home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஸ்ரீ ஹனுமான், வேலூர், தமிழ்நாடு


ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஸ்ரீ ஹனுமான், வேலூர், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடம்

ஸ்ரீ சுவாமி ஹாதிராம்ஜி மடம் திருப்பதியில் மஹந்த் ஹாதிராம்ஜீ அவர்களால் நிறுவப்பட்டது. [திருமலை என்று குறிப்பாக கூறலாம்] சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது மடத்தின் தலைமைபீடமாக இருக்கிறது. மடம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது சரியாக தெரியவில்லை என்றாலும், நிறுவனர் ஸ்ரீ ஹாதிராம்ஜீ மகாராஜ் அரவீடு ராயர்கள் காலத்தின்போது மடம் ஒன்றை நிறுவினார் என்று நம்பப்படுகிறது. திருமலையை தலைமையாக கொண்ட இம்மடம் சென்னை, பம்பாய், பெங்களூரு சிட்டி, ஆந்திரா, திருப்பதி, அடோனி, தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் துணை கிளைகளை நிறுவியுள்ளார்கள். திருப்பதியில் பிரதான மடத்திலிருந்து இந்த கிளைகள் அனைத்தும் நிர்வகிக்கப்படுகின்றன. 1843ஆம் ஆண்டில், திருப்பதி கோவிலின் நிர்வாகமானது, இந்த மடத்திற்கு ஆங்கிலேயரால் வழங்கப்பட்டது. இந்த மடத்தின் மஹந்த்கள் ஆலயத்தின் தர்மகர்த்தாவாக, 1933 வரை கோவிலின் எல்லா விவகாரங்களை நிர்வகித்துள்ளனர்.

பைராஹி/பைராகி

ஸ்ரீ ஹாதிராம்ஜீ மடத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால், பைராஹி என்பவர் யார் என்று தெரிந்து கொள்வோமா? ஸ்ரீ ஹாதிராம்ஜீ மஹந்த் அவர்களும் ஒரு பைராகியே.

வைராஹி என்னும் சொல்லின் திரிபே பைராஹி அல்லது பைராகி என்பது. இது 'வைராகியத்துடன் வாழும் மக்கள்' என்று பொருள்படும் இது 'மோக்ஷம்' அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் நபர்களை குறிக்கிறது. இந்த மக்கள் 'மோக்ஷம்' அடைவதற்கான எந்த அங்கீகரிக்கப்பட்ட பாதையையும் பின்பற்றுவார்கள். 'மோக்ஷம்' அடைவதற்கான பல புனித க்ஷேத்திரங்களுக்கு பயணப்பட்டவர்கள் பலர் உள்ளனர். இந்த புனித பயணத்தின் ஒரு பகுதியாக தென் இந்தியாவுக்கு பயணம் செய்த இந்த புனிதர்களில் சிலர் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் குடியேற முடிவு செய்திருந்தனர். அவர்களில் சிலர், தங்கள் ஊர்களிலிருந்து வரும் மற்ற யாத்திரிகளுக்கு தங்கும் வசதி செய்து வைத்தனர். அவைகள் சத்திரங்கள் என்றோ அல்லது மடம் என்றோ அழைக்கப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட மடங்களில் அவர்கள் தாங்கள் கொண்டாடும் தெய்வத்தின் திருவுருவத்தை நிறுவினார்கள்.

அப்படி உருவான மடங்கள் தென் இந்தியாவில் பைராஹி மடம் அல்லது பைரகி மடம் என்று அழைக்கப்பட்டது. ஆரணி, காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் வேலூர் போன்ற இடங்களிலும், ஆந்திரா மற்றும் கார்டநாடகாவில் உள்ள பல இடங்களிலும் இம்மடங்களைப் பார்க்கலாம்.

ஸ்ரீ பாவாஜீ பைராகி

விஜயநகரத்தின் ராயர்கள் காலத்தில் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீராம பக்தரான ஒரு பைராஹி தென் இந்தியாவிற்கு புனித யாத்திரை சென்றிருந்தார். அவர் திருப்பதிக்கு வந்து, ஸ்ரீ வெங்கடாசலபதியை தரிசனம் செய்தபோது, ​​சில நாட்கள் தங்கினார். அவர் ஸ்ரீ வெங்கடாசலபதியை சேவிப்பதில் மகத்தான மகிழ்ச்சியை உணர்ந்தார், மேலும் அதிகம் நாட்கள் சேவிக்க இச்சை கொண்டார். மற்ற சேவார்த்திகளுக்கு பல விதத்தில் உதவிகள் புரிவதில் ஆனந்தம் அடைந்தார். சேவையில் கிடைத்த ஆனந்தம் அவருக்கு சேவை செய்வதில் ருசியை அதிகரித்தது.

வட இந்தியாவில் இருந்து வந்த பைரகி, பின்னர் திருமலையில் குடியேறினார். சுவாமி புஷ்கரிணியில் ஒரு நாளைக்கு மூன்று முறை புனித நீராடுவது அவரின் வழக்கமாக இருந்தது, மேலும் குளித்த பின் ஶ்ரீ வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது வழக்கமாயிற்று. மற்ற நேரங்களில் தனது 'ஆசிரமத்தில்' அவர் இறைவனின் புகழைப் பாடி, இறைவனை தியானித்தார்.

திருமலைக்கு வரும் மற்ற பக்தர்களுக்கு அவரும் அவரது கூட்டாளிகளும் உதவுவதில் கருத்தாக இருந்தார்கள். இறைவனின் பக்தர்களுக்கு சேவை செய்வது எந்த ஒரு பைராகியும் தனது கடமையாக நினைப்பார்கள். இந்த மடத்து பைராகிகளும் இதற்கு விதி விலக்கு இல்லை. பக்தர்கள் மத்தியில் கௌரவமும் மரியாதையும் அவருக்கு கிடைத்தது. மக்கள் அவரை மரியாதையுடன் 'பாவாஜி' என அழைக்கலானார்கள்.

பாவாஜி பகடை ஆட்ட நாடகம்

பாவாஜியுடன் பகடை ஆடும் திருப்பதி இறைவன் ஸ்ரீ வெங்கடாசலபதி அவருக்கு நெருக்கமாகவும், அவரது இதயத்திலும் இருப்பதாக பவஜி உணர்ந்தார். இரவில் அவர் தூங்க இயலாத போது அவர் பகடை விளையாடுவது வழக்கம். அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது, அதாவது தன்னுடன் இறைவன் வேங்கடாசலபதி பகடை விளையாடுவதாக கற்பனை செய்துக்கொள்ளுவார். அவர் இறைவனுக்காக தானே பகடை விளையாடுவார். ஒரு நாள் இரவு அவர் வழக்கம் போல் பகடை விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​யாரோ ஆசிரமத்தில் நுழைந்தார்கள். திடீரென்று சூழ்நிலை மாறிவிட்டது. வந்தவரின் தெய்வீக தோற்றத்தை கண்டு பாவாஜி ஆச்சரியமடைந்தார், அவரது முன்னிலையில் தன்னை இழந்தார். பாபாஜி வேங்கடாசலபதியே தன்னுடன் பகடை ஆட வந்துள்ளதாக பாவித்தார். வந்தவரும் பாவாஜியுடன் பகடை விளையாட ஆரம்பித்தார்.

இப்படி பகடை விளையாடும் பழக்கம் சில இரவுகளில் தொடர்ந்தது. வேங்கடாசலபதி, தனது பைரகி பக்தருக்கு வரம் கொடுப்பது என தீர்மானித்தார் போலும். எனவே அவர் அன்று இரவு பாவாஜியுடன் பகடை விளயாடி விட்டு கிளம்பும் முன் தனது பதக்கமாலையை பாவாஜியின் ஆஸ்ரமத்திலேயே விட்டுச் சென்றார்.

அடுத்த நாளன்று கோவிலின் அர்ச்சகர் இறைவனின் கழுத்தணி காணாமல் போனதைக் கவனித்தார், இந்த விஷயத்தை ஆலய அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அதே நேரத்தில் பாவாஜி அவரது இடத்தில் இறைவன் விட்டு சென்ற கழுத்தணியை கோயிலில் ஒப்படைக்க வந்தார். பைரகி அவர்கள் கழுத்தணியை திருடி விட்டதாக அங்குள்ளவர்கள் கூறிய போது, ​​பாவாஜி, இரவு நேரத்தில் தனது விடுதியில் என்ன நடந்தது என்பதைத் தெரிவித்தார். கோவில் அதிகாரிகள் அவரை நம்பவில்லை மற்றும் விவரத்தை ராயரின் [ஆரசர்] நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.

பாவாஜி ஸ்ரீ ஹாதிராம் பாவாஜி ஆனார்

பைராகி பாவாஜி ஹாதிராம்ஜி பைரகி சொன்னதை ராயார் [அரசர்] நம்பவில்லை. சிறை தண்டனை வழங்கிய ராயர், சிறைசாலையில் அடைக்கவும் செய்தார். அவரது சிறையில் கரும்பினால் நிறப்ப சொன்னார். விடியற்காலையுள் அவ்வளவு கரும்பையும் சாப்பிட வேண்டும் என்றும் கட்டளையிடார். அதன்படி பாவாஜி கரும்புடன் பலத்த காவலுடன் சிறை வைக்கப்பட்டார். தான் நிரபராதி என்பதை அறிந்த பாவாஜி இறைவனை தியானிக்க ஆரம்பித்தார். பிரகலாதனைக் காப்பாற்ற நரசிம்மராக வந்தது போல், இறைவன் ஒரு யானையாக வந்தார். அவரது பக்தர் தன்னை தியானம் செய்து கொண்டிருந்த பொழுது, யானையாக வந்த அவர் எல்லா கரும்புகளையும் விழுங்கினார். விடியற்காலை இறைவன் தனது பக்தனை தியானத்தில் இருந்து எழுப்பி, தனது விஸ்வரூப தரிசனத்தை அளித்தார்.

ராயரின் காவலாளிகள் விடியலில் சிறைசாலையில் இருந்து வெளியேறும் யானையையும் மற்றும் வெறுமையாக உள்ள சிறையையும் கண்டனர். செய்தி பரவியது மற்றும் என்ன நடந்தது என அரசர் உணர்ந்தார், பின்பு அரசர் பைராகி பாவாஜியை கௌரவித்தார். இந்த சம்பவம் பாவாஜியின் உண்மையான இறை பக்தியினை உலகிற்கு அறிய வைத்தது. மக்கள் அவரை ஸ்ரீ ஹாதிராம் பாவாஜி என்று அழைக்கலானார்கள், இப்பெயரால் அவர் அறியப்பட்டார். அவரது ஆசிரமம், ஸ்ரீ ஹாதிராம் பாவாஜி ஆசிரமம் ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம் மடம் என அறியப்பட்டது.

ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடம் வேலூர்

1843 ஆம் ஆண்டில், திருப்பதி கோவிலின் நிர்வாகம் ஆங்கிலேயரால் ஹாதிராம்ஜீ மடத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த மடத்தின் மஹந்த் ஆலயத்தின் தர்மகர்த்தாவாக இருந்து, 1933 வரை ஆலய நிர்வாகத்தின் விவகாரங்களை நிர்வகிக்கவும் செய்தனர். 1843 க்கு முன்பே, இந்த மடம் பல ஜனோபகரிகளால் சிறந்த தொண்டு செய்யும் நிறுவனம் என்ற நற்பெயரை பெற்றிருந்தது, ஜாதி மத வேறுபாடு இல்லாமல் பலரின் நற்மதிப்பையும் பெற்றிருந்தது. இந்த மடத்திற்கு அத்தகைய பெரிய கோவிலின் நிர்வாகத்தின் பொறுப்பை அப்போதைய பிரிட்டிஷ் ஏன் ஒப்படைத்தது என்பதற்கு இது ஒரு காரணம். மடத்திற்கு பல்வேறு தனி நபர்களும் மற்றும் ஆட்சியாளர்களால் இவர்களது சேவைகளை பார்த்து நன்கொடைகள் வழங்கினார்கள். காலப்போக்கில், மடத்தை தங்கள் சேவைகளை விரிவாக்கும் நோக்குடன் பாரதத்தின் பல்வேறு நகரங்களில் தங்கள் மடத்தை நிறுவ வேண்டியிருந்தது.

மடத்தின் அத்தகைய கிளை திறக்கப்பட்ட ஒரு இடம் வேலூர். தெற்கு மற்றும் வடக்கு ஆற்காடுகளில் இருந்து வரும் மக்களுக்கு இந்த கிளை மடம் ஒரு மையமாக செயல்பட்டு வந்தது. இவர்கள் மடம் எங்கு வைத்திருந்தாலும், திருப்பதி மடத்தின் தலைமை மஹந்தினால் கிளை மேலாளரின் விவகாரங்களை கையாள ஒரு பைராஹி தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பதி மஹந்தின் ஒப்புதலுடன் கிளை அலுவலகத்திற்கு கடமைகள் நிர்ணயக்க பட்டது. பொதுவாக மஹந்தின் ஒப்புதலின் பெயரில் உள்ளூர் கிளைகளில் தெய்வ திருஉருவம் நிறுவப்படும்.

அரச மரம்

ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடத்தின் ஸ்ரீ ஹனுமான், வேலூர், தமிழ்நாடு இந்திய துணை கண்டம், தென்மேற்கு சீனா மற்றும் இந்தோசீனாவிற்கு மட்டுமே காணபடுவது அரச மரம். இந்த மரம் மற்ற பெயர்களாலும் அறியப்படுகிறது: போதி மரம், அஸ்வத்தா விருக்ஷம், மற்றும் தமிழ் மொழியில் இது அரச மரம் எனப்படுகிறது.

பரதத்தில், சாதுகள் [சந்யாசிகள்] மறுபிறப்பு சுழற்சியில் இருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள புனிதமான அரச மரங்களுக்கு கீழே தியானம் செய்கிறார்கள். பொதுவாக மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை நினைத்து இவ்வரச மரத்தினை பிரதக்ஷணம் செய்வார்கள். இவ்வரச மரத்தின் வேர்களில் பிரம்மாவும், தண்டில் விஷ்ணுவும், மரத்தின் மேற்கிளைகளில் சிவனும் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே, "மரங்களின் அரசன்" என்று பொருள்படும் "விருக்ஷ ராஜா" என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் இது 'மரத்தின் ராஜா' என்று பொருள்படும் 'அரச மரம்' என்று அறியப்படுகிறது.

வேலூர் கிளையில் ஸ்ரீ ஹனுமான்

பைராஹி மடத்தின் நடைமுறையின்படி, இக்கிளையின் முதல் பைராஹி மஹந்தால் வேலூரில் ஸ்ரீ ஹனுமானை மடத்தில் நிறுவ பரிந்துரைக்கப்பட்டது. திருப்பதி பிரதான மஹந்தின் அனுமதியுடன், ஸ்ரீ ஹனுமானின் தெய்வ வழிபாடு இந்த மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிறுவியதன் சரியான ஆண்டு தெரியாத போதிலும், மடம் முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக வேலூரில் உள்ளது என்று கூறப்படுகிறது. பைரகி சன்யாசிகளின் நடைமுறையில் இருந்ததைப் போலவே ஹனுமான் விக்ரஹம் புனிதமான அரச மரத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.

வேலூர் ஸ்ரீ ஹாதிராம்ஜி ஸ்வாமி மடத்தின் ஸ்ரீ ஹனுமான்

இந்த மடத்தின் முக்கிய தெய்வமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் முதல் மஹந்தினால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயர் அரச மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஹனுமான் ஒரு எளிய தெய்வம், பக்தர்கள் தங்கள் முயற்சிகளில் உண்மையானவர்களாகவும், நேர்மையுடன் நடந்து கொள்ளுபவர்களாகவும் இருப்பதை ஊக்குவிப்பவர். இந்த க்ஷேத்திரத்தில் ஹனுமார் நேர்பார்வை உடைய மூர்த்தமாக, திருவாச்சியுடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஹனுமார் நூப்பூரம் மற்றும் தண்டை அணிந்துள்ள தனது தாமரைத் திருபாதங்களில் உருதியாக நிற்கிறார். அவரது உருதியாக நிற்க்கும் இந்த பாங்கு பக்தர்களை சுய நம்பிக்கையையும் மற்றும் நேர்மையாக முன்னேறுவதற்கும் கூறுகிறது. ஹனுமார் தனது இடது திருகரத்தில் கம்பீரமாக கதையை வைத்திருக்கிறார். ஹனுமாரின் வலது திருகரம் பக்தர்களுக்கு பயமின்மையை அளித்து, 'அபய முத்திரை’ யில் தோற்றமளிக்கிறது. இரண்டு கைகளிலும் இறைவன் கங்கணம் மற்றும் கேயூரம் அணிந்துள்ளார். அவரது நீண்ட வால் வளைந்து தலைக்கு பின்னால் செல்வது பக்தர்கள் நடைமுறையில் எப்படி வளைந்து கொடுக்க வேண்டும் என்பதை காட்டுவதாக கொள்ளலாம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ ஸ்வாமி ஹாதிராம்ஜீ மடம், வேலூர்

 

அனுபவம்
அர்ப்பணிப்பு, மற்றும் உள்ளன்புடன் மனித குலத்திற்கு சேவை செய்ய வருவோருக்கு இந்த க்ஷேத்திரத்து ஹனுமார் மிகுந்த ஊக்கத்தையும் வலிமையும் அருளினார். அவரை நாம் வணங்குவதால் நமக்கும் இந்நலம் தரும் குணங்கள் சித்திக்கும் என்பது தெளிவு.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: செப்டம்பர் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+