home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கோமேய்-மாருதி - ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக், மகாராஷ்டிரா

கோமேய்-மாருதி - ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம்
தாக்லி, நாசிக், மகாராஷ்டிரா

ஜீகே கௌசிக்


புகைப்பட உபயம்: டாக்டர் துஷார் கோட்போலே, நாசிக்

புகைப்பட உபயம்: ஸ்ரீ. கணேஷ் போர்ஸ், நாசிக்

ஸ்ரீ சமர்த்த ராம்தாஸர்

ஜம்பா க்ஷேத்திரத்தில் ஸ்ரீ சூர்யாஜி பந்த் மற்றும் ரானுபாய் ஜோடிகளின் இரண்டாவது மகன் ஸ்ரீ நாராயணன். இவர் பிற்காலத்தில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் என்று புகழுடன் விளங்கியவர். ஸ்ரீராம நாமாவையும் உலகளாவிய அன்பையும் அதன் மகத்துவத்தையும் பிரசாரம் செய்தவர். இந்த துறவியின் சிறு சுயசரிதை நமது இணைய தளத்தின் ‘ ஸ்ரீ ஹனுமத் பக்தர்கள் ’ பிரிவில் தயவுசெய்து படிக்கவும்.

ஸ்ரீ நாராயணனின் திருமணம்

ஸ்ரீ நாராயணனின் தாய் ரானுபாய் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார், ஆனால் நாராயணன் திருமணத்திற்கு தயக்கம் காட்டினார். ‘மங்களாஷ்டகம்’ [திருமணத்துடன் தொடர்புடைய ஒரு சடங்கு] கேட்க விரும்புவதாக தாய் தன் மகனிடம் கெஞ்சியபோது, ​​அவர் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். ஆண்டு 1620 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட நாளில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஜம்பா கிராமம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இதனை கொண்டாட தயாராயினர். திருமணத்திற்காக ஸ்ரீ நாராயணன் சிறப்பு உடையணிந்து இருந்தார்.

மங்களாஷ்டகம் [எட்டு] ஸ்லோகங்கள் ஓதப்பட்டு ஒவ்வொரு ஸ்லோகாவின் முடிவிலும் ‘சுலக்னே சவதானம்’ உச்சரிக்கப்பட்டது. ஏழாவது ஸ்லோகத்திற்கான சடங்குகள் வழக்கம் போல் சென்றன, ஆனால் மங்களாஷ்டகத்தின் எட்டாவது ஸ்லோகம் பாராயணம் செய்யப்பட்டு திரையைத் தூக்கியபோது, ​​அவர்கள் கண்டது மணமகன் ஸ்ரீ நாராயணனைச் சுற்றி கூடியிருந்த மக்களை ஆச்சரியப்படுத்தியது. அங்கு நாராயணனை காணவில்லை. யாரும் கவனிக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிய நாராயணன், இடத்திற்கு வெளியே இருந்த மரத்தில் ஏறி ஓடும் ஓடையில் குதித்தார். ஆற்றின் குறுக்கே நீந்தி, சில மைல் தூரம் மனம் சென்ற வழியில் சென்றார்.

ஸ்ரீ நாராயணனின் மூத்த சகோதரர் ஶ்ரீ கங்காதரர், ஸ்ரீ நாராயணன் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்றும் அவர் ‘மகாபுருஷர்’ என்றும், எனவே அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களின் தாய் ரானுபாயை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். மங்களாஷ்டகத்தை அவள் கேட்க விரும்பியதால், நாராயணன் அதற்கு ஒப்புக் கொண்டார், திருமணத்திற்காக அல்ல என்றும் சமாதனப்படுத்தினார்.

ஸ்ரீ ராம்தாஸ்

ஸ்ரீ சமர்த் ராம்தாஸ் மற்றும் சிவாஜி, ஸ்ரீ கோமே மாருதி மந்திர், தாக்லி, நாசிக் இதற்கிடையில், ஸ்ரீ நாராயணன் தனது சொந்த இடமான ஜம்பா க்ஷேத்ராவிலிருந்து பயணம் செய்தார்; காடு வழியாகவும் ஆற்றின் கரையோரத்திலும் பன்னிரண்டாம் நாளில் நாசிக் நகரில் ‘பஞ்சவடி’ என்ற இடத்தை அடைந்தார். கோதாவரி ஆற்றின் கரையில் அவர் மணமகன் உடையில் இருந்து ஒரு எளிய ‘கௌபீனம்’ [அரைத்துணி] மற்றும் இடுப்பில் ஒரு சிறிய துணிக்கு மாறினார். அவர் தனது நாளை சூரியநாமஸ்காரம், பின்னர் ஜபம் [தியானம்], பின்னர் ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் ஆகியவைகளுடன் தொடங்கினார். ஶ்ரீராம நாம சங்கீர்த்தம் அளிக்கும் பேரின்பத்தில் அவர் திளைத்து இன்புற்றிருந்தார். அந்த வழியாக செல்லும் மக்கள் அவரது நாம சங்கீர்த்ததால் ஈர்க்கப்பட்டனர், ஶ்ரீராம நாமாவில் மூழ்கியுள்ள அவரை மக்கள் ஸ்ரீ ராமதாஸர் என்று அழைக்கலாயினர். பஞ்சவடி ஸ்ரீ ராமர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இடம் என்பதே இவரது நினைவில் நிறைந்து, இவர் இந்த இடத்தை முழு மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தார், ஸ்ரீ ராமரை நினைவுக்கு கொண்டுவந்த மகிழ்ச்சியை கீர்த்தனத்தில் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் காலையில் அவர் கோதாவரி நதியில் குளிப்பார், பின்னர் ஸ்ரீ காலே ராம் மந்திர் சென்று, ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணர் ஆகியோரை பிரார்த்தனை செய்து, பின்னர் தியானத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்வார்.

தாக்லி என்னும் புனித தலம்

அவருக்கு அப்பொழுது பதின்மூன்று வயது, அவர் கோதாவரியை பஞ்சவடியை சுற்றி திரிந்த காலத்தில் நந்தினி என்ற பெயரில் ஒரு சிற்றாறு கோதாவரி நதியுடன் சங்கமிக்கும் இடம் அவரை மிகவும் கவர்ந்தது. இந்த இடத்திற்கு தாக்லி என்று பெயர், பலரால் புனிதமாகக் கருதப்பட்டது, மேலும் அந்த இடத்தில் பல சாதுக்கள் பரவலாக தியானத்தில் இருப்பதைக் காண முடிந்தது. 1621 ஆம் ஆண்டின் இந்து சந்திர நாட்காட்டியின் மாக் மாதத்தின் ஒரு சுக்லா சப்தமி [ரத சப்தமி] அன்று, இந்த புனித இடத்தில் இவர் ஸ்ரீ ராம தியானத்தைத் தொடங்கினார்.

பன்னிரண்டு ஆண்டுகள் தியானம்

ஸ்ரீ சமர்த்தர் ஓய்வு எடுத்து கொள்ளும் இடம், ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக் ஸ்ரீ ராமதாஸர் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்ரீ நாராயணன் ஒரு எளிய கௌபீனம் உடுத்தி கமண்டலம் மற்றும் தோளில் தொங்கும் ஜோலி என்னும் பிக்ஷா பையுடன் காணப்பட்டார். அவருக்கு தேவை ஏதுமில்லை, மக்கள் அவரைப் போற்றினர் வணங்கினர். குறிப்பாக எதையும் நோக்கா அவரது கருணை மிகு கண்களில் பேரானந்தம் குடியிருப்பது மக்களை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அவரது நாள் காலை குளியல் மற்றும் சூரியநாமஸ்காரம் ஆகியவற்றுடன் தொடங்கும், பின் அவர் ஆற்றில் மார்பு வரை நீர் வரும் ஆழத்தில் நின்று ஸ்ரீ ராம தியானத்தைத் தொடங்குவார். பின்னர் அவர் சாதுக்களுடன் வேத கலந்துரையாடலுக்காக பிற்பகலில் தண்ணீரிலிருந்து வெளியே வருவார். மாலையில் ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீமத் ராமாயணம் குறித்த சொற்பொழிவுகளைக் கேட்பார். இரவில் அவர் வழக்கமாக பங்கேற்க்கும் அகண்ட நாம பாராயணம் இருந்தது. அவர் தினம் கிட்டத்தட்ட அதே வழக்கம் கொண்டிருந்தார். இது பன்னிரண்டு ஆண்டு காலம் தொடர்ந்தது, அதற்குள் அவர் இந்த புனித தலத்தில் பதிமூன்று கோடி ஸ்ரீ ராம ஜபத்தை முடித்தார்.

ஸ்ரீ ராதாஸரின் முதல் சீடர்

அன்று வழக்கம் போல் கோதாவரி ஆற்றில் குளித்தபின் ஸ்ரீ ராம்தாஸ் கரையில் அடியெடுத்து வைத்தபோது, ​​அன்னபூர்ணி என்ற பெண்மணி அவரது காலடியில் விழுந்து வணங்கினார். கணவனை இழந்து கணவரின் உடலுடன் வந்ததிருந்த அவள் குருவின் காலடியில் விழுந்து வணங்கினாள். ஆனால் ஸ்ரீ ராம்தாஸர் தனது காலடியில் விழுந்த பெண்ணை “அஷ்டபுத்ர சௌபாக்யவதி பவஃ" என்று ஆசீர்வதித்தார். தனது கணவரை இழந்துவிட்டார் என்று அந்த பெண் கூறியபோது, ​​ஸ்ரீ ராமதாஸர் “நான் அந்த வார்த்தைகளை உச்சரிக்கவில்லை, அது ஸ்ரீ ராமரின் விருப்பம்” என்று கூறினார். அவர் தனது கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து அந்த மனிதனின் உடலில் தெளித்தார். சில கணங்களுக்குப் பிறகு இறந்ததாக கருதப்பட்ட கிரிதர பாந்தா குல்கர்ணீ என்ற மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது போல் உயிர்பெற்றார். நன்றியுடன் திரும்பிய குல்கர்ணீ குடும்பத்தினர் பின்னர் தங்கள் முதல் மகனை ஸ்ரீ ராமதாஸருக்குக் கொடுத்தனர். ஸ்ரீ ராமதாஸர் அக்குழந்தையை தனது ஜோலியில் பிக்ஷையாகப் பெற்றார். குழந்தைக்கு ஸ்ரீ உத்தவ கோஸ்வாமி என்று பெயரிட்டார்.

ஸ்ரீ ராமதாஸர் நிறுவிய முதல் மடம்

ஸ்ரீ ராமதாஸர் முதல் மடத்தை நிறுவிய இடம் தாக்லி ஆகும். அவர் ஸ்ரீ உத்தவ கோஸ்வாமியை இந்த ஸ்தாபனத்தின் தலைவராக நியமித்தார். அவர் இங்கு தங்கியிருந்த காலத்தில் கோமய [மாட்டு சாணத்தால்] செய்யப்பட்ட முதல் ஸ்ரீ அஞ்சநேய மூர்த்தியையும் நிறுவினார். இன்று ஸ்ரீ மாருதி ‘தாக்லி-கோமேய்-மாருதி’ என்று அழைக்கப்படுகிறார், மேலும் ஸ்ரீ ராமதாஸரின் முதல் சீடரான ஶ்ரீஉத்தவ கோஸ்வாமியின் சந்ததியினரால் பூஜை செய்யப்படுகிறார்.

தாக்லியில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடத்தின் கோமேய் மாருதி மந்திர்

ஸ்ரீ கோமேய் மாருதி, ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக் இரண்டு நதிகளின் சங்கமத்தில் கட்டப்பட்ட ஆசிரமம் இயற்கை அழகுடன் சங்கித்துள்ளது. இன்று கோதாவரி நதியின் போக்கு மாறி சற்று விலகி உள்ளது, ஆனால் நந்தினி நதி இன்னும் ஆசிரமத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறது. நந்தினி நதி இன்று நாசார்தி நதி என்று அழைக்கப்படுகிறது. ஆற்றின் அருகே ஒரு நீண்ட கிழக்கு-மேற்கு கட்டிடத்தில் அலுவலகம், யாத்ரீகர்களுக்கான ஓய்வு அறை போன்றவை உள்ளன. இதற்கு இணையாக சுமார் இருபாத்தைந்து அடி நீளம் பதினைந்து அடி அகலம் அளவிலான மற்றொரு கட்டிடம் பிரதான கோயிலாக உள்ளது, இந்த கோவிலுக்கு முன்னால் கல்நார் தாள் கூரையுடன் கொண்ட ஏறக்குறைய இருபதின் கீழ் எழுபது அடி அளவைக் கொண்ட ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபம் பக்தர்கள் பஜனை மற்றும் கீர்த்தன் போன்ற சபைக்கு பயன்பாட்டில் உள்ளது. அங்கு இருக்கும் அறிவிப்பு பலகை "1633 ஆம் ஆண்டில் ஸ்ரீ சமர்த்தரால் இத்திருக்கோயில் [மந்திர்] நிறுவப்பட்டதாக"க் கூறுகிறது.

மேலே உள்ள வளாகத்தைப் பற்றிய விளக்கங்கள் 2015 ஆம் ஆண்டில் நாம் சென்றிருந்த போது கண்டவை. ஆனால் இன்று இந்த வளாகம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அழகாகவும் வசதி மிக்கதாகவும் உள்ளது. ஆனால் பிரதான கோயிலின் புனிததன்மை பழமை மாறாமல்- தீண்டப்படாமல் பராமரிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயிலும் ஸ்ரீ கோமேய் மாருதியும் மேற்கு நோக்கி இருக்கையில் மாருதி தெற்கு நோக்கி நடந்து செல்வது போல் இருக்கிறார். மாருதி சன்னிதியை ஒட்டிய சிறு மண்டபத்தில் ஶ்ரீ சமர்த்தர் பயன்படுத்திய பாதுகை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சமர்த்த ராமதாஸிரின் ஓவியம் பின்னால் உள்ள சுவரை அலங்கரிக்கிறது. அருகிலுள்ள [குருவின் சன்னிதியின் இடதுபுறம்] ஸ்ரீ மாருதியின் சில விக்ரகங்களுடன் ஸ்ரீ ராமரின் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி வீர சிவாஜி தனது குரு ஸ்ரீ சமர்த்த ராமதாஸரிடமிருந்து போதனை பெருவது போல் சிலை உள்ளது.

தினமும் காலையில் இங்குள்ள தெய்வங்களுக்கும், ஸ்ரீ குரு ராம்தாஸின் ‘பாதுகைக்கும்’ ‘கக்கடா ஆர்த்தி’ எடுக்கப்படுகிறது.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் கையெழுத்து பிரதி

சமர்த்தரின் அவர்கள் தன் கைபட எழுதிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் நகல் இந்த தாஸ் நவாமியின் போது பக்தர்கள் பார்வைக்கு இத்திருக்கோவிலில் வைக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் செய்யப்பட்ட ஆவணத்தைப் பார்க்க கணினி பொருத்தப்பட்டு பிரதியை வாசிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்ட அறையில் நூற்றுக்கணக்கானோர் அப்பிரதியை பார்வையிட்டனர். கையெழுத்துப் பிரதியின் அசல் இந்நள் வரை துலேவில் உள்ள வாக்தேவதா கோவிலில் பாதுகாக்கப்படுகிறது. கோயில் அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கையெழுத்துப் பிரதியை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். முதல் டிஜிட்டல் நகல் கடந்த ஆண்டு டிசம்பரில் தக்லி கோவிலுக்கு வழங்கப்பட்டது.

கோமேய் மாருதி

இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸரின் முதலில் நிறுவப்பட்ட ஸ்ரீ மாருதியின் மூர்த்தி சுமார் ஒன்பது அடி உயரம் கொண்டது. இறைவன் இடது கையை மார்பிலும் மற்றும் வலது கையை ‘அபய முத்திரை’யிலும் வைத்து நிற்கும் தோரணையில் உள்ளார். கோமேய் [மாடு சாணம்] செய்யப்பட்டு பின் சிந்தூரத்தினால் மூடப்பட்ட ஸ்ரீ மாருதியின் ஒரே சிலா வடிவம் இதுதான். கிட்டத்தட்ட 390 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நித்திய பூஜைகளை ஶ்ரீ சமர்த்தரின் முதல் சீடரான ஶ்ரீ உத்தவ் குல்கர்ணியின் பரம்பரையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இன்று இந்த ஆசிரமத்தில் ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் அவர்கள் பிரதிஷ்டை செய்துள்ள ஶ்ரீ மாருதி பல பக்தர்களுக்கு நம்பிக்கையையும் வேண்டிய மன சாந்தியையும் அளிக்கிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " கோமேய்-மாருதி - ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் மடம், தாக்லி, நாசிக் "

 

அனுபவம்
இந்த புனித ஸ்தலத்தை விஜயம் செய்து ஆசிரமத்தில் இரவு தங்கி, ஸ்ரீ குரு ராமதாஸர் மற்றும் ஸ்ரீ கோமேய் மாருதி ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்று செல்ல ஸ்ரீ ஹனுமத் பக்தர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஜூலை 2020


 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+