அத்திமரத்தில் வடிக்கப்பட்ட ஶ்ரீவிஷ்ணுவின் மூர்த்தம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அபூர்வ சிலாரூபம் ஶ்ரீகாஞ்சி மாநகரில் வரதராஜப் பெருமான் கோவிலில் உள்ளது. அங்கு உள்ள புனித [குளத்தில்] தீர்த்தத்தில் இருக்கும் வரதாராஜப் பெருமாளை அத்திவரதர் என்றே அழைக்கிறார்கள். அவரை 48 வருஷங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து 48 நாள்கள் பூஜைகள் செய்யப்படுகிறார். அவரை காணும் வாய்ப்பு அனேகமாக வாழ்நாளில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான் கிடைக்கும்.
ஆனால் அத்திமரமே பெருமாளாக இருக்கும் க்ஷேத்திரம் ஒன்று மயிலாடுதுறை அருகே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கோழிகுத்தி என்னும் இடத்தில் உள்ளது. மூலவர் ஶ்ரீநிவாஸ பெருமாள் ஆனால் ஶ்ரீவானமுட்டி பெருமாள் என்றே அழைக்கின்றனர். காஞ்சிபுரம் அத்திவரதர் போல் இல்லாமல் இப்பெருமாளை தினமும் வருடம் முழுவதும் பார்க்கலாம். உலகிலேயே இங்கு மட்டுமே நாம் ஒரே அத்திமரத்தில் செய்யப்பட்ட பெருமாளின் ரூபத்தை பார்க்கமுடியும் அதுவும் இருபது அடி உயர பெருமாளை!
இந்த இடத்திற்கு கோழிகுத்தி என்று பெயரும் பெருமாளுக்கு வானமுட்டிப் பெருமாள் என்ற பெயரும் வந்ததின் காரணம் மிக சுவாரஸ்யமான புராணமாகும்.
நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். அசரிரீயின் வாக்கு "காவிரியில் நீராடி கரையிலுள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபடவும். எந்த க்ஷேத்திரத்தில் நோய் குணமாகும் என்பது தானாக தெரியும்" என்றது. அவ்வாறே அவர் காவிரியில் நீராடி எல்லா திருக்கோயில்களிலும் வழிபட்டு யாத்திரையை தொடர்ந்தார். அவர் மூவலூரில் சிவனை வழிபடும் போது மூலவர் ஶ்ரீமார்க்க சகாயேஸ்வரர் [மார்க்க சகாயேஸ்வரர் என்றால் வழி துணைவன், வழி காட்டுபவர் என்று பொருள்] அவருக்கு வடக்கு பக்கமாக செல்ல வழி காட்டினார். மன்னரும் அங்கிருந்து வடக்கு திக்கில் சென்றார்.
வடக்கில் சென்று அவர் காவிரியில் நீராடி அருகில் இருக்கும் கிராமத்திற்கு வந்தார். இறைவனை வழிபடலானார். அங்கு இருந்த பெரிய அத்திமரத்தில் ஶ்ரீவிஷ்ணு அவருக்கு காட்சி தந்து மன்னரை அங்கேயே தங்க சொன்னார். மன்னரும் அங்கேயே அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அவரது மேனியிலிருந்த நோய் மறைந்தது. அக்கிராமம் இன்று கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. இறைவன "வான்முட்டி பெருமாள்" என்று அழைக்கப்படுகிறார். பின்காலத்தில் அம்மன்னர் தவவலிமையால் பிப்பலர் மகரிஷி என்று அழைக்கப்படலானார். ஹத்தி என்றால் கொலை பாபம் என்று பொருள். இங்கு சகல பாபங்களும் நிவர்த்தியாகும் என்பதால் இந்த புனிதமான தலம் "கோடி ஹத்தி" என்று வழங்கலாயிற்று, அதுவே மருவி இன்று "கோழிகுத்தி" என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் மன்னருக்கு விஸ்வரூப தரிசனம் தந்ததால் வானினும் மேலாக நின்றமையால் பெருமாளுக்கு "வான்முட்டி பெருமாள்" என்று பெயர் வந்தது.
இப்புராணத்தையே, மன்னர் நிர்மலன் என்பதற்கு பதில், பிப்பலர் மகரிஷிக்கே குஷ்ட நோயால் அவதிப்பட்டதாகவும் கூறுவர்.
பின் ஆண்ட மன்னர்கள் பெருமாளுக்கு ஏழு பிரகாரங்கள் கொண்ட கோயில் கட்டினார்கள். தற்போதய கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இருந்து இக்கோயில் மிகவும் சீரும் சிறப்புமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. இன்று இக்கோயிலுக்கு ஒரு பிரகாரமே உள்ளது, அதுவும் பல பக்தர்கள் கூடி இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கர்ப்பகிருஹத்தின் விமானம் குடைவடிவில் இருக்கிறது. மஹாலக்ஷ்மி தாயர் மூலவரின் வலது வச்ஸத்தில் [மார்பில்] வசிப்பதால் இங்கு தாயருக்கு தனி சன்னிதி கிடையாது. ஶ்ரீபூமா தேவி கர்ப்பகிருஹத்திலேயே பெருமாளுக்கு பக்கத்தில் இருக்கிறார். கர்ப்பகிருஹத்தை ஒட்டி யோக நரசிம்மர் பக்த பிரஹல்லாதனை ஆசீர்வதித்த வண்ணம் காணப்படுகிறார். மூலவர் அத்திமரத்தினால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் கிடையாது. உத்ஸவ யோகநரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
வேருடன் இருக்கும் அத்திமரத்தில் ஶ்ரீநிவாஸர் சதுர்புஜனாக எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களில் பின் இரு திருக்கரங்களில் சங்கு, சுதர்ஸனம், வைத்துள்ளார். முன் இடது திருக்கரத்தில் கதையும், முன் வலது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். பெருமாள் துளசி மாலை, பூணூல் மற்றும் பல ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவரது திருப்பாதங்கள் அத்திமரத்தின் வேரில் ஊன்றியிருக்கிறது. மூலவர் அத்தி மரத்தினால் இருப்பவராகையால், ஆணிகலங்கள் முதலியன இயற்கையில் கிடைக்கும் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி இருக்கிறது. சாதாரணமாக எல்லா கோயிலிலும் சன்னிதியின் மூன்று பக்கங்கள் மூடியும், மூர்த்தம் பார்க்கும் பக்கம் மட்டும் திறந்தும் இருக்கும். ஆனால் இங்கு ஆஞ்சநேயரின் பின் பக்கத்தை பக்தர்கள் தரிசிக்க வசதியாக பின் புறமும் திறந்து இருக்கும். ஆஞ்சநேயரின் வால் தலை வரை உயர்ந்து பின் நுனி வளைந்து இருக்கும். வாலின் வளைந்த நுனியில் மணியும் இருக்கும். இதனை தரிசிக்கவே இப்படி ஏற்பாடு. ஶ்ரீஆஞ்சநேயர் "உல்லாச பாவத்தில்" நின்று கொண்டுள்ளார். அவரது இடது திருப்பாதம் சற்றே அழகாக மடங்கியும், வலது திருப்பாதம் பூமியில் அழுத்தமாகவும் உள்ளது. திருப்பாதங்களில் தண்டை அணிந்திருக்கிறார். இடுப்பில் அழகாக கட்டிய கச்சமும் அதன் மேல் உத்திரியத்தை இருக்க, அதன் மேல் இடுப்பில் அணியும் ஆபரணம் உள்ளது. கூப்பிய திருக்கரங்களின் மணிக்கட்டில் கங்கணமும், புஜத்தில் கேயூரமும் தோள் பட்டையில் அணிகலமும் இருக்கிறது. கழுத்தில் ஐந்து விதமான மாலைகளும் பூணூலும் அணிந்துள்ளார். காதுகளில் குண்டலங்கள், கர்ண புஷ்பம் அலங்கரிக்கின்றன. கேசத்தை ’கேச பந்தா’ என்னும் ஆபரணத்தால் அழகாக கட்டி வைத்துள்ளார். ஶ்ரீஆஞ்சநேயரின் பிங்களாஷா கண்கள் மிகவும் வசீகரமாக இருக்கிறது, பக்தர்களுக்கு தனது கருணையை அள்ளி தருகிறது கண்கள்.
இந்த க்ஷேத்திரத்தில் ஆஞ்சநேயருக்கு "சப்தஸ்வர ஆஞ்சநேயர்" என்று திருநாமம். பாரத தேசத்தில் பல திருக்கோயில்களில் இசை தூண்கள் இருக்கின்றன. அவற்றில், ஒவ்வொரு தூணும் தனிதனி ஸ்வரங்களை ஒலிக்கும். ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு தூண்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயரை தனிதனி அங்கங்களிலிருந்து ஏழு ஸ்வரங்கள் கிடைக்கின்றன. உலகிலேயே இங்கு மட்டுமே காணப்படும் அதிசயம் இது.
அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீநிவாஸரின் தரிசனம் நமது உடல் குறைகளை நிவர்த்தி செய்யும், யோக நரசிம்மருடைய
தரிசனம் பாபங்களை நிவர்த்தி செய்யும், சப்தஸ்வர ஆஞ்சநேயரின் தரிசனம் இந்த ஜன்மத்தின் ஆனந்தத்தை தரும் என்பது தின்னம்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020