home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், ஆரணி, தமிழ்நாடு


ஶ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், ஆரணி, தமிழ்நாடு

ஶ்ரீ ஜி.வி.ஆர்.குப்தா, கண்ணமங்கலம், வேலூர்


ஆரணி

கமண்டலநாகா நதிகரையில் அமைந்திருக்கிறது சரித்திர புகழ்வாய்ந்த ஆரணி நகரம். இன்று இது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது. வேலூரிலிருந்து முப்பத்தெட்டு கிலோமீட்டரும், திருவண்ணாமலையிலிருந்து அறுபது கிலோமீட்டரும் உள்ளது.

மாநில நெடுஞ்சாலை எண் 4 [ஆற்காடு-ஆரணி-செஞ்சி-விழுபுரம்], எண் 132 [கண்ணமங்கலம்-ஆரணி] வழி ஆரணி நகரத்தை அடையலாம். இன்று நெசவு தொழிலே இங்கு முக்கிய மூலாதானமாக இருக்கிறது. "ஆரணி பட்டு" என்னும் பட்டு மிகவும் பிரசுத்தம்.

ஆரணி - பெயர் காரணம்

ஆர் என்றால் அத்தி, அத்தி மரங்கள் இங்கு அதிகம் இருந்ததால் ஆரணி எனப்பெயர் என்பர். சம்ஸ்கிருதத்தில் ஆரண்யம் என்பது காடு என்பதை குறிக்கும். இப்பகுதி வனாந்திரமாக இருந்ததால் ஆரணி ஆயிற்று என்பர். மூன்றாவதாக ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் கமண்டல நதியும், கண்ணமங்கலத்தின் அருகிலிருக்கும் அமராத்தி மலையில் உற்பத்தியாகும் நாகா நதியும் ஆரணி அருகில் சம்புராயநல்லூரில் சங்கமம் ஆகிறது. ஆறுகளின் ஆணி என்பதால் ஆரணி என்று பெயர் வந்தது என்பார்கள்.

வரலாறு

பல்லவர்களை வெற்றிகண்டு இவ்விடத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் சோழர்கள். முதலாம் குலோதுங்கன், விக்ரம சோழன், இரண்டாம் குலோதுங்கன் ஆட்சியில் இவ்விடம் இருந்திருக்கிறது. 1361ஆம் ஆண்டு படைவீது அருகில் இருக்கும் சம்புவராயன் கோட்டையில் போர் மூண்ட பொழுது, பலர் அங்கிருந்து புலன்பெயர்ந்து ஆரணிக்கு வந்தனர். 1638ஆம் ஆண்டு சிவாஜியின் தந்தை ஷாஜி இவ்விடத்தை வெற்றிகண்டு, தனக்கு உதவிகள் பல புரிந்த வேதாஜி பாஸ்கர பந்த் என்பவரை நிர்வாகியாக [ஜாகீர் என்று அழைப்பார்கள்] நியமித்துவிட்டு சென்றார். ஆங்கிலேயகளுக்கும் திப்பு சுல்தானுக்குமிடையே 1761ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆரணி கர்நாடகா நவாப்பின் ஆட்சிக்கு மாற்றப்பட்டது. பாரதம் விடுதலை அடையும் வரை ஆரணி ஜாகீர் ஆட்சியாக இருந்தது.

இன்றைய ஆரணி

கோட்டை மைதானம், ஆரணி, தமிழ் நாடு ஆரணி ஜாகீர் இன்று இல்லை, ஆரணி கோட்டையும் இல்லை. ஆனால் கோட்டை இருந்த இடம் என்று சொல்லபடும் இடம் இன்று பெரிய மைதானமாக காணப்படுகிறது. மைதானத்தின் நடுவில் போர் நினைவுசின்னம் ஒன்று உள்ளது. இன்று முனிசிபல் அலுவலகம், அரசாங்க ஆண்கள்/பெண்கள் பள்ளி, எஸ்.எஸ்.உயர்நிலை பள்ளி, மாவட்ட உதவி ஆட்சியாளர் அலுவலகம், காவல் நிலையம், மற்றும் பல அரசாங்க அலுவலகங்கள் அடங்கிய பகுதி கோட்டை வளாகமாக இருந்திருக்கிறது. இன்று அகழியும் இல்லை. ஆங்ஆங்கே சில இடங்களில் சிறிய அளவில் கோட்டை சுவர்கள் தெரிகின்றன. கோட்டை வளாகத்திலிருந்து சூர்ய குளம், சந்திர குளம் இரண்டிற்கும் செல்லும் பாதை தொடங்கும் இடத்தில் கோட்டையின் வாயில்கள் இருந்திருக்கின்றன.

ஆரணியில் இருக்கும் திருக்கோயில்கள்

கோட்டை பகுதியில் இருக்கும் ஶ்ரீகைலாசநாதர் திருக்கோயில், பாளயம் பகுதியில் இருக்கும் ஶ்ரீவேதகிரீஸ்வரர் மற்றும் கமண்டலநாகா நதிகரையில் அமைந்திருக்கும் புத்ர காமேஶ்டீஸ்வர் திருக்கோயில், அருணகிரி நகரில் இருக்கும் ஶ்ரீஅருணசலேஸ்வரர் திருக்கோயில், சுப்ரமணிய சாஸ்திரி வீதியிலுள்ள ஶ்ரீவேம்புலி அம்மன் கோயில், ஶ்ரீகோதண்ட ராமர் கோயில், ஶ்ரீஆஞ்சநேயர் கோயில் முதலிய பழமைவாய்ந்த திருக்கோயில்கள் ஆரணியில் உள்ளது.

ஶ்ரீதுர்கா பிரசாத் சுவாமிஜி

ஶ்ரீதுர்கா பிரசாத் சுவாமிஜி, ஆரணி, தமிழ் நாடு காசியை சேர்ந்த சுவாமி ஶ்ரீராமானத் அவர்கள் த்வைத சித்தாந்தத்தை பின்பற்றுபவர். இவரின் உபதேசங்களை அனுசரிப்பவர்கள் ராமானத் வர்க்கம், ராமாவத் என்று அழைக்கப்படுகின்றார்கள். அப்படிப்பட்ட பரம்பரையை சேர்ந்த மகான் ஶ்ரீதுர்க்கா பிரசாத் சுவாமிஜி அவர்கள். 19ஆம் நூற்றாண்டில் இவர் தல யாத்திரை செய்யும் பொழுது ஆரணிக்கு வந்திருக்கிறார். இவ்வூரின் சூழலும், நதியும், புனிதத்துவமும் இவரை கவர்ந்தது. ஆங்கே சூர்யகுளக்கரையில் அவர் தவம் செய்யத்தொடங்கினார். ஶ்ரீஇராமரின் பக்தர் என்பதால், ஶ்ரீஇராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என ஆசைப்பட்டார். சில நாட்களில் இவருடைய ஶ்ரீஇராம பக்தியும், தவ மகிமையும் உள்ளூர் பக்தர்களை கவர்ந்தது. பல நாட்களுக்கு பிறகு அவரது விருப்பமான ஶ்ரீஇராமருக்கு திருக்கோயில் ஒன்று கட்டமுடிந்தது.

ஶ்ரீகோதண்டராமர் திருக்கோயில்

சுவாமி ஶ்ரீதுர்க்கா பிரசாத்ஜி அவர்கள் கட்டிய ஶ்ரீகோதண்டராமர் திருக்கோயில், ஆரணியில் சுப்பிரமணிய சாஸ்திரியார் வீதியில் [ஆரணியிலிருந்து வந்த பாரத விடுதலைப்போரில் தியாகி] அமைந்துள்ளது. இன்று அவர் கட்டிய அக்கோயிலை ஶ்ரீஇராம பக்தர்களும் அவரது சீடர்களும் விரிவாக்கியுள்ளனர். இக்கோயிலில் ஶ்ரீஇராமர் தனது பரிவாரங்களுடன் மூலவராக உள்ளார். திருக்கோயிலின் பின்புறம் சுவாமி துர்க்கா பிரசாத் அவர்களின் சமாதி பிருந்தாவனம் அமைந்துள்ளது. பிருந்தாவனத்திற்கு எதிரில் ஶ்ரீஹனுமார் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பக்தர்கள் பலர் ஶ்ரீஹனுமாருக்கு விளக்கு ஏற்றி வைத்து சுவாமி துர்க்கா பிரசாதை வேண்டிக்கொள்கிறார்கள்.

சுவாமிஜியின் தினசரி வழக்கம்

ஶ்ரீதுர்க்கா பிரசாத் சுவாமி தினமும் சூர்ய குளத்தில் நீராடிவிட்டு அங்கு குளக்கரையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த ஶ்ரீஆஞ்சநேயரை வணங்கி, அவரிடமிருந்து அனுமதி பெற்று பின் ஶ்ரீகோதண்டராமரை பூஜை செய்ய வருவார். நாள் தவறாமல் அவர் செய்தது வந்த வழக்கமிது.

ஶ்ரீவீர ஆஞ்சநேயருக்கு திருக்கோயில்

ஶ்ரீவீர ஆஞ்சநேயருக்கு திருக்கோயில், ஆரணி, தமிழ் நாடு சுப்பிரமணிய சாஸ்திரி வீதியிலேயே ஶ்ரீகோதண்டராமர் கோயிலிலிருந்து மிக அருகிலேயே உள்ளது சூர்ய குளக்கரை ஹனுமார். சுவாமிஜீயின் சீடர்கள் ஶ்ரீகோதண்டராமர் திருக்கோயிலை ஒவ்வொரு முறை விரிவாக்கம் செய்யும் பொழுதும், குளக்கரை ஶ்ரீஆஞ்சநேயரின் சன்னிதியும் விரிவாக்கம் செய்யப்பட்டது. கூரையின்றி இருந்து, பின் சன்னிதியாகி, இன்று கோயிலாக வளர்ந்துள்ளது குளக்கரை ஶ்ரீஆஞ்சநேயரின் கோயிலிடம். இன்று இத்திருக்கோயில் கர்ப்பகிரஹம் அதன் முன் பெரிய முன்மண்டபம் அதற்கு முன் பெரிய திறந்தவெளி வீதியை ஒட்டி பெரிய தோரணநுழைவாயில் ஆகியவை அடக்கம். சனிக்கிழமைகளில், பக்தர்கள் கூட்டம் திறந்த வெளிவரை காத்திருந்து தரிசிக்கிறார்கள்.

ஶ்ரீவீர ஆஞ்சநேயர்

ஆரணி க்ஷேத்திர ஶ்ரீவீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது வலது திருக்கரம் அபய முத்திரை காண்பிக்கிறது. அவரது இடது திருக்கரம் அவரது இடது தொடையில் பதிந்துள்ளது. அவருடைய வால் தலைக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. திருக்கரங்கள், திருப்பாதங்கள் ஆகியவற்றில் ஆபரணங்கள் அணிந்துள்ளார். கழுத்தில் மூன்று விதமான மாலைகள் உள்ளன. மயக்கும் அவரது கண்கள் பக்தர்களை உலகையே மறக்கச் செய்யும், இறைவனையே நினைக்கச் செய்யும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், ஆரணி"

 

அனுபவம்
ஆரணி க்ஷேத்திர ஶ்ரீவீர ஆஞ்சநேயரின் தரிசனம் நிச்சயமாக பக்தர்கள் உள்ளத்திலுள்ள ஶ்ரீஇராம பக்தியை மேலும் பெருக்கும் என்பதில் எந்த ஐய்யமுமில்லை.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜனவரி 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+