home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில், சாமுண்டி மலை, மைசூரு


ஸ்ரீ அஞ்சநேயர், சாமுண்டேஸ்வரி கோவில், மைசூர்

ஜீகே கௌசிக்


மைசூர்-மைசூரு

ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலின் ராஜகோபுரம், சாமுண்டி மலை, மைசூரு. கர்நாடக மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமான ‘மைசூர்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த இடம் அதிகாரப்பூர்வமாக மைசூரு என மறுபெயரிடப்பட்டது. இது முந்தைய மைசூர் மாநிலத்தின் தலைநகராக இருந்தது. இது தற்போதைய மாநில தலைநகரான பெங்களூருக்கு தென்மேற்கே சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமுண்டி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மைசூரு இதன் கலாச்சாரத்திற்கு மிகவும் பிரபலம் தவிர இது மாநிலத்தின் கலாச்சார தலைநகராக கொண்டாடப்படுகிறது. 

இவ்விடத்தின் பெயரான “மஹிஷுரு” என்பது மறுவி மைசூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அரக்கனால் ஆளப்பட்டது. சாமுண்டி மலையில் இருக்கும் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி தாயார் இவ்வரக்கனைக் கொன்று அவளது காலடியில் கொண்டு வந்தாள். இந்த இடம் மஹிஷாசுரரால் ஆளப்பட்டதால், இது ‘மகிஷாபுரா’ என்று அழைக்கப்படுகிறது, பின்னர் அது ‘மஹிசுரு’ ஆனது. இப்போது கூட மைசூரின் அரச குடும்பத்தினர் ‘மஹிஷுரு’ என்ற பெயரை தான் பயன்படுத்துகின்றனர். 

ஸ்ரீ சாமுண்டேஸ்வரி தாயாரின் தங்குமிடம் ‘சாமுண்டி மலைகள்’ என்றும், அம்மலை அடிவாரத்தில் அமைக்கப் பட்டிருக்கும் நகரம் ‘மஹிஷுரு’ என்றும் அழைக்கப்படுகிறது.  

மைசூரு உடையார்கள்

உடையார்கள் 1399 ஆம் ஆண்டில் ஒரு நிலப்பிரபுத்துவ அதிபராக விஜயநகர சாம்ராஜ்யத்தினரால் நிறுவப்பட்டனர், அன்று ஆரம்பித்த வம்சம் மைசூரை ஆண்டு ’மைசூர் இராஜ்யமாக’ வளர்ந்தது. 1399 மற்றும் 1947 க்கு இடையில் அந்த உடையார்கள் வம்சம் கிட்டத்தட்ட தடையின்றி மைசூரை ஆட்சி செய்தது; அவர்கள் ஆரம்பத்தில் விஜயநகர பேரரசின் (1399–1565) பிரதிநிதிகளாகவும், பின்னர் சுயாதீன ஆட்சியாளர்களாகவும் (1565–1761), பின்னர் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் (1761–1796) ஆகியோரின் கைப்பாவை ஆட்சியாளர்களாகவும், இறுதியாக பிரிட்டிஷ் கிரீடத்தின் கூட்டாளிகளாகவும் (1799-1947) ஆட்சி செய்தனர். இந்தியாவின் 5000 ஆண்டு வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ராஜ்யத்தை ஆண்ட ஒரே இந்திய அரச குடும்பம் மைசூரின் உடையார்கள் ஆவார்கள்.

ஶ்ரீசாமுண்டி தாயாரும் சாமுண்டி மலையும்

சாமுண்டி மலை மைசூருவிலிருந்து பதின்மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சாமுண்டி மலை உச்சியில் புகழ்பெற்ற ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. ‘சாமுண்டி’ என்பது ‘துர்கா’ அல்லது ‘சக்தியின்’ கடுமையான வடிவம். சண்டன், முண்டன் என்ற இரு அரக்கர்களை வதம் செய்தவள். எருமை தலை கொண்ட ’முண்டா’ அரக்கனை [மஹிஷ+அசுர - மஹிஷாசுரா] வதம் [மர்த்தினி] என்பதால் இச்க்ஷேத்திரத்தில் அம்மனுக்கு ஶ்ரீ மஹிஷாசுர மர்த்தினி - ஶ்ரீசாமுண்டீஸ்வரி என்று பெயர். 

அவள் மைசூர் மகாராஜாக்களின் குலதேவதை [புரவலர் தெய்வம்], அவள் மைசூரின் முதன்மை தெய்வமும் கூட. பல நூற்றாண்டுகளாக உடையார் வம்சத்தினர்கள் ஶ்ரீசாமுண்டேஸ்வரி தேவியை மிகுந்த பயபக்தியுடன் கொண்டாடி வருகின்றனர். 

மைசூரில் உள்ள குல தெய்வமும் பிற தெய்வங்களும்

மஹிஷாசுரர், சாமுண்டி ஹில்ஸ், மைசூரு சிலை மைசூரு உடையார்களுக்கு ஶ்ரீசாமுண்டேஸ்வரி தாயார் என்பது குல தெய்வம் - குடும்ப தெய்வம். விஜயநகர சம்ராஜ்ய நடைமுறையைப் பின்பற்றி பிரதேசத்தின் பாதுகாப்பு அல்லது பாதுகாவல தெய்வமாக ஸ்ரீ ஹனுமான் கொண்டாடப்பட்டார். உடையார்கள் இங்கு வருவதற்கு முன்பே உள்ளூர்வாசிகள் ஸ்ரீ கணேசரை [பிள்ளையார்] அனைத்து தடைகளையும் நீக்கும் தெய்வமாக வணங்கி வந்தனர்கள். எனவே இந்த மூன்று தெய்வங்களும் கொண்டாடபடுவதில், வழிபடபடுவதில் மைசூரில் உடையார்களின் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றதில் ஆச்சரியமில்லை.

மலையில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயில்

சுமார் 3500 அடி உயரமுள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் தங்குமிடமான மலை உச்சி ’சாமுண்டி ஹில்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையும், மலை உச்சியில் உள்ள கோயிலும் மைசூருவிலிருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. இந்த கண்கவர் காட்சி காண்கையில் மைசூரின் மகுடமாக மலையும், மலையின் மகுடமாக கோயிலும் தெரியும். 

தேவிக்கான கோயில் மிகவும் பழமையானது, ஆரம்பத்தில் இது ஒரு சிறிய சன்னதியாக தான் இருந்திருக்கிறது. மைசூருவை தலைநகராக ஆட்சி செய்ய உடையார்கள் வந்த பிறகு, புராதனமான இக்கோயில் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் ஶ்ரீசாமுண்டியை தங்கள் ‘குல தெய்வமாக’ என்று ஏற்றுக்கொண்டதால், உடையார்கள் இக்கோயிலுக்கு காட்டிய முக்கியத்துவம் பல்மடங்கு அதிகரித்தது. 

சாமுண்டேஸ்வரி கோயில் தவிர மஹாபலேஸ்வரர் கோயில்கள் போன்ற சில கோயில்கள் மலைகளின் மேல் இன்னும் உள்ளன. பெரிய உருவில் ‘நந்தி’ மற்றும் ‘மகிஷாசுரன்’ சிலைகளும் பக்தர்கள் சாமுண்டி ஹில்ஸில் பார்க்க வேண்டிய முக்கியமான இடமாகும். ‘சாமுண்டி கிராமம்’ கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. 

பிரதான கோயில்

மிகவும் பழமையான இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது. கோவில் வளாகத்தின் வளர்ச்சிக்கு அனைத்து ஆட்சியாளர்களும் பங்களிப்பு செய்திருந்தனர். மிக முக்கியமாக இந்த கோயிலுக்கு மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் செய்த பணிகள் மிகச் சிறப்பானவை. கோயிலுக்கு ஏழு தங்கக் கலசங்களுடன் கூடிய ராஜகோபுரத்தை கட்டிய அவர், தேவிக்கு நகைகள் மற்றும் ரதங்களை வழங்கினார். 

இந்த கோயில் செவ்வகமான அமைப்பைக் கொண்டுள்ளது. இது பிரதான கதவு, நுழைவு வாயில், உள்சுற்று பிரகாரம், நவரங்க மண்டபம், அந்தராலா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கர்பகிரகத்தின் மேல் தங்க கலசத்துடன் கூடிய விமானம் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.  

கோவில் வளாகத்திற்குள் நுழைகையில் வரிசை சுற்றுச் சுவரை ஒட்டியே நகரும். வலதுபுறத்தில் கோயிலின் முற்றத்தில் உள்ள மூன்று சம்பங்கி பூ பூக்கும் மரங்களில் ஒன்றைக் காணலாம். அவைகள் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பழைமையானது. அவற்றின் வேர்களுக்கு தேவியின் மீது தினசரி ஊற்றப்படும் அபிஷேக தூய நீர் வந்தடைகிறது. ஆண்டு முழுவதும் தினசரி இம்மரங்களில் குறைந்தது இரண்டு சம்பங்கி மலர்கள் பூக்கிறது. இரண்டு புஷ்பங்களில் ஒன்று ஶ்ரீ சாமுண்டி வழிபாட்டிற்காகவும் மற்றது மைசூர் அரண்மனை சன்னதிக்கும் சிறப்பு தூதரால் அனுப்பப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக நடக்கும் அற்புதம் இது. 

ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் தரிசனம் செய்ய பிரதான கோயில் வளாகத்திற்குள் நுழைவதற்கு வரிசை வலதுபுறம் திரும்பும். திருப்பத்தில் சுற்று சுவரில் இடது பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் சன்னிதி காணப்பட்டது. 

ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் தரிசனம் செய்த பின், கோயிலை பிரதிக்ஷணம் செய்யும் போது, ​​வளாகத்திலிருந்து வெளியே செல்லும் முன் தான் ஸ்ரீ ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்ய முடியும். 

இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ அஞ்சநேய சன்னதி

ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோயிலின் ஸ்ரீ அஞ்சநேய சுவாமி, சாமுண்டி ஹில்ஸ், மைசூரு முதலில் ஸ்ரீ கணேசரையும், கடைசியாக ஸ்ரீ ஆஞ்சநேயரையும் பிரார்த்தனை செய்வது வழக்கம். இங்கேயும் ஒருவர் தங்கள் பிரார்த்தனைகளை ஸ்ரீ கணேசருக்கும், பின்னர் ஸ்ரீ பைரவாவுக்கும், பின்னர் பிரதான கோவிலில் உள்ள ஸ்ரீ சாமுண்டேஸ்வரிக்கும் பிரார்த்தனை செய்வார். பிரதான கோயிலிலிருந்து வெளியே வந்த பிறகு கோயிலை பிரதிக்ஷணம் செய்யுங்கள். கோயில் வளாகத்திலிருந்து இறுதியில் வெளியே செல்லும் முன், ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் பிரார்த்தனை செய்யுங்கள், இவருடைய சன்னிதி கோவில் வளாகத்தின் சுற்றுச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவி க்ஷேத்திரத்திற்கு ஏன் ஸ்ரீ அஞ்சநேய சன்னதி

மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் இந்த கோயிலுக்கு 1827 ஆம் ஆண்டில் ஏழு தங்கக் கலசங்களுடன் கூடிய ஏழு அடுக்குடன் மிக பெரிய ராஜகோபுரத்தை கட்டினார். அச்சமயத்தில் இந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னிதி இங்கு நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. சுமார் 1600ஆம் ஆண்டு முதலாம் ஸ்ரீ ராஜ உடையார் இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட எண்ணியதாகவும், அந்த நோக்கத்திற்காக இங்கு நான்கு பெரிய தூண்களை அல்லது கதவு இடுகைகளை அமைத்ததாகவும் கூறப்படுகிறது. இறைவனே நன்கு அறிந்த காரணங்களினால் அவரால் இவ்விஷயத்தினை மேலே செய்ய முடியவில்லை. ஆகையால், மூன்றாம் ஸ்ரீ கிருஷ்ண ராஜா உடையார் அவர்கள் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட விரும்பியபோது, ​​அவர் முதலாம் ராஜ உடையாரால் கட்டப்பட்டவற்றை அகற்றிவிட்டு, இந்த க்ஷேத்திரத்தின் பாதுகாப்பிற்காக பிரதான ராஜகோபுரத்தை ஒட்டி ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சன்னிதி கட்டி அவரை பிரதிஷ்டை செய்தார்.

சாமுண்டேஸ்வரி கோவிலில் ஸ்ரீ அஞ்சநேயர்

மைசூரு மக்களின் வழிகாட்டியாகவும், மைசூர் மன்னர்களின் குலதெய்வமுமான க்ஷேத்திர நிவாசினி ஸ்ரீ சாமுண்டேஸ்வரி தெற்கு நோக்கியுள்ளாள். இந்த க்ஷேத்திரத்தின் பாதுகாவலராக இருக்கும் ஸ்ரீ அஞ்சநேயர் வடக்கு நோக்கியுள்ளார். சுற்று சுவரில் அமைக்கப்பட்டுள்ள உட்குழிவு கொண்ட பிறையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சன்னிதி மிகவும் சிறப்பாக மண்டபம் மாதரி அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ அஞ்சநேய சுவாமி விக்ரஹம் சுமார் நான்கு அடி உயரம் கடினமான கிரானைட் கல்லாலானது. சுவாமி நடக்கும் தோரணையில் இருக்கிறார் மற்றும் செதுக்குதல் ‘அர்த்த ஷிலா’ - புடைப்பு சிற்பம் வகையைச் சேர்ந்தது. இறைவனின் தாமரை பாதங்களை நூபூரம், தண்டை ஆகியவை அலங்கறிக்கின்றன. இடது பாதம் முன்னாலும், வலது பாதம் பூமியிலிருந்து சற்றே தூக்கி காணப்படுகிறது. இறைவன் கௌபீனம் அணிந்து இடுப்பில் ஒரு சிறிய கத்தியை வைத்திருக்கிறார். இடுப்பின் இடது புறம் அழுந்தியிருக்கும் கையில் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டை பிடித்துள்ளார். திருகரங்களை கேயூரம், கங்கணம் முதலியன அலங்கரிக்கிறது. முழுமையாக பூத்திருக்கும் சௌகந்திகா புஷ்பம் அவரின் இடது தேளுக்கு மேல் காணப்படுகிறது. அவரது அகன்ற மார்பினை மூன்று மணி-மாலைகள் அலங்கரிக்கின்றது. அவற்றில் ஒன்றில் பதக்கம் இருக்கிறது. அவரது வலது திருகரத்தினை உயர்த்தி அவர் தனது பக்தர்களுக்கு ஆசீகள் வழங்கும் ’அபய முத்திரை’யை காண்பிக்கிறார்.அவரது வால் அவரது தலைக்கு மேலே உயர்ந்து காணப்படுகிறது, வாலின் நுணி ஒரு சிறிய அழகான மணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இறைவன் தனது தோள்களைத் தொடும் காது அணி - குண்டலங்களை அணிந்துள்ளார். சிறிய கிரீடம் அவரது தலையை அலங்கரிக்கிறது. அவரது ஒளிரும் கண்கள் பக்தர் மீது காருண்யத்தை பொழிகிறது. அத்தகைய பிரகாசமான கண்களால் க்ஷேத்திரத்தின் இறைவன் பக்தரை மயக்கும் ஒரு உருவம் என்று கூறினால் மிகையில்லை. 

 

திருக்கோயில் இருப்பிடம் :     "சாமுண்டேஸ்வரி கோவில், மைசூர்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இரட்சகரும் பாதுகாவலரும் தீமையை அழிப்பவருமான “தஸக்ரிவகுலாந்தகாயன்” நம்முடைய கெட்ட மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் துடைத்து, மேலும் நமக்கு நன்மையை பெருக்கும் உற்சாகத்தை அளிக்க காத்திருக்கிறார். இவரை தரிசித்து புத்துயிர் பெறுவோம் வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+