home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ அஞ்ஜனை புதல்வர் ஸ்ரீ ஹனுமான் கோயில், அஞ்ஜனேரி, நாசிக், மகாராஷ்டிரா

டாக்டர் திரு. துஷார் கோட்போலே


இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி, நாங்கள் அஞ்ஜனேரி மலைக்கு விஜயம் செய்து ஶ்ரீஹனுமாரை தர்சிக்க முடிவு செய்தோம். நாசிகில் உள்ள எங்கள் வீட்டில் இருந்து காலை சுமார் ஆறு மணிக்கு புறப்பட்டோம், அப்பொழுது வானிலை மிகவும் நன்றாக இருந்தது. நாசிக்கில் சாதாரணமாக ஜனவரியில் மிதமான குளிர் காணப்படும். இன்றும் அப்படி தான் இருந்தது.

அஞ்ஜனேரி பேட்டா

அஞ்ஜனேரி பேட்டா ஶ்ரீஹனுமான், நாசிக் நாசிக் மற்றும் திரியம்பகேஸ்வரர் இணைக்கும் பிரதான சாலையில் அமைந்துள்ள அஞ்ஜனேரி பேட்டா, நாசிக்கிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சந்திப்பை அடைவதற்கு எனக்கு இருபது நிமிடங்கள் பிடித்தது. அஞ்ஜனேரி பேட்டாவில் மலை அடிவாரத்தில் புதிதாக ஒரு ஹனுமான் கோயில் கட்டியுள்ளார்கள். அதில் உட்கார்ந்த நிலையில் உள்ள மிக பெரிய ஹனுமான் மூர்த்தி பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அஞ்சனேரி ஹனுமானின் பிறந்த இடம் என அருகில் இருக்கும் பலகை அறிவிக்கிறது. அஞ்ஜனேரி மலைக்கு செல்ல அரசாங்க அல்லது தனியார் போக்குவரத்து பஸ்களில் இங்கு இறங்க வேண்டும். இந்த ஹனுமான் கோயிலின் பின்புறத்தில் அஞ்சனேரி மலை காணப்படுகிறது.

அஞ்ஜனேரி மலை

பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி சென்றோம், அஞ்ஜனேரி கிராமத்தை கடந்து ஒரு கிலோ மீட்டர் சென்றோம். நாங்கள் கிராமத்திற்குப் பின்புறம் எங்கள் காரை நிறுத்திவிட்டு மலையின் அடிவாரத்திற்கு சென்று எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் இங்கிருந்து சுமார் அரை கிலோமீட்டர் வரை வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியும்.

மலையை இரண்டு கட்டங்களில் ஏறினோம். முதல் கட்டமாக இடையில் வரும் சமவெளி வரையிலும், பின்பு மலை உச்சி வரையிலும் ஏறினோம். சமவெளி வரை ஏறுவது சற்று கடினமாக தான் இருந்தது. முறட்டுதனமான கருங்கல் நடை பாதை, செங்குத்தான படிகள், இடது பக்கம் பார்த்தால் மிக ஆழமான பள்ளம், கடினம் தான். மலை ஏறுபவர்கள் மற்றும் 'வால்லெட் க்ராஸ்ஸர்ஸ்' ஆகியவற்களுக்கு பிடித்த மாதரி "நவர" பாதை போன்ற சிறிய பாறைகளும் உள்ளன.

அஞ்ஜனி மாதா கோயில்

ஶ்ரீஆஞ்சநேயர் கோயில், அஞ்ஜனேரி மலை உச்சி, நாசிக் வழி முழுவதும் குரங்குகள் தங்கள் சேஷ்டைகளைச் செய்து நமக்கு 'பால்-ஹனுமானை' [குழந்தை ஹனுமானை] நினைவூட்டுகிறது. முதல் கட்டத்தை ஏறி வந்த பிறகு பெரிய சமவெளி வருகிறது. இச்சமவெளியில் நம் கண்களில் படுவது அஞ்ஜனி மாதாவின் திருக்கோயில் தான். மலைகளை பின்னணியாக கொண்டு அமைந்திருக்கும் இத்திருக்கோயில் மிகவும் அழகாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஹனுமானின் தாயார் அஞ்சனை தேவி மூலவராக இருக்கிறார். அவர் முன் ஹனுமார் முட்டி போட்டுகொண்டு உட்கார்ந்து கை கூப்பிய வண்ணம் உள்ளார். அவரது முகம் களிப்புடன் இருக்கிறது. இங்கு நாங்கள் ஸ்ரீ அஞ்ஜனி மாதா மற்றும் ஸ்ரீ பால ஹனுமானை வணங்கி ஆசிகள் பெற்றோம்.

வானிலை நன்றாக இருந்தது மற்றும் விரைவில் சமவெளியில் நடந்து மறு முனைக்கு சென்றோம். அங்கு அழகிய சிறிய ஏரியை காண்கிறோம். அது ஒரு காலடியின் வடிவில் அமைந்துள்ளது. கொண்டோம். இந்த ஏரி மிகவும் சுத்தமாகவும், பசுமையால் சூழப்பட்டு இருந்தது பார்வைக்கு மிகவும் புத்துணர்ச்சி அளித்தது.

'சீதா குகைகள்' மற்றும் சில குகைகளுக்கு செல்ல ஒரு திருப்பம் இருந்தது, ஆனால் நாங்கள் அவற்றைப் பார்க்கவில்லை. ஏரி வழியாக எங்களது நடையை தொடர்ந்தோம். இரண்டாவது கட்டமாக மலை உச்சியை நோக்கி ஏறத் தொடங்கினோம். இந்த ஏற்றம் முதல் ஏற்றத்தை விட செங்குத்தாக இருந்ததால் மிகவும் களைப்படைய செய்தது. மலை உச்சியிலிருந்து கீழே நோக்கினால் ஏரியையும் சுற்று வட்டாரத்தையும் நோக்கினால் மனதிற்கு இதமாகவும் கண்ணுக்கு குளிற்ச்சியாகவும் இருந்தது. நாம் முதல் கட்டத்தில் பார்த்த சமவெளி மிகவும் அழகாகவும் பசுமையாகவும் தெரிகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை இங்கிருந்து நோக்கினால் விளையாட்டு பொம்மைகள் போல் தோற்றமளித்தது.

அஞ்ஜனேரி ஹனுமான் கோயில்

இரண்டாவது மலையின் மீது ஏறி, அஞ்ஜனேரி மலையின் உச்சியை நாங்கள் அடைந்தோம். இந்த குன்றின் ஒரு முனையிலிருந்து, மேற்கில் பள்ளத்தாக்கு மற்றும் சயாத்திரி மலைத்தொடர்களை நாம் கண்டு ரசிக்கலாம். இந்த இடத்தை அடைந்தவுடன், எங்களது அனைத்து சோர்வுகளும் மறைந்துவிட்டன.

ஶ்ரீஅஞ்சனிமாதா கோயில், அஞ்ஜனேரி மலை உச்சி, நாசிக் மலை உச்சியில் நடந்து, "ஹனுமான் கோவில்" அடைந்தோம். ஹனுமான் பிறந்த இடமான இங்கு கோயில் கட்டியுள்ளார்கள். இச்சிறு திருக்கோயிலில் ஹனுமான் குடி கொண்டுள்ளார். இங்கு ஹனுமானின் தாயார் அஞ்சனா தேவியின் மடியில் உட்கார்ந்து இருக்கும் ஹனுமானை தரிசித்தோம்.

சிறிது நேரம் கோயிலில் பிராத்தனை செய்தோம். மனதிற்கு இதமாக இருந்தது. பிறகு, நாங்கள் திரும்ப ஆரம்பித்தோம். அஞ்ஜனேரி மலை ஏறி வருவதற்கு சுமார் ஒன்றரை மணிநேரம் ஆனது. ஆனால் இறங்கும் பொழுது புவியீர்ப்பு சாதகமாக இருந்ததால் நாங்கள் முப்பது நிமிடங்களில் இறங்குவதை முடித்து விட்டோம்.

குறிப்பு:

அஞ்ஜனேரி மலை ஒரு பிரபலமான சுற்றுலா தலமோ அல்லது வணிக தலமோ இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். எனவே குடிநீர் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் செல்வது நல்லது. இங்கு பயணிப்பவர் திரியம்பகேஸ்வரர் க்ஷேத்திரத்திற்கும் சென்று வரலாம், இருப்பினும், திரியம்பகேஸ்வரருக்கு அருகிலுள்ள கங்காதர் மற்றும் பிரம்மகிரி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மலை ஏற வேண்டும், சற்றே கடினமான பயணமாக தான் இருக்கும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ ஹனுமான் கோயில், அஞ்ஜனேரி, நாசிக்

 

அனுபவம்
அஞ்ஜனேரி மலை உச்சியில் உள்ள மாருதியை பிரார்த்தனை செய்யுங்கள், கீழே இரங்கும் பொழுது மனம் லேசாக இருக்கும், அஞ்ஜனி மாதாவின் மகன் மாருதி காற்றோடு உங்கள் மன கவலைகள் அனைத்தையும் கரைத்திருப்பார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மார்ச் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+