home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பீச்சம்பள்ளி, இடிக்யால் மண்டலம், மெஹபூப்நகர் மாவட்டம், தெலுங்காணா

திரு மோஹன் ராவ்*


பீச்சம்பள்ளி

பீச்சம்பள்ளி கிராமம் கிருஷ்ணா நதிகரையில் தெலுங்காணாவில் மெஹபூப்நகர் மாவட்டத்தில் இடிக்யால் மண்டலத்தில் அமைந்துள்ளது. மெஹபூப்நகரிலிருந்து சுமார் தொன்னூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இரயிலில் கட்வல் அல்லது கர்நூல் வரை வந்து பின் அரசு பேரூந்தில் இவ்விடத்தை அடையலாம். ஏழாம் எண் தேசிய நெடுஞ்சாலை இவ்விடத்தின் வழியாக செல்கிறது.

பீச்சம்பள்ளியின் விசேடம் இங்கு துங்கபத்ரா நதி கிருஷ்ணா நதியுடன் சங்கமிக்கிறது என்பதேயாகும்.

இன்றைய பீச்சம்பள்ளி

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பீச்சம்பள்ளி, இடிக்யால் மண்டலம், மெஹபூப்நகர் மாவட்டம், தெலுங்காணா ஏழாம் எண் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாலங்கள் அமைத்ததால் போக்குவரத்து வசதி அதிகமாகி ராயல்சீமா பகுதி தெலுங்காணா பகுதி அகியவைகள் தேசத்தின் பல பகுதிகளுயுடன் தொடர்பு சுலபமானது. இங்கு இன்று பல ஸ்னான கட்டங்கள் கட்டப்பட்டுள்ளது, புஷ்கர் என்னும் வைபவம் பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை மிகவும் சிறப்பாக நடத்தப் பெறுகிறது. லட்ச கணக்கான பக்தர்கள் பங்கு கொள்ளும் வைபவம் இது. இங்கு உள்ள பல திருக்கோயில்கள் புதிப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புராண பீச்சம்பள்ளி

காடுகள் மிகுந்த வனபிரதேசமாக அமைதியான இடமாக இருந்தது என்பதால் கன்வ மஹரிஷி இவ்வமைதியான இடத்தை தவம் செய்ய தேர்ந்தெடுத்தார். பின்காலத்தில் ஶ்ரீகிருஷ்ண தேவராயரின் குருவான ஶ்ரீவியாசராஜா அவர்கள் இவ்விடத்திற்கு விஜயம் செய்ய நேர்ந்த பொழுது இவ்விடத்தின் சூழலினால் கவரப்பட்டு சில நாட்கள் இங்கேயே தங்கினார். இவ்விடத்தின் புனிதத்துவம் அவருக்கு மேலும் புலப்பட்டது. ஶ்ரீஆஞ்சநேய உபாஸகரான அவர் இவ்விடத்தில் ஶ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய நினைத்தார். கன்வ மஹரிஷி தவமெய்திய இடத்தை அறிந்து அவ்விடமே விக்ரஹ பிரதிஷ்டைச் செய்ய தீர்மானித்தார் என்பது மேலும் விசேடம்.

தல வரலாறு
மூர்த்தி பிரதிஷ்டை

ஶ்ரீவியாசரஜா ஶ்ரீவியாசரஜா அவர்கள் தனது எண்ணத்தை நிறைவேற்ற ஶ்ரீஆஞ்சநேயருக்கு மிகவும் அழகான மூர்த்தி செய்ய வைத்தார். சில நாட்களே இங்கு தங்கி விட்டு புறப்பட வேண்டும், மூர்த்தியை பிரதிஷ்டை செய்தால் அதன் பின் யார் தொடர்ந்து பூஜை செய்வார்கள் என்ற கவலையும் அவருக்கு இருந்தது. இருந்தும் நல்ல நாள் பார்த்து ஶ்ரீஆஞ்சநேய மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார். அன்று இரவு அவரது கனவில் இவருடைய கேள்விக்கு விடையை ஶ்ரீஆஞ்சநேயரே கொடுத்தார். மறுநாள் காலை தான் பிரதிஷ்டை செய்த மூர்த்தியை பழங்குடி சிறுவன் ஒருவன் பூஜை செய்வதை கண்டார்.

பீச்சம்பள்ளி - பெயர் காரணம்

ஶ்ரீஆஞ்சநேயர் முந்திய இரவு ஶ்ரீவியாசராஜாவின் கனவில் தோன்றி, மறுநாள் காலை முதல் முதலில் யார் தன்னை பூஜை செய்கிறார்களோ அவரை நித்திய பூஜைக்கு அமர்த்துமாறு உத்தரவிட்டிருந்தார். பிரபுவின் ஆணைக்கிணங்க பீச்சுப்பள்ளி என்ற பெயர் கொண்ட ’போயா’ பழங்குடியை சேர்ந்த அச்சிறுவனை ஶ்ரீவியாசராஜா அவர்கள் அர்ச்சகர்களாக நியமித்தார். அன்று முதல் அவர் ஶ்ரீஅஞ்சநேயரை பூஜிக்கும் அர்ச்சகராக ஆனார். இன்றும் போயா பழங்குடியை சேர்ந்த இவர்கள் பரம்பரையே இத்திருக்கோயிலில் அர்ச்சகர்களாக உள்ளனர். இந்த கிராமமே முதல் அர்ச்சகரின் பெயரான பீச்சம்பள்ளி ஆயிற்று, ஶ்ரீஆஞ்சநேயர் ’பீச்சம்பள்ளி ராயிடு’ என்று அழைக்கப்படலானார்.

பீச்சம்பள்ளி ராயிடுவிற்கு திருக்கோயில்

Sri Beechupally Anjaneya Temple, Beechupally, Itikyal Mandal, Mahbubnagar District, Telangana கோட்வால் அரசனால் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஶ்ரீஆஞ்சநேயருக்காக சிறிய திருக்கோயில் கட்டப்பட்டது. அதே சமயம் சிவனாருக்கும் சன்னிதி அக்கோயிலில் கட்டப்பட்டது. காலப்போக்கில் நதியின் போக்கு மாறி நதி திருக்கோயில் கரையின் அருகாமையில் வந்து விட்டது. சில ஆண்டுகள் மழைகாலத்தில் நதி நீர் கோயிலுள்ளும் வந்து விடுவது வழக்கமாயிற்று. ஆனால் இன்று நதிகரைகள் பலபடுத்துள்ளது. கோயில்கள் புனரமைக்கப் பட்டுள்ளது. அச்சமயத்தில் [1992ம் ஆண்டு] ஶ்ரீராமருக்காகவும் தனி கோயில் கட்டப்பட்டது.

ஸம்ஸ்கிருத்தில் "ஶ்ரீ பீச்சம்பள்ளி ராயுடு வின் சுப்ரபாதம்" படிக்க சொடுக்கவும்

இன்றைய கோயில் வளாகம்

தென் நோக்கி பாயும் கிருஷ்ணா நதி கரையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கோயில் தென் நோக்கி அமைந்துள்ளது. அழகிய பெரிய தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. வளாகத்தில் பழைய கல்லினால் ஆன கொடி மரமும், அருகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட மரத்தினாலான, பித்தளையினால் போர்த்தப்பட்ட கொடி மரமும் உள்ளது. நுழைந்ததும் இடது புறம் ஶ்ரீமஹேஸ்வரர் லிங்க வடிவில் அருகில் ஶ்ரீபார்வதி தாயார் உள்ளனர். பளிங்கினாலான ஶ்ரீராம, சீதம்மா, லக்ஷ்மண, ஹனுமான் ஆகியோரும் அருகிலுள்ளனர். ஶ்ரீஹனுமாரின் பாதம் அருகில் பதிக்கப்பட்டுள்ளது. பின் திறந்த வெளி பின் இரண்டு மண்டபங்கள், நடுவில் கருவறை ஆகியவை காணப்படுகிறது.

ஶ்ரீ பீச்சம்பள்ளி ராயுடு

ஶ்ரீ பீச்சம்பள்ளி ராயுடு, பீச்சம்பள்ளி, இடிக்யால் மண்டலம், மெஹபூப்நகர் மாவட்டம், தெலுங்காணா தென் நோக்கி அமைந்துள்ள கர்பகிரஹத்தில் ஶ்ரீ பீச்சம்பள்ளி ராயுடு அமைதியாக குடிக்கொண்டுள்ளார். ஶ்ரீராம பரிவாரத்தை பின்னணியாக கொண்டு ஶ்ரீராயுடு மிக கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். சுமார் எட்டு அடி உயரமாக காணப்படும் புடைப்பு சிலையாக அமைந்துள்ளார் ராயுடு. பிரபுவிற்கு ஆரத்தி காட்டப்படும் போது மிகவும் பிரமிக்க வைக்கும் அழகுடன் காணப்படுகிறார். பிரபுவின் இரு திருவடிகளிலும் தண்டை, கொலுசு ஆகியவை அலங்கரிக்கின்றன. கௌபீனத்தில் காணப்படும் பிரபுவின் வால் தலைக்கு மேல் உயர்ந்து, இறுதியில் சிறிய மணியுடன் காணப்படுகிறார். இடது இடுப்பில் இருக்கும் இடது திருக்கரத்தில் மேல் நோக்கி இருக்கும் கதாயுதத்தை வைத்துள்ளார். தனது வலது திருக்கரத்தில் அபய முத்திரை தரித்து பக்தர்களுக்கு பயமின்மையை அருளுகிறார். அகன்ற மார்பினை பல ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன, காதில் குண்டலம் அணிந்துள்ளார். அழகிய, பெரிய, ஒளிரும் திருக்கண்கள் பக்தர்கள் மீது கருணையை பொழிகின்றது.

உத்ஸவ விக்ரஹமும் கர்பகிரஹத்தினுள் உள்ளது.

திருவிழாக்கள்

வெற்றிலை மாலை பூஜை, பஞ்சாமிருத அபிஷேகம் ஆகியன பக்தர்கள் விருப்பத்தில் தினமும் ஶ்ரீராயுடுவிற்கு நடத்தப்படும் பூஜை. வைசாக மாதம் நரஸிம்ம ஜயந்தியும், மார்கழி ஹனுமத் ஜயந்தியும் மிகவும் விசேடமாக கொண்டாடப் படுகிறது. அருகில் இருக்கும் பல குடும்பங்களுக்கு ஶ்ரீராயுடு குல தெய்வம் என்பதால் நித்தியம் ஏதாவது விசேடம் இருக்கும். அமைதியான சூழலில் உள்ள இந்த க்ஷேத்திரத்தில் தியானம் செய்வதற்காகவே பலர் வருகிறார்கள் என்பது விசேடம். ஶ்ரீராயுடுவின் ’விபூதி’ பிரசாதம் மிகவும் வலிமையானதாக கருதப்படுகிறது. இது பக்தர்களை அனைத்து தீய சக்திகளிடமிருந்தும் ‘தோஷங்களிலிருந்தும்’ பாதுகாக்கிறது என்பது கண்கூடான விசயம்

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பீச்சம்பள்ளி, தெலுங்காணா

 

அனுபவம்
வாருங்கள் இந்த புனித தலத்திற்கு வருகை தாருங்கள், கிருஷ்ணா நதியில் ஸ்னானம் செய்யுங்கள். இந்த அமைதியான சூழலில் சில நாட்கள் செலவழித்து உங்கள் மனதை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள், புத்தம் புதியவராக புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணருங்கள்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஏப்ரல் 2021
* ஆசிரியர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+