home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஆஞ்சநேயஸ்வாமி, ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், 11வது கிராஸ், மல்லேஸ்வரம் :: பெங்களூரு

ஜீ. கே. கௌசிக்


பெங்களூரின் விரிவாக்கம்

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், மல்லேஸ்வரம், பெங்களூரு ஸ்ரீ கெம்பே கவுடாவால் நிறுவப்பட்ட பெங்களூர், நகரத்தினர்களுக்கு தடையின்றி நீர் வினயோகம் செய்ய வசதியாக பல ஏரிகள், நீர்நிலைகள் கொண்ட ஒரு திட்டமிட்ட நகரமாகும். அனைத்து கைவினைஞர்களுக்கும் நகரத்தில் தங்க, திட்டமிடப்பட்ட நகரத்திற்குள் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த இடங்கள் ‘பேட்டே’ என்று அழைக்கப்படுகிறது. ஆதி பெங்களூரில் உள்ள பல இடங்கள் இன்றும் அவற்றின் பழைய பெயரான காட்டன்பேட், பலேபேட் போன்றே அழைக்கப்படுகின்றது.

ஆங்கிலேயர்கள் பெங்களூருக்கு வந்தபோது அவர்கள் இராணுவ தேவைக்காக தற்போது கன்டோன்மென்ட் என்று அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினர். ஆனால் மக்கள்தொகை பெருகியதால் இந்த இரண்டு பகுதிகளும் அதிவேகமாக வளர்ந்தது. அதனால் நகரத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டிய நிலை வந்தது. புதிதாக விரிவாக்கங்கள் உருவாக்க முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டது. பெங்களூர் நகரத்திற்கு பரந்த புதிய விரிவாக்கங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இதுபோன்ற முதல் நீட்டிப்பு 1892 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாமராஜ்பேட்டை ஆகும். பின்னர் மல்லேஸ்வரம், பசவன்குடி, விஸ்வேஸ்வரபுரம், சேஷாத்திரிபுரம், சங்கர்புரம் போன்றவை இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் விரிவாக்கங்களாக உருவாக்கப்பட்டன.

மல்லேஸ்வரம்

மல்லேஸ்வரம் அழகான நகரமான பெங்களூரின் அங்கமாகும். மல்லேஸ்வரம் என்ற பெயரின் தோற்றம் "காடு மல்லேஸ்வரர்" கோயிலிலிருந்து வந்தது [கன்னடத்திலும் காடு என்றால் வனம் என்று பொருள்]. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அப்போதைய ஆட்சியாளரான வெங்கோஜி (ஏகோஜி) என்பவரால் அக்காலத்தில் வனப்பகுதியாக இருந்த இடத்தில் மலை உச்சியில் ஒரு ஸ்வயம்பூ லிங்கத்தினை அடையாளம் காண்டார். வெங்கோஜி - சத்ரபதி சிவாஜியின் மாற்றாந்தாயின் மகன்.

அந்த நேரத்தில், இது அவர் ஆட்சி செய்த பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். வெங்கோஜி ஈஶ்வரனை புனர்பிரதிஷ்டை செய்து புனிதப்படுத்தினார், ஈஸ்வரருக்கு கோவிலைக் கட்டினார் மற்றும் இங்கு அருளாட்சி செய்யும் ஈஸ்வருக்கு ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி என்று பெயரிட்டார். பிற்காலத்தில் மக்கள் ஈஸ்வரனை ‘ஸ்ரீ காடு மல்லேஸ்வரர்’ என்று அழைக்கலாயினர். மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள காடு மல்லிகார்ஜுனசாமி கோயில், நகரின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் ஒரு மலையின் மேல் இருக்கிறது. அதன் பிரதான நுழைவாயில் கிழக்கில், டெம்பிள் ஸ்டீர்டில்[சாலையில்] உள்ளது. சுமார் நாற்பது படிகள் ஏறினால் கோயிலுக்கு செல்லலாம்.

மல்லேஸ்வரம் பற்றிய எனது நினைவு

Rajagopuram of Sri Venugopala Swamy Temple, Malleswaram, Bangaluru ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் பெற்றோருடன் இந்த அற்புதமான இடத்தில் நாங்கள் இங்கு வாழ்ந்தோம். ஆரம்பத்தில் நாங்கள் கோயில் சாலையில் [டெம்பிள் ஸ்டீர்ட்] தங்கியிருந்தோம், பின்னர் வெஸ்ட் பார்க் தெருவுக்கு சென்றோம். அக் காலத்தில், எட்டாவது குறுக்கு தெரு மற்றும் காடு மல்லிகார்ஜுனசாமி கோயில் இடைப்பட்ட தெருவுக்கு கோயில் சாலை எனப்பெயர். இப்போது, ​​சாலை கோயிலுக்கு அப்பால் மற்றும் 16 வது குறுக்கு வரை நீண்டுள்ளது. மேலும், இப்போது எங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கோயில் சாலைகள் உள்ளன - டெம்பிள் ஸ்டீர்ட்2,3,4,5 போன்று.

கோயில் சாலையிலிருந்து கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு இட்டுச்செல்லும் பரந்த கம்பீரமான படிகள் மல்லேஸ்வரத்தில் எனது நாட்களில் ஒரு அற்புதமான காட்சியாக இருந்தது. நானும் எனது நண்பர்களும் பகல் நேரத்தில் நீச்சல் மற்றும் குளிப்பதற்காக சாங்கி ஏரிக்கு செல்ல குன்றை ஏறி டேங் பண்ட் ரோட் ஐ தாண்டுவோம். பல அரச மற்றும் ஆல மரங்கள் அம்முழு பகுதியையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். அருகே நீண்ட தாடியுடன் கூடிய பல சர்தாஜிகள் வசித்து வந்தனர். அவர்களுக்கு தொழில் தச்சர்கள். அந்த குளிர் மர நிழல்களின் கீழ், நீண்ட மரபலகைகளில் வேலை செய்வதை ஆச்சரியமாக் வேடிக்கை பார்த்தவாரே கடப்போம்.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பிரதான சாலைகள் என அழைக்கப்படும் சாலைகள் மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் குறுக்கு சாலைகள் கொண்ட நன்கு திட்டமிடப்பட்ட பகுதி மல்லேஸ்வரம் ஆகும். சம்பங்கி சாலையில் உள்ள தற்போதைய பொது நூலகம் அந்த நாட்களில் காய்கறி சந்தையாக இருந்தது. ஈஸ்ட் பார்க் ஸ்ட்ரீட் மற்றும் வெஸ்ட் பார்க் ஸ்ட்ரீட் இடையே எட்டாவது குறுக்கு முதல் பதினொன்றாம் குறுக்கு வரை பல கோயில்களும் ஒரு விளையாட்டு மைதானமும் இருந்தது. தற்போது மைதானம் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவாக உள்ளது. மாலை நேரங்களில் எனது நேரம் விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்கும் இந்த கோயில்களுக்கு செல்வதற்கும் மட்டுமே.

[மேலும் காண்க
'வாயுசுதயா நமோ நமஹா' மற்றும் 'ஸ்ரீ ராகவேந்திர மடம் மல்லேஸ்வரம்'].

எனது மாலை நேர நடவடிக்கை

அந்த நாட்களில் பெற்றோரின் துணை இல்லாமல் தனியாக வெளியே சென்று விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது - இந்த நாட்களைப் போலல்லாமல். ஐந்து வயது சிறுவனாக நான் சிறுகுன்றின் மேல்லுள்ள விநாயகர் கோயிலை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வருவேன். சாயங்காலம் வரை விளையாடி, பின்னர் வீடு திரும்புவதைப் பற்றி யோசிக்கத் தொடங்குவேன், வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு நாங்கள் கோவிலில் ஏதேனும் ஒன்றைப் பார்ப்பது வழக்கம். ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் உள்ள அஞ்சநேய சன்னிதிகள், ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் மற்றும் குன்றின் உச்சியில் உள்ள விநாயகர் கோயில் ஆகியவை எங்களுக்கு மிகவும் பிடித்த வழிபாட்டுத் தலங்களாக இருந்தன. கோயில்களின் ஆஞ்சநேயர் உருவசிலைகள் என் மனதில் நன்கு பதிந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் பதிவுகள் பல சமயங்களில் நினைவு கூறியது என் வாழ்க்கையில் நிறைய தைரியத்தை அளித்தது.

மல்லேஸ்வரத்திற்கு மீண்டும் விஜயம்

ஸ்ரீ ஹனுமார் சன்னதியின் விமனம், ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், மல்லேஸ்வரம், பெங்களூரு நீண்ட நேரம் கழித்து நான் சமீபத்தில் மல்லேஸ்வரத்திற்கு சென்றிருந்தேன். முதலில், நாங்கள் வசித்த வீட்டைப் பார்க்கச் சென்றேன், வீட்டின் முன்புறத்தில் இருந்த திறந்தவெளியில் ஒரு பெரிய கட்டிடம் வந்துள்ளது என்பதைத் தவிர வீட்டில் எதுவும் மாறவில்லை என்பதைக் கண்டேன். அடுத்து நான் வெஸ்ட் பார்க் சாலையில் உள்ள வீட்டைப் பார்க்கச் சென்றேன், வீட்டின் முன் பகுதியில் முதல் தளம் கட்டப்பட்டதைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை. முன்னதாக நாங்கள் எங்கள் முதல் மாடி பகுதியிலிருந்து இந்த வீட்டின் திறந்த மொட்டை மாடிக்கு வந்து ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் மல்லேஸ்வரம் தபால் நிலையத்தைச் சுற்றியுள்ள நடவடிக்கைகளைப் பார்ப்போம் [இது கிருஷ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்திருந்தது, இப்போது அங்கு ஒரு பெரிய பள்ளி வந்துள்ளது].

இந்த கோயிலுக்கு எதிரே உள்ள தபால் அலுவலகம் இப்போது விநாயகர் கோயிலுக்கு எதிரே கிழக்கு பூங்கா சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இரண்டு தபால் பெட்டிகள் இருந்தன - ஒன்று உள்ளூர் தபால் மற்றது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு தபால். போஸ்ட் கார்டுகள் அந்த நாட்களில் தொடர்பு கொள்ள முக்கிய வழிமுறையாக இருந்தது. இந்த தபால் அலுவலகம் ஆரம்பித்த மறுநாளே எனது அம்மா மற்றும் அடுத்த வீட்டு அத்தை ஆகியோருடன் தபால் அபீஸ்க்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது.

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் -ஸ்ரீ ஹனுமார் சன்னதி

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், மார்கழி மாதத்தில் காலையில் ‘திருப்பாவை’ சொல்வார்கள் ஆனால் அந்த நாட்களில் சூடான ‘மிளகு பொங்கல்’ ப்ரசாதமாக கிடைக்கும். அதற்காக நாங்கள் கோயிலுக்கு காலையில் சென்று கொண்டிருந்தோம். இந்த நாட்களில் கோயில் வண்ணமயமாக இருக்கிறது என்பதைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை. ‘கிருஷ்ணர் கோவில்’ என்று அழைக்க்ப்படும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலுக்கு இம்முறைச் சென்றபோது, ​​ராஜகோபுரத்தை தவிர - மற்ற மூன்று பக்கங்களிலும் புதிய கோபுரங்கள் வந்துள்ளதை கவனித்தேன். இந்த கோபுரங்களின் கட்டிடக்கலை ஹம்பியின் புகழ்பெற்ற விஜயநகர் கட்டிடக்கலையை ஒத்திருக்கிறது. கிரானைட் கல் வேலைக்கு பதிலாக இது சிமென்டினால் கட்டப்பட்டிருந்தது. [காஞ்சிபுரம் சஞ்சீவிரயன் கோவிலைப் பார்க்கவும்]. ஸ்ரீ ஹனுமான் சன்னதிக்கு அருகில், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ சுதர்ஷன ஆள்வார் அகியோருக்கு புதிதாக சன்னிதிகள் வந்துள்ளது.

வெஸ்ட் பார்க் சாலையில் உள்ள எனது வீட்டிலிருந்து ஸ்ரீ ஹனுமான் சன்னதியைப் பார்ப்பேன், சன்னதியின் பின்புறம் மட்டுமே தெரியும். சன்னிதிக்குள் ஸ்ரீ ஹனுமான் என்ற எண்ணமே எனக்கு ஊக்கமளிக்கும். காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு, இப்போது அதிகமான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதால், வெஸ்ட் பார்க் தெருவில் இருந்து ஸ்ரீ ஆஞ்சநேயரின் விமானத்தை ஒருவர் பார்க்க முடியாமல் போகலாம். கோயிலுக்கு புதிய நுழைவாயில் வெஸ்ட் பார்க் தெருவில் இருந்து செய்யப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ஸ்ரீ ஆஞ்சநேயர் பற்றிய குறிப்பு:

i) ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசாமி பிரதான தெய்வம் - மூலவர். இரு உள்ளங்கைகளிலும் புல்லாங்குழல் கொண்ட அழகான தெய்வீக சிலை தமிழ்நாட்டில் ராஜராஜேந்திர சதுர்வேதி மங்கலம் என்று பிரபலமாக அழைக்கப்படும் திருகடலூரிலிருந்து வந்தவர், வழிப்பட்டில் கி.பி 997 முதல் (பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆண்டு) ஆரதனையில் உள்ளார்.

ii) ஸ்ரீ வீர அஞ்சநேயசுவாமி மூர்த்தி: இந்த சிலை நாராயண கட்டே (சன்யாசி கட்டே) இல் உள்ள ஒரு சிறிய ஆலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டது, ஏனெனில் சன்னதி அங்கு இடிந்து விழுந்து விட்டது. இவர் கிருஷணர் கோயிலுக்கு வருவதற்கு முன் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வழிபாட்டில் இருந்தவர்.

iii)ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், மல்லேஸ்வரம், பெங்களூரு பிரதான ஆலயத்தை கட்டியெழுப்புதல், தெய்வீக மூர்த்திகளின் பிரதிஷ்டை மஹோத்ஸவா (திவ்ய மூர்த்தி) மற்றும் ஸ்ரீ வீர அஞ்சநேய சுவாமியை ஒரு தனி சன்னிதியில் பிரதிஷ்டை செய்தல் 1902 ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. அதே நாளில் நல்வாடி ஸ்ரீ கிருஷ்ணராஜா உடையாரும் மைசூர் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி

இந்த முறை நான் கோயிலுக்குச் சென்றபோது ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி வெள்ளி கவசத்தில் இருந்தார், அதற்கு மேல் அவரை பாதிக்கும் மேல் வேஷ்டியால் மறைக்கப்பட்டிருந்தார். ஸ்ரீ அஞ்சநேய சுவாமியின் கண்கள் அமெரிக்க டைமண்ட் வைத்து கல் பதிக்கப்பட்ட கண்களாக அலங்கரிக்கப்பட்டிருந்தார். பிரதான ஹனுமார் விக்ரஹாம் இந்த அலங்காரங்களால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. எனது நினைவிலிருந்த ஹனுமாரை கீழே விவரித்துள்ளேன். நான் அதை ஒரு ஓவியமாவும் வரைய முயன்று இருக்கிறேன்.

கிழக்கு நோக்கியுள்ள இந்த கோயிலின் ஸ்ரீ ஹனுமான், வடக்கு நோக்கி நடந்து செல்வதை போல் இருக்கிறார். விக்ரஹம் சுமார் மூன்று அடி உயரம் இருக்கலாம். அனுமார் வலது கையை ‘அபய முத்திரை’ காட்டி பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். அவரது இடது கையில் அவர் சௌகந்திகா பூவைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். முழுமையாக பூத்திருக்கும் பூ அவரது இடது தோள்பட்டைக்கு மேலே தெரிகிறது. அவர் மார்பை ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவரது வால் உயர்ந்து அவரது தலையின் பின்னால் செல்கிறது. வளைந்த வால் முனையில் ஒரு சிறிய மணி அலங்கரிக்கிறது.

அவரது ஒளிரும் கண்கள் நேராக தெரிகிறது, இது மிகவும் கவர்ச்சிகரமாகவும் வசீகரமாகவும் உள்ளது. ஹனுமாரின் இந்த ‘கடாக்ஷம்’ பக்தரை அடிமைப்படுத்தக் கூடியதாக உள்ளதில் ஆச்சரியமில்லை.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், மல்லேஸ்வரம்

 

அனுபவம்
பக்தர் இந்த கோயிலுக்கு வருகை தந்து ஹனுமான் தரிசனம் செய்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். பக்தரின் தன்நம்பிக்கை பெருகும். தான் ஸ்ரீ ஹனுமரின் பக்தர் என்பதில் பெருமைப்படுவார் என்பது உறுதி.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு: மார்ச் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+