home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பூர்ண பிரசாத் - ஶ்ரீமுக்கிய பிராணா [ஹனுமார்] திருக்கோயில், பெங்களூரு குதிரை மைதானம் அருகில், பெங்களூரூ

ஶ்ரீ அசோக் குமார் குப்தா


பூர்ணய்யா

த்வைத சித்தாந்ததை பின்பற்றும் ஶ்ரீமத்வ பாரம்பரியத்தினை சேர்ந்த ஶ்ரீகிருஷ்ணாசார்-ஶ்ரீலக்ஷ்மி தம்பதி தம்பதிகளுக்கு 1746ஆம் ஆண்டு திரு பூர்ணய்யா பிறந்தார். தமிழ்நாட்டில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அப்பொழுது வாழ்ந்து வந்தனர். இவருக்கு வேங்கட ராவ் என்ற சகோதரரும் இருந்தார். பூர்ணய்யாவின் தந்தை காலமான பிறகு, குடும்பம் 1760ஆம் ஆண்டு அக்கிராமத்தை விட்டு வெளியேறினார்கள். ஹைதர் அலியின் படையிற்கு பொருள் விற்கும் வியாபாரி ஒருவரிடம் பூர்ணய்யாவுக்கு வேலை கிடைத்தது. மிகவும் புத்திசாலியான பூர்ணய்யா வியாபாரியின் வியாபாரத்தை பெருக்கி, தனக்கு என்று ஒரு பெயரும், பதவியும் பெற்றார். இப்படியே அவருக்கு ஹைதர் அலியின் படைகளத்தில் வேலைகிடைத்தது. கன்னடமும், சம்ஸ்கிருதமும் தெரிந்த அவர், படைதளவாடங்களை வியாபரம் செய்ய பர்சியன் மொழியையும் கற்று நல்ல தேர்ச்சி அடைந்தார். அவருடைய சுறுசுறுப்பும், புத்தி கூர்மையும் ஹைதர் அலியை கவர்ந்ததில் வியப்பில்லை. அப்படியே அவரை ஹைதர் அலி நிதி நிர்வாகத்திற்கு தலைவராக நியமித்தான். பின் நவாபின் தர்பாரில் ஒரு அங்கத்தினராக பதவி உயர்த்தி, படைதளவாடங்கள் மற்றும் போக்குவரத்துக்கு தலமை அதிகாரியாக்கினான்.

பூர்ண பிரசாத்- ஶ்ரீமுக்கிய பிராணா [ஹனுமார்] திருக்கோயில் விமானம், பெங்களூரு ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் மஹராஜா என எல்லா மைசூர் ஆட்சியாளர்களுக்கும் பூர்ணய்யா தர்பார் அங்கிதினராகவோ அல்லது திவானாகவோ இருந்திருக்கிறார். இப்படி மூன்று ஆட்சியாளருக்கு உதவியவர் இவர் ஒருவராகதான் இருக்கும்.

சாதாரண குடும்ப சூழலில் இருந்து வந்தவரும், ஆச்சாரமான சுழலில் வளர்ந்தவரும், ஶ்ரீமாத்வ சம்பரதாயத்தை சேர்ந்தவருமான அவர் ஶ்ரீமுக்கிய பிராணாவை வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தார். அவர் தனது வாழ்நாட்களில் ஶ்ரீமுக்கிய பிராணாவிற்கு பல திருக்கோயில்கள் கட்டியும், புதிபித்தும் இருக்கிறார்.

ஶ்ரீ பி.என்.கிருஷ்ணமூர்த்தி (1849-1911)

ஶ்ரீபூர்ணய்யா அவர்கள் வழித்தோன்றல்கள் பலரும் அவரின் பெருமையை உணர்ந்தவராக இருந்தனர். அவரின் பெருமையை காப்பாற்ற நிலைநாட்ட தாங்களும் வல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருந்து காட்டினர். இவர்கள் தங்கள் பெயருக்கு முன் பூர்ணய்யா என்பதையும் குடும்ப பெயராக சேர்த்துகொண்டனர். அப்படி இருந்தவரில் ஒருவர் ஶ்ரீபூர்ணய்யா நரசிங்கராவ் கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவரும் மைசூர் மஹாராஜாவிற்கு திவானாக இருந்திருக்கிறார். இவர் ஶ்ரீபூர்ணய்யாவின் மகன் ஶ்ரீநரசிங்க ராவ்வின் மகன் வழி தோன்றிய பேரன். இவர் காலத்தில் இவரால் எழுதப்பட்டு பதிப்பிக்கப்பட்ட "அரசாங்க செயலக கையேடு" இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

பூர்ண பிரசாத்

இவர் மைசூர் திவானாக இருந்த சமயத்தில், பெங்களூரூவின் மையப்பகுதியில் மிக அழகான பங்களா ஒன்று கட்டினார். அதற்கு "பூர்ண பிரசாத்" என்று பெயரிட்டார். மிக கம்பீரமான இந்த பங்களா அழகாகவும், கலையுணர்வுடனும் கட்டப்பட்டுள்ளது. தொலைவிலிருந்து பார்க்கையில் புதுமையான கோட்டைப்போல் இருக்கிறது. தற்சமயம் இந்த பங்களாவின் ஒரு பகுதியே பூர்ணய்யா குடும்பத்தினரிடம் உள்ளது, ஒரு பகுதி தபால் தந்தி அலுவலகத்தினரிடம் உள்ளது.

குடும்ப பாரம்பரியம்

"பூர்ணபிரசாத்" பங்களாவில் மிகவும் சுவாரஸ்யமான விசேட இடம் இங்கு இருக்கும் ஶ்ரீஅனுமார் கோயில் தான். பூர்ணய்யாவின் குலதெய்வமான ஶ்ரீஆஞ்சநேயர் இங்கு இப்பொழுது இருக்கும் சந்ததியனரும் பூஜை செய்கிறார்கள். இந்தியாவில் பல பாகங்களில் வசிக்கும் சந்ததிகளும், வெளிநாட்டில் இருக்கும் சந்ததிகளும் இக்கோயிலுக்கு வந்து தங்களது வழிபாட்டை செய்கிறார்கள். இக்கோயிலுக்கு வருவது அவர்களுக்கு யாத்திரை போல் இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

பி.டி.சி ஹனுமார் திருக்கோயில்

பூர்ண பிரசாத்- ஶ்ரீமுக்கிய பிராணா [ஹனுமார்] திருக்கோயில், பெங்களூரு இக்கோயில் "பூர்ண பிரசாத்" பங்களாவின் ஒரு பகுதியாகும். மிகவும் கவர்ச்சிகரமான இத்திருக்கோயிலின் விமானம் பெங்களூரூ ரேஸ் கோர்ஸ் அருகில் காணாதவர்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள், அவ்வளவு கவர்ச்சிகரமாக இருக்கும். பூர்ணபிரசாத் ஹனுமார் திருக்கோயில் ஒரு தனியார் கோயில் என்றாலும், பலருக்கு இது B.T.C. [Bangalore Turf Club] ஹனுமார் கோயில் என்று பிரசுத்தம்.

கோயிலின் கட்டடகலை

இக்கோயிலின் கட்டிடபாங்கு மிகவும் அற்புதமான ஹோசாலா மற்றும் சன்டேலா கட்டட கலைகளின் கலவையாகும். இக்கோயிலின் விமானம் எட்டு பக்கங்களும், பன்னிரண்டு நிலைகளும் கொண்டு செங்குத்தாக குருகி செல்கிறது. எட்டு திசையிலும் ஶ்ரீவிஷ்ணுவின் தசாவதார மற்றும் அஷ்ட லக்ஷ்மிகள் முதலிய கற்சிலைகள் பதிக்கப்பட்டுள்ளது, பார்ப்பதற்கு மிகவும் உன்னதமாக இருக்கிறது. ஹனுமார் கர்ப்பகிரஹத்திற்கு இக்கோபுரம் விமானமாக இருக்கிறது.

திருக்கோயில்

சிறிய புகு மண்டபம் [பலகனி மாதரி] வழியாக நுழைந்தால் அழகிய செவ்வக வடிவில் முன்மண்டபம் உள்ளது. அதன் பின் கர்ப்பகிரஹம். இவை அனைத்தையும் சுற்றி சிறிய பிரகாரம். மண்டப்பத்தையும் பிரகாரத்தையும் பிரிக்கும் சுவரில் ஜன்னல்கள் கல்லினால் ஆனது. அவைகளில் மிக உன்னதமான ஜாலி வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. இராமாயணம் மஹபாரதம் முதலிய புராணங்களிலிருந்து காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீபீமன் ஶ்ரீஆஞ்சநேயரின் வாலை தூக்க முயல்வது போன்ற காட்சிகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. ஶ்ரீமாத்வாசாரியார் ஶ்ரீவேதவியாசரிடம் இருந்து வேதம் படிப்பது, மற்றும் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தை விளக்கும் சிற்ப வேலைபாடுகளும் மிகவும் அற்புதமாக அமைந்திருப்பதிலிருந்து, இக்கோயிலை உருவாக்க எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்கும் என்பது விளங்குகிறது.

ஶ்ரீமுக்கிய பிராணா {ஶ்ரீஆஞ்சநேயர்]

கர்ப்பகிரஹத்தில் இருக்கும் மூலவரை புகு மண்டபம் அல்லது முன் மண்டபத்திலிருந்து தர்சிக்கலாம். ஶ்ரீமுக்கிய பிராணா அர்த்த சிலா ரூபத்தில் உள்ளார். இங்கு பூஜை மாத்வ சம்பிரதாயத்தின் முறையில் நடக்கிறது. மூர்த்தம் சிறிதாக இருந்தாலும் அவரது கண்கள் பொழியும் காருண்யம் நம்மை ஸ்தம்பிக்க வைக்கிறது. முன் மண்டபத்தில் இருந்து அவரை தர்சிக்கும் போது நம்முடன் ஶ்ரீஆஞ்சநேயர் நேரிலே பேசுவது போன்று உணர்வு உண்டாவது மிகவும் அனுபவிக்க வேண்டியது.

பின் குறிப்பு :
1. இது தனியார் திருக்கோயில் என்பதால், அனுமதி இன்றி நாம் செல்லமுடியாது
2. ஶ்ரீபூர்ணய்யாவை பற்றிய பல குறிப்புகள் அவரின் வம்சாவளியினர்
இணைய தளத்தில் வெளியிட்டபட்டதில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "பூர்ண பிரசாத்- ஶ்ரீமுக்கிய பிராணா திருக்கோயில், பெங்களூரு"

 

அனுபவம்
ஶ்ரீஹனுமார் இங்கு குல வழக்கத்தின் வழியில் ஶ்ரீமுக்கிய பிராணா என்று கொண்டாடப்படுகிறார். ஶ்ரீஆஞ்சநேயர் இங்கு சாந்தித்தியம். பூர்ண பிரசாத் ஹனுமார் பக்தர்களுக்கு எல்லா நம்மைகளையும் "பிரசாதமாக" "பூரணமாக" வழங்குவார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூன் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+