home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆம்பூர், வேலூர் மாவட்டம், தமிழ் நாடு


ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆம்பூர், வேலூர் மாவட்டம், தமிழ் நாடு

ஜீ. கே. கௌசிக்


ஆம்பூர்

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆம்பூர் இன்று, தோல் பொருள்கள், காலணிகள் செய்வதினால் பிரபலம். ஆம்பூர் இரயில் நிலையம் சென்னை-பெங்களூரு மார்க்கத்தில் வருகிறது. அனேகமாக எல்லா இரயில்களும் நின்று செல்லும். ஆம்பூர் என்பது "நம் ஊர்" என்பதாக பொருள்படும். இம்மார்கத்தில் அதிகம் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இங்கு விற்கப்படும் மல்லி சரம் பிரசித்தம். சரித்திர பார்வையாளர்களுக்கு இவ்வூர் ஆங்கிலேயர்களுக்கும் பிரன்ச் தேசத்தினருக்கும் நடந்த இரண்டாம் கர்நாடக போரை நினைவுபடுத்தும். 1749இல் நடந்த போர் இந்தியாவில் ஆங்கிலேயர்களா அல்லது பிரன்சா என்பதனை தீர்மானிக்கும் போர் அது. ஹைதர் அலி இங்கு முற்றுகை இட்டதாக வரலாறு கூறுகிறது, அப்படியானால் இங்கு கோட்டை இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் கோட்டை இருந்ததாக யாருக்கும் தெரியவில்லை, கோட்டை இருந்த இடம் என்றும் எதையும் குறிப்பிட்டு கூறுவதில்லை. ஒரு காலத்தில் அதாவது 15, 16 நூற்றாண்டுகளில் இவ்வூர் விஜயநகர் சாம்ராஜ்யத்தின் கீழும் இருந்திருக்கிறது. அதனால் இங்கு கோயில்கள் நிறைய இருந்திருக்க வேண்டும் முக்கியமாக ஆஞ்சநேயருக்கு.

ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் கோயில்

ஶ்ரீஆஞ்சநேய பக்தர்கள் பலருக்கு இந்த ஊர் தெரிந்திருக்கும். இங்குள்ள "ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் கோயில்" மிகவும் பிரசுத்தம். "பெரிய" என்பது இங்கு ஶ்ரீஆஞ்சநேயரின் திருஉருவத்தினை கொண்டு வந்த அடைமொழியாகும். ஶ்ரீஆஞ்சநேயர் இங்கு சுமார் பதினோரு ஆடி உயரம் திருஉருவம் கொண்டுள்ளார். இரயில் நிலயத்திலிருந்தும், பெரிய பஸ் ஸ்டாப்பிலிருந்தும் இக்கோயில் சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. குறுக்கு பாதையில் நடந்து வந்தால் ஒரு கி.மீ. தொலைவு இருக்கும். இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயர் சனி பகவானை தன் காலடியில் வைத்திருப்பதால் மிகவும் பிரபலம். ஆனால் சனி பகவான் இவர் காலடியில் இருப்பதற்கு இக்கோயிலில் கூறப்படும் புராணம் செங்கல்பேட் ஆஞ்சநேயர் புராணத்திலிருந்து சற்றே மாறுபட்டது

புராணம்

ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆம்பூர், வேலூர் மாவட்டம், தமிழ் நாடு இலங்கை வேந்தன் இராவணன் எல்லா தேவதைகளையும், நவகிரஹங்களையும் வென்று தனக்கு அடிமையாக்கினான். சீதா மாதாவை இலங்கைக்கு கடத்திவந்து அசோக வனத்தில் சிறை வைத்திருந்தான். ஶ்ரீஆஞ்சநேயர் சீதா மாதாவின் இருப்பிடம் தெரிந்து வந்து ஶ்ரீராமரிடம் கூறுகிறார். சீதா மாதாவை மீட்க ஶ்ரீராமர் இலங்கைக்கு படை எடுத்து சென்று, இராவணனுடன் போர் புரிகிறார். அப்போரில் லக்ஷ்மணர் மூற்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஜாம்பவானின் யோசனையின் பேரில் ஹிமாலத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர வேண்டும். அதற்காக ஶ்ரீஆஞ்சநேயரை ஆயத்தப் படுத்த சொல்கிறார்கள். இதை அறிந்த அசுர குரு சுக்ராசாரியார் ஆஞ்சநேயரை தடுத்து நிறுத்த இராவணனிடம் சொல்கிறார். சனி பகவானை அனுப்பி ஆஞ்சநேயரின் கால்களை பிடித்து வைத்துக்கொள்ளுமாறு யோசனை சொல்கிறார். இராவணனும் சனியிடம் குருவின் கட்டளையை நிறைவேற்ற சொல்கிறான். ஆனால் சனி கிளம்புவதற்கு முன்பே ஆஞ்சநேயர் ஹிமாசலம் சென்று மூலிகை மலையை எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். சனி பகவானை பாதையில் பார்த்ததும் இது இராவணனுடைய வேலை என்பதை அறிந்துக் கொண்டார். சனி தன் காலை பிடிக்கும் முன், இவர் சனியை தன் காலின் கீழ் கொண்டு வந்தார். அழுத்திய அழுத்ததில் வலி தாங்காமல் சனி தன்னை விட்டுவிடும் படியும் தன்னை மன்னித்துவிடும் படியும் ஶ்ரீராமரை துதிபாடினார். ஶ்ரீராமரின் துதியை கேட்ட ஆஞ்சநேயர் சனியினை தன் பிடியிலிருந்து விட்டுவிட்டு இலங்கை நோக்கி பறந்தார்.

பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம்

கோயில் இருக்கும் வீதியின் நுழைந்ததும் கோயில் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள தோரண வாயில் தெரிகின்றது. தோரண வாயிலில் நுழையும் முன்பே வலபுறம் பெரிய கொட்டில் இருக்கிறது. அங்கு "கோசாலை" அமைக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. அதை அடுத்து அன்னதான கூடம் இருக்கிறது. சுமார் இருநூறு பேர் சாப்பிடுவதற்கான வசதிகள் இங்கு உள்ளது. தினமும் இலவச மதிய உணவு அளிக்கப்படுகிறது.

தோரண வாயிலை கடந்தால், இடது புறம் நிர்வாக கட்டடம் உள்ளது. வலது புறம் திருக்கோயிலுக்கான மடப்பள்ளி உள்ளது. அருகில் வைஷ்ணவ குறியீடான "திருநாமம்" இருபுறமும் சங்கு, சக்கிரத்துடன் பெரிய அளவில் அழகாக சிமிண்டில் கட்டப்பட்டுள்ளது. நடுவில் இருக்கும் திறந்த வெளியில் சுமார் பதினைந்து அடி உயரமுள்ள தீப ஸ்தம்பம் கர்பகிரஹத்தை பார்ப்பது போல் உள்ளது. பக்தர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். அதை ஒட்டி பெரிய அகலமான கூடம். அதனை ஒட்டி கர்ப்பகிரஹம். பக்தர்கள் கூடத்திலிருந்த வண்ணம் பெரிய ஆஞ்சநேயரை வழிபடலாம். தீபஸ்தம்பத்திலிருந்து மூலவர் காணப்படமாட்டார் ஆனால் மற்றொறு ஆஞ்சநேயர் காட்சி தருவார். மூலவர் ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் கர்ப்பகிரஹத்தின் வாசல் கதவிற்கு சற்றே இடதுபுறமாக உள்ளார். அதனால் கர்ப்பகிரஹத்தின் வாசல் கதவுக்கு அருகாமையிலிருந்து மட்டும் தான் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியும்.

ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர், ஆம்பூர், வேலூர் மாவட்டம், தமிழ் நாடு பிரதக்ஷணம் மூலவர் உள்ள கர்ப்பகிரஹம், பெரிய கூடம் இரண்டையும் சேர்த்தே செய்ய வேண்டும். மூன்று பக்கங்களிலும் சங்கு சக்ரம் திருநாமம் வரையப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹத்தின் நேர் பின்புறம் நாலுகால் மண்டபம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் 1489இல் வடிக்கப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. கல்வெட்டின் வாசகங்கள் 1489இல் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மண்டலேஸ்வரர் ஶ்ரீஉத்திர சதாசிவ ராயர் என்பவர் ஆம்பூர் வாழ் பலிச்சா நாயுடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இக்கோயிலை புணர்நிர்மானம் செய்ததாக அறிவிக்கிறது.

தென் மேற்கு மூலையில் ஸ்தல விருஷமான நெல்லிமரம் உள்ளது.

ஶ்ரீபெரிய ஆஞ்சநேயர்

பகவான் ஶ்ரீபெரிய ஆஞ்சநேயர் சுமார் பதினோரு அடி உயரமுள்ளார். அர்தசிலா வடிவில் [புடைப்பு சிலை அமைப்பு] அமையப்பட்டு இருக்கும் இவர் கிழக்கு நோக்கி நடக்கிறார், அவரது இடது திருக்காலினை முன் வைத்துள்ளார். அவரது வலது திருக்கால் பூமியிலிருந்து சற்றே தூக்கியுள்ளது. சனி பகவான் ஆஞ்சநேயரின் கமல திருபாதத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். சனியின் தலை அவரின் இடது திருபாதத்தின் கீழ் அகப்பட்டுள்ளது, சனியின் கால்கள் அவரின் வலது திருபாதத்தின் கீழ் உள்ளது. சனி பகவானின் முகம் யாரையும் நோக்காமல் பூமியை நோக்கியுள்ளது. கங்கணமும் கேயுரமும் அணிந்துள்ள அவரது இடது திருக்கரம் சௌகந்திகா மலரின் தண்டை பிடித்திருக்கிறது. பூத்தும் பூக்காத அம்மலர் அவரின் இடது தோளுக்கு மேல் தெரிகிறது. மார்பினில் மூன்று மணிமாலைகள் அணிந்துள்ளார். அவர் அணிந்திருக்கும் முப்புரி நூல் அழகாக பிரகாசமாக தோளிலிருந்து நளினமாக இறங்குகிறது. அவரது வால் தலைக்கு மேல் உயர்ந்து நுணி வளைந்து அதில் மணியுடன் காணப்படுகிறது. அவரது வலது திருக்கரம் அபயம் என்று பக்தர்களுக்கு கூறுகிறது. காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. பிரம்மசாரிகளுக்கே உள்ளது போல் சிகை அலங்காரம். தலையை சுற்றி அணிந்திருக்கும் அணிகலம் கீரிடம் போல் இருக்கிறது. பிரகாசமான கண்கள் காருண்யத்தை பக்தர்களுக்கு அள்ளி வழங்குகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆம்பூர்

 

அனுபவம்
சனியை தன் காலின் கீழ் கிடத்தியிருக்கும் பகவான் ஶ்ரீபெரிய ஆஞ்சநேயர் தனது கருணை மிகு பார்வையால் பக்தர்களின் பாவங்களை அழித்து அருள்வார் என்பது தின்னம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மார்ச் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+