home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

இராணி மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில், அவனியாபுரம், மதுரை


இராணி மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில், அவனியாபுரம், மதுரை

முனைவர் திரு. சொ.சாந்தலிங்கம்


தமிழக வரலாற்றில் பெண்ணரசியர் பலர் பெரும் புகழ்பெற்றவர்களாக வலம் வந்துள்ளனர்.  சோழர் மரபில் செம்பியன்மாதேவி, குந்தவ்வை, வீரமாதேவி போன்றோரும் பாண்டிய மரபில் மங்கையர்க்கரசியும் இன்றும் நினைக்கப்படும் தேவியராவர்.  இவர்களெல்லாம் வரலாற்றில் இடம் பெறத்தக்க வகையில் பல ஆன்மீகப் பணிகளையும், அறக்கொடைகளையும் செய்து நிலைத்தவர்கள். 

அரசர்களின் பின்னணியில் நின்று இயங்கி யவர்கள் (அ) இயக்கியவர்கள் மட்டுமே தவிர நேரடியாக அரசாட்சியில் ஈடுபட்டவர்கள் இல்லை.  இவர்களிலிருந்து வேறுபட்டு நேரடியாக அரசாட்சி நடத்தி மக்கள் மனங்களைக் கவர்ந்த பேரரசிகள் ஒரு சிலரே.  அவர்களில் இராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் என்ற இருவர் பாண்டிய நாட்டில் வலம் வந்தவர்கள்.  இங்கு இராணி மங்கம்மாளின் பணிகள் பற்றிய சில புதிய செய்திகளைப் பார்ப்போம்.

மங்கம்மாள்

மதுரை அவனியாபுரம் அனுமார் கோயில் தூணில் -இராணி மங்கமாணின் உருவம் அ.கி. பரந்தாமனாரின் வார்த்தைகளில் சொல்வதானால் இவ்வரசி ஒரு தெலுங்கர் குலத்திருவிளக்கு.  நாயக்கர் குல நங்கை.  இவர் திருமலை நாயக்கரின் பேரர் சொக்கநாதருக்கு மனைவியாக வாய்த்தவர்.  மூன்றாம் முத்து வீரப்பருக்கும் முத்தம்மாளுக்கும் 1689இல் பிறந்த ஆண்மகவுக்கு விசயரங்க சொக்கநாதன் எனப் பெயரிட்டனர்.  விசயரங்கர் கருவில் இருந்த போதே தந்தை முத்துவீரப்பர் அம்மை நோய்கண்டு இறந்தார்.  தாயும் குழந்தை பிறந்த நான்காம் நாள் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். 

இக்குழந்தையை வளர்க்கும் பெரும் பொறுப்பு இராணிமங்கம்மாளின் தலையில் வீழ்ந்தது.  அதனைச் சிரமேற்கொண்ட மங்கம்மாள் 1689 இலிருந்து 1706 வரை சார்பரசியாக ((Regent)) மதுரையை ஆண்டு மங்காப்புகழ் கொண்டாள்.

மங்கம்மாளின் ஆட்சி

மங்கம்மாள் பொறுப் பேற்ற அரசியல் சூழலில் வடக்கே ஒளரங்கசிப்பின் ஆட்சி மேலோங்கியிருந்தது எதிர்த்து நின்ற வீரசிவாஜியும் விண்ணுலகடைந்துவிட்டான்.  தென்னகத்து அரசர்களெல்லாம் ஒளரங்கசீப்புக்கு அடிபணிந்து திறை செலுத்தி வாழ்ந்தனர்.  மங்கம் மாளும் விதிவிலக்காக விலகி நிற்க முடியவில்லை.  

ஒளரங்கசீப்புக்கு திறை செலுத்தினாலும், தனது ராஜதந்திரத்தால் அவனது உதவியைக் கொண்டே தன் அண்டை நாட்டு எதிரிகளை வென்றாள்.  தஞ்சை வேந்தனும், உடையார்பாளையம் சிற்றரசனும் மதுரை நாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தனர்.  ஒளரங்கசீப்பின் படைத் தலைவர்களைக் கொண்டு, அவர்களுக்கு அன் பளிப்புகள் கொடுத்து தன் நாட்டுப் பகுதிகளை மீட்டெடுத்தாள் மங்கம்மாள்.  மைசூர் மன்னன் சிக்கதேவராயன் படைகளையும் மண்டியிட வைத்தாள். 

வஞ்சகமாகத் தன்னை ஏமாற்றிய திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மனைத் தன் தளபதி நரசப்பய்யரின் தலைமையில் படை நடத்தி வெற்றிகண்டு திறை பெற்றாள். திருச்சி, தஞ்சைப் பகுதியில் பூவிரித்த சோலைகளைப் புரந்த காவிரித்தாயின் ஓட்டத்தை தடுத்து அணைகட்டினான் மைசூர் மன்னன் சிக்க தேவராயன்.  இராணிமங்கம்மாள் தஞ்சை வேந்தனோடு இணைந்து மைசூரானை வென்று அணை உடைக்கப் படை திரட்டினாள்.  நல்வேளையாகப் பெரும் மழையால் அணை தானே உடைந்தது.  காவிரி பெருக்கெடுத்து சோழவளநாட்டை வந்தடைந்தது.  மைசூரானும் தப்பினான்.

சமய சார்பற்ற ஆட்சி

தான் சார்ந்த சைவ சமயத்தைப் போலவே கிறித்தவ சமயத்தவர்க்கும், இசுலாமியர்க்கும் ஆதரவாக இருந்துள்ளாள் மங்கம்மாள்.  தனது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் சாலைகளை அமைத்தும், பழைய பெருவழிகளைப் புதுப் பித்தும், மரங்கள் நாட்டியும், குளங்கள், கிணறுகள் வெட்டித் தண்ணீர்ப் பந்தல் வைத்தும் அரிய பல மக்கள் நலப்பணிகளைச் செய்துள்ளாள்.  இன்றும் தென்பாண்டி மண்டலத்தில் நானாதிசைகளிலும் பல சிற்றூர்களில் உள்ள சாலைகள் மங்கம்மாள் சாலை என்றே பெயர் வழங்கி வருகின்றன.

மங்கம்மாளின் கோயில் பணிகள்

நல்லாட்சி நடத்திய மங்கம்மாள் சைவசமயக் கோயில்கள் சிலவற்றில் தனது பங்களிப்பை அளித்துள்ள மையை இன்றும் காண்கிறோம்.  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் முன்பாக உள்ள நகரா மண்டபம் மங்கம்மாளால் கட்டப்பட்டதாகும்.  ஐந்து வேளையும் வழிபாடு நடைபெறும் போது இம்மண்டபத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நகரா (முரசு) என்னும் இசைக்கருவியை முழக்கி ஒலி எழுப்புவதற்காக இம்மண்டபம் கட்டப்பட்டது.  இம்மண்டபத்தின் தென் கிழக்கு மூலையில் உள்ள தூணில் இராணிமங்கம்மாளும், அவளது பெயரன் விசயரங்க சொக்கநாதரும் நிற்பதாக உள்ள திருஉருவச் சிற்பம், இது மங்கம்மாளின் பணி என்பதற்குச் சான்றாகும்.

மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு சிறு மண்டப விதானத்தில் தீப்பட்டுள்ள அம்மையின் திருமணக்காட்சி ஓவியத்தில் மங்கம் மாளின் உருவம் காணப்படுகிறது.  இதில் மங்கம் மாளின் அருகில் விசயரங்க சொக்கநாதனும் காட்டப் பட்டுள்ளன.  இருவரது பெயர்களும் தமிழ், தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.  எதிர்ப்புறம் திருமணக்காட்சியைக் காணும் மக்களிடையே தளபதி நரசப்பய்யரும் நிற்கிறார்.  ஆனால், அவரது பெயர் ராமப்பய்யர் எனத் தவறாக எழுதப் பட்டுள்ளது.  சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியமாகும் இது.

திருப்பரங்குன்றம் கோயிலில் முன் மண்டபம் இராணிமங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்ட தாகும்.  இம்மண்டபத்தின் மேற்கு வரிசைத்தூண் ஒன்றில் முருகன் தேவசேனையின் திருமணக் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.  இத் தூணின் எதிரில் உள்ள (கிழக்கு வரிசை) தூணில் ராணிமங்கம்மாள் தன் பெயரருடன் நின்று திருமணக் காட்சியைக் கண்டு வணங்குவது போலச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளாள். 

இன்றைய காந்தி அருங்காட்சியகம் உள்ள கட்டடம் மங்கம்மாள் காலத்தது என்பர்.  இராணி மங்கம்மாளின் நினைவைப் போற்றும் வகையில் மதுரைத் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் ஒரு சத்திரம் அவர் பெயரால் இயங்கி வருகிறது.  அவர் தன் இறுதிக்காலத்தில் வாழ்ந்த அரண்மனை மீனாட்சி அம்மன் கோயிலின் அருகில் வட கிழக்கில் அமைந்துள்ளது.  அண்மைக்காலம் வரை காய்கறி அங்காடி செயல்பட்டுவந்த இடமாகும் இது.

மங்கம்மாளின் வல்லானந்தபுரம் கல்வெட்டு:

மதுரை அவனியாபுரம் அனுமார் கோயிலில் :வல்லானந்தபுரம் கல்வெட்டு மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு புறநகர் அவனியா புரம் என்பது.  மிகப் பழமையான குடியிருப்புப் பகுதியான இவ்வூர் பாண்டிய மன்னனின் அவனி நாராயணன் அவநிபசேகரன் என்ற பெயர்களை அடியொற்றி எழுந்த பெயராகும்.  இந்த அவனியா புரத்தின் கிழக்கில் வல்லானந்தபுரம் என்னும் பெயரில் ஒரு குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது.  இதுவும் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னனின் பெயரால் அமைந்த ஊரே, இவ்வூரில் கி.பி. 1104 - 1125 காலகட்டத்தில் ஆழ்ந்த ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னனால் ஸ்ரீவல்லப விண்ணகரம் என்ற ஒரு பெருமாள் கோயில் கட்டப்பட்டிருந்தது.  அதனைப் பராமரிக்க பிராமணர்களைக் குடியமர்த்தி ஸ்ரீவல்லப மங்கலம் என்ற குடியிருப்பையும் அவன் உருவாக்கினான்.  ஆனால் அக்கோயிலும், குடியிருப்பும் இல்லை.  சில உடைந்த கற்களில் காணப்படும் கல்வெட்டுகளைக் கொண்டே இதனை நாம் அறியமுடிகிறது.

இராணி மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில்

இக்கோயில் இருந்த இடத்தில் இராணி மங்கம்மாள் காலத்தில் அனுமார் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.  இங்கிருந்து ஆவியூர், காரியாபட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கும், திருச்சுழியலுக்கும் ஒரு சாலை மங்கம்மாளால் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு மங்கம்மாள் சாலை என்று பெயர் இன்றும் வழங்கி வருகிறது.  இக்கோயிலின் அருகிலேயே கிணறு ஒன்று இருந்து நடைப்பயணத்து மக்களுக்குத் தாகம் தீர்த்துள்ளது. மங்கம்மாளின் பெயரில் வழங்கிய அக்கிணறும் தற்போது இல்லை.

இன்று மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில் மட்டுமே உள்ளது.  இக்கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு கல்லில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டே பல செய்திகளைத் தருகிறது.

பலகைக் கல் ஒன்றின் மூன்று புறமும் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு மொத்தம் 86 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.  சக வருசம் 1615 (கி.பி. 1693ல்) முத்தியப்ப நாயக்கருக்குப் புண்ணிய மாக அவருடைய புத்திரி மங்கம்மாள் அவநியா புரத்தில் கட்டின அனுமார் ஆழ்வார், அலங்காரப் பிள்ளையார் கோயில் என்று கல்வெட்டில் கூறப்படுகிறது.  இக்கோயிலுக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மங்கம்மாள் காலத்தில் இவ் விரண்டு கோயில்களுக்கும் இரண்டு ‘மா’நிலம் கொடுக்கப்பட்டது. 

இராணி மங்கம்மாளை பற்றிய பல புதிய செய்திகள் :

இக்கோயிலை நிர்வகிக்க ஆந்தேரய கோத்திரத்தைச் சேர்ந்த கேடாழப் பய்யங்கார் புத்திரன் சீனிவாசயங்கார் என்பவர் நியமிக்கப்பட்டார்.  இக்கல்வெட்டின் அருகி லேயே நடப்பட்டுள்ள மற்றொரு ஸ்தம்பத்தில் ராணிமங்கம்மாளின் திருஉருவம் இடையில் உடைவாளோடும் அஞ்சலிக்கும் கரத்தோடும் வடிக்கப்பட்டுள்ளாள்.  மங்கம்மாளின் வரலாற்றுக்கு இக்கல்வெட்டு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது.  இதுவரை மங்கம் மாளின் தாய் தந்தையர் பெயர் அறியப்படாமல் இருந்தது.  இக்கல்வெட்டில்தான் முதன் முதலாக அவளது தந்தை முத்தியப்ப நாயக்கர் என்பதை அறிகிறோம்.

ஶ்ரீஆஞ்சநேயர்*

இராணி மங்கம்மாள் கட்டிய அனுமார் கோயில், அவனியாபுரம், மதுரை ஆஞ்சநேயரின் சிலை புடைப்பு சிலையாக சுமார் ஐந்தடி உயரமாக கருங்கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அவர் நிற்கும் தோற்றம் கண்கவர்வதாகவும் மற்றும் கண்களுக்கு இனிமையாகவும் இருக்கிறது. பக்தர்கள் நீண்ட நேரம் இந்த அழகிய தோற்றத்தைக் காண விரும்புவார்கள் இது பக்தர்கள் மனதில் அமைதியுணர்வைக் கொடுக்கிறது.

பூமியில் உறுதியாக இருக்கும் இறைவனின் தாமரை பாதங்களை தண்டையும் நூபூரமும் அலங்கரிக்கிறன. இலாகவமாக வளைந்திருக்கும் இடது கால் முன்னோக்கி செல்ல தயார் நிலையில் இருக்கிறது. அவரது வலது கால் நேராக பார்த்து உள்ளது. அவரது கைகளில் மணிக்கட்டில் கங்கணமும் மேல் கையில் கேயூரமும் அணிந்துள்ளார். மடங்கிய அவரது இடது கையில் சௌகந்திகா பூவின் குறுகிய தண்டை பிடித்திருப்பதைக் காணலாம். தூக்கியிருக்கும் அவரது வலது கை அபாய முத்திரை தரித்து, பக்தர்களின் அச்சமின்றி இருக்க அருள்கிறார். அவரது வால் எழும்பி, அவரது வலது கையைச் சுற்றி சென்று, தலைக்கு மேலே ஒரு வளைவுடன் முடிகிறது. இறைவன் தனது கழுத்தில் இரண்டு 'மலைகள்' அணிந்துள்ளார், அவற்றில் ஒன்று அவனுடைய கழுத்தினை ஒட்டி இருக்கிறது. பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் அவரின் முகம் கண்களுக்கு இதமாக இருக்கிறது. அவர் அணிந்திருக்கும் நீண்ட காது-வளையம் அவரது தோள்களை தொட்டுக் கொண்டுள்ளது. அலங்கார 'கேச பாந்தா' வின் உதவியுடன் கேசத்தை அழகாக முடிந்து வைத்துள்ளார். கேசத்தில் சிறிய பகுதி அவரது தலையின் பக்கங்களில் பாய்வது அவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இறைவன் நேர் முகமாக பார்ப்பதால் இறைவனுடைய கண்கள் நேரடியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறதாக இருக்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "இராணி மங்கம்மாள் -அனுமார் கோயில், அவனியாபுரம், மதுரை"

 

அனுபவம்*
இந்த க்ஷேத்திரத்தின் நேர் முகமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் தரிசனம் பக்தருக்கு நேர்மை பாதையில் சென்று எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை அருளுகிறார். எந்த சூழ்நிலையிலும் கஷ்டத்தை எதிர்கொள்வது, அதனை தைரியத்துடன் எளிதாக கையாளுவதற்கான சாமர்த்தியம் ஆகியவை இவரின் தர்சனம் ஊக்கிவிக்கும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு: ஜூலை 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020
* குறிப்பிட்டவை இணைய தள ஆசிரியரால் எழுதப்பட்டது


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+