தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள கடற்கரையில் அமைந்திருக்கும் கடற்கரை பகுதி சேதுகரை. இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த இடம் பிரபலம். இங்கு கடலில் நீராடுவது, பாபங்கள் அனைத்தும் அகற்றும் என்பதால் யாத்திரிகள் அனைவரும் இங்கு கடல் நீராடுவார்கள். அமாவாசை அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தற்போது இந்த இடத்தில் அனுமாருக்கான ஒரு திருக்கோயிலை தவிர மற்றபடி தனிமைப் பட்டுள்ளது, அங்குள்ள முதியவர்களின் கூற்றுப்படி, இங்கு சத்திரம், பிள்ளையார் கோயில் மற்றும் அதன் முன் பெரிய அழகிய குளம் முதலியவை இருந்தன. ஆனால் இப்பொழுது அவைகள் கேட்பாரற்று, பராமரிப்பற்று இருக்கிறது. எப்படியானால் என்ன யாத்திரிகள் இப்பொழுதும் இங்கு கடலில் நீராடுவதற்கு வந்தவண்ணம் தான் இருக்கிறார்கள்.
இங்கு கடலில் நீராடுவது அப்படி என்ன விசேடம்? ஏன் இந்த கடற்கரையை சேது கரை என்று அழைக்கிறார்கள்? மிகவும் முக்கியமான கேள்விகளே. விடை அறிய நாம் சற்று இராமாயண காலத்திற்கு செல்வோமா? இவ்விடத்தைப் பற்றி இராமாயணத்தில் என்ன கூறியிருக்கிறது?
முதல் முதல் எழுதப்பட்ட காவியம் என்பதால் ஶ்ரீவால்மீகி எழுதிய இராமாயணம் ’ஆதிகாவியம்’ என்றும் ஶ்ரீவால்மீகி ’ஆதிகவி’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இராமாயணம் என்னும் காவியம் ஶ்ரீஇராமனின் என்னும் உத்தமமான புருஷன் - புருஷோத்தமனின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஶ்ரீஇராமன் வாழ்ந்து காட்டியது போல் வாழவேண்டும் என்பது நமது சனாதன தர்மத்தில் நம்பிக்கையுடையவர்கள் வாழ்க்கை குறிகோளாக கொண்டிருக்கின்றனர். நமது தர்ம சாத்திரத்தில் கூறியுள்ள கருத்துகளை தெளிவுற விளக்கிகாட்டுவது ஶ்ரீராமனின் சரிதை. "ராமோ தர்மஸ்ஸ விக்ரவான்" என்பது தர்மத்தின் உருவமாக ஶ்ரீஇராமரை காண்க எனப்பொருள் படும். ஶ்ரீராமர், சீதா, லக்ஷ்மணன், பரதன், சத்ருகுணன், ஹனுமார், இராவணன் ஆகிய எல்லா கதா பாத்திரங்களும் இந்தியா, நேபாள், ஶ்ரீலங்கா, மற்றும் தாய்லாந்து, கம்போடியா, இந்தோநேஸ்யா ஆகிய நாடுகளில் அடிப்படை கலாசாரத்தில் ஊறிப்போனவை.
ஶ்ரீஇராமரின் வாழ்க்கை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அவர் இலங்கைக்கு தனது படையை அழைத்துச் செல்ல பாரதத்திலிருந்து பாலம் நள சேது என்ற பாலம் அமைத்தார் என்பதும் தெரிந்த விசயம் தான். நமது பாரத தேசத்தை விவரிக்க புராணங்கள் "ஆஸேதுஹிமாசல்" என்கிறது - அதாவது தெற்கே சேதுவிலிருந்து வடக்கே ஹிமாசலம் வரை விரிந்து இருக்கும் பூமி பாரத தேசம் என்பதாகும்.
அன்று ஶ்ரீஇராமர் அமைத்த பாலத்தை ’நள சேது’ என்றார், தற்போது அதுவே ’ராம சேது’ என்று அழைக்கப்படுகிறது. நம் பாரதத்தின் தென் கோடியில் அமைந்துள்ள ராம சேது என்பது நம் தேசத்தின் அடையாளம், அணிகலம்.
ஶ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 22ஆம் அத்யாயத்தில் 78ஆம் ஸ்லோகத்தில் வர்ணிக்க பட்டுள்ளது. பாலம் கட்டி முடித்த பிறகு மிக பெரிதாக, அகலமாக அருமையாக கட்டப்பட்டு இருக்கமாக உருதியாக நேர்த்தியாக இருக்கும், உயரிய, தனிப்படக் குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்கிறார் ஶ்ரீஇராமர். மேலும் கூறுகையில் மூவுலகத்தினரும் போற்றும் இது மிகவும் புனிதமான க்ஷேத்திரம், பாவங்கள் அனைத்து துடைத்தெறிந்து விடும் என்கிறார்.
12ஆம் நூற்றாண்டில் இராமாயண காவியத்தை தமிழில் படைத்தவர் கம்பர் அவர்கள். சேதுவை பற்றி கூறுகையில் அவர் ஒரு படி மேலே போய்விட்டார். கங்கை முதலிய ஆறுகளில் முழுகினால் மட்டுமே பாவம் போகும், ஆனால் சேதுவை கண்டமாத்திரத்தில் பாவங்கள் தொலையும், மேலும் அவர்கள் சுரர்கள் [தேவர்கள்] ஆவார் என்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் சிவபிரானின் சடைத்தொகுதியில் பொருந்தியுள்ள கங்கா நதித் தேவி தான் சேதுவாக ஆகப் பெறாமல் போய்விட்டோமே என்று வருந்தி பெரிய தவத்தைச் செய்கின்றாள்; என்றால் வேறான இந்தச் சேது அணையின் தூய்மையை எவ்வாறு சொல்வேன்?. என்று சேதுவின் பெருமையை வர்ணிக்கிறார்.
அத்யாத்மிக இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 14ஆம் அத்தியாயத்தில் சீதைக்கு ஶ்ரீஇராமர் பாதையை வர்ணிப்பதாக வருகிறது. ஸ்லோகம் 5 மற்றும் 6 சேது மூவுலகத்தினரும் போற்றும் இது மிகவும் புனிதமானது என்றும் இதனை பார்த்த மாத்திரத்தில் பாவங்கள் விட்டொழியும் என்றும் கூறுகிறது.
கிஷ்கிந்தையிலிருந்து இலங்கைக்கு கடந்து வந்த பாதையை ஶ்ரீஇராமர் ஶ்ரீசீதா தேவிக்கு இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் அயோத்தியாவிற்கு திரும்புகையில் கூறுவது போல் வால்மீகி இராமாயணத்தில் அமைந்திருக்கிறது. யுத்த காண்டம் அத்தியாயம் 123இல் ஸ்லோகம் 15 முதல் 21 வரை ஆதி சேதுவிலிருந்து இலங்கை வரையிலான பாதையை தலைகீழாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 15ஆம் ஸ்லோகத்தில் இலங்கையில் தனது சேனை வந்து இறங்கி இரவு தங்கிய இடத்தை காண்பிக்கிறார். 16ஆம் ஸ்லோகத்தில் சீதாவிற்காக நளனால் கடலில் கட்டப்பட்ட சேது என்றும் மற்றவரால் கட்டப்படுவது கடிணம் என்றும் கூறுகிறார், 17வது ஸ்லோகம் கடலின் வர்ணனை. 18வது ஸ்லோகம் மைநாக மலையை பற்றியும் அனுமனுக்கு உதவ முன்வந்தது பற்றியும் கூறுகிறார். 19ஆம் ஸ்லோகத்தில் வானர சேனை கடல் நடுவில் தங்கிய இடமும், மகாதேவன் [சிவனார்] தன்னை ஆசீர்வதித்தது பற்றியும் கூறுகிறார். கடல் நடுவில் என்று கூறுவதால் இவர் குறிப்பிட்ட இடம் ஒரு தீவு என்பது தெரிகிறது. 20வது ஸ்லோகம் "சேதுபந்த" என்னும் ஓர் இடத்தை மாபெரும் கடலின் கரையை காண்பித்து மூவுலகத்தினரும் போற்றும் இது மிகவும் புனிதமான க்ஷேத்திரம், பாவங்கள் அனைத்து துடைத்தெறிந்து விடும் இங்கு தான் விபீஷணன் முதலில் வந்தார் என்கிறார்.
அத்யாத்மிக இராமாயணம், கம்ப இராமாயணம் இரண்டிலும் வால்மீகி கூறியதை போல் தான் அமைந்திருக்கிறது. அனேகமாக வித்யாசமில்லை.
19ஆம் ஸ்லோகம் கூறும் தீவு தற்போதய இராமேஸ்வரமாக தான் இருக்கும் ஏன்னெனில் ஶ்ரீமகாதேவன் தன்னை அவரது பிரஸாதத்தை வழங்கினார் என்கிறார். சற்றே வடக்கே சென்று கடற்கரையில் ஒரு இடத்தை "சேது பந்த" என்றும், இங்கு தான் விபீஷணன் முதலில் வந்தார் என்பதையும் கூறுகிறார். அதாவது விபீஷண சரணகதி ஆன இடம்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் கடற்கரை பகுதியில் "சேது கரை" என்று வழங்கப்படும் இடம் உள்ளது. இங்கிருந்து தான் இலங்கைக்கு இராமர் பாலம் அமைத்தார் என்று தொன்று தொட்டு நெடு காலமாக "ஆதி சேது" என்று போற்றப்பட்டு வருகிறது.
மேலே கூறப்பட்டுள்ளவற்றை எல்லாம் நோக்கினால் "சேது கரை" என்று இன்று அழைக்கப்படும் க்ஷேத்திரம் தான் ஶ்ரீஇராமர் இலங்கைக்கு [நள சேது என்று அவர் அழைத்த] பாலம் அமைக்க தேர்வு செய்து ஆரம்பித்த இடம் என்பது விளங்கும். விபீஷணர் இங்குதான் சரணாகதி அடைந்தார் என்பதும் விளங்கும். இந்த க்ஷேத்திரத்தை தான் ஶ்ரீஇராமர் "பரமம் பவித்ரம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறியதற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகிறது ஶ்ரீஇராமரின் தர்பஸயன படலம். விபீஷணர் ஶ்ரீராமரிடம் சரணாகதி அடைந்த பிறகு, இலங்கையை தனது வானர சேனையுடன் அடைய, அவர் கடல் மீது பாலம் கட்டுவது என்பதை தீர்மானிக்கிறார். அதன் பொருட்டு கடலரசனிடம் வழிவிட்டு கொடுக்க வேண்டுகிறார். பிறகு, மூன்று நாட்கள் கடலரசனிடமிருந்து செயலை எதிர்பார்த்து, தர்ப்பயால் செய்யப்பட்ட கம்பளத்தில் அமைதி காக்கிறார். அப்படி ஶ்ரீஇராமர் தர்பஸயனம் செய்து கடலரசனின் செயலுக்கு காத்திருந்த இடம் ஆதி சேதுவிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த இடத்தில் திருக்கோயிலும் உள்ளது. அந்த க்ஷேத்திரத்திற்கு "திருப்புல்லாணி" என்பது பெயர். திருப்புல்லாணி என்பது புனித தர்பாஸனம் என்பதின் தமிழாக்கம் ஆகும்.
மூன்று நாட்கள் காத்திருந்த ஶ்ரீஇராமர் கடலை வற்ற வைத்துவிட சூள்ளுரைகிறார். கடலரசன் ஶ்ரீஇராமர் முன் தோன்றி பாலம் கட்ட தான் ஆனது செய்வதாகவும் அதே சமயம் கடல்வாழ் ஜந்துகளை காப்பாற்றும் வண்ணம் தான் அதை நிறைவேற்றுவதாகவும் வேண்டுகிறான். மற்றும் ஶ்ரீஇராமரிடம், விஸ்வகர்மாவின் புதல்வனான நலன் பாலம் கட்ட நல்ல வல்லுனர் என்பதையும் தெரிவிக்கிறான்.
அப்படியாக விஸ்வகர்மாவின் புதல்வன் நளனால் கடல் மீது சேதுகரையிலிருந்து இலங்கை வரை பாலம் அமைக்கப்படுகிறது. பாலம் கட்டி முடித்த பிறகு ஶ்ரீஇராமர் அதற்கு "நள சேது" என்று பெயர் சூட்டுகிறார்.
இவை எல்லாம் தொகுத்து பார்க்கும் பொழுது நமது பாரதத்தில் நள சேதுவின் ஆரம்பம் சேது கரை என்று அழைக்கப்படும் கடற்கரையில் இருப்பது சாத்யம் என்பது உறுதியாகிறது. பழைய கல்வெட்டுகளிலும், நூல்களிலும் "சேது கரை" என்பது காணப்படுவதுவும் இதற்கு வலு சேர்க்கிறது.
முதலில் கூறியபடி சேது கரையில் ஶ்ரீஅனுமாருக்கு ஒரு திருக்கோயில் உள்ளது. கடலை நோக்கி உள்ளது இக்கோயில். கடலரிப்பிலிருந்து தப்ப கடலை ஒட்டி சற்றே வலுவான மதில் சுவர் உள்ளது. கோயிலை ஒட்டிய கடல் பகுதியில் பல சிற்பங்கள் ஒதுங்கியுள்ளது. பல சிற்பங்கள் பின்னப்பட்டவைகளாகவே இருக்கின்றன. பழைய காலத்தில் இங்கு கோயில்களோ அல்லது பூஜைக்குறிய சிற்பங்களோ இருந்திருக்க வேண்டும், காலப்போக்கில் இவை கடலுக்கு இரையாகியிருக்கலாம். தற்பொழுது உள்ள திருக்கோயில் மிக எளிமையான கோயில். பெரிய கூடம் தான் கோயில். அக்கூடத்தின் மேற்கு பக்கமாக நடுவில் கர்ப்பகிரஹம். கர்ப்பகிரஹத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் உள்ளார். திருக்கோயில் புதிதாக இருந்தாலும், ஶ்ரீஆஞ்சநேயர் சிலை மிக பழமை வாய்ந்ததாக உள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்கு "சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர்" என்பது திருநாமம்.
இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயரின் சிலை, நாயக்கர்கள் கால கலை அமைதியுடன் காணப்படுகிறது. இவ்வாஞ்சநேயரின் சிற்பம், தஞ்சாவூர் வல்லம், ஶ்ரீரங்கம் ரங்கவிலாஸ், மன்னார்குடி இராஜகோபுரம் ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பத்தை ஒத்துள்ளது. இவை அனைத்தும் தஞ்சாவூர் நாயக்கர்கள் பங்களிப்பு. சிறிய வித்யாசம் என்றால் இந்த மூன்று க்ஷேத்திரங்களிலும் ஶ்ரீஆஞ்சநேயர் கல்லால் ஆன "திருவாச்சி"யுடன் காணப்படுகிறார் ஆனால் சேது கரையில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கல்திருவாச்சி இல்லை.
இந்த க்ஷேத்திரத்திலுள்ள ஆஞ்சநேயர் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் அமைதி தருபவராகவும் உள்ளார். ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் சுமார் ஏழு அடி உயரமுள்ளார். கடலில் நள சேதுவை பார்த்த வண்ணம் இருக்கிறார். அவருடைய இரு திருப்பாதங்களும் நேர பார்த்த வண்ணம், சேதுவில் நடப்பதற்கு தயாராக இருப்பது போல் உள்ளது. பாதங்களை தண்டைகள் அலங்கரிக்கின்றன. இடுப்பில் சங்கலியில் இணைக்கப்பட்ட கத்தியிருக்கிறது. அவரது தூக்கிய வலது திருக்கரத்தால் ’அபய முத்திரை’ காட்டி பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். அவரது இடது திருக்கரம் ’சௌகந்திகா’ மலரின் காம்பினை மார்போடு பிடித்துள்ளது.
பகவானின் முககமலம் மலர்ச்சியாகவும், அழுத்தமாகவும், நேர் கொண்ட பார்வையாகவும் உள்ளது. காதில் அணிந்திருக்கும் குண்டலம் தோள்களை தொட்டவண்ணமுள்ளது. அவரது கேசம் அழகாக கட்டப்பட்டுள்ளது [பின்புறம் என்பதால் பார்க்க முடியாது]. அவரது வால் கால் அருகாமையில் சுருண்டு உள்ளது [பின்புறம் என்பதால் பார்க்க முடியாது]. பகவானின் மலர்ந்த கண்கள், விழிப்புடனும் அதே சமயம் அமைதியுடனும், சாந்தமாகவும் உள்ளது. பல்வேறு பாவங்கள் அந்த அழகிய மலர்ந்த கண்களில் ஒளிப்பது விசேடமே.
சீதாபிராட்டியாரை மீட்க வானர சேனையுடன் இலங்கை செல்ல ஸ்ரீஇராமர் நள சேது கட்டியதை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் தீர்த்தவாரி உத்ஸவம் மிக விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது. திருப்புல்லாணி ஆதி ஜகன்நாதர் மற்றும் பட்டாபிஷேக இராமர் உத்ஸவர்கள் இங்கு ஆதி சேதுவிற்கு வந்து கடலில் தீர்த்தவாரி செய்வார்கள்.
சேது பந்தன ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் திருப்புல்லாணி ஆதி ஜகன்நாதர் மற்றும் பட்டாபிஷேக இராமர் உத்ஸவர்களுக்கு விசேட அபிஷேகங்கள் செய்விக்கப்படும். அதை அடுத்து ஶ்ரீஆஞ்சநேயருக்கும் விசேட அபிஷேகம் நடக்கும்.
அனுபவம்
ஶ்ரீஇராமருக்காகவும் ஶ்ரீசீதா பிராட்டிக்காகவும் நளனால் கட்டப்பட்ட சேதுவை
காவல் புரியும் சேது பந்தன ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயரை நிச்சயம் தரிசனம் செய்யவும். பிரகாசமான சேதுகரை இறைவனின் கண்கள்
எல்லா பாவங்களை போக்கும், துயரங்களை துடைத்தெரியும், ஆசிகளும் வழங்கும்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020