home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ அஞ்சநேயர் திருக்கோயில், ஸ்ரீ ராகவேந்திர மடம், மல்லேஸ்வரம், பெங்களூரு


ஸ்ரீ அஞ்சநேயர் திருக்கோயில், ஸ்ரீ ராகவேந்திர மடம், மல்லேஸ்வரம், பெங்களூரு

ஜீ. கே. கௌசிக்


பெங்களூரு, பெங்களூர்

டேம்பிள் தெருவில் இருந்து காண்கையில் மல்லிகார்ஜுன சுவாமி கோயில், மல்லேஸ்வரம், பெங்களூர் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் பெற்றோருடன் இந்த அற்புதமான இடத்தில் நாங்கள் வாழ்ந்தோம். ஆரம்பத்தில் நாங்கள் டேம்பிள் தெருவில் தங்கியிருந்தோம், பின்னர் வெஸ்ட் பார்க் வீதிக்கு சென்றோம். எட்டாவது குறுக்கு தெருவுக்கும் காடு மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கும் இடையில் இணைக்கும் தெரு டேம்பிள் தெரு. மல்லிகார்ஜுனா சுவாமி கோயிலில் இருந்து தொடங்குவதால் டெம்பிள் தெரு என்று பெயர் வந்தது. இந்த கோயில் சம்பங்கி சாலையில் இருப்பதாக பல இணைய தளங்கள் பரிந்துரைத்தாலும், அது டெம்பிள் சாலையில் உள்ளது. இந்த கோயிலின் பிரதான நுழைவாயில் டெம்பிள் தெருவில் இருந்து மட்டுமே. சமீபத்திய டெம்பிள் தெரு ஒன்று, இரண்டு போன்றவை வட்டாரத்தின் விரிவாக்கம் காரணமாக வந்துள்ளன. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த காடு மல்லிகார்ஜுனா சுவாமி கோயிலில் இருந்து முழு வட்டாரத்திற்கும் “மல்லேஸ்வரம்” என்ற பெயர் வந்துள்ளது குறிப்பிட தக்கது.

இக்கோயிலின் பெயர் குறிப்பிடுவது போல [கன்னட மொழியில் “காடு” என்றால் காடு] இந்த முழு இடமும் காடாக வெங்கோஜியின் காலத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். சத்ரபதி சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் வெங்கோஜி அவர்கள் ஸ்ரீ மல்லிகார்ஜுனா சுவாமியை இங்கு புனர்ருத்தாரணம் செய்து திருக்கோயில் எழுப்பியுள்ளார்.

ஸ்ரீ கெம்பே கவுடா பெங்களூர் நகரத்தை உருவாக்கினார், அவர் உருவாக்கிய பெங்களுர் இன்று ‘பேட்டை’ என்று பிரபலமாக அறியப்படும் பகுதிகள் ஆகும். அதாவது. தற்போதைய சிடி மார்கெட் மெஜஸ்டிக் பகுதிகளாகும். அப்போதய பெங்களுரை [பேட்டை பகுதி] பிளேக் தொற்றுநோய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாக்கியது. மல்லேஸ்வரம், பசவங்குடி போன்ற புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்கி பெங்களூரை விரிவாக்க அப்போதைய மகாராஜா திட்டமிட்டார். டாடா இன்ஸ்டிடியூட் [இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்] ஒரு முனையில் மல்லேஸ்வரம் உருவான பொழுது மல்லேஸ்வரம் மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாறியது.

மல்லேஸ்வரத்தின் எனது நாட்கள்

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் பிரதான சாலைகள் மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் குறுக்கு சாலைகள் கொண்ட நன்கு திட்டமிடப்பட்ட பகுதி மல்லேஸ்வரம் ஆகும். மார்கோசா சாலையின் பின்னர் இருக்கும் மற்ற பிரதான சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் மிகக் குறைவு. சாலைகளின் இருபுறமும் மரங்கள் இருப்பதால், இந்த சாலைகளில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஓடும் ரயிலைப் பார்ப்பதற்காக ஒரு சிறுவனாக டெம்பிள் தெருவில் இருந்து மல்லேஸ்வரம் ரயில் நிலையத்திற்குச் சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ரயில் நிலையம் சாலையை விட சற்றே குறைந்த உயரத்தில் இருந்ததால், நகரும் ரயிலினை சாலையை சாலையிலிருந்து பார்ப்போம். மல்லேஸ்வரம் நிலையம் வழியாக ரயில்கள் செல்லும் நேரம் அல்லாத முன் மாலை வேளையில் நாங்கள் அங்கு செல்வோம் என்பதால், ரயிலைப் பார்க்க சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். ரயில் வரும் வரை நாங்கள் அந்த இடத்தை சுற்றி விளையாடுவோம். ஸ்டேஷனில் தனியாக உட்கார்ந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் எங்களுடன் அரட்டை அடிப்பார், மேலும் அவரது அறையில் வைக்கப்பட்டுள்ள பானையில் இருந்து தண்ணீரை எங்களுக்கு வழங்குவார்.

சம்பங்கி சாலையில் உள்ள தற்போதைய உள்ளூர் நூலகமும், ஈஸ்ட் பார்க் சாலையில் உள்ள தபால் நிலையமும் அந்த நாட்களில் காய்கறி சந்தையாக இருந்தது. தற்போதைய காய்கறி சந்தை எனது மூத்த சகோதரரும் அவரது நண்பர்களும் கிரிக்கெட் விளையாடும் ஒரு விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஈஸ்ட் பார்க் சாலைக்கும் வெஸ்ட் பார்க் சாலைக்கும் இடையிலான பகுதி, எட்டாவது குறுக்கு தெரு முதல் பதினொன்றாம் குறுக்கு தெரு வரை கோயில்களுக்க்கக ஒதுக்கப் பட்டிருந்தது [நடுவில் ஒரு விளையாட்டு மைதானம் தவிர]. தற்போது இந்த விளையாட்டு மைதானம் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவாக கணேஷ் மந்திர்க்கு அருகில் உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், மல்லேஸ்வரம், பெங்களூரு பக்கவாட்டில் காட்சி மாலை நேரங்களில் நான் இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்கும் அருகிலுள்ள கோயில்களுக்கு செல்வதற்கும் வழக்கமாக கொண்டிருந்தேன். "வாயுசுத யா நமோ நமஹா" ஐயும் காண்க.

எனது மாலை பொழுது

அந்த நாட்களில், நாங்கள் ஆறு முதல் எட்டு வயதிலேயே இருந்தபோது, தனியாக வெளியே எங்கள் வீட்டிலிருந்து தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் எந்தவொரு துணையும் இல்லாமல் செல்ல [இந்த நாட்களைப் போலல்லாமல்] எங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆறு வயது சிறுவனாக நான் குன்றின் மேல் உள்ள விநாயகர் கோயிலை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வருவேன். சாயங்காலம் வரை விளையாடுவதும், வீடு திரும்புவதற்கு முன்பு அருகிலுள்ள ஒன்று அல்லது இரண்டு கோயில்களைப் பார்ப்பதும் வழக்கம். ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் உள்ள அஞ்சநேயர் கோயில், ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர், அதே போல் கணேசர் கோயிலிலும் நாங்கள் [நாங்கள் என்றால் என்னுடன் ஒரு நண்பராவது இருப்பான்] செல்வது வழக்கம். இந்த கோயில்களின் தெய்வ வடிவங்கள் கிட்டத்தட்ட என் இதயத்திலும் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. இப்போது கூட அந்த வடிவங்களை நினைவில் கொள்வது எனக்கு எண்ணங்களின் அமைதியையும், என் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள தைரியத்தையும் தருகிறது.

மீண்டும் மல்லேஸ்வரம்

நீண்ட நாட்கள் கழித்து நான் சமீபத்தில் மல்லேஸ்வரம் சென்றிருந்தேன். முதலில், நாங்கள் வசித்த வீட்டைப் பார்க்கச் சென்றேன், வீட்டின் முன்புறத்தில் இருந்த திறந்தவெளியில் ஒரு பெரிய கட்டிடம் வந்துள்ளது என்பதைத் தவிர வீட்டில் எதுவும் மாற்றமில்லை என்பதைக் கண்டேன். அடுத்து நான் வெஸ்ட் பார்க் சாலையில் உள்ள வீட்டைப் பார்க்கச் சென்றேன், முன் வீட்டில் முதல் தளம் கட்டப்பட்டதைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை.

நான் முதலில் ஸ்ரீ கணேச கோவிலுக்குச் சென்றேன், பின்னர் ஸ்ரீ ராகவேந்திர மடம் அஞ்சநேயர் கோயிலையும், அதன் பின்னர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலைக்கும் சென்றேன்.

ஸ்ரீ ராகவேந்திர மடம் மற்றும் ஆஞ்சநேய சுவாமி கோயில்

கல்வெட்டு கூறும் தகவல்: ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், மல்லேஸ்வரம், பெங்களூரு இந்த முறை நான் ஸ்ரீ ராகவேந்திர மடத்திற்கு சென்றிருந்த போது பல விஷயங்கள் மாறிவிட்டதை நான் கவனித்தேன் - காம்பவுண்டிற்குள் அதிகமான கட்டிடங்கள் வந்துள்ளன. சிறுவனாக நான் பார்த்த ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவிலில் நான் கவனிக்காமல் இருந்த சில விஷயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். முதலாவதாக, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் கோயில் 1900 இல் கட்டப்பட்ட [கல்வெட்டு கூறும் தகவல்] இங்குள்ள ஸ்ரீ ராகவேந்திர மடத்தை விட பழமையானது [1944-45].

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில் இந்த வளாகத்தின் நிர்ருதி மூலையில் [தென்மேற்கு மூலை] மற்றும் கோயில் வடக்கு நோக்கியதாக உள்ளது. இந்த நிலையில் இறைவனை வணங்குவது பக்தரை மரணம், அழிவு மற்றும் இழப்பு ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும்.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், மல்லேஸ்வரம், பெங்களூரு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பிரதிஷ்டை கி.பி 1900 க்கு ஒத்த ஷாலிவஹன சம்வச்சரம் 1832 இன் போது நிகழ்த்தப்பட்டது. கோவில் வளாகத்தில் இதை அறிவிக்கும் ஒரு கல்வெட்டு உள்ளது. 1909 ஏப்ரல் 2 ஆம் தேதி தேதியிட்ட அன்றைய நகராட்சியால் இலவசமாக நன்கொடையாக 180 அடி 147 அடி அளவுள்ள நிலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முன்புறத்தில் இவ்விவரங்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் த்வஜ ஸ்தம்பம் உள்ளது. த்வஜ ஸ்தம்பத்திற்குப் பிறகு ஸ்ரீ அஞ்சநேய சுவாமியின் பிரதான கோயில் வரும். இந்த கோவிலில் ஒரு கர்பகிரகமும், பிரதக்ஷணம் சுற்றுக்கு ஐந்து அடி அகல பாதையும் உள்ளன. பக்தர்கள் த்வஜ ஸ்தம்பித்தின் அருகிலிருந்ததே ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் செய்யலாம். மூர்த்தம் குறிப்பிட்ட உயரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது, இதனால் பக்தர்கள் தூரத்திலிருந்து கூட இறைவனை தெளிவான தரிசனம் செய்ய முடியும்.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி

மல்லேஸ்வரம் ஸ்ரீ ராகவேந்திர மடம் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஞ்சநேய சுவாமி மூர்த்தம், சுமார் நான்கு அடி உயரம் கடினமான கிரானைட் கல்லால் ஆனது. ஆஞ்சநேயர் நடக்கும் தோரணையில் இருக்கிறார். சிலை ’அர்த்த சிலா’ என்னும் பாணியில் புடைப்பு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இறைவன் தனது முன்னிருக்கும் இடது தாமரை பாதத்தினில் நூபுரம் மற்றும் தண்டை அணிந்து மேற்கு நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். அவரது வலது தாமரை திருப்பாதம் தரையில் இருந்து சற்று உயர்ந்து காணப்படுகிறது. அவரது இடது கை அலங்கார கங்கணத்துடன் இடது இடுப்பில் வைத்திருப்பதைக் காணலாம் மற்றும் அவரது கையில் அவர் சௌகந்திகா பூவின் தண்டு பிடித்துள்ளார். மலர்ந்திருக்கும் பூ முழுவதும் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. அவர் தனது மார்பினில் ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவரது உயர்த்திய மற்றொரு கையால் தனது பக்தர்களுக்கு ஆசீகள் வழங்குகிறார். அவரது தலைக்கு மேலே உயர்ந்து செல்லும் வால், வாலின் வளைந்த முனையில் ஒரு சிறிய அழகான மணி அலங்கரிப்பதும் அவரின் அழகை மேலும் அழகுப்படுத்துகிறது. இறைவன் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளார், அவருடைய கேசம் அழகாக சீவி கட்டப்பட்டுள்ளது. சிறிய கிரீடம் அவரது தலையை அலங்கரிக்கிறது. அவரது ஒளிரும் கண்கள் பக்தர் மீது கருணையை பொழிகிறது. அத்தகைய பிரகாசமான ஒளிரும் கண்களுடன் இருக்கும் இச்க்ஷேத்திரத்தின் இறைவன் தியானிக்கபட வேண்டிய ஒரு உருவம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ அஞ்சநேயர் திருக்கோயில், மல்லேஸ்வரம், பெங்களூரு

 

அனுபவம்
மரணம் மற்றும் அழிவு பற்றிய அச்சத்தை அகற்றி, ஆசீர்வாதங்களைப் பெற்று, மங்களத்தை வழங்குகின்ற ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற மல்லேஸ்வரத்திற்கு வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு: பிப்ரவரி 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+