home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

Thiru Adhanur Divya Desam, Papanasam taluk, Thanjavur District, Tamil Nadu


வீர சுதர்சன ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆதனூர்
பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


திரு ஆதனூர் திவ்ய தேசம்

ஆதனூர் சுவாமிமலைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமம். இந்த க்ஷேத்திரத்தின் திவ்ய தேசம் கோயில் நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது. இது கண்களுக்கு இனிமையாக உள்ளது. இந்த கோவிலில் பிரார்த்தனை செய்வது, பெருமாளை தியானிப்பது பக்தர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதி.

ஆதிரங்கேச்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
        ப்ருகு, அக்னி, காமதேனுப்யோ தத்தாபீதம் தயாந்திரம்
விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் ஸுர்ய
        புஷ்கர்னி திரே சேஷஸ்யோபரி ஸாயிநம்

மேற்கண்ட ஸ்லோகம் ஆதானூரின் திவ்ய தேசத்தின் புராணத்தை விவரிக்கிறது. முதலில் இந்த இடம் ‘ஆதி ரங்கேச்வரம்’ என்று கூறுகிறது, அதாவது இந்த இடம் திருச்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கத்தை விட பழமையானது.

திரு ஆதனூர் திவ்ய தேசம் இந்த கோயிலின் புராணக்கதை பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டது. “ஆ” என்றால் பசு. காமதேனு [புகழ்பெற்ற புனித பசு] இந்த இடத்தில் விஷ்ணுவை தியானித்ததால், இந்த இடத்திற்கு “அ +தன் +ஊர்” - ஆதனூர் என்ற பெயர் வந்தது. பிருகு முனிவர் விஷ்ணு மற்றும் மகாலட்சுமி ஆகியோரால் தனக்கு வழங்கப்பட்ட மாலையை இந்திரனுக்கு கொடுத்தார் என்று புராணம் கூறுகிறது. மாலையின் புனிதத்தன்மையை அறியாமல் இந்திரன் தனது யானை ஐராவதத்திற்கு அம்மாலையை அணிவித்தான். ஐராவதம் அதை வெளியே எடுத்து எறிந்து விட்டது. இதனை கண்ட பிருகு முனிவர் கோபமடைந்து இந்திரனை சபிக்கிறார். விஷ்ணுவிடம் இந்திரன் தனது செயலுக்கு பிராயச்சித்தம் கேட்டப்போது, ​​ஸ்ரீ மகாலட்சுமி தாம் பிருகு முனிவரின் புதல்வி பார்கவியாக பிறந்து ஶ்ரீமஹாவிஷ்ணுவை மனக்கும் போது சாபத்திலிருந்து விடுபடுவாய் என்று சொன்னாள், பின்பு இந்த க்ஷேத்திரத்தில் பகவான் விஷ்ணு இந்திரனுக்கு தரிசனம் கொடுத்து அவனை சாபத்திலிருந்து விடுவித்தார். பாவத்தால் அவதிப்பட்ட ஸ்ரீ அக்னி பகவான், இந்த க்ஷேத்திரத்தின் இறைவனை தரிசனம் செய்து பாவத்திலிருந்து விடுபட்டார். இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணுவினை பிரதிஷ்டை செய்தவர் பிருகு முனிவர் அவர்கள்.

இந்த கோயிலின் விமானம் ‘பிரணவ விமானம்’. இந்த க்ஷேத்திரத்தில் பெருமாளுக்கு "ஆண்டளக்கும் ஐயன்" எனப்பெயர். அவர் ஆதிஷேஷம் மீது சயனித்த கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி, உற்சவர் -அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்), புன்னை மற்றும் படாலி ஆகியவை தல விருக்ஷங்கள், தீர்த்தம் சூரிய தீர்த்தம்.

பெயர் “ஆண்டளக்கும் ஐயன்”

இந்த க்ஷேத்திரத்தில் பெருமாளுக்கு “ஆண்டளக்கும் ஐயன்” என்று பெயர். சாய்ந்த தோரணையில் மரக்காலை தலையணையாகவும், மற்றும் ஓலை, எழுத்தாணியோடு காட்சியளிக்கிறார். பெருமாள் இப்பெயர் எவ்வாறு பெற்றார், ஏன் அவர் இந்த தோரணையில் காணப்படுகிறார் என்பதில் ஒரு சுவாரஸ்யமான புராணக்கதை உள்ளது.

விஷ்ணுவைப் புகழ்ந்து பாடல் பாடிய பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாரும் ஒருவர். அவர் ஸ்ரீரங்கம் கோயிலை புதுப்பித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் கோயில் புனரமைப்பின் போது அவரிடம் இருந்த பணம் முழுவதுமாக தீர்த்து விட்டது. கைங்கர்யத்திற்குப் பணம் இல்லையே என்று பெருமானிடம் வேண்ட கொள்ளிடக்கரைக்குவா பணந்தருகிறேன் என்று சொல்ல அவ்விதமே வந்து நிற்க, எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி, மரக்கால் சகிதிமாய் ஒரு வணிகரைப் போன்று வர, இவரைக் கண்ட திருமங்கை, யாரென்று வினவ, அதற்கு அந்த வணிகர் உம்பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளனே அனுப்பிவைத்தான் என்று சொல்ல, சரி, அப்படியானால் சுவாமி, காலியான மரக்காலுடன் வந்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கந்த வணிகர் இந்த மரக்காலைக் கையில் எடுத்து வேண்டிய பொருளை மனதில் தியானித்து எம்பெருமானே சரண் என்று மூன்று தடவை சொன்னால் அப்பொருள் சித்திக்கும் என்று சொன்னார்.

அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும் என்று கூறினார். அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்ட வணிகர் ஒரு நிபந்தனை விதித்தார். அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவே காட்சி தரும் என்று கூறி அளந்து போட பெரும் பாலானோர்க்கு மணலாகவே தெரிய, இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர, வணிகர் மெல்ல நகர, திருமங்கை பின்தொடர, இவருக்கு காட்சியளிக்க நினைத்த எம்பெருமான் மிகவிரைவாகச் செல்ல திருமங்கை தமது குதிரையிலேறி பின் தொடர்ந்தார்.

இவ்விதம் ஓடிவந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை, எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம். வர்த்தகர் மாறுவேடத்தில் இருந்த பெருமாள் ஆழ்வாருக்கு தர்சனம் அளித்தார்.

பெருமாள் நன்மைகளை அளவிடப்பட்ட முறையில் படி வழங்கியதால், க்ஷேத்திரத்தில் பெருமாள் ஆண்டளக்கும் ஐயன் என்று அழைக்கப்படுகிறார்.

ஆதனூர் மற்றும் ஸ்ரீரங்கத்தின் ஒற்றுமை

வீர சுதர்சன ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆதனூர், தமிழ்நாடு இந்த இரண்டு க்ஷேத்திரங்களும் காவிரி நதிக்கும் கொள்ளிடம் நதிக்கும் இடையில் அமைந்துள்ளன.

வேதங்களின்படி, விஷ்ணுவின் தங்குமிடமான பரமபதத்தில் ஒரே மாதரியான இரண்டு தூண்கள் உள்ளன. ஜீவன்கள் மேலே செல்லும் போது இந்த தூண்களைத் தழுவினால் அவர்கள் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். திருவரங்கத்திலும், ஆதனூரிலும் கர்பகிரஹத்தில் இதுபோன்ற இரண்டு தூண்கள் உள்ளன. இவைகளை இந்த மானிட சாரீரத்துடன் நாம் தழுவிக்கொள்வோமாயின் நாமும் எமனுலகம் செல்லும் பாக்கியத்தை இழக்கிறோம்.

இந்த கோவிலில் ஸ்ரீரங்கத்தில் இருந்ததைப் போல ஏழு திருமதில்கள் இருந்தன, கால போக்கில் வெள்ளத்தில் இவை அழிந்துவிட்டன.

காவேரி நதி வெள்ளம்

ஒருமுறை காவேரியில் வெள்ளம் ஏற்பட்டது [வழக்கத்தில் இதனை "காவேரி பிரளயம்" என்று குறிப்பிடுவார்கள்] மேலும் இந்த இடத்திற்கு அருகிலுள்ள பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. மற்ற திவ்ய தேசங்களான "ஜகத் ரக்ஷக பெருமாள் கோயில்" அதாவது திருகூடலூர் அதாவது ஆடுதுரை பெருமாள் கோவில் இந்த வெள்ள பிரளயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆடுதுரை கோயில் மதுரை ராணி மங்கம்மா அவர்களால் புனரமைக்கப்பட்டது. அதே வழியில் இந்த திவ்ய தேசம் காஷ்மீரைச் சேர்ந்த ராஜாவால் புனரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலிலும் ஏழு திருமதில்கள் இருந்தது என்று கூறப்படுவதால், அப்போதைய ‘காவேரி பிரளயத்தால்’ சுற்றியுள்ள பகுதி பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே இந்த கோயில் இப்போது நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோயிலிலிருந்து பிரிக்கப்பட்ட நெல் வயலுக்கு நடுவே தனியாக நிற்கும் இக்கோயிலை சார்ந்த சன்னதி ஒன்று உண்டு.

நெல் வயலுக்கு நடுவே உள்ள ஆலயம்

இந்த ஆலயம் திவ்ய தேசத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது மற்றும் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய அளவில் மிகச் சிறிய சன்னிதி. ஆண்டளக்கும் ஐயன் கோயிலுக்கு அருகமையில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்காக சன்னிதியாகும். இந்த சன்னிதி ஒரு முறை ஏழு திருமதிலுடன் இருந்த ஆண்டளக்கும் ஐயன் கோயிலின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தையும் இது எழுப்புகிறது. இப்போது கூட இந்த ஆலயம் ஆண்டளக்கும் ஐயன் கோயிலின் ஒரு பகுதியாகும்.

அதானூரின் அஞ்சநேயர் சன்னிதி

வீர சுதர்சன ஆஞ்சநேயர், ஆதனூர், தமிழ்நாடு ஒரு எளிய பத்து அடி அகலம் இருபது அடி நீள மண்டபம் தான் இன்று கோவிலாக உள்ளது. கட்டிடம் சாலையையே ஒட்டியுள்ளது. மண்டபத்திற்கு வெளியே ஸ்ரீ ராமபாதம் உள்ளது. சன்னிதிக்குள் நுழைவதற்கு முன்பு பக்தர்கள் ஸ்ரீ ராமருக்கு பிரார்த்தனையை ஶ்ரீராமபாதத்தில் சமர்பிக்கின்றனர். மண்டபம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது, முன்னால் பக்தர்கள் நிற்பதற்கான இடம். அடுத்து கர்பகிரஹம்.

ஸ்ரீ வீர சுதர்சன ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கிய வண்ணம் உள்ளவர் வடக்கு நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். இச்சிலை சுமார் ஏழு அடி உயரமும், முழுமையாக செதுக்கப்பட்ட உருவமும் கொண்டதாக உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயரின் பார்வை பக்தர்களை ஈர்க்கிறது, தன் வசப்படுத்தி வைக்கிறது. கவனத்தை ஈர்க்கும் அடுத்த விஷயம், தலைக்கு மேலே சுருண்ட வடிவத்தில் காணப்படும் இறைவனின் வால். அவ்வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்களுடன் ஒரு சக்கரத்தைக் காண முடிகிறது. பகவான் அழகாக கட்டப்பட்ட கேசத்தின் மேல் அணிந்திருக்கும் ஒரு முகட்டில் ‘ராக்குடி/ராக்கோடி’- என்று அழைக்கப்படும் ஒரு சடைவில்லை ஆபரணத்தை அணிந்திருப்பதைக் காணலாம். காதில் அணிந்திருக்கும் குண்டலம் நீளமானது, இது தோள்களைத் தொடுகிறது. அபய முத்திரை காட்டும் அவரது வலது திருக்கரம் இறைவன் பக்தர்களிடம் பயப்பட ஒன்றுமில்லை என்று கூறுகிறார். அவரது ஒளிரும் கண்கள் பக்தர்களுக்கு ஆசீகளை அள்ளி பொழிகின்றன. இந்த க்ஷேத்திரத்தில் இறைவனின் பார்வையில் பக்தியை இன்பம் சூழ்ந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் “சுதர்ஷன்” என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை, ஏனென்றால் சு-தர்ஷன் இதன் அர்த்தம் “இது புனிதமானது” என்பதாகும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " வீர சுதர்சன ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆதனூர், தமிழ்நாடு "

 

அனுபவம்
உங்கள் கவலைகள் அனைத்தும் மறைந்துவிடும், அதானூர் புனித க்ஷேத்திரத்தில் ஸ்ரீ சுதர்ஷன் ஆஞ்சநேயரின் "தர்சனம்" இருந்தால் தாங்கள் துன்பம் எல்லாம் ஆவியாக பறந்து விடும்

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஜூலை 2020


 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+