ஹைதர் அலி பெங்களூரூவில் மிக சிறப்பான தோட்டம் ஒன்றினை உருவாக்க நினைத்தான். ’சிரா’வில் உள்ள அருமையான மொஹல் தோட்டத்தின் அமைப்பை அடிபடையாகக் கொண்டு பெங்களூறுவில் அமைக்க திட்டமிட்டு 1760வில் தொடங்கினான். அமைக்கப்போகும் தோட்டத்திற்கு "லால் பாக்" என்றும் பெயரிட்டான். அவனது மகன் திப்பு சுல்தான் இத்தோட்டத்தினை விரிவுபடுத்தினான். மற்ற பல தேசங்களிலிருந்து புதிய வகை மரம் செடி முதலியவற்றை வரவழித்தான். பெங்களூரூவின் தெற்கு பகுதியில் இருக்கும் லால்பாக் தோட்டம் மிகவும் அருமையான தோட்டமாகும். இன்று இந்தியாவில் அரிய பல தாவர வகைகள் இங்கு காணப்படுகிறது. சுமார் ஒரு சதுர மைல் பரப்பளவு கொண்டுள்ளது இத்தோட்டம்.
திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகும், அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் தோட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளனர், தோட்டத்திற்கு கூடுதல் செய்வது வழக்கமாக இருந்ததிலிருந்து இது தெளிவாகிறது. 1874இல் 45 ஏக்கராக இருந்த லால்பாக்கு 30ஏக்கர் தோட்டத்தின் கிழக்கு பகுதியில் 1889இல் சேர்க்கப்பட்டது. மற்றும் 13ஏக்கர் நிலம் கெம்பா கௌடா காலத்தில் 1891இல் சேர்க்கப்பட்டு, 94 ஏக்கர் 1894இல் மீண்டும் சேர்க்கப்பட்டது. மொத்தம் சுமார் 240ஏக்கர் பரப்பளவாக இது கடைசியில் உருவாகியது.
லால்பாக் பாறைகள் உலகில் மிகவும் பழைமையானாதாக சுமார் 3000 மில்லியன் ஆண்டுக்கும் முற்பட்டதாக கருதப்படுகிறது. மிகவும் அருமையான இத்தோட்டத்திற்கு நான்கு புறங்களிலும் நுழைவாயில் உள்ளது.
டபுள் ரோடு என்று பிரபலமான கே.எச்.ரோடும் ஓசூர் பிராதன சாலையும் சந்திக்கும் இடத்திற்கு அருகாமையிலும், சித்தாபூர் சர்க்கில் அருகாமையிலும் அமைந்துள்ளது லால்பாக்கின் மேற்கு நுழைவாயில். தோட்டத்தின் மிகவும் பிரபலமான நுழைவாயில் இது.
இந்நுழைவாயிலின் அருகாமையில் ஶ்ரீஆஞ்சநேயருக்காக பழமையான திருக்கோயில் ஒன்றுள்ளது. இக்கோயிலை கண்டுபிடிப்பது சற்று சிரமமே. இன்றும் இவ்விடத்தின் இடர்ப்பின்னலில் மாட்டியுள்ளது இக்கோயில். ஓசூர் பிராதன சாலையில் சித்தாபூர் சாலையை நோக்கி வந்தால் வலது புறம் பாட்டா காட்சிக்கூடம் உள்ளது, அதை அடுத்து சிறிய பாதை தெரியும். அவ்வழி சென்றால் இந்த அருமையான ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயிலை காணலாம்.
ஶ்ரீஹனுமாரின் பக்தர் ஒருவர் தன்னை ராமதாஸர் என்று அழைத்துக் கொள்பவர், ஹனுமார் கோயில்தோரும் சென்று தரிசித்து, கோயில்களில் கிடைக்கும் பிரசாதத்தையை மட்டும் உண்டு வந்தார். அவின்யூ ரோடின் அருகில் உள்ள துப்பா ஆஞ்சநேயசுவாமி கோயிலில் இவர் தங்கியிருந்த காலத்தில், லால்பாக் அருகில் வந்து தன்னை தரிசிக்குமாறு இவருக்கு தெய்வீக கட்டளை வந்தது. அவர் இறைவனின் ஆணைபடி லால்பாக் அருகில் தனது தேடலை ஆரம்பித்தார். நீண்ட தேடலுக்கு பிறகு அவருக்கு குன்றின் மீதிருந்த மிக பெரிய பாறையில் ஶ்ரீஹனுமாரின் உருவசிலை வடிக்கப்பட்டிருப்பது கண்களில் பட்டது. இந்நிகழ்வு எப்பொழுது நடைப்பெற்றது என்பது தெரியவில்லை, ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்திருப்பதாக அனுமானிக்க முடிகிறது.
இந்த சிலை செடிக்காடுகள் மற்றும் புதர்களால் மூடப்பட்டிருந்தது. மிகவும் கவனமாக செடிகளையும், புதர்களையும் அப்புறப்படுத்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஶ்ரீஆஞ்சநேயரின் உருவ சிலை வெளிவந்தது. ராமதாஸ் அவர்கள் அன்று முதல் இறைவனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார். அவரோ அன்றாட காச்சி இறைவனுக்கு பிரசாதம் செய்ய அருகில் இருக்கும் கடைகளில் வீடுகளில் யாசகம் செய்தார். இதனால் பலருக்கு ஶ்ரீஆஞ்சநேயர் அங்கு பாறையில் குடியிருப்பது தெரியவந்தது. அவர்கள் ஶ்ரீஆஞ்சநேயரை தினமும் தர்சிக்க வர ஆரம்பித்தனர். இவர்கள் உதவியால் பிரசாதம், பூஜை எல்லாம் தன்னால் நடக்க ஆரம்பித்தது.
இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் மிகவும் சக்திவாய்ந்தவராக கருதப்பட்டார். இந்த ஆஞ்சநேயரின் அதிசய சக்தி மெதுவாக பெங்களூரு நகரத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. ஒரு சமயம் மைசூர் மஹாராஜா ஶ்ரீஜய சாமராஜ உடையார் அவர்கள் இவ்வழியாக தனது அவசரமான அலுவலக காரியமாக பயணித்துக் கொண்டிருந்தார். ஶ்ரீஆஞ்சநேயர் குடியிருக்கும் குன்றின் அருகில் அவர் வரும்போது அவருடைய வாகனம் பழுதடைந்து விட்டது. மஹாராஜா அவர்களை அருகில் இருக்கும் இக்கோயிலுக்கு அழைத்து வந்தனர். அவர் ஶ்ரீஆஞ்சநேயரை தரிசித்த பின் அவருடைய வாகனம் பழுது சரி செய்யப்பட்டு புறப்பட்டு சென்றார். அவர் எந்த அவசரமான அலுவலுக்கா சென்றாறோ அக்காரியமும் ஜயமாக முடிந்தது அவருக்கு சந்தோஷமே. இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவ்வாஞ்சநேயரின் புகழ் மேலும் பரவியது.
இவ்வாஞ்சநேயர் குன்றின் ஒரு பாகத்தில் பாறையில் உருவாகியிப்பதால் இவருக்கு குட்டே ஶ்ரீஆஞ்சநேயர் என்று பெயர் வந்தது. குட்டே என்றால் கன்னட மொழியில் பாறை, சிறு குன்று என்று பொருள்.
குட்டே ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் அருளால் பயனடைந்த பக்தர்கள் அவர்கள் நன்றியையும் இறைவன் மீதான அன்பினையும் வெளிபடுத்த இறைவனுக்கு கோயிலை எழுப்ப முடிவு செய்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கோயிலும் வேகமாக வளர்ந்தது.
நாம் பாட்டா காட்சிக்கூடத்தை ஒட்டிய பாதையில் வந்தால் திருக்கோயிலின் பெரிய வளாகத்தை பார்க்கலாம். வளாகத்தில் கிழக்கு பக்கமாக நுழையலாம். இந்நுழைவாயில் உண்மையில் கோயில் வளாகத்தின் பின் வாயில் ஆகும். இடதுபுறம் திருக்கோயிலின் அலுவலகம் உள்ளது. பின் நாம் கல்லினால் ஆன பலிபீடம், ஶ்ரீராமர் பாதம், கொடிமரம் ஆகியவற்றை காணலாம். கொடிமரத்தினடியில் இருந்து வடக்கு நோக்கி பார்த்தால் ஶ்ரீராமர் பரிவாரத்துடன் இருக்கும் சன்னிதியை காணலாம். வளாகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய நுழைவாயில் வளாகத்தின் மறுபுறம் நம்மை அழைத்துச் செல்கிறது. பாதையின் இருபுறமும் மக்கள் ஓய்வெடுக்க வசதியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் இரு முனைகளிலும் சிவன் மற்றும் ஸ்ரீ கணபதி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. ஶ்ரீராமர் பாதத்தை வணங்கி, பின் கணபதி, சிவன் ஆகியோரையும் வணங்கிய பின் நாம் கோயிலின் முக்கிய மண்டபத்திற்கு வருகிறோம்.
அங்கிருந்து கர்பகிரஹத்தில் இருக்கும் கோயிலின் பிரதான தெய்வம் ஶ்ரீ குட்டே ஶ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம். மண்டபம் பெரிதாக இருப்பதால் அதிக பக்தர்கள் இருப்பினும் தடங்கல் ஏதும் இல்லாமல் இறைவனை தரிசனம் செய்யலாம். அங்கு பல பக்தர்கள் தியானத்தில் அமர்ந்துயிருப்பது கண்கொள்ளா காட்சி.
கர்பகிரஹத்தையும், மண்டபத்தையும் சுற்றி வலம் வருவதற்கு அழகிய அகலமான பாதையிருக்கிறது. வலம் வரும் பொழுது இறைவன் செதுக்கப்பட்டுள்ள குன்றின் பாறையை பார்க்கலாம். பக்தர்கள் இறைவனை வெளியிலிருந்தும் வலம் வரலாம். இப்பாதையில் தென்கிழக்கு மூலையில் இக்கோயில் உருவாக காரணகர்த்தாவான ஶ்ரீராமதாஸ் அவர்களின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. டிசம்பர் 5ஆம் நாள் 1955 அன்று முக்தி அடைந்ததாக குறிப்பு உள்ளது.
லால் பாக் குட்டே ஸ்ரீ அஞ்சநேய சுவாமி மூர்த்தம் சுமார் ஏழு அடி உயரமுள்ளது, பாறையில் செதுக்கப்பட்டுள்ள மேற்கு நோக்கி இருக்கும் அர்த்த சிலா வகையை சேர்ந்த புடைப்பு சிலை. பிரபு தனது இடது தாமரை பாதத்தை முன் வைத்து தெற்கு நோக்கி நடந்து செல்வது போல் இருப்பதைக் காணலாம். அவரது வலது தாமரை கால் தரையில் இருந்து சற்று உயர்ந்து காணப்படுகிறது. அவரது கால்களை நூபுரம் மற்றும் தண்டை அலங்கரிக்கின்றன. இறைவன் தன் கால் அடியில் ஒரு கிரீடம் அணிந்த அசுரன் அடக்கி வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறான். அரக்கனின் தலையை இறைவனின் இடது காலுக்குக் கீழும், அரக்கனின் கால்களை இறைவனின் வலது காலுக்குக் கீழேயும் தெளிவாகக் காணலாம். எல்லா சாத்தியக்கூறுகளிலும், அரக்கனை பூமியை பார்க்கும் முகத்துடன் ஹனுமானின் காலடியில் காண்பது என்பது இந்த ஒரே ஆலயமாக தான் இருக்கும்.
இறைவனின் இரு கைகளையும் கங்கணம் அலங்கரிக்கிறது. அவரது இடது கை இடது இடுப்பில் ஊன்றி சௌகந்திகா புஷ்பத்தின் தண்டினை பிடித்துக்கொண்டிருக்கிறார். இலைகளுடன் கூடிய தண்டுகளின் கீழ் பகுதி அவரது இடது உள்ளங்கைக்கு கீழே காணப்படுகிறது. இன்னும் மலரா மலர் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது.
அவர் மார்பை அலங்கரிக்கும் ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவர் உயர்த்திய வலது கையால் அவர் தனது பக்தர்களுக்கு ஆசீகளை வழங்குகிறார். இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே எழும்பி செல்கிறது. அதன் வளைந்த முனையில் ஒரு சிறிய அழகான மணி அலங்கரிக்கிறது இறைவன் குண்டலம் அணிந்துள்ளார். அவனுடைய கேசம் அழகாக சீவி கட்டப்பட்டுள்ளது. சிறிய கிரீடம் அவரது தலையை அலங்கரிக்கிறது. அவரது ஒளிரும் கண்கள் கருணையை பக்தர்களின் மீது பொழிகின்றது. அத்தகைய பிரகாசமான ஒளிரும் கண்களுடைய இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் தியானிக்க பட வேண்டியவர்.
‘திருவாச்சி’ பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. திருவாச்சியின் மேல் பக்கத்தில் சூரியன் மற்றும் சந்திரனின் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருவாச்சியின் இரு பக்கங்களிலும் சங்கமும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் மற்ற ஸ்ரீ ஹனுமான் கோயில்களிலும் பொதுவாகக் காணப்படவில்லை, இதும் இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு அளிக்கிறது.
அனுபவம்
குட்டே ஸ்ரீ அஞ்சநேய சுவாமியின் தரிசனம் பக்தர்களின்
எந்தவொரு சிரமத்திலிருந்தும் வெளியே வரவும், அதை எதிர்கொள்ளவும் நம்பிக்கை அளிக்கும். பக்தர்களின்
தன்னுறுதி திரும்பும், எடுத்த முயற்சி வெற்றியில் முடிக்க உதவும், உறுதி பெருகும்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: மார்ச் 2021