நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதலாவது க்ஷேத்திரம் ஶ்ரீரங்கம், திருச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்த திவ்ய தேசத்தின் பெருமாள் ஶ்ரீரங்கநாதரை பன்னிரெண்டு ஆழ்வார்களில் பதினொரு ஆழ்வார்கள் பாடி பரவசம் அடைந்துள்ளனர். ஶ்ரீ ஹரியை துதிக்கும் அனைவருக்கும் "கோயில்" என்றால் அது இந்த க்ஷேத்திரத்தையே குறிக்கும். ஒரு நகரத்தின் அளவுக்கு கோயில் வளாகம் பெரியதாக உள்ளது. ஶ்ரீரங்கநாதரை மையமாக கொண்டு ஏழு சுற்று என்று கடல் போல் விரிவாக உள்ளது திரு க்ஷேத்திரம். வைஷ்ணவ த்வைதமத்தின் இதய ஸ்தானமாக விளங்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு மிக பெரிய சரித்திரம் உள்ளது.
ஶ்ரீரங்க மாஹாத்மியம்/ கோயில் ஒழுகு இவைகளின் மூலம் இக்கோயிலின் புராணம் தெரியவருகிறது. ஶ்ரீவிஷ்ணுவின் கொடையாக ஶ்ரீபிரும்மருக்கு கிடைக்கப்பெற்றதே "ஶ்ரீரங்கவிமானம்". இதனை ஶ்ரீபிரும்மா விராஜானுக்கு கொடுக்க, அயோத்தியில் அவருக்கு பின் வைவஸ்வதன், மனு, இஷ்வாகு என்று ஶ்ரீராமர் வரை எல்லோரும் பூஜை செய்துள்ளனர். இஷ்வாகு குலத்தின் "குலதனம்" என்று போற்றி பூஜிக்கப் பெற்றவர். ஶ்ரீஇலங்கையின் மன்னன் விபீஷணனுக்கு ஶ்ரீராமரால் கொடுக்கப்பட்டது "ஶ்ரீரங்க விமானம்". இலங்கை எடுத்து செல்கையில், எம்பெருமான் காவிரி கரையில் தங்க விரும்பி, காவிரி கொள்ளிடம் இடையே தீவில், தற்பொழுதய ஶ்ரீரங்கத்தில் தங்கிவிட்டார். கால பொழுதில் தர்ம வர்மன் என்னும் மன்னனின் தவத்தில் மகிழ்ந்து அங்கு வெளிப்பட்டார், மன்னருக்கு அருளினார். மன்னனின் விருப்பத்தினை ஏற்று அங்கேயே கோயில் கொண்டு தெற்கு நோக்கி இலங்கை மன்னன் விபீஷணருக்கு அருள் கடாச்சம் பாலிக்கிறார். தர்ம வர்மன் மன்னர் எம்பெருமானுக்கு கோயில் கட்டினார் என்பது பிரசுத்தம்.
இந்த புனித க்ஷேத்திரத்தில் வைஷ்ணவத்வைத, த்வைத சித்தாந்தங்களை பின்பற்றும் பல மஹான்கள் வாழ்ந்துள்ளனர். த்வைத சித்தாந்தத்தை பின்பற்றும் ஶ்ரீரகோத்தம தீர்த்தர் என்பவரும் ஒருவர். ஶ்ரீமூலராமரையும் ஶ்ரீமுக்ய பிராணா என்றழைக்கப் படும் ஶ்ரீஆஞ்சநேயரையும் வழிபடுபவர் இவர்.
மாத்வாசாரியாரின் த்வைத சித்தாந்தை பின்பற்றும் ஶ்ரீசுப பட்டா, கங்காபாய் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக மகபேறு இல்லாமல் இருந்தது. ஶ்ரீஹரியின் அருளால் அந்த ஆதர்ஷ தம்பதிகளுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நற்மகன் பிறந்தான். பின் காலத்தில் உத்திராதி மடத்தின் பதிமூன்றாவது மடாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய வாழ்க்கை குறிப்பினை நமது இணைய தளத்தில் ஆங்கிலத்தில் படிக்க "ஶ்ரீரகோத்தம தீர்த்தர் -ஶ்ரீஹனுமார் பக்தர்" - சொடுக்கவும்.
ஶ்ரீமாத்வாசாரியாரின் மற்றும் ஶ்ரீஜயதீர்த்தரின் மூல உரைகளில் உறைந்துள்ள உட்கருத்துகளை விளக்கி பல பாஷ்யம் [டிப்பணி टिप्पणि] இவர் எழுதியுள்ளார். இவைகள் "பாவ-போதம்" என்று பிரபலம். பிரஹதாரண்ய பாவபோதம், நியாய விவரண பாவபோதம், கீதாபாஷ்ய பாவபோதம், விஷ்ணுதத்வநிர்ணய பாவபோதம், தத்வபிரகாசிக பாவபோதம் என்று ஐந்து பாவபோதங்கள் இவர் எழுதியுள்ளார். இவரை இதனாலேயே "பாவபோதகாரரு" என்று குறிப்பிடுவார்கள்.
ஶ்ரீரகோத்தம தீர்த்தர் இத்தனை பாவ பேத கிரந்தங்களையும் கிழக்கு உத்திர வீதியில் உள்ள வீட்டில் ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதியில், "ஶ்ரீரங்க விமானத்தை" பார்த்தவாறு எழுதியுள்ளார். இன்றும் அவ்விடத்தின் புனிதத் தன்மை மாறாமல் இருப்பது நமது பாக்கியம் என்று சொன்னால் மிகையில்லை. "பாவபோதகாரரு" என்று புகழினை ஶ்ரீரகோத்தமதீர்த்தருக்கு வாங்கிதந்த இடத்தினை ஒரு முறை விஜயம் செய்யுங்கள். மனதின் சஞ்சலங்கள் அடங்கி மனம் சாந்தி அடைவதை நம்மால் உணரமுடியும்.
194, கிழக்கு உத்திர வீதியில் உள்ள ஶ்ரீபாவபோத ஆஞ்சநேய சுவாமி கோயில் ஶ்ரீஉத்திராதி மடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வெளியிலிருந்து பார்க்கையில் சாதரண வீடு மாதரியே இருக்கும். கோபுரமோ மற்ற அலங்காரமோ ஆடம்பரமோ இருக்காது. சற்று இக்கோயிலின் மகிமையை பார்ப்போமா?
ஶ்ரீரகோத்தம தீர்த்தர் [1537-1595] ஐந்து பாவபோத கிரந்தங்களையும் ஶ்ரீரங்கத்தில் இங்கு இருந்து தான் எழுதினார். ஶ்ரீஆஞ்சநேயர் சன்னிதியில் ஶ்ரீரங்கவிமானத்தை [பிரணவாகர விமானம்] பார்த்தவாறே அமர்ந்து இந்த ஐந்து கிரந்தங்களையும் எழுதினார். தீர்த்தர் தான் எழுதியது சரியா என்று ஶ்ரீஆஞ்சநேயரை பார்க்கும் பொழுது ஆஞ்சநேயர் தலை அசைத்து ஆமோதிப்பார். அவரின் ஆமோதனைக்கு பிறகே தீர்த்தர் மேலே எழுத துடங்குவார்.
பாவபோத கிரந்தங்கள் எழுதிய பொழுது தான் கண்ட ஶ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு ஶ்ரீரகோத்தம தீர்த்தர் சிலா ரூபம் கொடுத்து அவரை "பாவபோத ஆஞ்சநேய சுவாமி" என்று பெயரிட்டார். இவ்வாஞ்சநேய சுவாமி தீர்த்தர் எழுதிய ஐந்து கிரந்தங்களுக்கு சாட்சியாக இருந்தார் என்பதால் ஆஞ்சநேயருக்கு "கிரந்த சாக்ஷி ஆஞ்சநேயர்" என்றும் பெயருண்டு.
இறைவனின் சிலா ரூபம் சுமார் எட்டடி உள்ளது. திருவாச்சி என்னும் அலங்கார பின் வளைவவுடன் காணப்படுகிறது. அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது விசேடம். சிற்பம் மேற்கு நோக்கியுள்ளது.
ஶ்ரீஆஞ்சநேயர் தெற்கு நோக்கியுள்ளார். அவரது இடது திருபாதங்கள் முன்னுள்ளது. தண்டை, நூபூரங்கள் அவரது திருபாதங்களை அலங்கரிக்கிறான. அவரது இரு துடைகளையும் அவரது கச்சம் கவ்வி பிடித்துள்ளது. தர்ப்பையால் செய்யப்பட்ட கடி சூத்திரம் கச்சத்தை இடுப்பில் பிடித்துள்ளது. சற்றே வளைந்து காணும் அவரது இடையினால் அவரது நிற்கும் பாவனைக்கு அழகு கூடுகிறது. இடையில் உண்றியுள்ள அவரது இடது திருக்கரம் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டினை பிடித்துள்ளது. அக்கையுடன் மேல் நோக்கி சென்று இடது தோளின் மேல் காணப்படுகிறது. விரிந்து இருக்கும் வலது திருக்கரம் ’அபய முத்திரை’ தரித்துள்ளது. மார்பினில் முப்புரி நூல் அணிந்துள்ளார். இரண்டு மணி மாலைலகள் அணிந்துள்ளார். ஒன்றில் பரிவாரத்துடன் கூடிய ஶ்ரீராம பதிக்கப்பட்ட பதக்கம் அணிந்துள்ளார்.இரு திருகரங்களையும் புஜவளையம், அங்கதம், கங்கணம் முதலியவை அலங்கரிக்கின்றன. காதுகளை குண்டலம், கர்ணபுஷ்பம் அலங்கரிக்கின்றன. இரு தோள்கள் வரை இருக்கும் சுருள் மிகு கேசத்தை "கேச பந்தனம்" என்னும் அணியினால் கட்டிவைத்துள்ளார். அவரது வால் உயர்ந்து சற்றே வளைந்த நுணியில் மணியுடன் அவரது தலைக்கு மேல் காணப்படுகிறது. அவரது ஒளிரும் கண்களிலிருந்து வெளிப்படும் காருண்யம் நம்மை வசீகரிக்கிறது.
கிழக்கு உத்திர வீதியிலிருந்து பார்த்தால் சாதாரண பழமையான வீடு போல் தான் தெரியும். உள்ளே நுழைந்து சென்றால் பெரிய அறைகளின் மத்தியில் இருக்கும் இடத்தில் மத்தியில் துளசி மாடத்துடன் தோட்டம் புனிதமாக, பொலிவுடன் கூடியதாக இருக்கும். தோட்டத்தின் முடிவில் காணப்படும் படிக்கட்டில் வழி முதல் மாடிக்கு சென்றால் ஶ்ரீரகோத்தம தீர்த்தரால் பிரதிஷ்டிக்கப்பட்ட "ஶ்ரீ பாவபோத ஆஞ்சநேயர்" சன்னிதி உள்ளது. இந்த அறையில் அமர்ந்துதான் ஶ்ரீபாவபோதகாரரு ஐந்து பாவ போத கிரந்தங்களையும் எழுதியுள்ளார். அறையில் இந்நிகழ்ச்சியை குறிக்கும் வண்ணம் வரைபடம் ஒன்று உள்ளது.
தரிசனத்திற்கு பின் அங்கிருந்து மொட்டைமாடிக்கு செல்ல படிக்கட்டில் சென்று மேல் மாடியை அடையலாம். அங்கிருந்து பிரணவாகர விமானமான ஶ்ரீரங்கவிமானத்தை தரிசிக்கலாம். வெள்ளை கோபுரமும் அங்கிருந்து தரிசிக்கலாம்.
அனுபவம்
பிரணவாகர விமானத்தையும் ஶ்ரீ பாவபோத ஆஞ்சநேயரையும் தரிசனம்
செய்யுங்கள். ஆற அமர்ந்து தியானம் செய்யுங்கள், விளங்காதவை விளங்கும். தெளிவு பிறக்கும். நேர்பாதை புலப்படும்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு: நவம்பர் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020