home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

மர்கடக பாபா திரு அனுமார் கோயில், யமுனா பஜார், பழைய தில்லி

ஜீகே கௌசிக்


நிகம்போத் காட்

புதுதில்லியில் இருக்கும் மகாபாரத காலத்தை ஒட்டிய அருமையான பால அனுமார் கோயிலின் புராணத்தைப் பார்த்தோம். அதே காலத்தை ஒட்டிய, பாண்டவர்களில் மூத்தவரான தரும புத்திரர் கட்டிய அருமையான "நீலி சத்ரி" என்று அழைக்கப்படும் சிவன் கோயில் ஒன்று உண்டு. அதன் அருகாமையில் அனுமருக்கு ஒரு கோயில். இவை இரண்டுமே நிகம்போத் காட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

ரிங்ரோட் என்று அழைக்கப் படும் சுற்று பாதையில் பயணித்தால் முழு தில்லியையும் ஒரு சுற்று வந்துவிடலாம். அனேகமாக பல சரித்திர புகழ் பெற்ற இடங்களையும், சின்னங்களையும் பார்த்துவிடலாம். உலகிலேயே உபயோகத்தில் இல்லாத மிக பெரிய கோட்டையாக கருதப்படும் செங்கோட்டை - தில்லியின் மிகவும் போற்றப் படும் சின்னங்களில் ஒன்று.

பழைய தில்லி - ஷாஜகானாபாத்

பதினேழாம் நூற்றாண்டில் மாமன்னன் ஷாஜகான் தில்லியை முகலாய தலைநகரமாக்கினான். அவன் உருவாக்கிய தில்லி நகரம் ஏழாவது தில்லி என்பர் தொல் பொருள் ஆய்வாளர்கள். தற்போது பழைய தில்லி என்று அழைக்கப் படுகிறது. தான் உருவாக்கிய தில்லிக்கு ஷாஜகானாபாத் என்று பெயர் சூட்டினான். செங்கோட்டையை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட தில்லி நகரை சுற்றி பெரிய மதில் கட்டப்பட்டுள்ளது. பதினாலு நுழைவாயில்களுடனும் பதினாறு பாலகனியுடனும் உருகாக்கப் பட்டது இம்மாநகரின் மதில்கள். நுழைவாயில்கள் எந்த ஊரை நோக்கியுள்ளதோ அதுவே நுழைவாயிலின் பெயரானது. தில்லி கேட், அஞ்மீரி கேட், காஷ்மீரி கேட் என்பது போல. யமுனை நதியை கிழக்கு எல்லையாக கொண்டு செங்கோட்டைக்கும், ஷாஜகானாபாத்க்கும் அமைக்கப் பட்டது.

யமுனை நதி

முன்காலத்தில் செங்கோட்டைக்கு சற்று வடக்கில் இரண்டாக பிரிந்து தெற்கு நோக்கி ஓடிய யமுனை நதி பின் ஒன்றாக சேர்ந்து விடும். அதனால் உருவான தீவுதிடலில் ஸலீம்கர் என்ற சிறு கோட்டையும் உண்டு. ஸலீம்கர் கோட்டையும் செங்கோட்டையும் பாலத்தின் மூலம் இணைக்கப் பட்டது. இவ்விடத்தில் இருக்கும் நுழைவாயிலுக்கு நிகம்போத் கேட் என்று பெயர். மக்கள் நதியில் நீராட வசதிகள் செய்யப் பட்டிருக்கும் இடத்தை "காட்" என்பர். இவ்விடத்து யமுனை நதிகரைக்கு நிகம்போத் காட் என்று பெயர்.

நிகம்போத் - பெயர் வந்த காரணம்

செங்கோட்டையும் ஸலீம்கரையும் இணைக்கும் பாலம் இவ்விடத்துக்கு நிகம்போத் என்று பெயர் வந்த காரணம் அறிய நாம் புராணகாலத்திற்கு செல்வோம். போத் என்றால் அறிவு, புத்தி, இறையறிவு. மது, கைடவன் என்ற இரு அரக்கர்கள் நான்முகனிடம் இருந்து படைப்பின் இரகசியத்தையும் வேதங்களையும் களவு செய்தனர். நாராயணன் ஹயக்கீரிவராக வந்து நான்முகனுக்கு படைப்பின் இரகசியத்தை மீட்டுக் கொடுத்தார். நான்முகன் யமுனையில் முழுகி படைப்பின் இரகசியத்தை (போதக்) மீட்ட இடம் அதனால் யமுனையின் இக்கரைக்கு நிகம்போத் காட் என்று பெயர். இந்திரப்ரஸ்தா நகரம் உருவாக்கிய பாண்டவர்கள் சிவனுக்காக கோயில் கட்ட இந்த இடத்தை இதனாலேயே தேர்ந்தெடுத்தனர்கள்.

யமுனா பஜார்

இன்று யமுனை நதி தனது ஓட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளது. ஸலீம்கர் இருந்த தீவு யமுனை நதி கரையில் உள்ளது. ஆனால் செங்கோட்டையும் ஸலீம்கரையும் இணைக்கும் பாலம் இன்றும் ரிங்ரோட்டில் பார்க்கலாம். அன்று யமுனை ஓடிய இடத்தில் தற்போது ரிங்ரோட் உள்ளது. செங்கோட்டைக்கு சற்று வடக்காக அன்று நதி கரையாக இருந்த இடத்திற்கு இப்போது யமுனா பஜார் என்று பெயர். அங்கு அனுமாருக்காக அருமையான கோயில் உள்ளது. இதன் பிரபலத்தை சொல்ல, ரிங்ரோட்டில் உள்ள மிக பெரிய மேம்பாலத்திற்கு "அனுமான் சேது" என்று பெயர் சூட்டியுள்ளனர். அருகில் உள்ள மிக பெரிய பூங்காவிற்கு "அனுமான் வாடிக" என்று பெயர். இங்கு வருடம் முழுவதும் இராமாயணம், மகாபாரதம், பாகவதம், முதலிய கதைகள் பல பிரபலங்களால் கூறப்படுகிறது. இவ்வனுமான்வாடிக நமது ஆச்சாரியர் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது நினைவு கூறப்பட வேண்டியது.

மர்கடக பாபா அனுமார் கோயில்

யமுனா பஜார் பகுதியில் இருந்த மிக பழமையான அனுமாருக்கு, முகலாயர் காலத்தில் திரு மர்கடக பாபா என்பவர் கோயில் கட்டினார். தற்போது நிகம்போத் பகுதியில் பல அனுமார் கோயில்கள் இருந்த போதும் திரு மர்கடக பாபா அனுமார் கோயிலே மிக பழமையானது. கோயிலின் வாயில் கிழக்கு நோக்கியுள்ளது. நுழைந்த உடன் மிக பெரிய திறந்த வெளி, நடுநடுவில் பல காலகட்டங்களில் கட்டப்பட்ட மண்டபங்கள். அனுமத் பக்தர்கள் பலர் இவைகளில் உட்கார்ந்து துளஸிதாஸர் எழுதிய அனுமான் சாலீஸா அல்லது அனுமான் பஹூக் சொல்லிக் கொண்டுள்ளனர். வரிசையில் நின்று சற்று தள்ளியுள்ள பிரதான சன்னதியை அடைய வேண்டும்.

மர்கடக பாபா அனுமார் கோயில் பிரதான சன்னதி மேற்கு நோக்கியுள்ளது. அனுமாரும் மேற்கு நோக்கியுள்ளார். சுமார் பதினைந்து அடி கீழே அனுமார் சிலை உள்ளது. நாளடைவில் ரோட் முதலின போடப்பட்டு இப்பொழுது பூமி இருக்கும் நிலை 15 அடி உயர்ந்துள்ளது. அனுமார் அன்று ஸ்தாபனம் செய்த இடத்திலேயே உள்ளார். மூன்று அல்லது நான்கு அடி உயரமுள்ள புடைப்பு சித்திரமாக அனுமாரின் சிலை உள்ளது. வட இந்திய பழக்கப் படி அனுமார் செந்தூரத்தில் திளைக்கிறார். அனுமாரை சுற்றி சுனை நீர். என்ன மழையானாலும், யமுனையில் வெள்ளம் வந்தாலும் இந்நீர் மட்டம் உயர்வது இல்லையாம். அனுமாரின் ஒரு கையில் கதை உள்ளது. மற்ற கை பூமியை தொடுவதுப் போல் உள்ளது.

பழமையான இக்கோயில் எவ்வளவு தொன்மையானது என கூறுவது கடினம். முகலாயர்கள் காலத்தில் திரு மர்கடக பாபா இவ்வாஞ்சநேயரை கோயில் கட்டி வழிபட்டார் என்பது தான் முதலில் தெரியும் செய்தி. அனுமாரின் கோயில் இங்கு வர காரணம் பல கூறப்படுகிறது.

கோயில் வர காரணம்

முதலாவதாக (நடப்பில்) புழக்கத்தில் உள்ள புராணம், இராமாயண காலத்தை ஒட்டியது. அயோத்யா நகரவாசி ஒருவர் கூறிய சுடு சொல் தாங்காத இராமர், சீதாதேவியை நகரத்திலிருந்து வெளியில் அனுப்பி விடுகிறார். சீதை இல்லாத இராமர், சில நாட்களில் அனுமாருடன் பாரதத்தில் உள்ள பல புனிதத் தலங்களை வலம் வருகிறார். அப்படி நிகம்போத் காட் வந்த போது, யமுனையில் நீராடி இராமர் தியானம் செய்து மனம் மகிழ்ந்தார். பின் அனுமாரால் பறிக்கப்பட்ட பழங்களை புசித்தார். அனுமார் தன் அண்ணல் உண்ட மிச்சத்தை அமுதாக கருதி அதை புசித்தாராம். அக்காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறதாம் இங்குள்ள அனுமார் சிலை.

இரண்டாவதாக முன்னே கூறிய மாதரி நான்முகன் வேதங்களை மீட்ட இடம் இது. சூரியனை குருவாக கொண்டு அனுமார் வேதங்களையும் வியாகரணங்களையும் கற்றார். அதுவும் சூரியனை வணங்கிய மாதரியே அவரை பார்த்த மாதரியே பின் பக்கமாக நகர்ந்து கொண்டே பாடங்கள் படித்தாராம் அதிசூரனான அனுமார். இருளைப் போக்கும் சூரியனால் மன இருளைப் போக்கும் நூல்கள் திரும்ப கிடைத்ததாக அனுமாருக்கு அடையாளம் காட்டப்பட்ட இடம் இது. சூரியனால் கூறப்பட்ட வேதம் மீட்ட இடமாகிய நிகம்போத் காட்டில் அனுமார் பூமியை தெட்டு வணங்கும் பாவனையில் அமைந்து இருப்பதாக கூறுவர்.

இச்சம்பவத்தையே சாம்பவான் வாயிலாக கம்பர் நயம் பட இப்படி கூறுகிறார்:

"போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா
ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்
பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்".

மகா கல்விமானாக அடக்கமே உருவான அனுமார் தன்னையே இராமருக்கு அளித்திட்டவர். இராமர் இல்லாமல் தான் இல்லை என்பவர் அவர். இராம நாமத்தை உலகினில் பரப்ப வந்தவர் அனுமார். இராமரின் ஒவ்வொரு அசைவிலும் ஆனந்தத்தை அனுபவிப்பவர் அவர்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " மர்கடக பாபா திரு அனுமார் கோயில், யமுனா பஜார்"

 

அனுபவம்
அனுமாரால் முடியாது எதுவும் இல்லை. அவரை உளமாற நினைத்தால் நமக்கு நடாக்காதது எதுவும் இல்லை. அனுமரின் புகழ் பாடுவோம், நல்லவை நினைப்போம் ஆனந்தத்தில் திளைப்போம்.

தமிழாக்கம் :தர்முபுத்திரன்
சிவ ஒளி மாதஇதழில் (டிசம்பர் 2008) வெளிவந்துள்ளது
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+