மேவார் பகுதி இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் பண்டைய மேவாரில் இன்றைய குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகள் அடக்கம்மாகும். மேவார் இராச்சியத்தின் கடைசி தலைநகரான உதய்பூர் இருந்தது என்பதால் தற்போது மேவார் இராஜ்யம் உதய்பூர் இராச்சியம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த இராஜ்யத்தின் பிரதான வழிபாட்டு தெய்வம் சிவன், அவரை ஸ்ரீ மேத்பதேஸ்வர் [எக்லிங் நாத்] என்று பெயரிட்டு கொண்டாடினார்கள்.
மேவார் பகுதி வடமேற்கில் ஆரவாலி மலைத்தொடர், வடக்கே அஜ்மீர், குஜராத் மற்றும் தெற்கே ராஜஸ்தானின் வாகாட் பகுதி, தென்கிழக்கில் மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதி மற்றும் கிழக்கில் ராஜஸ்தானின் ஹடோதி பகுதி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.
பாரதத்திற்குள் வெளிநாட்டு படையெடுப்பை தடை செய்வதில் மேவார் ஒரு வியக்கத்தகு பங்கைக் கொண்டிருந்தது என்பதை இதன் எல்லையை நோக்கும் போது தெளிவாகும்.
கில்ஜி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியும் அவரது மந்திரியும் தோழரும் இராணுவ ஜெனரலுமான மாலிக் கபூர் இந்த நிலத்தின் சனாதன தர்மத்தை குலைய வைத்திருந்தார். அச்சமயம் ’சித்தூர்கட்’ டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த மேவாரின் ’ராஜபுட்’ டுகளும் பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கில்ஜியின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அலாவுதீன் கில்ஜி மேவார், ரணதம்போர் மற்றும் குஜராத்தை கைப்பற்றியது மீதமுள்ள வட இந்திய ராஜ்யங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
மேவார் மன்னர் மஹாராணா மோகல் 1433 ஆம் ஆண்டில் அவரது இரண்டு சகோதரர்களால் (சாச்சா மற்றும் மேரா) படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சாச்சா மற்றும் மேரா க்கு ஆதரவு இல்லாததால், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மார்வார் மாநிலத்தில் ருங்கோட்டின் பர்மார் தலைவரான ஜைத்மால் சங்க்லாவின் மகள் சௌபாக்யா. இவள் இறந்த மன்னர் மஹாராணா மோகலின் மனைவியாவார். ராணா கும்பா இவர்களின் மகன் ஆவார், ஆதலால் மன்னரின் வாரிசுயாவார்.
ராணா கும்பா மேவார் சிம்மாசனத்தில் ஏறினார். ஆரம்ப காலத்தில் மாண்டூரைச் சேர்ந்த ரன்மால் (ரணமல்ல) ரத்தோர் ராணா கும்பாவிற்கு உதவினார். மல்வாவின் சுல்தான் மோஹமத் கில்ஜி, ராணா கும்பாவுடன் போரில் ஈடுபட்டார், இறுதியாக ராணா கும்பாவால் தோற்கடிக்கப்பட்டார். கி.பி 1440 இல் மால்வா மற்றும் குஜராத்தின் ஒருங்கிணைந்த படைகள் மீது ராணா கும்பா பெற்ற வெற்றியின் நினைவாக, அவர் புகழ்பெற்ற 37 மீட்டர், 9 மாடி உயர 'விஜய் ஸ்தம்பா' வை சித்தோர்கட்-இல் அமைத்தார்.
மத்திய பாரதத்தில் மன் சிங் தோமர், தென் பாரதத்தில் [விஜயநகர] இரண்டாம் தேவா ராயா, கிழக்கு பாரதத்தில் கபிலேந்திரதேவா, பாரதத்தின் சனாதன தர்மத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தபோது, ராணா கும்பாவின் தலைமையில் மேவார் இராச்சியம் பதினைந்தாம் நூற்றாண்டின் முன்னணியில் இருந்து சனதான தர்மத்தை வட பாரதத்தில் பாதுகாத்தனர். மிகவும் உயர்வான மற்றும் சக்திவாய்ந்த ஆளுமை கொண்ட அவர் ஆட்சி காலத்தில் மேவார் கொடியை உயரமாக பறக்க வைத்தார்.
மல்வாவின் மொஹமத் கில்ஜி, குஜராத்தின் குத்புதீன், நாகுரின் ஷம்ஸ் கான் மற்றும் மார்வாரின் ராவ் ஜோதா என்று அவரைச் சுற்றியிருந்த அனைத்து எதிரிகளிடமிருந்து தனது ராஜ்யத்தை பாதுகாக்கும் பொறுப்பு ராணா கும்பாவுக்கு இருந்தது. எனவே அவர் தனது தலைநகரின் வடமேற்கே ஒரு மூலோபாய இடத்தில் ஒரு புதிய கோட்டையைக் கட்டினார். கிமு இரண்டாம் நூற்றாண்டின் சமண இளவரசரான சம்பிரதியால் கட்டப்பட்ட ஒரு பழைய கோட்டையின் இடத்தை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த இடம் இன்று உதய்பூருக்கு வடமேற்கே என்பது கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் அவரது பெயரால் கும்பல்கர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோட்டையை 1443இல் கட்ட தொடங்கி 1458 இல் ராணா கும்பா அவர்கள் பிரபல கட்டிடக் கலைஞர் மந்தனின் உதவியுடன் கட்டி முடித்தார்.
ராஜஸ்தானில் மிகவும் உயரமான இந்த கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1075 மீட்டர் உயரத்தில் உள்ளது; இக்கோட்டை பெருமைமிகு, வீரமிகு, கம்பீரமிகு தோற்றத்துடன் அமைந்துள்ள மகத்தான அமைப்பு. வாஸ்து சாத்திரத்தின் அடிபடையில் கும்பல்கர் கோட்டை கட்டப்பட்டுள்ளது. குமிழ் வடிவில் அமைந்துள்ள இக்கோட்டையை காண ஏறும் போது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மேலே செல்ல செல்ல மேக கூட்டகள் நம்மை சூழ்ந்து வருவதை உணரமுடியும். கோட்டையின் உச்சியில் இருந்து பார்க்கும் காட்சி இன்னும் அருமையாக இருக்கும். கோட்டையின் உச்சியில் இருந்து பார்க்கும் போது ஒருபுறம் மார்வாரையும் மறுபுறம் மேவாயும் காணலாம், அப்பொழுது இந்த இடம் எவ்வளவு மூலோபாய இடம் என்பது நமக்கு புரியும்.
இந்த உயரத்தில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கான பொருட்களை எவ்வாறு இங்கு கொண்டு வந்தனர் என்பது இன்னும் ஒரு ஆச்சரியமாக இருக்கிறது. கும்பாகர் கோட்டை ஒருபோதும் வெல்லப்படவில்லை, இது 'வெல்லப்படாத கோட்டை' என்றும், ராணா கும்பா ஒரு 'தோல்விகாணா ராஜா' என்றும் அழைக்கப்படுகிறார். கிளர்ச்சியான அக்கால கட்டத்தில் மேவார் ஆட்சியாளர்களுக்கு இவ்விடம் எப்படி அனுகமுடியாத, வெல்லமுடியாத மறைவிடமாக இருந்தது என்பது தெரிகிறது.
கும்பல்கர் கோட்டையின் சுவர்கள் முப்பதெட்டு கி.மீ.க்கு மேல் நீண்டு பதினைந்து அடி தடிமன் கொண்டவை. இது சீனாவின் பெரிய சுவருக்குப் பிறகு இரண்டாவது மிக நீளமான தொடர்ச்சியான சுவர் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு கட்டமைப்புகளையும் செயற்கைக்கோள் படங்களில் சுலபமாக காணலாம் என்று கூறப்படுகிறது. கும்பல்கர் கோட்டையில் ஏழு பலமான நுழைவாயில்கள் உள்ளன.
இந்த கோட்டை தெற்கிலிருந்து அரேட் போல் [போல் என்றால் வாயில் என்று பொருள்] எனப்படும் ஒரு வாயில் வழியாக நுழைய வேண்டும். அதைத் தொடர்ந்து ஹல்லா போல், ஹனுமான் போல், ராம் போல் மற்றும் விஜய் போல் என அழைக்கப்படும் நுழைவாயில்கள் உள்ளன. மலையுச்சியில் உள்ள அரண்மனை வளாகத்திற்கு மூன்று நுழைவாயில்கள், பைரோன் போல், நிம்பூ போல் மற்றும் பக்ரா போல் நுழைவாயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நுழைவாயில் கிழக்கில் அமைந்துள்ளது, இது டானிவட்டா என்று அழைக்கப்படுகிறது. இந்த நுழைவாயில் மேவார் பகுதியை மார்வருடன் இணைக்கிறது.
இந்த நுழைவாயில் கோட்டையின் பிரதான சுவரில் கட்டப்பட்டுள்ளது மற்றும் முழு வளாகத்திற்கும் நுழைவு வாயிலாக செயல்படுகிறது. அதன் பிறகு ராம் போல் என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய வாயில் உள்ளது, இதன் மூலம் ஒருவர் வளாகத்திற்குள் செல்ல முடியும். கும்பல்கர் கோட்டைக்கு ஹனுமான் போல் மிகவும் மிக்கியமான வாயில் ஆகும்.
ஒரு சுவாரஸ்யமான நாட்டுப்புறக் கதை இந்த வாயிலுடன் தொடர்புடையது. ராணா கும்ப் இந்த கோட்டை சுவரின் கட்டுமானத்தை ஆரம்பித்தபோது, அந்த அமைப்பு இடிந்து விழும். ஒவ்வொரு முறையும் வேலை தொடங்கப்பட்டதும் அதேதான் நடந்தது. குழம்பிய ராணா ஒரு ஆன்மீக புனிதரை அணுகினார், அவர் நரபலி கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் அவர் ராஜ்யத்திற்கு உதவ தயாராக இருக்கும் ஒரு தன்னார்வராக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார்.
வார்த்தை வெளியே சென்றபோது, சில நாட்கள் யாரும் முன் வரவில்லை. ஒரு நல்ல நாளில், ஒரு சிப்பாய் தன்னார்வத் தொண்டராய் மேவருக்காக தனது உயிரைத் தியாகம் செய்ய முன் வந்தார். ராணா கும்பாவால் கட்டப்பட்டு வரும் கோட்டையின் சுவர்கள் முற்றுகைகளைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்க இறைவனை வேண்டினார்.
பெரிய தியாகம் நடந்த இடத்தில் கோட்டையின் பிரதான வாயில் கட்டப்பட்டது. பெரிய தியாகத்தை நினைவுகூரும் விதமாக, முன்னோடியின் விருப்பப்படி ஹனுமாரின் உருவம் வாயிலுக்கு அருகில் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாயிலில் இரண்டு அனுமன் சிலைகள் உள்ளன. ஒன்று சுமார் பன்னிரண்டு அடி உயரமும் மற்றொன்று கோட்டையின் சுவரில் அலங்கரிக்கப்பட்ட பிறையில் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஹனுமாரின் இரண்டு சிலைகளும் மண்டவ்பூரிலிருந்து ராணா கும்பாவால் கொண்டு வரப்பட்டவை.
ஆன்மீக புனிதரின் போதனையின் பெயரில் நிறுவப்பட்ட ஸ்ரீ ஹனுமனின் விக்ரஹம் பார்வையாளர்களின் கண்களை கவரும் விதம் அமைந்துள்ளது. இவர் கும்பல்கர் கோட்டையின் பாதுகாவலர் மட்டுமல்ல, பாரதத்தின் சனதான தர்மமும் கூட பாதுகாவலராவார். இந்த ஹனுமாரின் சிறப்பு என்னவென்றால், அவரின் இடது கையில் வைத்திருக்கும் போர் ஆயுதம். இந்த ஆயுதம் பொதுவாக ஹனுமாரின் கைகளில் காணப்படுவதில்லை. 'கட்வங்கம்' என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்வாயுதம் சிவபெருமானின் கைகளில் தான் சாதரணமாக காணப்படுகிறது. மேவார் வம்சம் எக்லிங்கை தங்கள் வம்ச தெய்வமாக வணங்குவதால், ருத்ராவதரான ஹனுமாருக்கும் இந்த ஆயுதத்தை [கட்வாங்கம்] இங்கே ராணா கும்பா அவர்கள் ஶ்ரீஹனுமாருக்கு கொடுத்துள்ளார்.
உள்ளங்கை மேல்நோக்கித் திருப்பி எதையோ பிடித்துக் கொண்டு இருப்பது போல் பிரபுவின் வலது கை காணப்படுகிறது. அவரது இரு மணிக்கட்டுகளிலும் இறைவன் கங்கணம் அணிந்துள்ளார், மேலும் அவரது புஜங்களில் கேயூரம் அணிந்துள்ளார். பிரபுவின் இரு தாமரை திருபாதங்களிலும் தண்டையும் மற்றும் அலங்காரமான மணியிலான நூபூரமும் இருக்கின்றன.
இறைவனின் வால் [இது ஹனுமாரின் ஆயுதமுமாகும்] அது நீண்டு மேல்நோக்கிச் சென்று அவரது தலையின் பின்னால் சென்று இடது பக்கத்தில் நீண்டு முடிகிறது. அவர் அணிந்திருக்கும் ருத்ராக்ஷ மாலை அவரது வலது தோள்பட்டையில் இருந்து கணுக்கால் வரை நீண்டு பின் இடதுபுறம் திரும்பி அவரின் பின்னால் செல்லும் ஒரு பெரிய நீண்ட மாலையாகும். இறைவனின் இடது கால்களுக்குக் கீழே ஒரு அரக்கன் தரையில் அழுத்தி வைத்துள்ளார், அரக்கன் மீது செலுத்தப்படும் அழுத்தத்தை இறைவனின் இடது ஆடுதசையின் அளவு மற்றும் வடிவத்தை பார்த்து மதிப்பிடலாம். இவற்றையெல்லாம் மீறி முகம் மிகவும் அமைதியான தோரணையில் காணப்படுகிறது. அவரது கண்கள் பக்தருக்கு அமைதியை அள்ளி வழங்குகிறது. இப்படிப்பட்ட ஶ்ரீஹனுமார் இந்த தேசத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை.
அனுபவம்
'கட்வங்கம்' வைத்திருக்கும் ஹனுமான் தரிசனம் செய்யுங்கள், வாழ்க்கையில் 'வெல்லமுடியாத' நிலையை அடைய
வேண்டும் என்ற உறுதியுடன் எந்தவொரு கடினமான நிலையிலும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளுங்கள், இவர் உருதுணையாக இருப்பார்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2020