home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ரொகாடியா ஶ்ரீ அனுமான் மந்திர், போர்பந்தர், குஜராத்


ரொகாடியா ஶ்ரீ அனுமான் மந்திர், போர்பந்தர், குஜராத்

ஜீ.கே.கௌசிக்


போர்பந்தர்

குஜராத், போர்பந்தர், ரொகாடியா அனுமான் மந்திரின் பக்கவாட்டு தோற்றம் தேச தந்தை மகாத்மா காந்தி பிறந்த இடம் என்பதால் போர்பந்தர் அனேகமாக பல பாரததேசவாசிகளுக்கு தெரிந்திருக்கும். பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பன் சுதாமா [குசேலர்] பிறந்த ஊர் என்பதாலும் பலருக்கு இவ்வூர் தெரிந்திருக்கும். துவாரகைக்கு செல்லும் வழியில் வருவதால் அனேகமாக சுற்றுலா பயணிகள் இவ்வூருக்கு வருவதுண்டு. மகாத்மா காந்தி பிறந்த இடம் ’கீர்த்தி மந்திர்’ என்ற பெயரிலும், குசேலர் பிறந்த இடம் ’சுதாமா மந்திர்’ என்ற பெயரிலும் இங்கு அழைக்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் கடற்கரையில் அமைந்துள்ள இவ்வூர் மிகவும் பழமையான, தொன்மையுமான இடம். ஹரப்பா கலாசாரத்திற்கு [கி.மு. 16-14 நூற்றாண்டு] தொடர்பு உடைய இடம் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இதே போல் ஹரப்பாவிற்கு சம்பந்தபட்ட மற்றொரு இடம் - குஜராத்தில் உள்ள பேட் துவாரகா ஆகும்.

போர்பந்தர் என்னும் இந்த கடற்கரை பட்டிணம் 1193ஆம் ஆண்டு ’ரக்ஷாபந்தன்’ [தமிழ் மாதம் ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் நன்நாள்] தினத்தன்று நிருவப்பட்டு ’புரவேலகுல்’ என்று பெயர் சூட்டப்பட்டது. பின்பு இவ்வூரை ஶ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பன் சுதாமாவின் பெயரில் ’சுதாமாபுரி’ என்று அழைக்கலாயினர். 1785ஆம் ஆண்டு இந்நகரம் போர்பந்தர் என பெயரினை பெற்றது. சௌராஷ்ட்ரா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இவ்வூர் ’ஜாத்வா’களின் ஆட்சி காலத்தில் சிறந்த வியாபர தலமகாவும், மிக பெரிய கப்பல் துறைமுகமாகவும் வளர்ந்தது.

ராஜபுத்ர வம்சத்தினை சேர்ந்த ’ஜாத்வா’கள் 16ஆம் நூற்றாண்டில் இங்கு தங்களது ஆட்சியினை தொடங்கினார்கள். சில காலம் குஜராத்தை சேர்ந்த மொகல் சாம்ராஜ்யத்தின் கீழும், பின் மரட்டிய சாம்ராஜ்யத்தின் கீழ் - பரோடாவை சார்ந்த கேய்க்வாட், பின் பேஷ்வாகள் கீழும், பின் ஆங்கிலேயர்களுக்கு உட்பட்ட ராஜ்யமாகவே இது இருந்தது.

குஜராத்தில் அனுமான் வழிபாடு

குஜராத், போர்பந்தர், ரொகாடியா அனுமான் மந்திரின் மற்றொரு தோற்றம் குஜராத்தில் ஶ்ரீகிருஷ்ண வழிபாட்டினை பின்பற்றுபவர்கள் அதிகம். ஶ்ரீஅனுமாரை வழிபாட்டு தெய்வமாக பின்பற்றுபவரும் இங்கு அதிகம். ஶ்ரீஅனுமாரையும் அவரது மகன் ஶ்ரீமகரதுவஜனையும் சேர்ந்தே வழிபடுவார்கள். இவர்களின் வழிபாடு ஜத்வாக்கள் அரசாளும் போது அதிகமாயிற்று. ஜாத்வா குலம் ஶ்ரீமகரதுவஜனின் வம்சம் என்பர். அதனால் அவர்கள் ஶ்ரீஅனுமார் மற்றும் ஶ்ரீமகரதுவஜன் இருவரையும் வழிப்பட்டு வந்தனர்.

போர்பந்தரின் ஜாத்வா வம்சம்

க்ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த ஜாட்வாக்கள், தங்களை மகரதுவஜனின் பிள்ளைகள் என்பார்கள். புராணங்களின்படி மகரதுவஜனுக்கு மோத்துவஜன் என்பவர் பிள்ளை, அவரது பிள்ளை ஜிதி-துவஜன் என்பவர். இவரின் பெயரை ஆதாரமாகக் கொண்டு ஜாத்வா பரம்பரை அழைக்கப்படுகிறது. அதனாம் இவர்கள் தங்கள் மூதாதயரான ஶ்ரீஅனுமாரை ஆராதிப்பதை கடைபிடிக்கிறார்கள். ஜாத்வாகள் குஜராத்தில் கதியவார், போர்பந்தர் ஆகிய இடங்களிலில் ஆட்சி செய்திருக்கின்றனர். போர்பந்தர் இவர்கள் அரசாட்சியில் இருந்த பொழுது இவர்களது அரசு கொடியில் ஶ்ரீஅனுமாரின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அதனால் போர்பந்தரில் ஶ்ரீஅனுமார் வழிபாடு மிக அதிக அளவில் காணப்படுவது ஆச்சரியமில்லை. குசேலரின் பிறந்த இடமாகிய ’சுதாமா மந்திர்’ - இங்கும் ஶ்ரீஅனுமாரினை வழிபடுகின்றார்கள்.

போர்பந்தரின் ரொகாடியா ஶ்ரீஅனுமார்

குஜராத்தில் பல சாதுகளும், மகான்களும் ஶ்ரீஅனுமாரை தீவீரமாக வழிபட்டுள்ளார்கள். அப்படி ஒரு மகான் போர்பந்தரிலும் இருந்தார். கடலிலில் இருந்து பிரியும் கழியின் அப்புறம் அவர் அமைதி காத்து வாழ்ந்து வந்தார். ஒர் சிறிய கூழாங்கல்லில் ஶ்ரீஅனுமாரை ஆவாகனம் செய்து பூஜித்து வந்தார். அவர் சுமார் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தார் என நம்பபடுகிறது. அவரிடம் மக்கள் தங்கள் குறையை கூறி அதற்கு தீர்வு தேடினார்கள். அம்மகான் ஶ்ரீஅனுமாரிடம் தனக்காக எதையும் கேட்கவில்லை, வந்திருக்கும் பக்தர்களுக்கு இருக்கும் குறையை கேட்க சொல்லி ஶ்ரீஅனுமாரிடம் பிராத்திப்பார். அவ்வளவு தான். மக்களின் குறைகள் தீர்வாகியது, அதுவும் மிக விரைவில் பிரார்த்தனைகளுக்கு விடைகிடைத்தது.

ரொகாடியா ஶ்ரீஅனுமார் மந்திர்

அம்மகான் வாழ்ந்த இடத்தில் இன்று மிக பெரிய அனுமார் கோயில் வளாகம் "ரொகாடியா அனுமார் மந்திர்" என்ற பெயரில் இருக்கிறது. இங்குள்ள அனுமார் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார் என்பதால் இவருக்கு "ரொகாடியா ஹனுமார்" என்று பெயர். குஜராத்தி மொழியில் ரொகாடியா என்றால் - உடனுக்குடன் என்று பொருள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய அனுமார் சிலையும் இங்கு நிறுவப்பட்டது. இருந்தும் இன்றும் அம்மகான் பூஜித்த அனுமாருக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.

துளசிஶ்யாம் சாலையும் பவநகர் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ளது இந்த வடக்கு நோக்கிய "ரொகாடியா ஶ்ரீஅனுமார் கோயில்"

கோயில் வளாகம்

குஜராத், போர்பந்தர், ரொகாடியா அனுமான் மந்திரின் குளுமைமிகு தோற்றம் கோயில் வளாகம் மிக பெரியதாக உள்ளது. முதலில் பூக்கும் செடிகளும், மரங்களும் நிறைந்த பெரிய திறந்த வெளி. பக்தர்கள் இளைபாற, மனதினை ஒருமை படுத்த உதவும் குளுமை இது. கோயில் என்பது கருவறை மற்றும் அதன் முன் இருக்கும் மிக பெரிய முன் மண்டபம் அவ்வளவு தான். உயர்ந்த மேற்கூறையும் பெரிய கதவுகளுடன் கூடிய மண்டபமும் இதனை மிகவும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது. இம்மண்டபத்தில் நுழையும் பொழுதே பக்தர்கள் அமைதியான மனதுடன் தான் வருவார்கள். இம்மண்டபத்தின் அமைதியும் குளுமையும் பக்தர்களின் மனதினை பக்குவ படுத்தி வைக்கும். அவர்கள் பிராத்தனைகள் சீராக அமைய ஏற்ற சூழல் இது.

ரொகாடியா ஶ்ரீஅனுமார்

சுமார் எட்டடி உயரமுள்ள சிலாரூபத்தில் இறைவன் காட்சி தருகிறார். தூக்கிய அவரது இடது திருப்பாதத்தின் கீழ் சனீஸ்சரனின் தலையும், அவரது வலது திருப்பாதத்தின் கீழ் சனீஸ்சரனின் கால்களும் அழுந்தியுள்ளது. இரு திருப்பாதங்களையும், நூபூரம் அலங்கரிக்கிறது. தூக்கிய அவரது இடது திருக்கரத்தில் ’சஞ்சீவினி மலை’யை தாங்கியுள்ளார். அவரது வலது திருக்கரம் கதையை பிடித்துள்ளது. இரு திருக்கரங்களையும் அலங்கரிக்கும் கேயூரம், கங்கணம் முதலின மேலும் திருக்கரத்திற்கு அழகு சேர்க்கிறது. மார்புகளில் அணிகலங்கள் உள்ளன. தலையில் மேல் அவரது வால் தெரிகிறது. காதினை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. அழகிய கீரிடம் அவரது தலையினை அலங்கரிக்கிறது. காருண்யம் மிக்க கண்கள். நம்பிக்கையூட்டும் அவரது பார்வை பக்தர்களின் மனதினை வருடிச் செல்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     போர்பந்தர், ரொகாடியா அனுமான் மந்திர்

 

அனுபவம்
பக்தர் தம் மனதினை அமைதியுடன் ரொகாடியா அனுமாரை நினைக்க, அமைதியான சூழலில் குடியிருக்கும் அவ்வனுமார் பக்தருக்கு நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் அருளுவார் என்பது தின்னம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: டிசம்பர் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+