home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஹனுமார், கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா, தமிழ்நாடு

திரு சுப்ரமணிய சுவாமி


முடிகொண்டான்

செழிப்பான கிராமமான முடிகொண்டான் தமிழ்நாட்டில் நன்னிலம் தாலுகாவில் இருக்கிறது. மயிலாடுதுறைக்கும் திருவாரூக்கும் இடையில் ஓடும் அனைத்து பேருந்துகளும் இங்கு நிற்க்கும். மயிலாடுதுறையிலிருந்து இருபது கிலோமீட்டரும், திருவாரூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது முடிகொண்டான்.

இக்கிராமத்தின் முக்கியமாக ஈர்க்கின்ற இடம் ஶ்ரீகோதண்டராமர் திருக்கோயிலும், ஶ்ரீஆலங்குடி சுவாமி அவர்கள் மடமும் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து வரும் பொழுது, ஶ்ரீகோதண்டராமர் திருக்கோயில் இடது புறம் நெடுஞ்சாலையிலிருந்தே தெரியும். கோயில் அருகில் பஸ் நிலையம். ஶ்ரீஆலங்குடி சுவாமி மடத்திற்கு பஸ் நிலையத்திற்கு வலதுபுறம் செங்குத்தாக செல்லும் பாதையில் செல்ல வேண்டும்.

ஶ்ரீஆலங்குடி சுவாமிகள்

ஶ்ரீஆலங்குடி சுவாமிகள் ஶ்ரீசுவாமிகள், அருகில் இருக்கும் ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர். ஶ்ரீமத் பாகவதத்தில் சுவாமிகளுக்கு ஈடுபாடு. ஶ்ரீசுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம பெயர் ஶ்ரீ"சுயம்பிரகாசானந்தா சுவாமிகள்" என்பதாகும். ஆனால் பக்தர்களுக்கு அவரை ஶ்ரீஆலங்குடி சுவாமிகள் என்றே பரிச்சயம். தனது வாழ்நாளில் சுவாமிகள் ஶ்ரீமத்பாகவதத்தை, எப்படி விதிபடி பாராயணம் செய்ய வேண்டுமோ, அதன்படி பல முறை பாராயணம் செய்திருக்கிறார். ஶ்ரீமத் பாகவதம் பாராயணம் செய்யும் அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் அவ்விதியின்படி பாராயணம் செய்வதற்கு அறிவுருத்தியும், பழக்கியும் இருக்கிறார். இன்றும் இப்படி விதிபடி பாராயணம் பக்தர்களால் ஶ்ரீஆலங்குடி சுவாமி மடத்தில் செய்யப்படுகிறது. இம்மடத்தில் ஶ்ரீமத் பாகவதம் தடையின்றி பல ஆண்டுகளாக பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. இம்மடத்தில் ஶ்ரீமத்பாகவதம் படிப்பதால் மன அமைதியும், உண்மை பக்தியின் பெருக்கும் ஏற்பதுவதால் இம்மடத்தில் பாராயணம் செய்வதற்கென்றே பல பக்தர்கள் வருகிறார்கள்.

ஶ்ரீகோதண்டராமர் திருக்கோயில்

ஶ்ரீகோதண்டராமர் திருக்கோயில் நெடுஞ்சாலையை ஒட்டியே இருக்கிறது. கோயிலிக்கு செல்லும் பாதையில் சென்றால் வலபுறம் மிகப்பெரிய திருக்குளம் இருக்கும். திருக்குளத்தை ஒட்டி ஶ்ரீஆஞ்சநேயருக்கு தனியாக ஒரு சன்னிதி இருக்கிறது. மூலகோயில் இச்சன்னிதியின் எதிரில் இருக்கிறது. திருக்கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லை, ஒரு பெரிய வளைவு வழியாக தான் கோயிலுக்கு நுழைவு. நுழைந்ததும் அழகிய மகுடம் போன்ற விமானம் வரவேற்கும். நாம் பார்க்கும் இந்த மகுடம் இக்கோயிலின் புராணத்துடன் தொடர்ப்பு உடையது.

தல வரலாறு

ஶ்ரீஇராமர் வானர படைகளுடன் இலங்கைக்கு செல்லும் பொழுது, ஶ்ரீபரத்வாஜமுனிவர் இங்கிருக்கும் தனது ஆஸ்ரமத்தில் அவர்களை விருந்தோம்பல் செய்ய அழைத்தார். ஶ்ரீஇராமர் தான் வேகமாக இலங்கைக்கு இப்பொழுது செல்ல வேண்டும் என்றும் தான் இலங்கையிலிருந்து சீதா பிராட்டியுடன் திரும்புகையில் ஏற்றுக்கொள்வதாகவும் கூறி விடைப்பெற்றார்.

ஶ்ரீஹனுமார் திருக்கோயில், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா, தமிழ்நாடு இலங்கை போரில் வெற்றி கண்டவுடன் ஶ்ரீபரதனுக்கு வெற்றி செய்தியை கூற ஶ்ரீஆஞ்சநேயரை அயோத்திக்கு ஶ்ரீஇராமர் அனுப்புகிறார். விபீஷணருக்கு பட்டாபிஷேகம் ஆனதும், ஶ்ரீஇராமரும் ஶ்ரீசீதா பிராட்டியாரும் இங்கு பரத்வாஜ ஆஸ்ரமத்துக்கு வருகை தருகிறார்கள். ஶ்ரீஇராமர் ஶ்ரீரங்கநாதரை வழிபடுபவர் என்பதால், முனிவர் தனது ஆஸ்ரமத்தில் ஶ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்கிறார். ஶ்ரீஇராமரும் ஶ்ரீரங்கநாதருக்கு வழிபாடு செய்த பின் ஆஸ்ரமத்தில் விருந்து உண்டார். முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து, ஶ்ரீஇராமர் தனது பட்டாபிஷேக கோலத்தை காட்சியை இங்கே முனிவருக்கு காண்பிக்கிறார். பட்டாபிஷேகம் ஆவதற்கு முன்பே ஶ்ரீஇராமர் அவ்விதம் காட்சி கொடுத்தமையால் இவ்விடம் "முடிகொண்டான்" என்று அழைக்கப்படுகிறது.

ஶ்ரீபரதர் தீயில் இறங்குவதற்கு முன் ஶ்ரீஇராமரைப்பற்றிய நற்செய்தியை கூறி, ஶ்ரீபரதரின் உயிரை காப்பாற்றிய பிறகு ஶ்ரீஆஞ்சநேயர் இங்கு திரும்பினார். பரத்வாஜ முனிவருக்கு ஶ்ரீஇராமர் "பட்டாராமர்"ஆக காட்சி கொடுத்ததை தான் பார்க்க முடியவில்லையே என்று ஆஸ்சமத்தின் வாயிலிலேயே நின்று விட்டார். உண்மை பட்டாபிஷேகம் அயோத்தியில் பார்க்க ஶ்ரீஆஞ்சநேயரை சமாதானபடுத்தி அழைத்து சென்றார் ஶ்ரீஇராமர்.

திருக்கோயிலின் விசேடம்

சாதாரணமாக ஶ்ரீஇராமர் கோயில்கள் தென்திசை நோக்கி இருக்கும். ஶ்ரீவிபீஷணன் எல்லா சமயமும் ஶ்ரீஇராமரை பார்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டதனால் இப்படி. ஆனால் முடிகொண்டான் க்ஷேத்திரத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் ஶ்ரீபரத்வாஜ முனிவருக்கு பட்டாபிஷேக காட்சி தந்தது போலவே உள்ளார்.

ஶ்ரீஹனுமார், முடிகொண்டான், நன்னிலம் தாலுகா, தமிழ்நாடு தென் திசை நோக்கிய ஶ்ரீரங்கநாதர் சன்னிதியை பார்த்த வண்ணம் ஶ்ரீஇராமரின் சன்னிதி அமைந்துள்ளது. ஶ்ரீஇராமரின் இடப்பக்கம் ஶ்ரீசீதா பிராட்டியும், வலப்பக்கம் ஶ்ரீலக்ஷ்மணரும் காட்சி தருகிறார்கள். ஶ்ரீஆஞ்சநேயர் இங்கு காணப்படவில்லை. ஆனால் உத்ஸவ மூர்த்தியில் ஶ்ரீஆஞ்சநேயரும் உள்ளார்.

ஶ்ரீஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி

ஶ்ரீஆஞ்சநேயருக்கு இந்த க்ஷேத்திரத்தில் தனி சன்னிதி கோயிலுக்கு வெளியில் திருக்குளக்கரையில் அமைந்துள்ளது. திருக்குளத்திற்கு "ஶ்ரீஇராம தீர்த்தம்" என்று பெயர். ஶ்ரீஇராம பக்த ஹனுமார் கைகளை கூப்பியது போல் "அஞ்சலி ஹஸ்தன்"ஆக ஶ்ரீஇராமரை பார்த்த வண்ணம் உள்ளார். சிறிய மூர்த்தியே ஆனாலும் இவரின் கீர்த்தி பெரிது. பல ஊர்களிலிருந்து ஶ்ரீஆஞ்சநேயரை தர்சிக்க பக்தர்கள் முடிகொண்டான் க்ஷேத்திரத்திற்கு வருகை தருகிறார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான்"

 

அனுபவம்
முடிகொண்டான் க்ஷேத்திரத்திற்கு வாருங்கள், ஶ்ரீஹனுமார், ஶ்ரீகோதண்டராமர் மற்றும் ஶ்ரீஆலங்குடி சுவாமிகளின் ஆசிகளை பெற்றுச் செல்லுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூலை 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+