1950யின் ஆரம்பத்தில் அன்றைய பெங்களூரூ எப்படி இருந்தது என்பதனை பற்றியும், அன்றைய பெங்களூருவைப் பற்றிய இவ்வாசிரியரின் கருத்துகளையும் அறிய அவர் எழுதியுள்ள மற்ற இரு கட்டுறைகளை படிக்க அழைக்கிறோம்.
1. ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மல்லேஸ்வரம் ராகவேந்திர மடம்
2. ஶ்ரீஆஞ்சநேய சுவாமி, ஶ்ரீகிருஷ்ணர் கோயில், மல்லேஸ்வரம்
அப்பொழுது நாங்கள் மல்லேஸ்வரம் டெம்பிள் தெருவில் வசித்துக்கொண்டிருந்தோம். எங்கள் குடியிருப்புக்கு பின்புறம் நான்கு வீடுகள் உண்டு. அதில் ஒன்றில் நடுவயதான ஒருவர் இருந்தார், அவரை நாங்கள் "ஸ்கவுட் மாமா" என்று அழைப்போம். அவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர். அவர் தன்னை "பாரத் ஸ்கவுட் மாமா" என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். தன்னுடைய இராணுவ பணிகாலத்தைப் பற்றியும், பாரத் ஸ்கவுட் முகாம் பற்றியும் எங்களிடம் எடுத்துக் கூறுவார். நாங்களும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் இராணுவம், ஸ்கவுட் முதலியவற்றில் பங்கு கொண்டால் நாட்டுக்கும் மக்களுக்கும், சமூகத்திற்கும் எப்படி பயணுள்ளவராக வாழ முடியும் என்பதை எடுத்துச் சொல்லுவார். பாரத் ஸ்கவுட் பெங்களூரில் ஆரம்பிக்கப் பட்டது என்பதனை மிகவும் பூரிப்புடன் நினைவு படுத்துவார்.
பாரத் ஸ்கவுட் மாமா தினமும் மாலை வேளையில் நடைபயிற்சிக்கு சென்று பின் இருட்டும் வேளையில் வீடு திரும்புவார். ஒரு நாள் அவருடன் நான் செல்ல விரும்பினேன், பின் என் தாயின் அனுமதி வாங்கி என்னை அவர் அழைத்துச் சென்றார். மிகவும் நீண்ட பயணம் அது, மல்லேஸ்வரம் ஒரு கோடியில் உள்ள "ராஜா மில்"லையும் தாண்டி சென்றோம். சிறிது தூரம் நடந்த பின் சாலையின் உயரத்தினை விட சுமார் இருபது அடி தாழ்வாக பள்ளமாக இருந்த பெரிய மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். என்னை ஒர் இடத்தில் உட்கார சொன்னார், தான் கிரவுண்டை சுற்றி விட்டு வருவதாக சொன்னார். நான் காத்திருந்த பொழுது மற்றும் பலர் அவருடன் மைதானத்தை சுற்றி வர ஆரம்பித்தனர். மைதானத்தின் ஓரமாகவே அவர்கள் மெள்ள ஓடினார்கள். மூன்று சுற்று முடிந்தது, அவர் நான் காத்திருந்த இடத்திற்கு வந்தார். சிலர் அருகில் உட்கார்ந்து களைபாறினார்கள், சிலர் மேலும் உடற் பயிற்சி செய்தனர். அவர்கள் அதிகமாக பேசவில்லை, புறப்படும் பொழுது "ஜெய் ஹிந்து" "நமஸ்காரா" என்று கூறியவாரே பிரிந்து சென்றனர்.
இப்பொழுது மாமாஜீ "ஏதாவது குடிக்கனுமா?" என்று என்னை வினவ, நான் வேண்டாம் என்ற பின் வீடு நோக்கி வேறு பாதையில் பயணித்தோம். இவ்வளவு பெரிய மைதானத்தைப் பற்றி நான் ஆச்சரியமாக அவரிடன் கூறினேன். நான் பார்த்ததெல்லாம் கணேஷ் மந்திர் அருகில் இருக்கும் சிறிய மைதானம், ராஜா மில் எதிரில் இருக்கும் அதைவிட சற்று பெரிய மைதானம் தான். அதற்கு அவர் "இந்த மைதானம் நேதாஜி மைதானம் என்று பெயர். அவர் இந்திய சுதந்திரத்திற்கு உதவியவர். அவர் தான் INA என்று அழைக்கப்படும் இராணுவத்தை துவக்கியவர். இந்த மைதானம் ஒரு காலத்தில் பெரிய ஏரியாக இருந்தது. இங்கிருந்து தான் பழைய பெங்களூருக்கு தண்ணீர் வினையோகம் செய்தார்கள்." என்று கூறினார். நாங்கள் மேலும் நடந்து சென்றோம் வழியில் அவர் என்னை ஒரு அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று இக்கோயில் பெங்களூரின் பழமையான கோயில்களில் ஒன்றாகும் என்று கூறினார். இந்த கோவிலில் பிரார்த்தனைக்குப் பிறகு நாங்கள் மேலும் நகர்ந்தோம், சற்றே நடந்திருப்போம் அங்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு கோயில் இருந்தது. இங்கேயும் நாங்கள் எங்கள் பிரார்த்தனைகளைச் செய்து மல்லேஸ்வரத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். ஸ்ரீ அஞ்சநேயருக்கான இந்த கோவிலும் பழைமையான கோயில் என்று அவர் என்னிடம் கூறினார். ஏரியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள் இந்த இரண்டு கோயில்களையும் தவறாமல் விஜயம் செய்வார்கள் என்றார்.
பின்பு பெங்களூரு சிடி இரயில் நிலையத்தின் எதிரில் உள்ள மைதானம் சுபாஷ்நகர் மைதானம் என்றும் அதற்கு முன்பு தர்மன்பூதி ஏரி என்ற பெயரிலும் இருந்த இடம் என்றும் அறிந்தேன். இன்று மெஜஸ்டிக் ஸர்கிள் என்றும் பல திரையறங்குள் உள்ள மிகவும் பெரிய மார்க்கெட் என்றும் பலருக்கும் தெரியும்.
சமீபத்தில் நான் பெங்களூரு சென்றிருந்த போது மெஜஸ்டிக் ஸர்கிள் ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலை காண செல்ல விரும்பினேன். மிகவும் கடினமாக தான் இருந்தது. மெதுவாக அம்மன் கோயிலை பற்றி விசாரித்து அங்கு சென்றேன். ஶ்ரீஅன்னம்மா திருக்கோயில் என்று பெயருடன் விளங்குகிறது. அங்கு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு பின் அதே சிறகில் ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலை தேடினேன். நீண்ட தூரம் வரை மிக உயரமான நீல நிற பிளாஸ்டிக் சுவர். பெரிய கட்டிட வேலைக்கான முதல்கட்ட துவக்கும் போலும். அந்த நீல நிற சுவருக்கு இடையில் ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கான வாசல் தெரிந்தது. மனம் மகிழ்ந்தது.
கெம்பா கவுடா பேருந்து நிலையம் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இதன் எல்லையாக வடக்கே சேஷாத்ரி சாலை, கிழக்கில் தனவந்த்ரி சாலை, தெற்கில் டேங்க் பண்ட் சாலை மற்றும் மேற்கில் குப்பி தோடடப்பா சாலை அமைந்துள்ளது. தர்மன்பூதி ஏரி பகுதி இன்றைய பேருந்து நிலையமாக மாற வழி வகுத்தது. தர்மன்பூதி, சம்பங்கி மற்றும் கோரமங்கள ஏரிகள் 1924 பெங்களூரின் வரைபடத்தில் காணப்படுகின்றன.
கெம்பா கவுடாவின் ஆட்சியின் போது கட்டப்பட்ட தர்மன்பூதி ஏரி ஒரு காலத்தில் பெங்களூரின் பேட்டை பகுதியிற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்ததுள்ளது. இதனால் இந்த ஏரி குறைந்தது 1924 வரை முழுமையாக செயல்பாட்டில் இருந்திருக்கிறது என்று முடிவுக்கு வரலாம்.
மெஜஸ்டிக் ஸர்கிள் சுபதார் சத்திரம் சாலையில் அமைந்துள்ளது இவ்வாலயம். முன்பு ஏரி கரையில் சாலையை ஒட்டி அமைந்திருக்கும். இன்றும் நடைபாதையை ஒட்டியே இக்கோயில் காணப்படுகிறது. அன்று பக்தர்கள் நடைபாதையிலிருந்தபடியே பிரபுவை தர்சிப்பார்கள், சுமார் நாற்பத்தைந்து வயதுள்ள அர்ச்சகர் துளசி தீர்த்தத்தை பிரசாதமாக கொடுப்பார். பிரபுவின் விக்ரஹம் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள புடைப்பு படைப்பு [அர்த்த சிலா]. சிலையின் பின் சற்றே பெரிய கூடம் தெரியும். எனக்கு நினைவுக்கு தெரிந்தவரை இவ்வளவே.
இம்முறை நான் கோவிலுக்குச் சென்றபோது, சுவாமியை கர்பகிரஹத்தில் பிரதிஷ்டை செய்திருந்தனர். கர்பகிரஹத்தை சுற்றி பிரதக்ஷ்ணம் செய்ய பாதை இருந்தது. எனது 1954/55 க்கு முந்தையதை நினைவில் இருக்கும் சிலையை ஒப்பிடும்போது, சுவாமி சிலை அளவு பெரியதாக இருப்பதை நான் கவனித்தேன்.
கோயிலின் அர்ச்சகரிடம் விசாரித்தபோது, முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிறிய ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி விக்ரஹாவைப் பற்றி நான் கேட்டபோது, அவர் என்னிடம் கூறினார், கோயிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தும் போது அவரது தாத்தாவிற்கு ஒரு புதிய விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ய ஒரு தெய்வீக கட்டளை வழங்கப்பட்டது, அதன்படி முந்தையதை விட பெரிய அளவிலான ஒரு புதிய விக்ரஹத்தை ஆகம சாஸ்திரங்களின்படி செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய விக்ரஹமும் கர்பகிரகத்திற்குள் வைக்கப்பட்டு இன்றும் பூஜிக்கப்படுகிறது.
ஸ்ரீ அஞ்சநேய சுவாமியின் சிலை ஒரு ‘புடைப்பு சிலை -அர்த்த சிலா’ ரூபமாக இருந்தாலும், புடைப்பு மிகவும் தெளிவாக நேர்த்தியாக உள்ள காரணத்தால் இது கிட்டத்தட்ட ஒரு பூர்ணா சிலையை ஒத்திருக்கிறது என்றால் மிகையில்லை. ஏறக்குறைய ஐந்து அடி உயரமுள்ள இந்த சிலை கிழக்கு திசையை நோக்கியுள்ளது. பிரபு வடக்கு நோக்கி நடந்து செல்வது போல் காணப்படுகிறார். பிரபுவின் இரு தாமரை திருப்பாதங்களையும் தண்டை மற்றும் நூபுரம் அலங்கரிக்கிறது. பிரபு இடது திருப்பாதத்தை சற்றே முன் வைத்துள்ளார், அவரது வலது திருப்பாதம் பூமியிலிருந்து சற்று எழும்பும் நிலையில் காணப்படுகிறது. மணிக்கட்டுகளில் கங்கணங்கள் காணப்படுகிறன. இடது திருகரத்தில் அவர் சௌகந்திகா மலரின் தண்டை பிடித்துள்ளார். மலர் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. மலர் மலரத் தயாராக இருக்கும் நிலையில் காணப்படுகிறது. அவர் தனது அகண்ட மார்பில் பொருத்தமான ஆபரணங்களை அணிந்துள்ளார். அவரது உயர்ந்துள்ள வலது திருக்கரம் ’அபய முத்திரை’ காட்டி தனது பக்தர்கள் மீது பயமின்மையை பொழிகிறார். அவரது தலைக்கு மேலே உயர்ந்துள்ள வால் ஒரு சிறிய அழகான மணியால் அலங்கரிக்கப்பட்ட வளைந்த முனையுடன் காணப்படுகிறது. அவரது காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கிறது. அழகாக சீவி வாரிவிடப்பட்ட அவருடைய கேசம், சிறிய கிரீடம் ஆகியவை அவரது தலையை அலங்கரிக்கிறது. பிரபுவினுடைய கண்கள் பிரகாசமாகவும் கருணையை பொழிவதாகவும் உள்ளது.
அனுபவம்
இறைவனின் தரிசனம் பக்தர்களின் மனதில் உள்ள பயத்தை
நீக்கி, அனைத்து எதிர்மறைகள் மற்றும் தீமைகளையும் அகற்றி மனதைத் தூய்மைப்படுத்துவதோடு வெற்றியைக்
குறித்த எல்லா நல் எண்ணங்களையும் ஏற்படுத்துகிறது. அவருடைய அழைப்பை எடுத்துக் கொள்ளுங்கள்,
வெற்றியுடன் வாழுங்கள்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஏப்ரல் 2021