ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிவதற்கு முன் இரு இராஜ்யங்களுக்கும் ஹைதராபாத் தலைநகரமாக இருந்தது. இப்பொழுது தெலுங்கானாவின் தலைநகரமாகயுள்ளது. கி.மு.300 முன் இருந்தே இங்கு மக்கள் வசித்து வந்ததர்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இப்பிராந்தியம் மையூரர், சதவாஹனர்கள், இஷ்வாகு, சாளுக்கியர் என்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. சாளுக்கியர் கீழிருந்து ஆட்சி பொருப்பில் இருந்த காக்கத்ரியர்கள், தங்களை தனி இராஜ்யமாக பிரகடித்துக் கொண்டனர். வாரங்கல்லை தலைநகரமாக கொண்டு இவர்கள் ஆட்சி நடந்தது. இவர்கள் காலத்தில் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட கோல்கொண்டா கோட்டை மிகவும் பிரசுத்தமான தலம்.
இன்று தெலுங்கானாவில் உள்ள தெலுங்கு பேசும் பிராந்தியங்கள் அனைத்தும் அன்று காக்கத்தியர்கள் கி.பி. 1083 முதல் 1323 வரை ஊருகலு என்று அழைக்கப்பட்ட இன்றைய வாரங்கல்லை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். தில்லி சுல்தான்கள் இங்கு வரும் வரை இவர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் மகத்தான ஆட்சியாளர்களாக இருந்தனர். காக்கத்தியர்கள் ஆட்சியில் ஶ்ரீருத்ரம்மாள், அவர்களின் பேரன் ஶ்ரீபிரதாபருத்ரன் இருவர் ஆட்சி காலமும் மிகவும் கடினமான காலமாகவும் தர்மத்தை நிலை நிறுந்த போர் புரிந்த காலமும் ஆகும்.
ஶ்ரீபிரதாபருத்ரன் இந்த ஹைதராபாத் நகரத்திற்கு யாராலும் மறுக்கமுடியாத மிகப்பெரிய சின்னமாக ஒன்றை பரிசாக விட்டுச் சென்றுள்ளார். அவர் காலத்திற்கு பிறகு ஏற்பட்ட கடினமான காலத்திலும் இச்சின்னம் மக்களுக்கு இழந்த பகுமானங்களை திரும்ப பெற ஊக்கமளிக்கும் சின்னமாக விளங்கியது. சொல்லப்போனால் மிஞ்சியிருக்கும் மக்களுக்கு உற்சாகமும் பயமின்மையும் அளிக்கும் மாணிக்கமாக தனது பெயரிலேயே தாங்கி நிற்கிறது. அச்சின்னம் "கர்-மன்-காட்" ஶ்ரீதியான ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்.
காக்கத்திய அரசன் ஶ்ரீபிரதாபருத்ரன் கி.பி. 1143ஆம் ஆண்டு லக்ஷ்மிகூடம் என்னும் கிராமத்தின் அருகில் வேட்டையாட வந்திருந்தார். இன்று குறிப்பிட்ட கிராமம் ஹைதராபாத் அருகில் உள்ளது. நீண்ட நேரம் வேட்டையாடிய பிறகு ஒரு மரத்தடியில் அவர் களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்பொழுது புலியின் உறுமல் சப்தம் கேட்டது, அதை தொடர்ந்து அவர் திரும்பவும் சப்தம் கேட்ட திக்கை நோக்கி சென்றார். அவர் அத்திசையை செல்ல செல்ல புலியின் உறுமல் மறைந்து அதே போல் ஶ்ரீராமரின் நாமம் கேட்க தொடங்கியது. மேலே அவர் அடர்ந்த காட்டில் நடக்க ஶ்ரீராம நாமம் சற்று பலமாகவும் தெளிவாகவும் கேட்டது. அந்த திசையில் பயணித்த அவர் அங்கு ஒரு பாறாங்கல்லில் ஶ்ரீஹனுமார் உட்கார்ந்திருப்பது போன்ற வடிவம் தெரிந்தது. அக்கல்லிலிருந்து தான் அந்த ஶ்ரீராம நாமம் வருவதை அவர் உணர்ந்தார். அவர் ஶ்ரீஹனுமாரை வணங்கினார், பின் தன் இருப்பிடத்துக்கு திரும்பினார். அன்று இரவு அவரது கனவில் ஶ்ரீஹனுமார் தோன்றி தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். ஶ்ரீபிரதாபருத்ரன் அவருக்கு அங்கேயே கோயில் கட்டி வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்தான். பின்பு வந்த அரசர்களும் அக்கோயிலை பராமரித்தனர்.
இந்த இடத்திற்கு கர்மன்காட் [கரோ மன் காட்/करो मन घट] என்று பெயர் வந்தது என்பது மிகவும் சுவாரஸ்யமான விசயம். பதினேழாம் நூற்றாண்டில் முகலாயர் அவுரங்கசீப் தனது ஆட்சியை விரிவுபடுத்த நினைத்து, தென் நாட்டிற்கு மொகலாய படைகளை அனுப்பி வைத்தான். தெற்கில் முதலில் ஹைதராபாத் சுல்தானை தோற்கடிக்க தானே தனது தளபதி க்வாஜா அபிட் உடன் 1686இல் படையெடுத்தான். கோல்கொண்டா கோட்டையை முற்றிகையிட்டான். தோல்வியும் கண்டான். ஆத்திரம் அடைந்த அவுரங்கசீப் மற்றும் அவர் படையினர்கள் கண்ணுக்கு தெரிந்த கோயில்களை எல்லாம் நாசம் செய்த வண்ணம் திரும்பிச் சென்றனர்.
அவுரங்கசீப்பின் மனம் கோல்கொண்டா கோட்டையில் தான் அவமானப்பட்ட நினைவு துரத்தியது. அதனால் அடுத்த ஆண்டே 1687இல் திரும்பவும் மிகவும் தீவிரமான முயற்சி எடுத்து கோட்டையை கைப்பற்றினான். வெற்றி களிப்பிலிருந்த அவன் தனது படையுடன் எல்லா கோயில்களையும் தகர்த்தான். இந்த கோயிலும் அவர்கள் பார்வையின் கீழ் வந்தது. படையினர் இக்கோயிலுக்கு அருகில் கூட நெருங்க முடியாத மாதரி எதோ ஒரு சக்தி அவர்களை விரட்டியது. அவர்கள் எவ்வளவு முயன்றும் கோயிலின் அருகில் செல்ல முடியவில்லை.
இந்த அதிசய நிகழ்வு அவுரங்கசீப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவன் தானே அங்கு சென்று பார்க்க நினைத்தான். கோயில் அருகில் அவன் சென்ற பொழுது "கரோ மன் கட்/करो मन घट" என்று புலியின் உறுமல் சப்தம் கேட்டது. அவனுக்கு இச்சொல்லின் விளக்கம் புரிந்தது. மனதை திட படுத்திக் கொள் என்று பொருள் படும் சொல் இது. கோயிலை அழிக்க வேண்டுமானால் மனதை திடபடுத்திக் கொள் - அர்த்தம் அது உன்னால் முடியாது என்பதே. அவன் தனது முயற்சியை கைவிட்டான். திரும்பிச் சென்றான்.
"கரோ மன் கட்/करो मन घट" என்பது இக்கோயில் ஶ்ரீஹனுமாரின் வாக்கு என்பதால் இதையே இக்கோயில் ஶ்ரீஹனுமாரின் பெயராகவும் அழைக்கும் வழக்கம் பக்தர்களுக்கு வந்தது. "கரோ மன் கட்" என்பது நாளடைவில் கர்மன்கட் என்று வழங்கப்படுகிறது.
தெலுங்கானாவின் தலைநகரம் ஹைதராபாத் அருகில் ரங்கா ரெட்டி மாவட்டம், சரூர்நகர் மண்டலத்தில் கர்மன்கட் கிராமத்தில் அமைந்துள்ளது இவ்வருமையான திருக்கோயில். மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது கோயில் வளாகம். ஶ்ரீ ஹனுமாருக்கான இத்திருக்கோயில் வளாகத்தில் இதர பல திருதெய்வங்களுக்கும் சிறிய சிறிய கோயில்கள் பல உள்ளன. கோயில் வளாகம் மிகவும் பெரியதாக காணப்படுகிறது.
ஶ்ரீ தியான ஆஞ்சநேயருக்கான முக்கிய சன்னிதிக்கு வலது பக்கம் வினாயகருக்கான கோயில், கிழக்கு பக்கம் பூரி ஜகந்நாதர், ஶ்ரீ துர்கா மாதா, ஶ்ரீ வேணுகோபல ஸ்வாமி, நவகிரகங்கள், ஶ்ரீ பிரமராம்பாள் சமேத ஸ்படிக லிங்கேஸ்வரர், ஶ்ரீராமர், ஶ்ரீ சந்தோஷிமாதா, காசி விஸ்வேஸ்வரர், சரஸ்வதி ஆகியோர்களுக்கு தனி தனி கோயில்கள் உள்ளன.
கர்மன்கட் ஶ்ரீ தியான ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பழைமையான ஹனுமாருக்கான தனி கோயில்களில் பெரிய கோயிலாகும். கோயில் வளாகத்தில் தென்புறம் திருக்கோயிலின் குளம் உள்ளது. நேர் எதிரே ஶ்ரீஹனுமாருக்கான திருக்கோயிலின் நுழைவாயில் உள்ளது. அதன் முன்பு நான்கு பெரிய விளக்கு தூண்கள் உள்ளன. இவைகள் உச்சியில் விழாகாலத்தில் தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த கோயிலின் பிரதான தெய்வமான ஹனுமார் 'தியான அஞ்சநேய சுவாமி' என்று அழைக்கப்படுகிறார். இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமார் அவரது முகத்தில் அமைதியை ஆபரணமாக அணிந்து அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். பிரதான தெய்வம் தெற்கு நோக்கி உள்ளார். மூர்த்தம் சுமார் ஐந்தடி உயரம் இருக்கும். பிரபுவின் முகம் சிங்கத்தின் தோற்றமாக இருந்தாலும் அமைதியை அணிகலமாக அணிந்துள்ளது தெய்வத்தின் அழகை மேலும் வெளிப்படுத்துகிறது.
பிரதி செவ்வாய் கிழமையும், சனிகிழமையும் பல்லக்கில் கோயிலை வலம் வரும் உத்ஸவ மூர்த்தியை கர்பகிரஹத்தில் காணலாம்.
இந்த கோயில் தெலுங்கானா அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏழு அடுக்குகளைக் கொண்ட ராஜ கோபுரம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த கோவிலில் தினமும் நண்பகலில் பக்தர்களுக்கு உணவளிக்கும் திட்டம் அமலில் உள்ளது.
ஹனுமான் ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி, யுகாதி [தெலுங்கு புத்தாண்டு நாள்], கிருஷ்ண ஜன்மாஷ்டமி, மகா சிவராத்திரி போன்ற பல பண்டிகைகள் மிகுந்த கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தெலுங்கானாவின் ரங்கரெட்டி மாவட்டத்தின் கீழ் உள்ள சரூர்நகர் மண்டலத்தில் வரும் கர்மன்கட் கிராமத்தின் பிரதான சாலையில் கர்மன்கட் ஹனுமார் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்விடம் இப்போது ஹைதராபாத்தின் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் சாகர் ரிங் சாலைக்கு அருகில் உள்ளது. பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எம்.ஜி பஸ் நிலையத்திலிருந்து அல்லது பதினாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து இந்த இடத்தை பஸ்ஸில் வந்து அடையலாம்.
காலை 6மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரை. செவ்வாய், சனி மற்றும் விசேட நாட்களில் காலை 5.30 முதல் மதியம் 1மணி வரை, பிற்பகல் 16.30 முதல் இரவு 9 மணி வரை.
அனுபவம்
அமைதியே உருவாய் காணப்படும் கர்மன்கட ஹனுமார் பக்தர்களுக்கு
நம்பிக்கையும் வீரியத்தையும் கொடுக்கிறார் என்பது உறுதி. தன்னைச் சுற்றியுள்ள சவாலான உலகத்தை எதிர்கொள்ள
பக்தர்களுக்கு புத்துயிரும் வழங்குகிறார் என்பதும் உறுதி.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஜனவரி 2021