home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ தூத் ஆகாரி மடம், ராய்பூர்

தூத் ஆகாரி: சங்கட மோசன அனுமார் கோயில், ராய்பூர்

திரு சுப்பிரமணிய சுவாமி


சத்தீஸ்கட்

நவம்பர் 1, 2000 அன்று புதியதாக ஒரு மாநிலம் சத்தீஸ்கட் என்ற பெயரிலே உருவாக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் ஒரு பகுதியே இந்த சத்தீஸ்கட். சத்தீஸ்கட் என்று இந்த வட்டாரத்திற்கு பெயர் வருவதற்கான காரணம் பல. முப்பத்தாறு என்றதே இந்தியில் சத்தீஸ் என்றும் கோட்டை, வீடு என்பது கட் என்றும் கூறுவர். முப்பத்தாறு கோட்டைகள் இருக்கும் இடம் என்பதனால் இதற்கு சத்தீஸ்கட் என்ற பெயர். ஆனால் சில சரித்திர ஆசிரியர்கள் நாற்பத்தி எட்டு கோட்டைகள் உள்ளதாகவும் கூறுவர். சிலர் சண்டிதேவியின் இருப்பிட ம் என்பதினால் சத்தீஸ்கட் ஆகியிருக்கலாம் என்று கூறுவர். பழங்காலத்திலிருந்தே சத்தீஸ்கட் என்று வழங்கப்பட்டாலும் கல்வெட்டுகளிலோ அல்லது அரசாங்க ஆவணங்களிலோஇந்த பெயர் காணப்படவில்லை. சத்தீஸ்கட் என்ற அந்த பகுதி கோசல ராஜ்ஜியம் என்று பெயர். மௌரிய மன்னர்கள் ஆட்சியின் ஆளுகைக்கு இந்த பகுதி உட்பட்டு இருந்திருக்கிறது. ஹைஹாயா வம்சத்தினரும் இந்த பகுதியினை ஆண்டுள்ளனர். தற்பொழுது சத்தீஸ்கட் மாநிலம் உருவாக்கப்பட்டு அதற்கு ராய்பூர் தலைநகரமாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

ராய்பூர்

ராய்பூர் மிக பழமையான ஓரிடம். ஹைஹயா அரசர்கள் இதனை தலைநகரமாக கொண்டு முப்பதாறு கோட்டைகளையும் அரசாண்டு வந்து உள்ளனர். ராய்பூரில் இன்றும் தெற்கு பகுதியில் இவர்கள் காலத்தை சார்ந்த கோட்டையை இடிந்த நிலையில் சாட்சியாக பார்க்க முடியும். கலச்சூரி வம்ச அரசான ராமசந்திரன் தனது மகன் பிரம்ம தேப் ராய் பெயரில் தற்போதைய ராய்பூரை உருவாக்கினார் என்றும், சிலர் பிரம்ம தேப் ராய் அவர்களே தன் பெயரில் இந்நகரை உருவாக்கினார் என்றும் கூறுவர். ஆனால் 'கல்வெட்டிகா' (தற்போதைய கலாரி) என்ற ஊரில் இருந்து தலைநகரை ராய்பூருக்கு மாற்றியவர் பிரம்மதேவராய் தான் என்பது கல்வெட்டுகளிலிருந்து தெரியவருகிறது. பின்பு மராட்டியர் நாகபுரியை தலைநகரமாக கொண்டு ராய்பூரை ஆண்டுள்ளனர். சென்டரல் பிராவின்ஸ் என்று ஆங்கிலேயர் காலத்திலும், பின்பு மத்திய பிரதேசத்தின் ஆளுகைக்கும் உட்பட்ட போதிலும் ராய்பூர் தனது முக்கியவத்தை இழக்கவில்லை. இன்று ஒரு மாநிலத்தின் தலை நகரமாகி பழைய பெருமையினை திரும்ப பெற்றுள்ளது.

ராய்பூர் கோயில் நகரம்

ராய்பூரை கோயில் நகரம் என்றும் கூறுவர். சுமார் முப்பது கிலோ மீட்டர் வட்டத்தினுள் பற்பல அருமையான வியக்க தக்க கோயில்கள் பல மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. தற்பொழுதைய ராய்பூர் நகரத்தில் பல கோயில்கள் இருந்தாலும் ஜகந்நாத், மாகமாயா, விவேகானந்த ஆசிரமம், தூத் ஆகாரி கோயில், தூத் ஆகாரி மடம், பாலாஜி, சங்கட மோசன அனுமான், இராம் பஞ்சாயதன், வீர அனுமான் கோயில்கள் பிரசித்தம் ஆனவை. கடைசியாக கூறப்பட்ட ஆறு கோயில்களும் தூத் ஆகாரி மடத்தின் அருகாமையில் இருக்கிறது.

தூத் ஆகாரி

 இராம் பஞ்சாயதன் கோயில் சுவாமி பாலபத்ர தாஸ் என்ற ஒரு பெரிய மகான் அனுமான் பக்தராக விளங்கியவர். அம்மகான் ஒரு சுயம்பு அனுமான் விக்ரகத்தை வழிபட்டு வந்தார். அவ்வனுமானுக்கு தினமும் வழிபாடு நடத்தி ஆராத்தித்து வந்தார். பிரசாதமாக பால் அளிப்பது வழக்கமாக கொண்டார். சுகி என்னும் ஒரு பசு தினம் தானாகவே இவ்வனுமாருக்கு பால் வழங்க மடத்திற்கு வருவது வழக்கம். நாளடைவில் மகான் பாலபத்ர தாஸ் பாலை மட்டும் ஆகாரமாக உண்ண ஆரம்பித்தார். பாலை மட்டும் ஆகாரமாக கொண்ட அம்மகானை மக்கள் தூத் ஆகாரி மகான் என்றே அழைக்க ஆரம்பித்தனர். (இந்தியில் தூத் என்றால் பால் என்று பொருள்.) இவருக்கு பக்தர்கள் பலர் இருந்தனர். நாக்பூரை தலைநகரமாக கொண்டு ராய்பூரை அப்பொழுது ஆண்ட மராத்திய மன்னர் ரகுராவ் போன்ஸ்லே என்பவரும் தூத் ஆகாரி மகானின் மீது மிக அபிமானம் கொண்டவர்.

ஸ்ரீபாலாஜி கோவில்

விஷ்ணு பக்தரான இம்மன்னர் ஸ்ரீபாலாஜிக்கு ராய்பூரில் கோயில் கட்ட விரும்பினார். தனது எண்ணத்தை தூத் ஆகாரி மகானிடம் தெரிவித்தார். மகானின் இசைவின் பெயரில் மகான் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில் ஸ்ரீபாலாஜிக்கு கோயில் 1610 ம் ஆண்டு ரகு ராவ் போன்ஸ்லேயால் எழுப்பப் பட்டது. ராமரின் சரிதம் முழுவதும் அழகிய ஓவியங்களாக ஸ்ரீபாலாஜி கோயிலில் வடிக்கப்பட்டது. இன்றும் இவை நல்ல நிலமையில் உள்ளன. அங்கு பல சாலிக்கிராம் பூஜையில் உள்ளன. இக்கோயிலுக்கு முன் மகான் தூத் ஆகாரி பூஜித்து வந்த அனுமானுக்கு சன்னதியும் நிறுவப்பட்டது, அனுமான் ஸ்ரீபாலஜி கோயிலுக்கு வரும் பக்தர்களை பார்த்த வண்ணம் அமைக்கப் பட்டது.

சங்கட மோசன அனுமான்

ராய்பூர்-சங்கடமோசன் அனுமான் கோவில் இதன் பிறகு ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. சில நாட்கள் கழித்து, இவ்வனுமான் ஸ்ரீபாலாஜியை நோக்கி திரும்பி விட்டாராம். இன்றும் கதவு ஒரு புறமும் படிகள் மறுபுறமும் உள்ளன. அனுமானின் முகம் ஸ்ரீபாலாஜியை பார்ப்பதாகவும் வடக்கு பக்கம் திரும்பி உள்ளது. முகம் மட்டும் திரும்பியுள்ள இவ்வனுமாரை ஸ்ரீபால் பால் பத்ர தாஸ் என்ற மாகான் பூஜித்த அனுமானை இன்றும் அவ்வண்ணமே காணலாம். இவ்வனுமாருக்கு சங்கட மோசன அனுமான் என்று பெயரிட்டுள்ளனர். உண்மையிலேயே பக்தர்களின் சங்கடங்களை தீர்க்கும் அனுமான் அவர்.

இராம் பஞ்சாயதன்

சுமார் இருபது வருடங்கள் கழித்து ஸ்ரீபாலாஜி கோயிலுக்கு அருகாமையிலேயே (பக்கத்தில்) இராம பரிவாரங்களுக்காக இராம் பஞ்சாயதன் கோயில் ஸ்ரீ ஜகந்நாத ஸாவ் என்பவரால் எழுப்பப் பட்டது. ஸ்ரீசீதா, இராமர், இலக்குமணர், பரதர், சத்ருகுணர், ஆகிய ஐவரின் மரத்தினால் ஆன விக்கிரங்கள் கொண்டு அமைக்கப் பட்டது. ஐவர் இருக்கும் இடம் ஆதலால் பஞ்சாயதன் என்று பெயர். 1922ல் திருத்தி அமைக்கப் பட்ட பொழுது மர விக்கிரங்கள் பளிங்கு கல் விக்கிரங்களாக மாற்றி அமைக்கப் பட்டன. மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாசங்களிலிருந்து கலை நுணுக்கங்களுடன் வடிக்கப்பட்ட காட்சிகள் கோயிலின் சுவர்களில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீஇராமரின் சிலையும் பரதரின் சிலையும் கருப்பு நிறம் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீர அனுமான்

ஸ்ரீ இராம பரிவாரம் அனுமான் இல்லாம் முழுமை பெறாதல்லவா? அதனால் அனுமானுக்கு இராம் பஞ்சாயதன் கோயிலுக்கு முன்பாக சன்னதி அமைக்கப் பட்டது. இவ் அனுமான் வீர அனுமானாக சித்தரிக்கப் பட்டுள்ளார். இடது கையில் சஞ்சீவி மலையையும் வலது கையில் கதையுடனும் காட்சி தருகிறார் அவர். வீர அனுமானின் காலடியில் அஹி ராவணன் மிதி பட்டு கிடக்கிறான். இராம-இராவண யுத்ததிற்கு பிறகு அஹி ராவணனை அனுமான் வதம் செய்வதை குறிக்கும் காட்சி இது.

தூத் ஆகாரி ப்ருந்தாவனம்

மகான் தூத் ஆகாரி சிறிது காலம் கழித்து முக்தியடைந்தார். அவருடைய பிருந்தாவனம் ஸ்ரீபாலஜி கோயிலுக்கு பின் புறம் அமைந்துள்ளது. உட்கார்ந்த நிலையில் முக்தி அடைந்தகாக கூறப்படுகிறது. இன்றும் அவர் உபயோகித்த சில பொருட்கள் காட்சிக்கு அங்கு வைக்கப்பட்டுள்ளது. நானுறு வருடங்களுக்கு பிறகும் இன்றும் பக்தர்கள் திரள் திரளாக அந்த மகானின் ப்ருந்தாவனத்திற்கு வந்து தங்கள் குறைகள் கூறி அவர்களின் சங்கடங்களை தீர்க்க வேண்டுகின்றனர். அதன் பிறகு சங்கட மோசன அனுமாரை தரிசித்து பின் ஸ்ரீபாலாஜியை தரிசித்து செல்கிறார்கள். இன்றும் தன் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து துன்பங்களை தீர்க்கின்றார்.

தனது பக்தர் பாலபத்ர தாஸை தூத் ஆகாரி மகானாக மாற்றி தனது இச்சா தெய்வமான ஸ்ரீ இராமருக்கு அவர் வழியே கோயில் கட்ட வைத்து, ஸ்ரீ இராமரை பார்த்த மாதிரி பக்தர் வைத்த இடத்தை விட்டு நகராமல், பக்தரின் பக்தர்களுகெல்லாம் அருளையும் ஆசியும் வாரி வழங்கும், சங்கடங்கள் தீர்க்கும் அவ்வனுமானை பணிவோமாக.

சங்கட மோசன வீர அனுமான்

அன்னை சீதா தேவியின் துயரத்தை தீர்த்தவர் அனுமார். ஸ்ரீ இராமரின் மோதிரத்தை அன்னையிடம் சேர்ப்பித்து அன்னையின் துயரினை அகற்றியவர். கம்பர் இதனை 'இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ..' என்கிறார். இதினும் சிறந்த உவமை உளதோ அனுமார் செய்த காரியத்தின் பலனுக்கு? இராம பக்தரான அனுமான் தன் அண்ணலுக்காக எதையும் உரிய முறையில் செய்யவல்லவர். தனது பக்தர்களுக்கும் ஸ்ரீ இராம பக்தர்களுக்கும் என்றும் உருதுணையாய் நிற்பவர் அவர். அவர் தாள் பணிவோம்.


 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஶ்ரீ தூத் ஆகாரி மடம், ராய்பூர் "

 

அனுபவம்
ஶ்ரீ ஶ்ரீ பாலபத்ர தாஸை தூத் ஆகாரி மகானாக மாற்றியவர் இவ்வனுமார். மாபெரும் துறவி ஸ்ரீ தூத்ஆகாரியும் அவரது வழிகாட்டியான ஸ்ரீ சங்கட மோச்சன அனுமாரும் பக்தர்களின் எந்த அளவிலான அழுத்தத்தையும் துயரத்தையும் வென்றிட சக்தியை வழங்க காத்திருக்கிறார்கள். உண்மையான பக்தியுடன் வாருங்கள் அவர்களின் ஆசீகளை பெற்று செல்லுங்கள்.

தமிழாக்கம் :தர்முபுத்திரன்
முதல் பதிப்பு மே 2009
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020
சிவ ஒளி மாதஇதழில் (ஏப்ரல் 2009ல்) வெளிவந்துள்ளது


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+