home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

மீனாட்சி அம்மன் கோயில் காட்சி, ஈ.தெரொண்டின் மர வேலைப்பாடு


ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், பைராகி மடம், தெற்கு சித்திரை வீதி, மதுரை, தமிழ்நாடு

ஜீகேகௌசிக்


காசி யாத்திரை

சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கயாவிற்கு செல்ல விரும்புகிறார்கள். கயா என்று அழைக்கப்படும் இடம் மாத்ரு கயா என்றும் அழைக்கப்படுகிறது, அங்கு அவர்கள் தங்கள் இறந்த முன்னோர்களுக்கு -மூதாதயர்களுக்கு ஈமச்சடங்கு செய்வது வழக்கம், குறிப்பாக காலமான தாய்க்கு. கயாவுக்கு யாத்திரை வருகையில் அவர்கள் பெரும்பாலும் காசிக்கு அதாவது வாரணாசிக்கு, மற்றும் பிரயாக்ராஜ் என்றும் அழைக்கப்படும் சங்கம் என்பவைகளுக்கும் யாத்திரை செய்வது வழக்கம். நதிகள் சங்கமிக்கும் இடத்திலியே பிரயாக்ராஜ் முதல்மையானதாக கருதப்படுகிறது. இங்கு கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கிறது, இவ்விடத்தில் நீரடுவது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த முழு பயணமும் பெரும்பாலும் “காசி யாத்திரை” என்று பொதுவான பேச்சில் குறிப்பிடப்படுகிறது.

இந்த க்ஷேத்திரங்கள் அனைத்திற்கும் யாத்திரை செய்வது முன் காலத்தில் மிகவும் கடினமாக செயலாகும். ஆனால் இதே பயணம் இன்று தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, மற்றும் பிராயண வசதி எல்லாவற்றிலும் முன்னேற்றியிருப்பதால் மிகவும் எளிதாகவும் வசதியாகவும் ஆக்கியுள்ளது. தெற்கு, மேற்கு, கிழக்கு அல்லது வட இந்தியாவில் உள்ள தொலைதூர மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இந்த புனித இடங்களுக்குச் சென்று ஆராதனை செய்வதை ஒரு பேறாகக் கருதுகின்றனார்.

இந்த புனித இடங்களை தரிசித்ததால் "காசி யாத்திரை" முடிந்ததாகாது. மக்கள் கங்கையின் புனித நீரை பிரயாக்ராஜிலிருந்து எடுத்து ஸ்ரீ ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்த பின் மட்டுமே தான் காசி யாத்திரையை நிறைவு ஆனாதாக கருதப்படுகிறது. தெற்கிலிருந்து வந்தவர்கள் முதலில் ராமேஸ்வரத்தையும் பின்னர் பிரயாக்ராஜ் சென்று கங்கையின் புனித நீரைக் கொண்டு வருவார்கள். கங்கையின் புனித நீரை ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரும் இந்த நடைமுறை வடஇந்திய மற்றும் தெனிந்திய மக்களை ஒன்றிணைத்தது என்பது ஒரு உண்மை.

ராமேஸ்வரம் யாத்திரைக்கு மதுரை நகரம் ஒரு இன்றியமையாத முக்கியமான இடமாக இருந்தது. இதனால் புனித இடமாகிய மதுரைக்கு பாரதத்தின் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்திருந்தனர். சரி, மதுரையின் சில முக்கியமான உண்மைகளைப் பார்ப்போம்.

கடந்த கால மதுரை

பாண்டிய வம்சத்தினரால் இந்நகரம் ஆட்சி செய்யப்பட்ட நாட்களிலிருந்தே மதுரைக்கு ஒரு புகழ்பெற்ற வரலாறு உண்டு. நவீன காலங்களில், மாலிக் கஃபர் நகரைக் கொள்ளையடித்ததையும், தொடர்ந்து டெல்லி சுல்தானேட் படையெடுப்பிற்கு வழி வகுத்ததையும் மறக்க முடியாது.

1296 முதல் 1316 வரை டெல்லி சுல்தானின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியின் இராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றி வந்த ஒரு மந்திரி அடிமை மாலிக் கஃபூர் (1296-1316). டெல்லி சுல்தானின் ஆட்சி விந்திய மலையை தாண்டி விரிவுபடுத்தியதற்கு அவர் பொறுப்பானார். அவர் தென் இந்திய ஆட்சியாளர்களை டெல்லி சுல்தானின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், கோயில்கள், பொதுமக்கள் மற்றும் தென்ஆட்சியாளர்களின் செல்வங்களை சூறையாடிய நபராகவும் இருந்தார். தெற்கின் இந்து கோவில்களை அழிக்கும் அவரது செயல் வரலாற்றில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அவரது காழ்ப்புணர்ச்சிக்கு விதிவிலக்கல்ல. தென் இந்தியாவில் தாங்கள் கைபற்றிய பிரதேசங்களில் டெல்லி சுல்தானின் பிரதிநிதியை நியமித்த பின்னர், அவர் கொள்ளையோடு டெல்லிக்கு புறப்பட்டார்.

முஸ்லீம் வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரானி கூறுகையில், மாலிக் கபூர் 241 டன் தங்கம், 20000 குதிரைகள் மற்றும் 612 யானைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட புதையலுடன் திரும்பி டெல்லிக்குச் சென்றதாக பதிவு செய்கிறார்.

இபின் பதூதா, மார்கோ போலோ போன்ற இந்த பெரிய நகரத்திற்கு பயணிப்பவர்கள் அனைவரும் தங்கள் காலத்தின் மதுரையின் அழகை விவரிக்கிறார்கள். இதிலிருந்து மதுரை எல்லா காலங்களிலும் எவ்வளவு செல்வ செழிப்பாகவும், ஊட்டமளிக்கும் நகரமாக இருந்தது என்பதைக் காணலாம்.

ராணி மங்கம்மாள்

மதுரை ராணி மங்கம்மாள் மீண்டும் மீண்டும் மதுரை நகரத்தின் செல்வம் கொள்ளையடிக்கப் பட்டது. பெருஞ்சிறப்பு மிகு மதுரை விஜயநகர சம்ராஜியத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டதும், பின்னர் நாயக்கர்களின் ஆட்சியின் போதும் தனது புகழை மீண்டும் பெற்றது. நாயக்கர்களின் ஆட்சியாளர்களில் பொன்னான காலம் மங்கம்மாள் ஆட்சி செய்த காலம். 1689 ஆம் ஆண்டில் மூன்று மாத வயதாக இருந்தபோது முடிசூட்டப்பட்டு 1705 வரை ஆட்சி செய்த அவரது குழந்தை பேரன் விஜய ரங்க சொக்கநாதா சார்பில் மங்கம்மால் ரீஜண்ட் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தளவாய் (கவர்னர் ஜெனரல்) நரசப்பையா தலைமையிலான ஒரு குழு அவரது நிர்வாகத்திற்கு உதவி செய்தது.

அவர் அனைத்து திறமையுடனும் அரசை நிர்வகித்திருக்கும் அதே சமயம், அவர் இராஜதந்திரம் மிக்கவராகவும் இருந்தார், இதனால் எந்தவொரு பிரதேசத்தையும் இழக்காமல் தந்திரமாக போரைத் தவிர்த்தார். அவர் அந்த நேரத்தில் இராணுவத்தை வழிநடத்திய ஒரு துணிச்சலான பெண்மணி. அவர் மக்கள் நலனில் போதுமான தாராளத்துடன் இருந்தார். அவர் பல கோயில்களை மீண்டும் கட்டியெழுப்பினார், மதுரை முதல் ராமேஸ்வரம் வரை அவர் கட்டிய நெடுஞ்சாலை என்பது நினைவில் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பங்களிப்பாகும், இப்போது கூட இது "மங்கம்மாள் பெரும் சாலை" என்று அழைக்கப்படுகிறது. பயணிகளுக்கு ஓய்வெடுப்பதற்காக இச்சாலையில் பல சத்திரங்கள் அவரால் கட்டப்பட்டது.

இவ்வாறு சங்கம், கயா, காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து யாத்திரை மேற்கொள்வதன் மூலம் தங்கள் கடமையை நிறைவேற்ற விரும்பும் மக்களுக்கு ராணி மங்கம்மாள் உதவினார்.

ராணி அகல்யா பாய் ஹோல்கர்

ராணி மங்கம்மாள் அவர்களின் தைரியத்திற்காகவும், அவர்களின் மக்கள் நலன் யோசனைக்காகவும் நினைவில் இருப்பது போல், இந்தூரின் ராணி அகிலியா பாய் ஹோல்கரின் பங்களிப்பையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு ராணிகளும் அக்கால சூழ்நிலைகள் காரணமாக அந்த பதவியை வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையிலான ஒற்றுமை அவர்களின் தைரியம், இராஜதந்திரம் மற்றும் நல்ல நிர்வாக திறமை. அவர்களின் மனதில் அவர்களின் மக்கள் நலன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த இரண்டு ஆட்சியாளர்களும் மற்ற சக்திகளால் அழிக்கப்பட்ட பல கோவில்களை மீண்டும் கட்டியிருந்தனர்.

சனாதன தர்மத்தை சேர்ந்தவர்கள் மிகவும் புனிதமாக கருதும் மாத்ரு கயாவில் உள்ள கோயில் ராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. இந்த பாரத தேசம் முழுவதும் அவர் பல கோயில்களை மீண்டும் கட்டியிருந்தார் [பட்டியல் முடிவற்றது], அவற்றில் முக்கியமானவை காசியில் உள்ள விஸ்வநாத் கோயில், கயாவில் மாத்ரு கயா கோயில், சோமநாத்தில் சோம்நாத், ஓம்காரேஸ்வரில் உள்ள ஓம்கரேஸ்வர் கோயில் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள ராதாகிருஷ்ணா கோயில். ஹோல்கர் குடும்பத்தின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப செலவுகளைச் சமாளிக்க பொது நிதியைப் பயன்படுத்தவில்லை. இந்த கோயில்களைக் கட்டியெழுப்ப தங்கள் சொத்திலிருந்து அவர்கள் தனிப்பட்ட நிதியைக் கொடுத்தனர்.

சனாதன தர்மத்திற்கு இந்த இரண்டு ராணிகளின் பங்களிப்பு மகத்தானது மற்றும் அளவிட முடியாதது. ராமேஸ்வரத்தை காசி யாத்திரையுடன் இணைக்கும் இந்த நடைமுறை பாரதத்தின் அனைத்து வர்க்க மற்றும் பிராந்திய மக்களையும் ஒன்றிணைத்தது. காசி, கயா போன்ற இடங்களில் குடியேறிய தெற்கிலிருந்து பலர் உள்ளனர். அதே வழியில் வடக்கிலிருந்து பலர் வந்து தெற்கில் உள்ள திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் குடியேறினர்.

பைராஹி / பைராகி

பைராஹி அல்லது பைராகி என்பது வைராஹி என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல், இதன் பொருள் ‘சபதத்துடன் வாழும் மக்கள்’. இது ‘மோக்ஷத்தை’ அடைவதை நோக்கமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் நபர்களைக் குறிக்கிறது. இந்த நபர்கள் அதைப் பெறுவதற்கான எந்தவொரு வழியையும் அங்கீகரிக்கப்பட்ட பின்பற்றலையும் ஆதரிப்பவர்கள். ‘மோக்ஷத்தை’ அடைவதற்கான இந்த இலக்கை அடைய இந்த புனித க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை வரும் பைரஹிகள் பலர் உள்ளனர். இந்த புனித பயணத்தின் ஒரு பகுதியாக தென்னிந்தியாவுக்குச் சென்ற இந்த துறவிகளில் சிலர், தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் குடியேற முடிவு செய்திருந்தனர். அவர்களில் சிலர், தங்கள் பிரதேசங்களிலிருந்து, அவர்கள் பிறந்த இடத்திலிருந்து வரும் யாத்திரிகர்களுக்காக ஓய்வு இல்லத்தை [சத்திரம் அல்லது மடம் எனவும் அழைக்கப்படுகிறது] கட்டியுள்ளனர்; அத்தகைய மடங்களில் அவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் திருச்சன்னிதியையும் நிறுவினார்கள்.

இத்தகைய மடங்கள் தென்னிந்தியாவில் பைராஹி மடம் அல்லது பைராகி மடம் என்று அழைக்கப் படுகிறது. இப்போதய தமிழ்நாட்டில் ஆரணி, காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இதுபோன்ற மடங்களைக் காணலாம்.

மதுரையில் பைராகி

ஸ்ரீ ஆஞ்சநேயர், பைராஹி மடம், மதுரை, தமிழ்நாடு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் இருந்து அத்தகைய துறவி ஒருவர் ராமேஸ்வர தீர்த்த யாத்திரை வந்திருந்தார். மதுரை வழியாக தனது புனித யாத்திரையின் போது, ​​அவர் இந்நகரின் அழகையும், மக்கள் காட்டிய விருந்தோம்பலையும் கண்டு ஈர்க்கப்பட்டு, இந்த புனித நகரமான மதுரையில் குடியேற முடிவு செய்தார்.

தெய்வீக வழிகாட்டுதலின் கீழ் அவர் தனது ஆத்மா வித்யா பயிற்சிக்காக புனிதமான அரச மரத்தைத் தேடி அதனடியில் தனது பயிற்சியை தொடர விரும்பினார்.

புனித அரச மரம்

அரச மரம் அல்லது புனித அத்தி என்பது இந்திய துணைக் கண்டம், தென்மேற்கு சீனா மற்றும் இந்தோசீனா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சொந்தமான அத்தி வகை. இந்த மரம் மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது: போதி மரம், அஸ்வத்த மரம், மற்றும் தமிழில் இது அரச மரம் என்று அழைக்கப்படுகிறது.

பாரதத்தில், சாதுக்கள் [சந்நியாசிகள்] புனித அரச மரங்களுக்கு அடியில் தங்கள் தவத்தை செய்து பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். அரச மரத்தின் வேரில் பிரம்ம தேவனும், உடற் பகுதியில் விஷ்ணுவும், உச்சியில் சிவனும் வசிக்கிறார் என்பதால், இதனை “மரங்களின் ராஜா” என்று பொருள்படும் “விருக்ஷ ராஜா” என்றும் அழைக்கப்படுகிறது. தமிழில் இது ‘மரங்களின் ராஜா’ என்றே பொருள்படும் விதம் ‘அரச மரம்’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது மக்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை தியானித்து, இஷ்ட தெய்வத்தை வலம் வருவதும் ஒரு விரதமாகும்., அதுவும் அவ்விஷ்ட தெய்வத்தை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்து தெய்வத்தையும் கூடவே அரச மரத்தையும் வலம் வருவதை பெரும் பேராக கருதுகிறார்கள்.

மதுரைச் சேர்ந்த பைராகி மடம்

பாரதத்தின் மற்ற பகுதியைச் சேர்ந்த யோகி [பைராஹி / பைராகி] இதுபோன்ற ஒரு அரச மரத்தின் கீழ் குடியேறினார், இது மதுரையின் தெற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ளது. பைராஹி தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவை அளித்து வந்தார். இந்த சேவையால் பயனடைந்த இதுபோன்ற பல பயணிகள் இருந்தனர். இருப்பினும், அவர்களுக்கு நிரந்தர தங்குமிடம் இல்லை. இந்த பயணிகளுக்கு சேவை செய்வதற்காக ஒரு ‘மடம்’ நிறுவ வேண்டும் என்று பைராஹி விரும்பினார். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், இந்த பைராஹியின் பொது நலம் விழையும் செயல் அந்த நாட்களில் அதிகாரத்தில் இருந்த நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் நல்மனம் கொண்டு பைராஹிக்கு தெற்கு சித்திரை வீதியில் தங்க அனுமதி வழங்கினர். அருகிலுள்ள கிராமத்தில் அவருக்கு சில நிலங்களும் ஒதுக்கப்பட்டது, அதன் விளைச்சலில் இருந்து மக்களுக்கு உணவளிப்பதற்கும் சேவை செய்வதற்கும் சிறிது வருவாய் கிடைக்கும் என்பதால்.

பைராகிகளின் வழக்கத்துக்கு ஏற்ப, அவரது இஷ்ட தேவதையான ஸ்ரீ ஹனுமாரை அவ்வரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். அவரே தங்கள் வழக்கப்படி ஶ்ரீஹனுமாரை வழிபட்டு வந்தார். அதன் பின் அவரது மடத்தின் அடுத்த தலமை பைராகி அவ்வழிபாட்டினை தெடர்ந்தார். இப்படி தெற்கு சித்திரை வீதியில் உள்ள பைராஹி மடத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

பைராகி மடத்தில் சன்னிதிகள்

ஸ்ரீ ஆஞ்சநேயர், பைராஹி மடம், மதுரை பைராகி மடத்தின் தலமை பைராஹியை மஹந்த் என்று அழைப்பார்கள், மதுரை பைராகி மடம் பல மஹந்த்களை பார்த்துவிட்டது. மடத்திற்குத் தலைமை தாங்கிய கடைசி பைராஹி மஹந்த் ஸ்ரீ கோவர்த்தந்தாஸ்ஜி ஆவார். அவரது உடனடி முன்னோடி மஹந்த் ஸ்ரீ ரகுநாததாஸ்ஜி ஆவார். முன்னதாக மடத்திற்குத் தலைமை தாங்கிய மற்ற பல மஹந்த்கள் இருந்தனர், ஆனால் அந்த வம்ச கிரம பெயர் விவரங்கள் தெரியவில்லை. பல காலங்களாக இவ்விடம் மதுரை மக்களுக்கு ஒரு பிரபலமான இடமாக இருந்து வருகிறது, ஏனெனில் இந்த மஹந்த்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள் ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆகியோர் இவர்களது விருப்பங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

பைராகி மடத்தின் நிர்வாகம்

மகாந்த் ஸ்ரீ கோவர்த்தந்தாஸ்ஜி லட்சுமி நரசிமரின் தாமரை பாதங்களை அடைந்த பிறகு, மஹந்தின் உத்தரவு மடத்தின் மஹந்த் பொருப்பு உள்ளூர் சேவதாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மடத்தின் விவகாரங்கள் அவர்களால் சிறந்த முறையில் கவனிக்கப்பட்டு வருகின்றன, மேலும் முந்தைய மஹந்த்களால் நிறுவப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் முன்னர் நிறுவப்பட்ட நடைமுறையின் படியே நடத்தப்படுகின்றன.

மதுரை பைராகி மடத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர்

முதல் மஹந்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் தான் மடத்தின் முக்கிய தெய்வம். ஸ்ரீ ஆஞ்சநேயர் அரச மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளர். பக்தரை விழிப்புடன் இருக்க தூண்டக்கூடிய ஒரு எளிய தெய்வம் இவர். அவர் தனது கால்களை உறுதியாக பூமியில் ஊன்றி நிற்கும் தோரணையே பக்தருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும். இறைவன் தனது இடது கையில் கதையை கம்பீரமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். . இறைவனின் சற்றே உயர்ந்திருக்கும் வலது கை பக்தருக்கு நம்பிக்கையை அளிக்கும் ‘அபய முத்திரை’யை காண்பிக்கிறது. அவரது வால் உயர்ந்து சிறிய வளைவுடன் தலையின் பின்னால் செல்கிறது. பக்தர் விட்டு கொடுக்கும் தன்மையுடன் மற்றும் நெகிழ்வானவராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது போல் உள்ளது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், பைராகி மடம், மதுரை"

 

அனுபவம்
மதுரையின் இந்த பைராகி மடத்தின் ஸ்ரீ அஞ்சநேயாவின் தரிசனம் செய்யுங்கள். சமுதாயத்திற்கும் சுயமாகவும் நேர்மையாக இருக்க முடிவு செய்த தாங்களுக்கு விழிப்புணர்வு, உத்வேகம், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரத்தை அவர் அளிப்பார்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஆகஸ்ட் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+