மிக நீண்ட விவாதத்தின் பின் சென்னை மாநகரம் ஆகஸ்ட் 22, 1639 அன்று உருவாக்கப்பட்டது என்று தீர்மானிக்கப்பட்டது, ஆகையால் ஒவ்வொரு ஆண்டும், 22 ஆகஸ்ட் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது, இது சென்னையின் பிறந்த தேதி என்று கருதப்படுகிறது.
பின்னர், மெட்ராஸ் என்ற பெயரை ஒரு நீண்ட விவாதத்திற்கு பிறகு சென்னை என்று மாற்றினார்கள். இன்று சென்னை அல்லது மெட்ராஸ் பற்றி பேசப்படும் எந்த ஒன்றும் இந்த தேதியையும் அதற்குப் பின்னர் குறித்ததாக உள்ளது.
ஆனால் இந்த தேதிக்கு முன்பே சென்னை என்னும் இன்றைய பகுதியில் பல நடவடிக்கைகள் இருந்து வந்தது. திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, மைலாப்பூர் மற்றும் திருவான்மியூர் போன்ற சில கரையோர பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. மற்றும் புராசைவாக்கம், புதுப்பாக்கம், சைதாப்பேட்டை, செம்பியம், வேப்பேரி, வியாசர்பாடி, வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் மக்கள் தொகை கணிசமாக இருந்திருக்கிறது. அங்குள்ள மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள், அவர்களுக்கு இடையேயான பூசல்கள் எப்படித் தீர்க்கப்பட்டன, வரிகள் எப்படி வசூலிக்கப்பட்டன, ஆட்சி அமைப்பு முறை எப்படி இருந்தது போன்ற பலவற்றையும் அவ்விடங்களில் உள்ள கோயில் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது. இவை அனைத்தும் விஜயநகர ராஜாவின் பிரதிநிதிகளின் கீழ் இருந்திருக்கிறது. போர்த்துகீசியர்கள், டச்சு, பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் அனைவரும் இப்பகுதிகளில் வியாபாரத்திற்கு வந்து, பின் இப்பகுதியினை தாங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மெதுவாக நிலத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள். விஜயநகர மன்னர்களின் அதிகாரத்தில் இருந்த சில பகுதியினை வியாபார நோக்குடன் ஆங்கிலேயர்கள் குத்தகைக்கு எடுத்தனர், பின் அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டினர். இந்த கட்டுமானத்தின் காரணமாக, பல உள்ளூர் மற்றும் அவர்களின் கோயில்கள் பல்வேறு இடங்களுக்கு மீள்குடியேற்றப்பட்டன. இந்த குடியேற்றங்கள் "பிளாக் டவுன்" என்றும், பின்னர் "புதிய பிளாக் டவுன்" என்றும் அழைக்கப்பட்டது. அதனால் "பிளாக் டவுன்" மற்றும் "புதிய பிளாக் டவுன்" என்று அழைக்கப்படும் பகுதிகளில் இருந்த இடங்கள் அசல் பெயரையும், அடையாளத்தையும் இழந்தன.
"முத்தையால் பேட்டை" "ஜார்ஜ் டவுன்" என மறுபெயரிடப்பட்டபின் இந்த பகுதியினைப் பற்றி நிறைய விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. சென்னை மற்றும் அதன் பாரம்பரியத்தை பற்றி பேச விரும்புவர்கள், ஜார்ஜ் டவுனை தங்கள் விவாதத்தின் மையமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த இடம் ஒரு சென்னை நகரத்தின் வரலாற்று புதையலாக கருதப்படுகிறது. சென்னை, மதராஸ் நகரத்தின் சரித்திரத்தினை பற்றி தெரிந்துக்கொள்ள, இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு சாலையும், கட்டடமும் சாலைகளின் பெயரும் பல செய்திகளை சொல்கின்றன. அது சென்னை நகரத்தின் சரித்திரத்தின் புதையல் என்றால் மிகையாகாது.
தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோவிலின் வரலாறு, பொதுக் களத்தில் விவாதிக்கப்படுகிறது. 1677 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதியன்று சத்ரபதி வீரா சிவாஜி இந்த கோயிலுக்கு விஜயம் செய்தாரா இல்லையா என்பது என்றும் விவாதமாக உள்ளது. பல ஆசிரியர்கள் எந்தவொரு உறுதியான முடிவும் இன்றி, இந்த விஷயங்களைப் பற்றி செய்தித்தாள்களில் தங்கள் கருத்துக்களை எழுதியுள்ளனர்.
ஜார்ஜ் டவுனை நான் பார்க்க சென்றதின் காரணம் வேறு. கூகிள் வரைப்படத்தில் இந்த பகுதியில் உள்ள கோவில்களை தேடினால் பல கோயில்களை அடையாளம் காட்டாது. குறைந்தது இரண்டு நூறு ஆண்டுகள் பழமையான இந்த பகுதிகளில் ஸ்ரீ ஹனுமானுக்கு பிரத்தியேகமான சில கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் பெயர்களில் சாலைகளும் உள்ளன. இக்கோயில்களை காண்பற்க்காக நான் ஜார்ஜ் டவுன் சென்றேன்.
இந்த இடம் அடிக்கடி பேச்சுவார்த்தை மொழியில் "டவுன்" என்று குறிப்பிடப்படுகிறது. கோத்தவால் சாவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மொத்த வியாபார சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக நான் அடிக்கடி "டவுன்" சென்று இருக்கிறேன். எங்களுக்கு பிடித்த ’மினர்வா’ சினிமாவில் பல ஜெர்ரி லூயிஸ் திரைப்படங்கள் பார்த்திருக்கிறோம். கோயில்களை பார்க்கும் நோக்கத்துடன் இந்த இடத்திற்கு [டவுனுக்கு] நான் வந்ததில்லை. இந்த நேரத்தில் என் வருகை டவுனில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய கோவில்களை தேடிக்கண்டுபிடிப்பதற்காகத் தான்.
இந்த குறிக்கோளுடன் நான் அதிகாலையில் டவுன் சென்றேன். பஸ் நிலையத்தில் இறங்கியதும் சைனா பஜாரில் நடைபாதையில் தனியாக "ஆடு-புலி" விளையாடும் ஒருவரிடம் வழி விசாரித்தேன். நான் அவரை "சஞ்சிவிராயன் கோயில் தெரு" செல்ல வழி கேட்டேன். அவர் தனது ஆட்டத்திலிருந்து கவனத்தை திருப்பாமல் உடனடியாக பதிலளித்தார் "சஞ்சீவிராயன் கோயில் தெரு இல்லை, ஆனால் ஹனுமாத்தாரயன் கோயில் தெரு இருக்கிறது". கோவிந்தப்பன் நாயக்கன் தெரு, தாதா முத்தியப்பன் தெரு ’கிராஸிங்" சென்று அங்கு விசாரிக்கும்படி சொன்னார்.
ஹனுமான் கோயில் லை தேடி நான் கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் நடக்க ஆரம்பித்தேன். இனிய காற்று, நடையை அனுபவிக்க வைத்தது. எனது முயற்சியின் முடிவும் இனிமையாக இருந்தது. ஒரு அனுமார் கோயிலை தேடி சென்ற எனக்கு இருநூறு ஆண்டுகள் பழமையான மூன்று ஹனுமான் கோயில்களில் ஶ்ரீஅனுமாரின் தரிசனம் கிட்டியது.
இப்போது ப்ரகாசம் சாலை என மறுபெயரிடப்பட்டுள்ள பிராட்வேவையும் மின்ட் தெருவையும் இணைக்கும் சாலை தாதா முத்தியப்பன் தெரு. இந்த சாலையில் மினர்வா சினிமாவிற்கும் மற்றும் கோத்வால் சாவாடி காவல் நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ ஹனுமான் கோயில்.
ஆலயத்தின் ஒரு நுழைவு வாயில் தாதா முத்தியப்பன் தெருவிலும், இரண்டாம் நுழைவு வாயில் ஹனுமாந்தராயன் கோயில் தெருவிலும் உள்ளது. ஹனுமாந்தராயன் கோயில் தெருவிலிருந்து மட்டும் தான் இந்த கோவிலுக்கு நுழைவாயில் முன்பு இருந்தது. இன்று ஹனுமாந்தராயன் கோவில் தெரு ஒன்று, இரண்டு, மூன்று என்ற பெயரில் இந்த ஆலயத்திற்கு அருகில் மூன்று தெருக்கள் உள்ளன.
கோயில் இருபது அடி கிழக்கு-மேற்காவும், மற்றும் பதினைந்து அடி தெற்கு-வடக்காகவும் அமைந்துள்ளது, தெற்கு முகமாக ஶ்ரீ ஹனுமாந்தராயன் கருவறையும், மற்ற தெய்வங்களுக்கான சன்னதிகள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன.
ஆலயம் எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆலயம் ஸ்ரீ ஹனுமனுக்காக ஒரு சன்னதி கொண்ட ஒரு எளிய கோவிலாக இந்த கோயில் அங்கு அருகாமையில் குடிகொண்டிருந்தவர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஹனுமாந்தராயன் கோயில் தெருவில் கோயில் அமைந்திருக்கும் போது, சன்னதிக்கு பின்புற சுவர் தாதா முப்பதியப்பன் தெருவை நோக்கி அமைந்துள்ளது.
தெலுங்கு மொழி பேசும் மக்கள், ஸ்ரீ ஆஞ்சநேயனை ஹனுமாந்தராயா அல்லது சஞ்சீவிராயா என்று அழைப்பதைப் போலவே, இக்கோயிலும் ஹனுமாந்தராயா என்றும் பெயர் பெற்றது.
இந்த கோயிலை ஒட்டிய கங்கனா மண்டபத்திற்கு ததா முப்பதியப்பன் தெருவிலிருந்து நுழைவாயில் உள்ளது. பழைய நாட்களில் இங்கு பக்தர்கள் பஜனை முதலிய நிகழ்ச்சிகள் நடத்தவும், மற்ற கோயில் நிகழ்ச்சிகள் நடத்தவும் பயன்பாட்டிலிருந்தது. இன்று இந்த மண்டபம் சஞ்சீவிராயன் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. தாதா முப்பதியப்பன் தெருவில் இருந்து கோவிலுக்கு நுழைவு வாயிலாக இது அமைந்துள்ளது.
தற்போது கிழக்கு நோக்கிய சன்னிதிகள் ஸ்ரீ ராம, சீதா, லக்ஷ்மணன் ஆகியோருக்கு, ஸ்ரீ ஹனுமார் சன்னிதிக்கு அருகில் அமைக்கப் பட்டுள்ளது. மற்ற தெய்வங்களுக்கான சன்னதி மேலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹனுமந்தராயன் கோவில் தெரு மற்றும் ததா முப்பதியப்பன் தெருவில் இருந்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்லலாம். சமீபத்தில் கோயில் புனரமைக்கப்பட்டு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தோ அல்லது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தோ இந்த கோயில் இருந்திருக்க வேண்டும் என்கிற கோவில் குருக்கள் கூறுகிறார்.
தெற்கு நோக்கி இருக்கும் ஸ்ரீ ஹனுமாரின் மூர்த்தி சுமார் மூன்று அடி உயரமாக அமைந்துள்ளது. இரு கைகளையும் கூப்பிய வண்ணமிருக்கும் இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் நின்ற கோலத்தில் அமைந்துள்ளார். ஶ்ரீ ஹனுமார் பக்தரின் முழு கவனத்தையும் ஈர்க்கும் கவர்ச்சி பொருந்தியவராக இருக்கிறார். அவரது திருகரங்களில் கேயூரமும், மணிக்கட்டில் கங்கணமும் அணிந்துள்ளார். அவர் தனது மார்பை ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அவரது தாமரை திருவடிகள் தண்டையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவடியின் அருகாமையில் வளைந்து நிற்கிறது ஹனுமாரின் வால். இறைவன் காதுகளில் குண்டலங்கள் அணிந்துள்ளார். அழகாக கட்டப்பட்டுள்ள அவரது கேசத்தை அலங்காரமான "கேச பந்தானம்" என்னும் ஆபரணத்தால் மேலும் கட்டியுள்ளார். அவரது நேர் நோக்கு கண்கள் பக்தர் மீது கருணையை பொழிகிறது. மற்றும் அவரது கண்கள் வெளிப்படுத்தும் பிரகாசம் இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் பக்தர்கள் அனைவரையும் தனது கருணையை அருளுகிறார் என்பதை உணர்த்துகிறது.
அனுபவம்
இறைவனை ஒரு முறை நோக்கினால் பக்தர்களின் கண்கள் அவரை அகலாது
பார்க்க வைக்கும் என்பது நிச்சயம். இறைவனின் காந்த கண்களால் பக்தர்களின் அனைத்து பிரச்சனையையும் நீக்கிவிட்டு, அனுபவித்து
மகிழ்வதற்கு ஒரு ஆறுதலளிக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது தின்னம்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020