அகோபலம் க்ஷேத்திரம் ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் இருக்கிறது. கிழக்கு மலைத்தொடரில் பகுதியான கருடாத்ரி மலைகளிடைய இருக்கிறது அகோபலம். சென்னையிலிருந்து சுமார் நாநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கு ஐந்து கிலோமீட்டர் வட்டதிற்குள் இருக்கும் ஶ்ரீநரசிம்மரின் ஒன்பது திருக்கோயில்கள் "நவநரசிம்மதலம்" என்று மிகவும் பிரபலம். அகோபலம் கீழ்அகோபலம், மேல்அகோபலம் என்று இரண்டு பகுதிகளாக கூறப்படுகிறது. மேல்அகோபலத்தில் ஒன்பது நரசிம்மர் திருக்கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் கருடாத்திரி மலையில் உள்ளதால் மலையில் ஏறிதான் தரிசிக்க வேண்டும்.
கிழக்கு தொடர்ச்சிமலையின் ஒரு அங்கம் அகோபலம். கிழக்கு மலை தொடர்ச்சி, ஆதிஸேஷனின் ரூபம் என்றும், அவரது ஆயிரம் தலைகளுள்ள பகுதி திருப்பதியிலும், நடு பகுதி அகோபலத்திலும், வால் பகுதி ஶ்ரீசைலத்திலும் இருப்பதாக நம்பிக்கை. அதனால் இந்த மூன்று க்ஷேத்திரங்களும் முக்கியத்வம் பெறுகிறது. திருப்பதியில் ஶ்ரீவேங்கடேஸ்வரர், அகோபலத்தில் ஶ்ரீநரசிம்மர், ஶ்ரீசைலத்தில் ஶ்ரீமல்லிகார்ஜுனா ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர்.
ஶ்ரீமஹாவிஷ்ணு ஶ்ரீநரசிம்மராக அவதாரம் எடுத்து ஹிரண்யகசுபுவை உக்கிரமாக வதம் செய்வதை கண்ட தேவர்கள் "அஹோ! [என்ன] பலம்" என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். இதுவே இன்று இந்த க்ஷேத்திரத்தின் பெயராக அகோபலம் என்று மாறியது. மாற்றாக கருடன் இங்கு குகையில் தவம் செய்து ஶ்ரீமஹாவிஷ்ணுவை ஶ்ரீநரசிம்மராக தரிசித்ததால் "அஹோ! பிலம்" [பிலம் என்றால் குகை] என்று கூறியதால் அஹோபிலம் ஆயிற்று என்பர்.
கீழ் அகோபலத்தில் மிகபெரிய அளவில் ஶ்ரீபிரகல்லாத வரத நரசிம்ம சுவாமி திருக்கோயில் உள்ளது. ஶ்ரீபிரகல்லாதனுக்கு அருளியதால் இங்கு கோயில்கொண்டுள்ள ஶ்ரீநரசிம்மருக்கு "ஶ்ரீபிரகல்லாத வரத நரசிம்ம சுவாமி" என்று பெயர். [இதைப்பற்றிய விவரங்களுக்கு "யோக நரசிம்மர்/ஆஞ்சநேயர்" சொடுக்கவும்] ஶ்ரீவிஷ்ணு பத்னி ஶ்ரீமஹாலக்ஷ்மி இங்கு மனிதரூபத்தில் சென்சு என்னும் மலைஜாதி பெண்ணாக பிறந்து சென்சிலக்ஷ்மி என்ற பெயரில் நரசிம்மரை அகோபலத்தில் திருமணம் புரிகிறாள்.
இத்திருக்கோயில் கற்களால் செய்யப்பட்ட கலைகூடம். அகோபலத்தின் புராணம் இங்கு கற்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஶ்ரீவேங்கடேசர் தனது திருமணத்திற்கு ஶ்ரீநரசிம்மரை அழைக்க வந்தார். மேல் அகோபலத்தில் நரசிம்மரின் உக்ரத்தை பார்த்த பின், தானே கீழ் அகோபலத்தில் ஶ்ரீநரசிம்மரை சாந்த ஸ்வரூபீயாக செய்து பிரதிஷ்டை செய்தார். ஶ்ரீநிவாஸரே பிரதிஷ்டை செய்த ஶ்ரீபிரகல்லாத வரத நரசிம்மர் மிகவும் விசேடமாக கொண்டாடப்படுகிறார். ஶ்ரீவேங்கடேசரும் இங்கு தனி தென்கிழக்கில் இருக்கும் சன்னிதியில் தரிசனம் தருகிறார்.
முதலில் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு திருக்கோயில் ரெட்டி பரம்பரை மன்னர்கள் பதிநான்காம் நூற்றாண்டில் கட்டினார்கள். பின் பதினாறு பதினேழு நூற்றாண்டுகளில் விஜயநகர சாம்ராஜ்ஜிய மன்னர்கள் பல விரிவாக்கங்கள் இக்கோயிலில் மேற்கொண்டனர்கள். கிருஷ்ணதேவராயர் 1514ஆம் ஆண்டு இத்திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ளார். இங்கு பல மண்டபங்களும், தூண்களும், விஜயநகர கலைபாணியில் அமைந்திருப்பது இதனை உருதி செய்கிறது.
கோயிலின் முகமண்டபம் இன்று ஶ்ரீநரசிம்மசுவாமிக்கு கல்யாண மண்டபமாக உபயோகிக்கப் படுகிறது. மூலவர் ஶ்ரீபிரகலாத வரதர் இங்கு லக்ஷ்மிநரசிம்மராக தரிசனம் தருகிறார். பிரதான கோயில் கர்ப்பகிரஹம், முகமண்டபம், ரங்கமண்டபம் அடங்கியது. இங்கு இருக்கும் தூண்களில் மிகவும் நுன்னிய கலை வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஶ்ரீலக்ஷ்மி,ஶ்ரீஆண்டாள்,ஶ்ரீஆள்வார்கள் ஆகியவர்களுக்கு தனிதனி சன்னிதி இருக்கிறது. கர்ப்பகிரஹத்தில் பிரகலாதவரதர், பாவன நரசிம்மர், ஜுவாலா நரசிம்மர் அகியோர்களின் உத்ஸவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம். ஜுவாலா நரசிம்மர் உத்ஸவர் பத்து திருக்கரங்களுடனும் ஶ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். பாதுகாப்பு கருதியும், நித்திய பூஜை கருதியும் பல நரசிம்ம மூர்த்தங்கள் இங்கு வைத்து வழிபடபதுகின்றன.
நவநரசிம்மர்கள் கோயில்கள் இருக்கும் இடங்களில் இன்றும் அடர்ந்த காடுகளை காணமுடியும். இக்காட்டு பகுதியில் செங்சு குலத்தவர் இங்கு கிடைக்கும் தேன், பழம் முதலியவைகளை உண்டு வாழ்ந்து வந்தனர். இவ்வினிய இனத்தினரை கௌரவிக்க மஹாலஷ்மி இவர்களிடையே பிறவி எடுத்து செஞ்சுலக்ஷ்மி என்ற திருநாமமும் சூடிக்கொண்டாள். செஞ்சு இனத்தவர்கள் ஶ்ரீநரசிம்மருடன் நெருங்கிய பக்தர்கள், அவர்கள் வழக்கில் இன்றும் பல நரசிம்ம லீலைகள் சொல்லப்படுகின்றன. அவர்கள் கொண்டாடிய நரசிம்ம தலங்கள் இன்று நவநரசிம்ம தலங்களாக விளங்கிகின்றன. மன்னர்கள் இவர்கள் கொண்டாடிய புனித தலங்களில் வழிபட ஆரம்பித்தனர், பின் அங்கு கோயில்களை கட்டினர். பின் வந்த கோயில்களை விரிவுபடுத்தினர். ஒவ்வொரு மன்னரும் ஶ்ரீநரசிம்மருக்கு பல ஆபரணங்கள் அணிவித்து மகிழ்ந்தனர். இப்படி கோயிலின் சொத்து பெருகியது. இக்கோயில்களின் உடைமைகள் அறம்கெட்டவர்களின் கண்களை உருத்தியது. மன்னர்கள் பிடிபட்ட சிலரை தண்டித்தனர். ஆனால் கள்ள மனம் உள்ளவர் இருந்துகொண்டுதான இருந்தனர். அரசன் அன்று தண்டிப்பான் இறைவன் நின்று தண்டிப்பான் என்பது பழமொழி.
இப்படி ஶ்ரீபிரகலாத வரதர் திருக்கோயிலுக்கும் உடைமைகள் பெருகின. ஆனால் அவர் [ஶ்ரீபிரகலாத வரதர்] தன் பக்தர்கள் கொடுத்த பொருள்களை காப்பதற்கு ஒருவரை நியமிக்க நினைத்து ஶ்ரீஆஞ்சநேயரை நியமித்தார்
கீழ் அகோபலத்தில் ஶ்ரீபிரகலாத வரதர் கோயிலுக்கு ஈர்ப்பு அதிகம். சன்னிதி தெருவின் மறுமுனையில் தங்கும் விடுதிகள் இருக்கினறன. இங்கிருந்து பார்த்தால் பிரதான கோயிலை பார்க்கலாம். திரும்பினால் பிரதான கோயிலை பார்த்த வண்ணம் இருக்கும் ஶ்ரீஆஞ்சநேயர் கோயில் தெரியும். இக்கோயிலில் உள்ள ஶ்ரீஆஞ்சநேயர் தான் பிரதான கோயிலுக்கு காப்பாளர். இவருடைய சன்னிதியிலிருந்து பிரகலாத வரதர் கோயில் தடங்கல் ஏதுமில்லாமல் தெரியும். இரண்டு கோயிலுக்கு நடுவில் தீபஸ்தம்பம் ஒன்று உள்ளது அவ்வளவு தான். மூலவர் தனது உரிமைகளை காப்பவரான, தனது பக்தர் ஶ்ரீஆஞ்சநேயருக்கு தடங்கல் ஏதுமில்லாமல் தரிசனம் தருகிறார். அர்ச்சகர் பிரதான கோயிலில் அன்றைய பூஜைகள் முடிந்து கதவு அடைத்த பின், பூட்டி சாவியை ஶ்ரீஆஞ்சநேயரிடம் ஒப்படைப்பது என்பது இக்கோயில் மரபு. அதனால் இந்த ஶ்ரீஆஞ்சநேயரை ’பீகம் ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள். தெலுங்கு மொழியில் ’பீகம்’ என்றால் பூட்டு என்று பொருள்.
இக்கோயில் சற்றே உயர்ந்த மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மூலவரின் கண்கள் பிரதான கோயிலிலுள்ள ஶ்ரீவரத நரசிம்மரை நேராக பார்ப்பதற்கான ஏற்பாடு இது. கர்ப்பகிரஹம் பத்துக்கு பதினைந்து அடி இருக்கும். சன்னிதியின் மூன்று பக்கமும் பிறையில் மிகவும் உன்னதமாக வடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலாரூபம் இருக்கிறது. இடது திருக்கரத்தில் கதாயுதத்துடன் ஶ்ரீவீர ஆஞ்சநேயர், சௌகந்திகா புஷ்பத்துடன் ஶ்ரீஜயவீர ஆஞ்சநேயர், அஞ்சலிஹஸ்தராக ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆகியவையாகும்.
இந்த கோயிலில் உள்ள ஶ்ரீஆஞ்சநேயரை வணங்கி அனுமதிப் பெற்று பின் பிரதான கோயிலுக்கு செல்வது மரபு.
பீகம் ஶ்ரீஆஞ்சநேயர் மூர்த்தம் அர்த்தசிலாரூபமாக உள்ளது. அவரது திருப்பாதங்களை தண்டையும் நூபூரமும் அலங்கரிக்கின்றன. கௌபீன வஸ்திரதாரியாக உள்ளார். இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தை வைத்துள்ளார். வலது திருக்கரம் உயர்ந்து அபய முத்திரையை தரித்திருக்கிறது. இரு திருக்கரங்களிலும் கங்கணம், கேயூரம் அணிந்துள்ளார். பிரண வடிவில் இருக்கும் வால் தலைக்கு மேல் சென்று நுனி வளைந்துள்ளது. வாலின் நுனியில் மணி இல்லை. அவரது கேசம் அழகாக முடியப்பட்டுள்ளது காதில் தொங்கும் குண்டலம் தோளினை தொடுகிறது. கருணைமிகு கண்கள் மற்றும் பலபல உணர்வுகளுடன் காணப்படுகிறது.
அனுபவம்
அகோபலம் சென்று பீகம் ஆஞ்சநேயரை தரிசியுங்கள். அவர் நம்மை[யும்] காப்பவர் என்பது நமக்கு புரியும்,
கவலையற்று திரும்புவோம்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: செப்டம்பர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020