ஶ்ரீராமர் ஶ்ரீதுப்படாஞ்சநேயஸ்வாமி கோயில் பெங்களூருவில் பல்லபுராவில் உள்ள ரங்கசுவாமி டெம்பிள் வீதியில் உள்ளது. பேட்டை என்று சொல்லப்படும் பழைய பெங்களூரில் இருப்பதால், சுற்று வட்டாரம் மிகவும் நெரிசலாகவும், கலகலப்பாகவும் இருக்கும். இத்திருக்கோயிலில் ஶ்ரீஹனுமான், ஶ்ரீராமர், ஶ்ரீசீதா, ஶ்ரீலக்ஷ்மணர் பூஜிக்கப்படுகின்றனர்.
இத்திருக்கோயிலின் பெயர் நெய்விளக்குடன் [கன்னடத்தில் துப்பா என்றால் நெய்] இணைக்கப்பட்டுள்ளது, தினம் இருபத்திநான்கு மணி நேரமும் கடந்த நானூறு வருடங்களாக சுடர் விட்டு எரிந்துக் கொண்டுள்ளது நெய்விளக்கு இங்கு. இடைவிடாது வரும் பக்தர்கள் அளிக்கும் நெய், விளக்கில் சுடர்விட்டு எரிகிறது. பலர் விளக்கில் இடம் இருக்கும் வரை நெய்யை சமர்பிப்பர், விளக்கில் இடமில்லாமல் போனால், கோயிலில் சமர்பிப்பார்கள். கோயில் வாசலில் நெய் கிடைக்கும். இரண்டு ரூபாய் முதல் கிடைக்கும். ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு இருபக்கத்தில் உள்ள விளக்கில் பக்தர்கள் அளிக்கும் நெய் சமர்ப்பிக்கப்படும். பல பக்தர்கள் தாங்களின் வேண்டுகோள் நிறைவேறியதும் அதிக அளவில் [கிலோ கணக்கில்] நெய்யை பகவானுக்கு சமர்ப்பிக்கின்றனர்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், சனிக்கிழமையும் பகவான் ஶ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சார்த்தப்படுகிறது.
ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஶ்ரீராமருக்கான சன்னிதி சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பட்டாசாரியார் ஶ்ரீகேசவ கிருஷ்ணா சிறு வயது முதற்கொண்டே தனது தகப்பனாருக்கு இக்கோயிலில் பூஜைக்கு உதவி செய்து வருகிறார். அறங்காவலர் குழுவின் கீழ் திருக்கோயிலின் நிர்வாகம் செயல்படுகிறது.
ஶ்ரீ ஆஞ்சநேயரை பக்தர்கள் அனைவரும் தொட்டு வணங்கலாம். தினம் காலை ஒன்பது மணிக்கு அபிஷேகம் முடிந்த பிறகு பக்தர்கள் தொட்டு வணங்கலாம். விசேட நாட்களில் அர்ச்சகரே பூஜை செய்வார். மற்றொரு விசேடம் மற்ற கோயில்களில் உள்ள மாதரி அல்லாமல் இக்கோயிலில் கர்ப்பகிரஹத்திற்கு கதவுகள் கிடையாது. கோயில் எழுப்ப தொடங்கிய காலத்தில், கர்ப்பகிரஹத்திற்கு கதவு வைக்கும் வேளை வந்த பொழுது, ஶ்ரீஆஞ்சநேயர் பல பக்தர்களின் கனவில் ஒரே சமயத்தில் வந்து கர்ப்பகிரஹம் கதவற்று எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பக்தர்கள் தன்னை எந்நேரமும் தரிசிக்கவும், வணங்கவும் உரிமையுள்ளவர்கள் என்பதால் கதவு வேண்டாம் என்றும் அறிவுறித்திருக்கிறார். அதன் காரணமாக இன்றும் ஶ்ரீஆஞ்சநேயரின் இவ்விரண்டு உத்தரவும் பரிபாலிக்கப்படுகிறது.
பக்தர்கள் பூஜை செய்ய வசதியாக அங்கே இரண்டு பிததளை ’ஆரத்தி’ தட்டு வைக்கப்பட்டுள்ளது. தட்டுகள் அழகிய பித்தளை சங்கலியால் சட்டத்தில் பிணைக்கப்பட்டுள்ளது, தவறுதலாக தட்டை வேறெங்கும் வைக்க முடியாத மாதரி அமைப்பு இது.
நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. பெங்களூரு பல்லபுரா பேட்டையில் உள்ள ஶ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயில் திரு குண்ணப்பசாரியா மற்றும் அய்யப்பசாரியா என்பவர்கள் அர்ச்சகர்களாக இருந்தார்கள். ஏழ்மையில் இருந்த அவர்கள் கோயிலிலேயே ஒரு சிறிய இடத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஒரு நாள் ஶ்ரீசுக்தேவா என்ற பெயருடைய யோகி ஒருவர் தானும் இத்திருக்கோயிலில் அவர்களுடன் தங்க அனுமதி கேட்டார். ஒளிரும் முகத்துடன் கூடிய அந்த யோகியின் விருப்பத்தை அர்ச்சகர்களால் மறுக்க முடியவில்லை. ஒப்புதல் அளித்தனர்கள்.
ஶ்ரீசுக்தேவா யோகி அவர்கள் தனது மந்திர சக்தியினால் ரசவாதம் செய்து மற்ற உலோகத்தை தங்கமாக மாற்றி அதனைக் கொண்டு ஈட்ட பணத்தில் நல்ல பல பணிகளை செய்து வந்தார். கோயில் அர்ச்சகர்களுக்கு சற்று வியப்பாக இருந்தது, பின் தங்களுக்கும் ரசவாதத்தை கற்று தர வேண்டினர். யோகி இது தங்களுக்கு இது ஏற்றதல்ல, நல்ல நேரம் வரும் போது தாங்களுக்கு நான் வழி காட்டுவேன் என்று கூறிவிட்டார்.
சிலநாட்கள் கழித்து, யோகி அர்ச்சகர்களை கூப்பிட்டார். குளித்து புத்தாடை உடுத்தி வரச்சொன்னார். அவர்கள் வந்த பிறகு ஶ்ரீஆஞ்சநேயரின் கற்சிலையை பூமியில் ஊண்றினார், அதற்கு முன் பல மந்திர உச்சாரணத்துடன் பீஜாக்ஷரம் கொண்ட யந்திரத்தை ஸ்தாபனம் செய்தார், பின் சிலையை ஸ்தாபனம் செய்தார். வேதத்தில் கூறியுள்ளபடி பய பக்தியுடன் இவரை பூஜை செய்யவும். பக்தர்களை இவர் தானாகவே ஆகர்ஷிப்பார், கோயில் கட்டிக்கொள்வார் என்றார். யோகி அவர்கள் அர்ச்சகர்களை ஶ்ரீஆஞ்சநேயரை மூன்று பிரதக்ஷிணம் செய்து விட்டு வருமாறு கூறினார். இருவரும் இறைவனை மனமாற வேண்டிக் கொண்டு மூன்று பிரதக்ஷிணம் செய்தனர். இவர்கள் திரும்ப வருவதற்குள் யோகி மாயமாக மறைந்துவிட்டார்.
திரு குண்ணப்பசாரியா மற்றும் அய்யப்பசாரியா இருவரும் ஶ்ரீஆஞ்சநேயருக்கு பூஜை செய்து வந்தனர், நாளடைவில் பல பக்தர்களுடன் ஒன்று சேர்ந்து ஶ்ரீஆஞ்சநேயருக்கு கோயில் உருவாக காரணமாக இருந்தனர்கள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பரம்பரையில் வந்த திரு ஶ்ரீநிவாஸாசாரியார் அவர்கள் ஶ்ரீராமருக்காக ஒரு சன்னிதி கோயிலுள்ளேயே பக்தர்களின் நன்கொடையினால் கட்ட தீர்மானித்தார். அதற்கு முக்கியமாக திருமதி கமலம்மா அவர்கள் ஶ்ரீராம பரிவார சிலைக்கான மொத்த செலவையும் ஏற்று கொண்டார். வைகாஷண ஆகம விதிபடி கட்டப்பட்ட சன்னிதி மிகவும் அழகாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இத்திருக்கோயிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கன்னட புத்தாண்டான யுகாதியில் ஆரம்பித்து நாற்பத்து ஐந்து நாட்களுக்கு "ஶ்ரீராமோத்ஸவம்" கொண்டாடப் படுகிறது. ஆயிர கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப் படுகிறது. ச்ரவண மாதத்தில் தினமும் பகவானுக்கு விசேட பூஜைகள் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் "திரிலக்ஷ" [மூன்று லக்ஷம்] நாமாக்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. மார்கழி மாதம் ஶ்ரீஹனுமத் ஜயந்தியும் பிரம்மோத்ஸவமும் நடைப்பெருகிறது.
இத்திருக்கோயிலுக்கு ஶ்ரீ சமர்த்த ராமதாஸர் விஜயம் செய்து கோயில் வளாகத்தில் பஜனை செய்துள்ளார்,
இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்துள்ள மற்ற பிரமுகர்கள்- ஶ்ரீஜயசாமராஜ உடையார் [மைசூர் மகாராஜா], திரு மிர்ஶா ஸ்மைல் [மைசூர் திவான்], திரு ஹனுமந்தய்யா [முன்னாள் கர்நாடக முதல்வர்]- இவருக்கு மிகவும் இஷ்டமான கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காலை ஏழு மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணி வரை, பின் மாலை ஆறு மணி முதல் எட்டரை மணி வரை
அனுபவம்
நெய் கொண்டு இத்திருக்கோயில் விளக்கேற்றுங்கள், ஶ்ரீதுப்படா ஆஞ்சநேயர்
உங்கள் வாழ்க்கையில் ஒளிவீசி, தங்கள் சிந்தனை, செயல் எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்வார்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: பதிப்பு: நவம்பர் 2020
* ஆசிரியர் பல்வேறு விளம்பர முகவர் மற்றும் வெளியீடுகளுக்கு
மெய்ப்புப் பார்த்தல், நகல் ஆசிரியராக[காபி எடிட்டர்] ஆக உள்ளார்.