home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பரேட் ஶ்ரீஹனுமார் மந்திர், சாகர், மத்திய பிரதேசம்


பரேட் ஶ்ரீஹனுமார் மந்திர், சாகர், மத்திய பிரதேசம்

ஶ்ரீ ராஜேஷ் மாளவியா, சாகர்*


சாகர்

மத்திய பிரதேசத்தில் ஒரு முக்கியமான நகரம் சாகர். இந்நகரத்தின் சீதோஷ்ண நிலை, இரயில் இணைப்பு, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு இவைகள் வசதியாக இருப்பதால் பல தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் நடத்த விரும்புகிறார்கள். நகரத்தின் கலாச்சாரமும் பாரம்பரியமும் மிகவும் சிறப்பாகவும் போற்றத்தக்கதாகவும் இருக்கிறது. இந்நகரம் பல கல்வி நிறுவனத்துடன் சாகர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுவதால் துடிப்பாகயிருக்கிறது. கட்பாஹரா குன்று, ராஹத்கர் நீர்விழுச்சி, கிம்லஸா வனம் என்று பல உல்லாச சுற்றுலா தலங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நகரமாக உள்ளது. மத்திய பிரதேச மாநில போலீஸ் அகடமி இங்கு இயங்குவது மாநிலத்தில் இந்நகருக்கு உள்ள முக்கியத்துவத்தை காண்பிக்கிறது.

பெயர் காரணம்

சௌகர் என்பது "சௌ+கர்" என்ற இரண்டு வார்த்தைகள் கொண்டதது, சௌ என்றால் நூறு என்றும் கர் என்றால் கோட்டை என்று பொருள் படும். இங்கு பல கோட்டைகள் இருந்ததால் இப்படி பெயர். இன்று சௌகர் என்பது சாகர் என்று வழங்கப்படுகிறது. அதற்கு மற்றொறு காரணம் நகரத்தின் மையப் பகுதியில் மிக பெரிய கடலை ஒத்த ஏரி ஒன்று உள்ளது, சாகர் என்பது கடல் என்பதை குறிக்கும். கி.பி. 1100இல் லக்கா பான்ஜாரா என்பவரால் உருவாக்கப்பட்டது இந்த பிரம்மாண்டமான ஏரி இது. இன்று இந்த கடல் போன்ற ஏரி இந்நகரின் அழகை மேலும் கூட்டுகிறது.

சாகர் பாளையம்

பரேட் ஶ்ரீஹனுமார் மந்திர், சாகர், மத்திய பிரதேசம் பண்டை காலத்தில் சேதி ராஜ்யாம் சுக்திமதி என்பதை தலைநகரமாக கொண்டு இன்றைய சாகரில் விளங்கியது. சமீப காலத்தில் மராத்திய தளபதி கோவிந்த பந்த் புன்டிலே 1735 ஆண்டு சாகரை தலைநகரமாக கொண்டார். நகரத்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. இந்தியாவின் மையத்தில் சாகர் அமைந்திருப்பதாலும், மூலோபாய ரீதியான ஸ்தானத்தில் இருப்பதாலும் இது அதிக முக்கியத்துவத்தைப் பெற்றது. மராத்தியர்கள் ஆங்கிலேயர்களுடன் பல போர்கள் புரிய வேண்டி வந்தது. 1817-1818 இல் மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடைப் பெற்ற மூன்றாவதும் கடைசி போரில் போன்ஸ்லே சீதாபால்டியிலும், ஹோல்கர்கள் நிர்புட்டாவிலும் தோற்கடிக்கப்பட்டனர். அதனால் போன்ஸ்லே கீழ் இருந்த நாகபுரியும், பேஸ்வாகளிடம் இருந்த புந்டல்கண்ட் ஆங்கிலேயர்களுக்கு கை மாறியது. 1818 பேஸ்வாகளுடன் சமரசத்திற்கு பிறகு இப்பிரதேசம் சௌகர் மற்றும் நிர்புட்டா பகுதி என்று அழைக்கப்பட்டது.

பழைய சாகர்

அருகில் உள்ள கட்பாஹராவை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் சாகரை மாற்று தலைநகரமாக உருவாக்கினார்கள். இன்று கட்பாஹராவை பழைய சாகர் என்று அழைக்கிறார்கள். கட்பாஹரா இன்றைய சாகரிலிருந்து சுமார் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் ஜான்சி ரோட்டில் பஹன்ஶா என்னும் குன்றின் மேல் உள்ளது. லலித்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை-26இல் இருந்து பஸ் வசதியுள்ளது. சாகரில் இருந்து "ஷேர் ஆட்டோ" கடபாஹராவிற்கு கிடைக்கும்.

பரேட் ஶ்ரீஹனுமார் மந்திர், சாகர், மத்திய பிரதேசம் பஹன்ஶா குன்றின் மேல் பழமையான கோட்டை தெரியும். இங்கு கடபாஹராவில் இருக்கும் ஶ்ரீஹனுமார் திருக்கோயில் "சித்த பீடம்" என்று போற்றப்படுகிறது. அதனால் இவ்விடத்தையே "சித்" என்றே அழைக்கிறார்கள். இக்குன்றில் இரண்டு கோயில்கள் ஒன்று ஶ்ரீஹனுமாருக்கும், மற்றது ஶ்ரீஅங்கத் தேவிக்கும் உள்ளது. இந்த வட்டாரத்தில் ஹனுமார், துர்கா மாதா இருவரும் வீரம், பயமின்மை ஆகியவற்றை அருளுபவர்கள் என்பதால் பூசிப்பது வழக்கமாக உள்ளது.

சாகர் பாளையத்தின் திருக்கோயில்கள்

இங்கு ஶ்ரீ துர்கா தேவிக்கு பல கோயில்கள் காளி மாதா மந்திர், மாதா கி மந்திர், தேவிக்கா மந்திர் என்ற பெயர்களில் உள்ளன. ஶ்ரீ ஹனுமாருக்கும் பல கோயில்கள் உள்ளன, அவைகளில் பரேட் ஹனுமார் மந்திர் என்பது மிகவும் பிரபலம். இந்த தலம் முழுவதும் பரேட் என்று பெயரிருந்தாலும் பரேட் ஹனுமார் கோயில் ஒன்று தான்.

பரேட் மந்திர் தல புராணம்

அந்த நாட்களில் மக்கள் பொருள் ஈட்டுவதையே முதன்மையாக கொள்ளவில்லை, அவர்கள் இறைநம்பிக்கை உடையவர்களாக பாராயணம், பிரார்த்தனை ஆகியவற்றிலும் நேரத்தை செலவிட்டனர். பாடும் திறன் கொண்ட நபர்கள் முன்னணி பஜனை செய்வார்கள், மற்றவர்கள் பங்கேற்பார்கள். திறமையான நபர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் ராமாயணம் அல்லது மகாபாரதம் குறித்து விரிவுரைகளை வழங்குவார். கோயில் வளாகத்தில் அதிகாலை அல்லது மாலை நேரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைப்பெருவது வழக்கம்.

கற்றறிந்த நபர் ஒருவர் அலுவலகத்தில் தனது கடமைகளைச் செய்வதற்கு முன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஹனுமான் கோவிலில் ‘சுந்தர காண்டம்’ பாராயணம் செய்து வந்தார். அவர் ஸ்ரீ ஹனுமரிடம் அதீத பக்திக் கொண்டவர், ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நல்ல நாள் அவர் ‘சுந்திர காண்டம்’ ஓதிக் கொண்டிருந்தபோது, ​​அவர் ராமாயணத்தில் மிகவும் ஆழ்ந்திருந்ததால் நேரம் போனது தெரியவில்லை. அவர் தன் உணர்வுக்கு திரும்பிய போது, ​​அவர் தான் ஹனுமார் கோவிலில் இருப்பதை உணர்ந்தார். அன்று முகாமில் அணிவகுப்பு பயிற்சி ஒத்திகையில் இவர் பங்கு கொள்ள வேண்டும். இவர் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் சிப்பாய் என்பதால், தான் இன்றைக்கு அணிவகுப்பு பயிற்சி ஒத்திகைக்கு வராதற்கு உயர் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அதிகாரி "நீ தான் காலையில் அணிவகுப்பு ஒத்திகைக்கு வந்திருந்தாயே. எதற்கு மன்னிப்பு?" என்றார். இது ஹனுமார் பக்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் காலை அணிவகுப்பில் கலந்து கொண்டார் என்பதை அவரது தோழர்களும் உறுதிப்படுத்தியபோது, ​​அவர் இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

பரேட் ஶ்ரீஹனுமார், சாகர், மத்திய பிரதேசம் இரவில் அவர் இந்த விசித்திரமான நிகச்சியைப் பற்றி நினைத்தார். ஸ்ரீ ராமரின் படையை ஸ்ரீ சுக்ரீவன் தலமையில் ஶ்ரீஹனுமார் பின் தொடர அணிவகுத்து கடலைக் கடக்கும் இடத்தை படிக்கும் போது தான் மெய்மறந்ததை நினைவிற்கு கொண்டு வந்தார். நீண்ட சிந்தனைக்குப் பிறகு தனக்கு பதில் அணிவகுப்புக்கு சென்றது இந்த கோயிலின் ஸ்ரீ ஹனுமான் தவிர வேறு யாருமல்ல என்று அவர் உணர்ந்தார்.

பரேட் ஹனுமார்

மேற்கண்ட சம்பவம் நடந்த கோயில் இப்போது பரேட் மந்திர் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்ட பிரபு இப்போது பரேட் ஸ்ரீ ஹனுமான் என்று அழைக்கப்படுகிறார். ஶ்ரீமத் ராமாயணத்தினை பக்தியுடன் படிப்பதை சொல்வதை கேட்ட ஶ்ரீஹனுமாரை இங்கு இன்றும் தரிசிக்கலாம். இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் மீசையுடன் காணப்படுகிறார். நமக்கு மேலே இருக்கும் இறைவன் ஒருவரே என்பதை பிரபு தனது மேல்நோக்கி உயர்த்தப்பட்ட வலது கை ஆள்காட்டி விரலால் காட்டுகிறார். அவருடைய வலது கை இருக்கும் வாகை பார்த்து அவர் ’சல்யூட்’ அடிப்பதாக சிலர் தவறு செய்கிறார்கள். பரேட் என்ற சொல்லை இவருடன் இப்படி தவறாக இணைத்து யோசிக்கிறார்கள். அவரது இடது கை அவரது மார்பில் இதயத்தின் நெருக்கத்தில் இருப்பதைக் காணலாம். ஒரு அரக்கனின் தலையின் மீது அவரது வலது திருப்பாதம் இருக்கிறது. அவரது இடது கால் பூமியில் உறுதியாக உள்ளது. பிரபுவின் பிரகாசமான பெரிய கண்கள் புன்னகையுடன் இருப்பதால் அவரது முகத்தின் அழகை மேலும் கூட்டுகிறது. இறைவனின் நீண்ட வால் அவரது வலது தோள்களுக்கு மேலே சென்று தலைக்கு பின்னால் செல்கிறது.

இருப்பிடம்

வடக்கு நோக்கி இருக்கும் பரேட் ஶ்ரீஹனுமார் மந்திர் தேசிய நெடுஞ்சாலை 26Aயில் அமைந்துள்ள பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. சாகர் இரயில் நிலையத்திலிருந்தும் மத்திய பஸ் நிலையத்திலிருந்தும் சுமார் நான்கு கி.மீ. தூரத்தில் உள்ளது இத்திருக்கோயில்.

திருவிழாக்கள்

ஶ்ரீராம நவமி, ஶ்ரீஹனுமத் ஜயந்தி, சிவராத்திரி, ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி முதலிய பண்டிகைகள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 1934ஆம் ஆண்டு கோயில் ஶ்ரீ லக்ஷ்மண கிரி நாக பாபா அவர்களால் புதுபிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இத்திருக்கோயிலை ஶ்ரீபஞ்ச ஜூனா அகாடா மஹந்த் ஶ்ரீ லக்ஷ்மண கிரி நாக பாபா ஸ்தாபனத்தார்களால் பராமரிக்கப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     பரேட் ஶ்ரீஹனுமார் மந்திர், சாகர், மத்திய பிரதேசம்

 

அனுபவம்
ஶ்ரீ பரேட் ஹனுமார் அவர்களின் புன்னகை தவிழும் முக தரிசனம் அவரது பக்தர்களுக்கு மன நிறைவையும் சந்தோஷத்தையும் ஆசியாக கொடுக்கும். அவரது கீர்த்தி பக்தர்களின் எல்லா விக்னங்களையும் அழித்தொழிக்கும்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
ஆசிரியர் மத்திய பிரதேச காவல் துறையில் பணிபுரிபவர்
பதிப்பு: பிப்ரவரி 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+