home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஇராகவேந்திரர் பிருந்தாவனம், மந்த்ராலயா, ஆந்திர பிரதேசம்


ஶ்ரீஹனுமான் திருக்கோயில், மந்த்ராலயா, ஆந்திர பிரதேசம்

டாக்டர் திருமதி கௌசல்யா


पूज्याय राघवेंद्राय सत्यधर्मग्ताय च ।
भजतां कल्पवृक्षाय नमतां कामधेनवे ॥

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸ்தயத்ர்மக்தாய ச|
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே||
பூஜ்ய ஶ்ரீஇராகவேந்திரா

பூஜ்ய ஶ்ரீஇராகவேந்திரா ஶ்ரீஇராகவேந்திரா சுவாமியின் முன் அவதராங்கள் முறையே ஶ்ரீசங்குகர்ணா, பிரஹல்லாதா, பாலிகா, வியாசதீர்த்தா என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. அவருடைய முந்திய அவதாரமான ஶ்ரீவியாசராஜதீர்த்தராக அவர் 732 திருக்கோயில்கள் ஶ்ரீஆஞ்சநேயருக்காக கட்டியுள்ளார், மற்றும் ஶ்ரீவேங்கடேஸ்வரரை தானே பூஜை செய்துள்ளார். அதனால் தானோ மறு அவதாரமான ஶ்ரீஇராகவேந்திரர் பிறந்த உடன் அவரின் பெற்றோர்கள் அவருக்கு "வேங்கடநாதன்" என்று பெயரிட்டனர். எமது இணையதளத்தில் "ஶ்ரீஇராகவேந்திரர்" அவர்களின் சுருக்கமான வரலாற்றை "ஹனுமாத் பக்தர்கள்" பகுதியில் பார்க்கவும்.

ஶ்ரீஇராகவேந்திரர் பிருந்தாவனம்

துவைத சித்தாந்தத்தை பின்பற்றும் சில மகான்கள் ஒரு குறிப்பிட்ட புனித தலத்தில் தங்கள் உடலை விட்டு வெளியேறி "ஜீவன் முக்தி" அடைவார்கள். அப்படி மகான்கள் முக்தி அடைந்த இடத்தில் துளசி மாடம் கட்டி துளசி செடியை வளர்ப்பார்கள். அப்புனிதரின் ஆசிகள் பெற அங்கு ஆராதனைகள் நடக்கும். ஶ்ரீஇராகவேந்திரர் துங்கபத்ரா நதிகரையில் அப்படி ஒரு தலத்தை மாச்சாலா என்னும் கிராமத்தில் தேர்ந்தெடுத்தார். அடோனியின் திவானாக இருந்த வேங்கண்னா என்பர் இதனை தானமாக கொடுத்தார். இந்த கிராமத்தை பூஜ்ய சுவாமிஜி தேர்ந்தெடுத்தற்கு ஒரு புராணமுள்ளது.

மாச்சாலா புராணம்

மாச்சாலாவில் தான் ஜீவமுக்தி அடைவது என்று முடிவு செய்தபின் கிராம தேவதை ஶ்ரீமாசாலம்மாவின் அனுமதியை கோரினார். பின் தனது இஷ்ட தெய்வமான ஶ்ரீவேங்கடேஸ்வரருக்கு கோயில் கட்ட நினைத்து யாகங்கள் பல செய்து பின் ஶ்ரீவேங்கடேஸ்வரருக்கு கோயில் கட்டி மூலவரை பிரதிஷ்டை செய்தார். மாச்சாலாவை குருராயரு தேர்ந்தெடுத்தனின் காரணத்தை திவான் வேங்கண்னா அறிய ஆவல் கொண்டு பல முறை கேட்ட பின், குருராயரு ஒரு இடத்தை காண்பித்து, அங்கு தோண்ட கூறினார். தோண்டிய இடத்தில் ஒரு யாக குண்டம் கிடைத்தது, அருகில் ஒரு சிவலிங்கமும் கிடைத்தது.

மாச்சாலாவில் புனிதமான இடம்

பூஜ்ய ஶ்ரீஇராகவேந்திரா பிரதிஷ்டை செய்த ஶ்ரீவேங்கடேஸ்வரர் குருராயரின் முன் அவதாரமாக கிராத யுகத்தில் பக்த பிரகல்லாதனாக இருந்தார். அப்பொழுது இவ்விடத்தில் பல யாகங்கள் ஶ்ரீமந் நாராயணனை குறித்து செய்திருக்கிறார். துவாபர யுகத்தில் இவ்விடத்தை ஆட்சிசெய்த அனுசால்வா என்பவரை மாவீரனனான அர்ஜுனனால் வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம் அனுசால்வா இந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து போர் புரிந்துள்ளான். அவனை அங்கிருந்து நகரும் படி செய்து, பின்தான் அர்ஜுனனால் அவனை வெற்றி கொள்ள முடிந்தது. அப்படி மகிமை வாய்ந்த இடத்தை குருராயரு தனது ஜீவசமாதிக்கு தேர்ந்தெடுத்தார் என்பதை வெங்கண்னா புரிந்து கொண்டார்.

பிருந்தாவனம்

குருராயரு தனது பிருந்தாவனத்திற்கான இடத்தை தேர்ந்தெடுத்தபின், ஶ்ரீஇராமர் ஶ்ரீசீதா பிராட்டியாரை தேடிவரும் போது அவர் அமர்ந்திருந்த பாறையை ஶ்ரீகுருராயர் மாதவரம் என்னும் கிராமத்தில் அடையாளம் கண்டார். அந்த புனிதமானக் கல்லையே தனது இறுதி இருப்பிடத்தில் இருத்திக்கொள்வது என்று தீர்மானித்தார். அந்த கல்லினால் ஶ்ரீகுருராயரின் பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது.

பிருந்தாவன பிரவேசத்திற்கு முன் மாச்சாலாம்மாவை தரிசித்து தனக்கு உத்திரவு கொடுக்க வேண்டினார். அவள் விருப்பப்பட்டது போல் பக்தர்கள் முதலில் அம்மனை தரிசித்து பின் தான் பிருந்தாவனம் வர வேண்டும் என்று சீடர்களிடம் கூறினார்.

குறிப்பிட்ட தினத்தன்று (விரேதிகிருத் ஸம்வத்ஸரே ஶரவண கிருஷ்ண பக்ஷே துவிதியாம் -1671 A.D.), ஆயிரகணக்கான பக்தர்கள் மாச்சாலா (ஶ்ரீ மந்திராலயா)வில் ஒரு மகான் பிருந்தாவனத்தில் [சமாதியில்] பிரவேசிக்கும் அரிதான நிகழ்வை தர்சிக்க குழுமியிருந்தார்கள். குரு ஶ்ரீஇராகவேந்திரா தனது தினசரி ஶ்ரீமூல இராமனுக்கு செய்யும் பூஜைகளை செய்தார். பின் தனது சீடர்களுடன் உரையாற்றினார்.

பின் அமைதியாக வீணா வாத்தியத்தை எடுத்து பைரவி ராகத்தில் அமைந்த "இன்து எனகே கோவிந்தா.." என்று தொடங்கும் கிருதியை வாசிக்க ஆரம்பித்தார். ஶ்ரீநீலமேக ஶாமளன் கண்முன் ராகத்திற்கு இணங்க மெல்லிய தளிர் அசைவுகளுடன் நடனம் ஆடினார். ஶ்ரீஇராக்வேந்திரார் தனது முன் அவதாரமான ஶ்ரீவியாசராயராக இருந்து பிருந்தாவனம் எய்தும் சமயமும் இறைவன் இப்படி நடனமாடி அழைத்துக் கொண்டார். குரு அவர்கள் சற்று தனது நிஷ்டையில் ஆழ்ந்தார், மிக பிரகாசமான ஒளிர் விட்டார். சற்று நேரத்தில் கையிலிருந்த ஜபமாலை உருட்டுவது நின்றது, அவர் இன்னும் பிரகாசமாக ஒளிப்பிழம்பாக தெரிந்தார். சீடர்களுக்கு முன்பே கிடைத்திருந்த குருவின் கட்டளைப்படி குருவின் சிரஸில் [தலையில்] ஆயிரத்து இருநூறு சாலிகிராமங்கள் இருந்த செப்பு பெட்டியை வைத்து பிருந்தாவனத்தை மூட ஆரம்பித்தனர். குரு ஶ்ரீஇராகவேந்திரா அவர்கள் தனது பூத உடலை விட்டு வீடு பெற்றார்.

ஹனுமாருக்கு திருக்கோயில்

ஶ்ரீ ஆஞ்சநேயர், பூஜ்ய ஶ்ரீஇராகவேந்திரா பிருந்தாவனம், மந்த்ராலயா ஶ்ரீஇராமர் ஶ்ரீசீதா பிராட்டியாரை தேடிவரும் போது அவர் அமர்ந்திருந்த புனிதமான பாறையால் ஶ்ரீகுருராயர் பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. ஶ்ரீஅனுமாரின் பக்தராக தனது இரு அவதாரத்திலும் [வியாசராஜா, குருராயர்] அந்த புனித கல்லில் ஒரு பாகத்தில் ஶ்ரீபிராண தேவருக்கு விக்ரஹம் வடிக்கப்பட்டு பிருந்தாவனத்திற்கு நேர் எதிரில் பிரதிஷ்டை செய்யச்சொன்னார். ஶ்ரீஇராமரால் புனிதப்படுத்தப்பட்ட அதே கல்லில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு விக்ரஹம் செய்வது மிகவும் பொருத்தமல்லவா?

ஶ்ரீஆஞ்சநேயரின் கோயிலிக்கு முன் சந்தனம் அரைப்பதற்கான கல்லுக்கு பக்கத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதை கவனியுங்கள். இந்த சிவலிங்கம் தான் குருராயரின் பிருந்தாவனத்திற்கான இடத்தை தோண்டும்போது கிடைத்த பிரகல்லாதனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம். ஒரு சிறிய அர்த்தசிலாரூப ஶ்ரீஆஞ்சநேயரும், சிவலிங்கத்தின் அருகில் உள்ளார்.

ஶ்ரீமந்திராலயா ஹனுமார்

ஶ்ரீஹனுமார் இச்க்ஷேத்திரத்தில் சுமார் ஏழு அடி உயரத்தில் அர்த்தசிலா வடிவில் உள்ளார். அவரது வலது திருக்கரம் அபய முத்திரையை காட்டுகிறது. இடது திருக்கரம் இடுப்பின் இடது பக்கம் சௌகந்திகா புஷ்பத்தினை பிடித்துள்ளார். அழகாக வாறிவிடப்பட்ட கேசம், நுனியில் முடிந்து இருக்கிறது. அவரது வால் மிகவும் உன்னதமாக முக்கால் வட்ட வடிவில் வளைந்து தலைக்குமேல் வரை உள்ளது. நுனி சற்றே வளைந்து மணியும் இருக்கிறது. அவரது திருப்பாதங்கள் தண்டையும், சலங்கையும் அணிந்துள்ளது. திருக்கரங்களை கங்கணமும், கேயூரமும் அலங்கரிக்கிறது. மார்பில் மாலையும், கழுத்தில் அட்டிகையும் அலங்கரிக்கிறது. காதிலிருந்து அழகிய குண்டலம் அவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. கோரபல்லுடன் இருக்கும் அவரது வாய் மிகவும் வசீகரமாக இருக்கிறது. பிரகாசமான கண்கள் பக்தர்கள் அனைவரையும் மிகுந்த கனிவுடன் பார்க்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஹனுமான் திருக்கோயில், மந்த்ராலயா, ஆந்திர பிரதேசம்

 

அனுபவம்
மந்திராலயா க்ஷேத்திரத்திற்கு வாழும் முனியாம் ஶ்ரீகுருராயரின் ஆசிகள் பெற வரும் பக்தர்கள், ஶ்ரீஇராமனால் புனிதப்படுத்தப்பட்ட கல்லில் வாழும் ஶ்ரீஆஞ்சநேயரிடம் ஆசிகளை பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் செல்லுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+