தில் கலைநுணுக்கங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள் ஆகியவற்றை இக்கோயிலில் சேர்ப்பதன் மூலம் மகத்தான கலைப் புதையலை இவர்கள் வழங்கியுள்ளனர். இன்று இந்த கலை அம்சம் நிறைந்த சிற்ப தூண்கள் விஜயநகர மற்றும் நாயகர்கள் காலத்தின் நினைவுச்சின்ன படைப்பாக பார்க்கப்படுகின்றது.

இந்த பிராந்தியத்திலிருக்கும் சனாதன தர்மத்தை பரப்புகின்ற மடங்களுக்கும், மற்றும் கோயில்களுக்கும் ஸ்ரீ அச்சுதாதேவ ராயர் தானங்களும் தர்மங்களும் வழங்கியிருக்கிறார்.

ராயாகள், நாயக்கர்கள் மற்றும் மைசூர் ஆட்சியாளர்கள் அனைவரும் தீவிர ஸ்ரீ ஹனுமார் பக்தர்கள் என்பதும், அவர்களின் காலத்தில் இந்த பிராந்தியத்தில் ஸ்ரீ ஹனுமாருக்காக பல கோவில்கள் வந்திருந்தன என்பதும் இரகசியமல்ல. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள நொய்யல் ஆற்றின் கரையில் ஸ்ரீ அஞ்சநேயாவுக்கு நல்ல கோவில் இவர்கள் காலத்தில் வந்துள்ளது என்பது ஆச்சரியம் இல்லை.

பேரூர் நொய்யல் கரையில் உள்ள அனுமன் கோயில்

நொய்யல் நதிக்கரையில் பட்டீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில், ஸ்ரீ அனுமனுக்கு ஒரு கோயில் உள்ளது. இந்த கோயில் விஜயநகர ராயாக்கள் காலத்திலிருந்து உள்ளது. ஆற்றின் கரையில் அல்லது குளக்கரையில் ஸ்ரீ வினாயகருக்கும் ஸ்ரீ ஹனுமனுக்கும் கோயில் கட்டுவது என்கிற நடைமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. ஆற்றில் குளித்தபின் மக்கள் ஸ்ரீ அனுமனுக்கு பிரார்த்தனை செய்வது அக்கால வழக்கம். அனுமார் கோயில் கிழக்கு நோக்கியும் விசாலமானதாகவும் உள்ளது. இந்த கோவிலில் மாத்வ சம்பிரதாயத்தின்படி முன்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் ‘ஸ்ரீ ஹனுமந்தாரயன் கோவில்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ ஹனுமந்தராயர்

ஸ்ரீ ஹனுமந்தராயர், நொய்யல் நதி கரை, பேரூர், கோயம்புத்தூர் மூர்த்தம் ஏழு அடி உயரம் உடையது. மூர்த்தம் மற்றும் திருவாச்சி இரண்டும் ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

அனுமார் நிற்கும் தோரணையில் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். நிற்கும் தோரணையின் அழகும், இறைவனின் சீரிய நளினமும் பக்தனின் கண்களுக்கு விருந்து. அனுமாரிடமிருந்து கண்களை எடுக்க பக்தர் விரும்பமாட்டார்கள், தோரணையில் அத்தகைய வசீகரம். இது விவரிப்பதற்கு அப்பாற்பட்டது.

கணுக்கால்களை அலங்கரிக்கும் தண்டையுடன் இருக்கும் இறைவனின் தாமரை பாதங்கள் தரையில் உறுதியாக வேரூன்றியுள்ளது. இடது திருபாதம் அழகாக வளைந்தும், வலது திருபாதம் நேராகவும் உறுதியாகவும் இருக்கிறது, இது அவரின் கீழ் இடுப்பை வலதுபுறமாக சற்றே வளைக்க, தோரணையில் அழகை சேர்க்கின்றது. அவரது கைகளில் அவர் மணிக்கட்டில் கங்கணம் மற்றும் கையில் கேயூரம் அணிந்திருக்கிறார். அவரது இடது கை அழகாக வளைந்து இடது தொடையில் ஓன்றியிருக்கிறது. அதே நேரத்தில் சௌகந்திகா பூவின் தண்டினைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவரது வலது திருகரம் அபய முத்திரையுடன் உயர்ந்து காணப்படுகிறது, பக்தருக்கு அச்சமற்று இருக்க உறுதியளிக்கிறது. அவரது வால் அவரது வலது திருகரத்தின் பின்புறத்தில் உயர்ந்து தலைக்கு மேலே ஒரு வளைவுடன் காணப்படுகிறது. வாலின் முடிவில் அழகாக சிறிய மணி கட்டப்பட்டுள்ளது. இறைவன் தனது கழுத்தில் மூன்று மாலைகளை அணிந்துள்ளார், அவற்றில் ஒன்று பதக்கத்தைக் கொண்டுள்ளது. இறைவனின் முகம் நளினமாக மற்றும் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறதாகவும் உள்ளது. அவரது ‘கோரை பல்’ பக்தர்களுக்கு ‘அதர்மத்தை’ ஒழிப்பதற்கான திண்மையை உறுதிப்படுத்துகிறது. அவர் காதில் குண்டலம் அணிந்துள்ளார், அது நீளமாகவும் மற்றும் தோள்களைத் தொட்டுக் கொண்டுமுள்ளது. அவரது அடர்த்தியான கேசம் அழகாக சீவி வாரப்பட்டுள்ளது, அதில் ஒரு சிறிய பகுதி தலையின் பக்கங்களில் பாய்கின்றது. அனுமார் நேர்பார்வையில் காட்சியளிக்கிறார். இறைவனின் கண் பார்வை பக்தர்களை நேரடியாக ஆசீர்வதிக்கின்றது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     பட்டீஸ்வரர் கோயில், பேரூர், கோவை

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமந்தராய சுவாமி தனது பக்தர்களுக்கு அச்சமின்மை, அதர்மத்தின் களை விலக்கும் வலிமை ஆகியவற்றை நம்க்களிபார். ஶ்ரீ ஹனுமந்தராயாவின் தரிசனத்திற்குப் பிறகு, பக்தர்கள் அவரிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வலிமையினால் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை பெருவார்கள், உணருவார்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஏப்ரல் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+