ஸ்ரீ துளசி தாஸ் ஸ்ரீ ஹனுமான் பக்தர்களுக்கு நன்கு அறிமுகமானவர், அவர் ஒரு பெரிய மஹாபுருஷராக விளங்கியவர். சமஸ்கிருத மொழியில் வல்லுனராக இருப்பினும், சித்திரகூடம் முதலிய வட்டாரங்களில் பேசப்படும் மொழியாக இருக்கும் அவாதி மொழியில் ஸ்ரீ ராமாயணம் என்னும் பெரும் காவியத்தை புனித ஸ்ரீ துளசி தாஸ் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவரால் வால்மீகி ஸ்ரீ ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்ட இக்காவியதிற்கு "ராம சரித் மானஸ்" என்று பெயரிட்டார். இது இன்று மிக பெரிய புராண நூலாக கருதப்படுகிறது. ஸ்ரீ பரமசிவன், ஸ்ரீ ராமச்சந்திரனின் கதையைக் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது இக்காவியம். இதனால் சிவனையும் விஷ்ணுவையும் பின்பற்றுபவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் இந்த இரு குழுக்களிடமும் இந்த ஒற்றுமையைக் கொண்டுவருவது என்பது சற்றே புரட்சிகரமானது.
ஸ்ரீ துளசிதாஸ் உத்திரப்பிரதேசத்தில் தற்போதைய சித்திரகூடம் மாவட்டத்தில் இராஜாபூரில் ஸ்ரீ ஆத்மாராம் மற்றும் ஹுல்ஸி தம்பதிகளுக்கு பிறந்தார். பிறக்கும் பெழுதே "ராம்" என்று அழைத்த வண்ணம் பிறந்ததால் அவரை "ராம்போலா" என்று அழைக்கலாயினர்.
அபுக்தமுலா என்னும் நக்ஷத்திர கூற்றின் கீழ் குழந்தை பிறந்தது என்பதால், இது ஜோதிடத்தின் படி தந்தையின் வாழ்விற்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் என்று நம்பினார்கள். அவரது பிறப்பு நேரத்தில் துயரமான நிகழ்வுகள் காரணமாக, அவர் நான்காவது இரவில் அவரது பெற்றோரால் கைவிடப்பட்டார். பின்னர் அவர் ஹுல்ஸியின் பெண் பணியாளரான சுனியாவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
சுனியா அக்குழந்தையை ஹரிபூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்ற ஐந்தரை ஆண்டுகள் கழித்து சுனியா இறந்துவிட்டார். ராம்போலா அனாதையானான், தன்னை வறுமையிலிருந்து காத்துகொள்ள வீடுதொரும் பிக்ஷை எடுக்கலானான்.
ஶ்ரீராமாநந்தா வகுப்பை சேர்ந்த நாரஹரிதாஸ் என்னும் வைஷ்ணவர், ராம்போலாவின் அறிவுத்திறனை பார்த்து தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். நாரஹரிதாஸ் அவர்கள் ஶ்ரீராமநந்தாவின் நான்காம் சீடர் என்று நம்பப்படுகிறது. ராம்போலாவிற்கு விரக்டா தீக்ஷை (வைராகி தீக்ஷை) கொடுத்து துளஸிதாஸர் என்ற புதிய பெயருரும் சூட்டினார்.
பின்னர் துளசிதாஸ் அவர்களுக்கு நமது சனாதன தர்மத்தின் பல்வேறு அங்கங்களில் இருக்கும் சூழ்மத்தை போதித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு வால்மீகி முனிவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின் நுணுக்கங்களை குருநாதர் சொல்லிக் கொடுத்தார். ஶ்ரீராமரின் புகழ் பாடும் ஶ்ரீராமாயணத்தை பிரவசனம் செய்ய சொல்லி மகிழ்ந்தார். சில நாட்களில் ஸ்ரீ துளசிதாஸ் ராமாயண பிரவச்சனதில் சிறந்த சொற்பொழிவாளராக பிரபலமடைந்தார்.
ஸ்ரீ ஆத்மாராம் மற்றும் ஹுல்ஸி தம்பதிகள் மரணத்திற்கு பின் இராஜாபூர் கிராமத்தில் சோக நிகழ்ச்சிகள் பல நடந்தன. சோகமான அனுபவத்தில் இருந்ததால் ராஜபூரி கிராம மக்கள், அப்பொழுது இராம கதை கூறுவதில் பிரசித்தமாக இருந்த துளசிதாஸை கிராமத்திற்கு வந்தருளுமாறும் ஶ்ரீராம கதையை கூறுமாறும் வேண்டினார்கள். ஒரு நல்ல நாள் அன்று துளஸிதாஸ் அவர்கள் ராஜாபூர் கிராமத்திற்கு புறப்பட்டார். கிராமப்புற மூப்பர்கள் அவரை வரவேற்றனர். அவர் மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப்ப கிரமத்தில் சுபிக்ஷம் நிலவ, கிராமத்தில் ஶ்ரீராமாயண உரையாற்றத் தொடங்கினார்.
இராஜாபூரில் தங்கிய போது, தெய்வீக வழிநடத்துதலின் படி துளசிதாஸ் அவர்கள் இராஜாபூரின் அருகில் உள்ள ’நாந்தி’ என்னும் கிராமத்திற்கு செல்வார். ’நாந்தி’ என்பது மகிழ்ச்சி, திருப்தி, மகிழ்ச்சி ஆகியவற்றை குறிக்கும் சொல்லாகும். இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமானை பிரார்த்தனை செய்ததற்காக நாந்தி கிராமத்திற்கு அவர் வழக்கமான வருகை தருவார். நாந்தியில் உள்ள ஸ்ரீ ஹனுமானின் இந்த குறிப்பிட்ட மூர்த்தி சித்தி ஹனுமான் என்று பிரபலம். பல முனிவர்களும் புனிதர்களும் இந்த மூர்த்தியில் தந்திர சக்திகளைத் ஸ்தாபித்துள்ளனர். சித்தி ஹனுமான் முன்னிலையில் துளஸிதாஸர் அவர்கள் ஆழ்ந்த தியானத்தில் மணி கணக்கில் ஆழ்ந்து விடுவார். காலப்போக்கில், இராஜாபூரில் ஸ்ரீ துளசிதாஸின் வருகையும், அவரின் ஸ்ரீமத் ராமாயணத்தின் பிரசங்கமும் நடக்க ஆரம்பித்த பிறகு, அங்குள்ள மக்களின் அவதிகள் குறைய துடங்கின, அவர்களின் நல்ல மாற்றங்களை கண்டனர். மழையானது தொடர்ச்சியாக வர, பயிர்கள் பெருமளவில் விளைய மக்களிடம் தனம் அதிகரித்தது. இது இராஜபூரின் மக்கள் மத்தியில் செழிப்புக்கும் மற்றும் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்தது.
ஒரு முறை ஸ்ரீ துளசிதாஸ் இராஜாபூரிலிருந்து நாந்தி கிராமத்திற்கு போக முடியாமல் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவருக்கு நாந்தி கிராமத்திற்கு சென்று ஶ்ரீஹனுமாரை தரிசனம் செய்ய முடியாமால் இருந்ததால், நாந்தி ஹனுமாரை நினைத்து இராஜாபூரிலேயே யமுனை ஆற்றங்கரையில் தியானத்தில் ஆழ்ந்தார். தாந்திரிக ரூபத்தில் உள்ள ஶ்ரீ நாந்தி ஹனுமார், துளஸிதாஸருக்கு காட்சி தந்து, சந்தன குழம்பினால செய்யப்பட்ட பிம்பத்தில் தன்னை ஆவாஹனம் செய்து இராஜாபூரிலேயே பூஜை செய்யச்சொன்னார். தான் இங்கு மந்திர ரூபமாக இருந்து மக்களுக்கு அருளாசி வழங்குவதாகவும் சொன்னார். அதனால் துளஸிதாஸர் இராஜாபூரில் மந்திர ரூபத்தில் ஶ்ரீஹனுமாரை சந்தன குழம்பில் பிரதிஷ்டை செய்தார்.
மந்த்ரா ரூப ஹனுமானைப் பற்றிய விவரங்களை அறிய "இராஜபூர் சித்திரகூடம் உத்திர பிரதேசம் ஸ்ரீ சங்கட மோச்சன் ஹனுமான்" சொடுக்கவும்
நாந்தி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமான் கடந்த காலத்தில் பல புனிதர்களாலும் முனிவர்களாலும் பூஜிக்கப்பட்டுள்ளார். இந்த க்ஷேத்திரத்தில் உள்ள விக்ரஹத்தில் அவர்கள் பல தந்திர சக்திகளைத் அர்பணித்துள்ளனர். எனவே இந்த ஹனுமாரை "நாந்தி சித்த ஹனுமான்" என்றே அழைக்கப்படுகிறார். மகிழ்ச்சி, திருப்தி, மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்குபவர் இந்த ஶ்ரீஹனுமார் என்பது பிரபலம், அதனாலேயே இந்த கிராமத்திற்கு "நாந்தி" என்ற பெயர் வந்தது.
இந்த க்ஷேத்திரத்திலுள்ள ஸ்ரீ ஹனுமான் ஒரு ஸ்வயம்பூ. ஸ்ரீ ஹனுமான் பக்கவாட்டிலிருந்து தெரிகிறார், மற்றும் நடப்பதுப் போல் காணப்படுகிறார். அவரது இடது தாமரை திருப்பாதம் நமக்கு தெரிகின்றது, ஆனால் அவரது வலது திருப்பாதம் முழுமையாக தெரியவில்லை, கீழ் பகுதி பூமியின் கீழே உள்ளது. அவரின் வால் தலைக்கு மேல் எழுந்திருப்பது போல் அமைந்துள்ளது. அவது வலது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு ’அபயம்’ அளிக்கிறார்.
கோவில் வளாகம் பெரியது, பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள பெரிய அரச மரம், பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வதற்கான அருமையான சூழ்நிலையை அளிக்கிறது. ஶ்ரீதுளஸி தாஸரால் இயற்றப்பட்ட "ஶ்ரீராம் சரித் மானஸ்" இந்த க்ஷேத்திரத்தில் பாராயணம் செய்யப்படுகிறது. இந்த ஸ்ரீ ராமாயண யாகத்திற்கு, சுற்றியுள்ள கிராமங்களிடமிருந்து பக்தர்கள் வந்தது பங்கு கொள்கிறார்கள். அதனை பெரும் பாக்யமாக கருதுகிறார்கள்.
அனுபவம்
"மானஸ் பாட்" என்று அழைக்கப்படும் ஶ்ரீஇராமயண யக்ய பாராயணத்தின்
பின்னணியில் ஶ்ரீநாந்தி சித்த ஹனுமானின் தரிசனம் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் அளிக்கும்
என்பதில் ஒரு ஐயப்பாடும் இல்லை.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜனவரி 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020